-- ஆர். வி. ஆர்
சென்னையில்
கம்பன் கழகத்தின் பொன்விழா சமீபத்தில் நடந்தது. அப்போது கவிஞர் வைரமுத்துவுக்குக்
'கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருது வழங்கப் பட்டது. விருது
வாங்கிய விழா மேடையிலிருந்து ஒரு பைத்தியக்காரப் பேச்சைப் பேசினார் வைரமுத்து.
கம்பராமாயணத்தில்
வரும் பாடல் சொல் ஒன்றுக்கு ஏடாகூடமான விளக்கம் கொடுத்தார் வைரமுத்து. அதன் மூலம் ராமன் புத்தி சுவாதீனம் அற்றவனாக
இருந்தான், அப்படித்தான் கம்பன் சொல்ல வருகிறான் என்கிற ரீதியில் வைரமுத்து உளறிக்
கொட்டினார்.
ராமாயண
காவியத்தில், வாலி-சுக்ரீவன் யுத்தத்தின் போது, வாலி சுக்ரீவனைப்
பிடித்துத் தரையில் வீசிக் கொல்ல இருந்த தருணம்
வருகிறது. அந்த நேரத்தில், மறைந்து
நின்றிருந்த ராமன் எய்த அம்பு வாலியின் மார்பில் தைக்க, சுக்ரீவன்
மீதிருந்த வாலியின் பிடி நழுவுகிறது. சுக்ரீவன்
தப்பிக்கிறான். வீழ்த்தப்பட்ட வாலி, தன் மார்பிலிருந்த அம்பைச் சிரமத்துடன் உருவிப்
பார்த்து அது ராமபாணம் என்று தெரிந்து கொள்ள, ராமனும்
வாலியின் முன் வருகிறான்.
ராமன்
தன்னைக் கொல்ல அம்பு விடுத்தான், அதையும் மறைந்து
நின்று செய்தான், என்பதை ஏற்க முடியாத வாலி கோபத்தில் ராமனிடம் பல கேள்விகள்
கேட்கிறான். அதில் ஒரு கேள்வியின் சாரம் இது: ‘சீதையைப் பிரிந்ததால், அந்தப் பிரிவில் திகைத்துப் போய்,
தன்னிலை மறந்து, என்னைக் கொல்ல முயன்றாயா ராமா?’ இதை
வெளிப்படுத்தக் கம்பன் வாலியின் வாயிலிருந்து வருவதாகத் தனது பாடலை இப்படி முடிக்கிறான்: "..... தேவியைப் பிரிந்த பின்னை, திகைத்தனை போலும் செய்கை?"
இந்தப்
பாடலில் வரும் "திகைத்தனை" என்ற சொல்லின் அர்த்தத்தை, வைரமுத்து விபரீதமாக
வளைத்து முறுக்குகிறார். அவர் பேசிய வார்த்தைகள் இவை:
"திகைத்தல் என்றால் பிரமித்தல். இன்னொரு சொல், மயங்குதல்.
மதி மயங்கி விட்டான். சீதையைப் பிரிந்த
ராமன் செய்வதறியாமல் புத்தி சுவாதீனம் இழந்து விட்டான். புத்தி சுவாதீனம் இழந்தவன்
செய்கிற குற்றம் குற்றமாகாது என்று இந்திய தண்டனைச் சட்டம், 84-ஆம் பிரிவு சொல்கிறது. இது கம்பனுக்குத் தெரியுமோ
தெரியாதோ. கம்பனுக்குச் சட்டம் தெரியாது, ஆனால்
அவனுக்குச் சமூகம் தெரியும், உளவியல்
தெரியும், இந்த மண்ணைத் தெரியும். ராமன் என்ற ஒரு
குற்றவாளி கம்பனால் முற்றிலும் விடுவிக்கப் படுகிறான். ராமனை மன்னித்து ராமனை
மனிதன் ஆக்குகிறான், கம்பன். ராமன் அந்த
இடத்தில் மனிதன் ஆகிறான். கம்பன் கடவுளாகிறான்.”
வைரமுத்து
இப்படிக் கூச்சமில்லாமல் பிதற்றியதன் காரணம், அவரது இந்த எண்ணம்: ‘இந்து என்றால்
திருடன் என்று அர்த்தம் சொன்ன கலைஞர் கருணாநிதி கோலோச்சிய திமுக-வின் இன்றையத்
தலைவர் மு. க. ஸ்டாலினையும், அவர் மகன் உதயநிதி
ஸ்டாலினையும் நமது கோணங்கிப் பேச்சு மகிழ்விக்கும். அதனால் அவர்களிடம் நம்
மதிப்பு உயர்ந்து நமக்கு வருகிற பலன்கள் வருக வருகவே!'
ராவணன்
சீதையைக் கவர்ந்து சென்ற தினம் முதல், ராவணனை வதம் செய்து ராமன் சீதையை மீட்ட நாள் வரை, ராமன் தன் மனைவியைப்
பிரிந்திருந்தான். அந்த எல்லா நாட்களிலும் ராமன் புத்தி
சுவாதீனம் இழக்காமல், வாலியைக் கொன்ற நேரம் மட்டும் ராமன் புத்தி
சுவாதீனத்தை இழந்திருந்தானா? என்ன சொல்கிறார் வைரமுத்து?
இன்னொன்று.
வாலி-சுக்ரீவன் யுத்தத்திற்கு முன்னரே, ராமனும் சுக்ரீவனும் தம்முள் பேசி வாலி வதத்தைத்
திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி சுக்ரீவன் வாலியை யுத்தத்திற்கு அழைத்தான், வாலியும்
சண்டைக்கு வந்தான், வாலி வதம் அப்படியாக நடந்தது
என்று கம்பராமயணத்தில் வருகிறது. ஆகையால் ராமன் புத்தி சுவாதீனம் இழந்ததால்
வாலியைக் கொன்றான் என்ற பேச்சுக்கு இடமில்லை. அப்படிப் பேசுபவர்களின் புத்தியைப்
பற்றி யார் என்ன சொல்ல?
ராமபாணத்தால்
வீழ்ந்து முடங்கி இருந்த வாலி, ஆத்திரத்தில் ராமனிடம் ஒவ்வொன்றாகக் கேள்விகள் கேட்க,
அந்தக் கேள்விகளுக்கு ராமன் பொறுமையாகப் பதிலளிக்கிறான். தான் வாலியைக் கொல்ல வந்தது ஏன் என்றும்
விளக்குகிறான். ராமன் ஏன் மறைந்திருந்து அம்பு வீசினான் என்பதை லக்ஷ்மணன்
விளக்குகிறான். முடிவில் ராமன் மற்றும் லக்ஷ்மணனின் விளக்கங்களால் வாலி திருப்தி
அடைகிறான், அதை வாலியே ராமனிடம் சொல்கிறான்.
இவையும் கம்பராமாயணத்தில் அடுத்து வரும் பாடல்களில் உள்ளன.
முடிவாக,
'ராமன் அறத்தின்படி நடந்திருக்கிறான், அவன்மீது
தவறில்லை. நான்தான் என் வாழ்வில் தவறான செய்கைகள் செய்துவிட்டேன்' என்று வாலி உணர்ந்தான். தான் செய்த தீதை, கெட்ட செயல்களை, ராமன்
பொறுத்தருள வேண்டும் என்றும் வாலி ராமனிடம் வேண்டினான் என்றெல்லாம் கம்பரே
விவரிக்கிறார். ஆகையால், 'சீதையைப் பிரிந்ததால் மனக் கலக்கம் கொண்டிருந்த
ராமன், அவன் என்ன காரியம் செய்கிறான் என்பது தெரியாமலேயே என்னைக் கொல்ல முயற்சித்தானோ?' என்று ஆரம்பத்தில் எண்ணிய வாலி அந்த எண்ணத்தைப் பின்னர் மாற்றிக் கொள்கிறான் என்பது தெளிவாகிறது.
ஒரு
கட்டத்தில், வாலி ராமனைப் பார்த்துத் "தந்தை போன்றவனே!" என்றும் அழைத்துப் பேசுவதாகக் கம்பன் சொல்கிறான்.
அடுத்து, ராமன் பேசிய பேச்சை உள்வாங்கி உணர்ந்த
வாலி, "என் உயிர் போகும்
முன்னர் எனக்கு மெய்யறிவைத் தந்து அருள் செய்தாய்"
என்றும் ராமன் மீது நன்றி கொண்டவனாகப் பேசுகிறான் (வாலி
வதைப் படலம், பாடல் 130).
ராமனின்
மீது வாலிக்கு ஏற்பட்ட மதிப்பு எப்படி உயர்கிறது என்றால்,
தன்னருகே தன் மகன் அங்கதன் வந்து வருந்தி அழுதபோது அவனைத் தேற்றிவிட்டு, ராமனின் பெருமையையும்
அங்கதனுக்கு எடுத்துச் சொல்கிறான் வாலி. பின்னர்,
எவர் மனதையும் தொடும் ஒரு காரியத்தை வாலியும் ராமனும்
செய்கிறார்கள். வாலி ராமனிடம் அங்கதனை அடைக்கலமாக ஒப்படைக்கிறான். ராமனும் அங்கதனை
ஏற்று, தன்னுடைய உடைவாளை
அங்கதனிடம் கொடுக்க, அதை அங்கதனும் பெற்றுக் கொள்கிறான். அச் சமயம் வாலியின்
உயிர் பிரிகிறது (வாலி வதைப் படலம், பாடல்கள் 159, 160)
இறுதியாக ராமன் மீது வாலி குறை காணவில்லை, மாறாக அவன் ராமன்
மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவன்
ஆனான் என்பது கம்பர் மூலமாகவே நமக்கு விளங்குகிறது. கம்பராமாயணத்தின்
இந்த மற்ற பாடல்களைப் பற்றி வைரமுத்து மேடையில் மூச்சு விடாததன் காரணம் என்ன?
அவற்றுக்கு விரோதமான கண்ணோட்டத்தில் ஏன் அன்று பேசினார்? நேர்மையின்மை,
உள்நோக்கம் தானே?
ஆரம்பத்தில்
வாலி ராமனைப் பார்த்துக் கேட்ட ஒரு கேள்வியை ஏதோ கம்பனே அப்படிக் கேட்டு ராமனைப்
புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று கம்பனே தீர்ப்பும் கொடுத்த
மாதிரிப் பேசி இருக்கிறர் வைரமுத்து.
தனது
பேச்சில் வைரமுத்து கடைசியாகச் சொல்ல வருவது இது:
'புத்தி சுவாதீனம் இழந்த ராமன் ஒரு கொலையைச் செய்துவிட்டான்.
ஆகவே ராமன் கடவுள் அல்ல, வெறும் மனிதன்.
இன்னொரு பக்கத்தில், வெறும் மனிதனான கம்பன், கொலைபாதகக் குற்றம் செய்த ராமனைச் சாமர்த்தியமாக புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று காண்பித்து, அதன் காரணமாக இ.பி.கோ சட்டப் பிரிவு 84 போன்ற சட்ட அடிப்படையில் ராமனை – அதாவது ஒரு
அவதாரக் கடவுளையே – குற்றம் செய்யாதவனாக ஆக்கிக் காப்பாற்றுகிறான்.
ஆகையால் கம்பன், கடவுளாக உயர்கிறான்.'
வைரமுத்துவின்
இந்த எண்ணம், இந்த வியாக்கியானம், அசல் மாய்மாலம், ஏமாற்று
வேலை, பிராடுத்தனம்!
வைரமுத்து
குறிப்பிட்ட இ.பி.கோ சட்டம் நீக்கப் பட்டு அதற்குப் பதில் வேறு பெயரில் ஒரு புதுச்
சட்டம் அமலில் இருக்கிறது. அதிலும் வைரமுத்து சொன்ன சட்டப் பிரிவின் அம்சம் உண்டு.
இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் மீதான குற்றச் சாட்டிலிருந்து
அவர் விடுவிக்கப் படவேண்டும் என்றால், அந்த நபர்தான் அகற்கான
கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அவர்தான் குற்றம் நடந்த தருணத்தில் தான் புத்தி சுவாதீனம் இழந்து இருந்ததாக நிரூபிக்க வேண்டும்.
தொடக்கத்தில் வாலி ராமன் மீது ஒரு சந்தேகம் கொண்டிருந்தாலும் – அதாவது சீதையைப் பிரிந்த காரணத்தால் ராமன் தன் மீது அம்பு எய்தபோது அவன் திகைப்பில் இருந்தானோ என்ற சந்தேகம் கொண்டிருந்தாலும் – ராமன் வாலியிடம் பேசப் பேச, தன்மீது ராமன் குற்றம் இழைக்கவில்லை என்று வாலி உணர்கிறான், மேலும் ராமனை வாலி புகழ்கிறான், போற்றுகிறான் என்று கம்பர் விவரிக்கிறார். முடிவில் ராமன் குற்றம் செய்ததாக அவன் மீது கம்பராமாயணத்தில் குற்றச்சாட்டே வைக்கப் படவில்லை – கடைசியில் வாலியின் பார்வையில் கூட அந்தக் குற்றச்சாட்டு இல்லை. ஆகையால் ராமனின் பெயரைக் கம்பன் காப்பாற்றித் தர ஒரு சட்டப் பிரிவு கை கொடுக்கிறது என்று வைரமுத்து சொல்கிறாரே, அந்தச் சட்டப் பிரிவுக்கு இங்கு தேவையும் இல்லை, வேலையும் இல்லை. வைரமுத்துவின் சட்ட வாதமும் புஸ்வாணம்தான்.
தன்மீது விழும் உளறல் குற்றச்சாட்டிலிருந்து இப்போது யாராலும் காப்பாற்றப் பட
முடியாமல் இருப்பவர் ஒருவர்தான். வேறு யார்? வைரமுத்துதான்!
* * * * *
Author: R.
Veera Raghavan, Advocate, Chennai
அனைத்து அம்சங்களையும் அற்புதமாக விவரித்து, வைரமுத்துவின் தீய எண்ணத்தை விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி. திகைப்பு என்பதே சில கணங்கள் மட்டுமே இருக்கக் கூடியது. அதன் பின்பு அது விலகி விடும். திகைப்பை அடுத்து வருவது அந்தத் திகைப்பை ஏற்படுத்திய நிகழ்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்கின்ற சிந்தனை. திகைப்பு அந்தச் சிந்தனையை மழுங்கடித்து விடாது. தனது முடிசூடல் தடுக்கப்பட்டு, தன் இளையவன் பரதன் அதற்குரியவனாக்கப்பட்டான் என்ற செய்தி வந்தபோதும், அதற்கும் மேல் அவன் நாட்டை நீங்கி 'பூழி வெங்கானம் நண்ணி', 'தாழிருஞ் சடைகள் தாங்கி', 'அருந்தவம் மேற்கொண்டு', 'பன்னிரண்டாண்டின் பின்' வர வேண்டும் என்ற போதும் திகைக்காதவன், புத்தி சுவாதீனம் இழக்காதவன் இராமன். வெகுண்டெழுந்து உலகையே அழிக்கப் புறப்பட்ட இலக்குவனிடம் 'நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை அற்றே' என்றெல்லாம் கூறி, 'விதியின் பிழை, நீ என்கொல் இதற்கு வெகுண்டது' என்று இலக்குவனை அமைதிப்படுத்திய இராமன் புத்தி சுவாதீனம் இழந்து இந்தச் செயலைப் புரிந்தான் என்பது இது தொடர்பாக கம்பன் அடிப்பொடி சா.கணேசன் காலம் தொட்டு நடந்து வரும் பட்டி மன்றங்களில் கூட வாலி கட்சியினர் யாரும் கூறியதில்லை. தீய எண்ணம் இருந்தாலொழிய இத்தகைய கருத்துக்கள் நெஞ்சில் உருவாகா.
ReplyDeleteவைரமுத்து வின் பெயரை "வெறிமுத்து "என்று மாற்ற வேண்டிய நிலைமை 🙏
ReplyDeleteநல்ல விளக்கம்.
ReplyDeleteகோஇயல் தருமம் உங்கள் குலத்து உதித்தொர்கட்கெல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தை! - உடைமை அன்றோ?
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை.
என்பது பாடல். இது வாலியின் கூற்று. கம்பனின் கருத்து இல்லை. இதிலும், வாலி, "திகைத்தனை" என்பதை உறுதியாகச் சொல்லவில்லை. "போலும்" என்பதால், ஒருவேளை மயன்கிவிட்டாயோ? என்று வினவுவது போல்தான் அமைகிறது. இன்னும் இருபது பாடல்கள் உள்ளன. மூதறிஞர் இராஜாஜி, தனது சக்கரவர்த்தி திருமகன் என்ற தொடரில், இவ்வாறு எழுதுகிறார்
சுக்கிரீவனுடன் போருக்குப் புறப்பட்டபோது, தன் மனைவி தாரை அவனைத் தடுத்து எச்சரித்ததைப் பற்றி வாலி சொல்கிறான்,
"நீ, வேஷதாரி என்றும், துன்மார்க்கன் என்றும் புல்லால் மூடப்பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி என்றும் என் மனைவி சொன்னாள். அதைக் கேளாமல் வந்து என் நிலைமை இவ்வாறு ஆகிவிட்டது.
மேலும் இராஜாஜி எழுதுகிறார்,
"வாலியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு, இராமன் என்ன பதில் சொல்ல முடியும்? எதோ சொன்னதாகவும், அதைக் கேட்டு வாலி சமாதானம், பட்டதாகவும், நாம் இப்போது படிக்கும் இராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டுவிட்டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள்" என்று முடிக்கிறார், இராம பக்தரான இராஜாஜி.