-- ஆர். வி. ஆர்
சென்ற ஏப்ரல் 22ம் தேதி, பாகிஸ்தான்
அரவணைக்கும் 4 பயங்கரவாதிகள் இந்தியாவின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்தனர். அதற்குத் தற்போது இந்தியா பதிலடி கொடுக்கிறது
– ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்.
ஆபரேஷன்
சிந்தூரின் முதற் கட்டமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்
9 வெவ்வேறு இடங்களில் நிறுவப் பட்டிருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகளை ட்ரோன் மற்றும்
ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி அழித்தது இந்தியா. அதில் ஒரு இடம் 82 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது, இன்னொன்று 15 ஏக்கர். அந்த அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வந்த பயங்கரவாத
முகாம்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்
பட்டனர்.
இந்தியாவால்
கொல்லப் பட்ட பயங்கரவாதிகள் பலரின் உடல்களின் மீது பாகிஸ்தானின் கொடியைப் போர்த்தி,
பாகிஸ்தானின் ராணுவ வீரர்களே அவற்றைச் சுமந்து
அடக்கம் செய்ய உதவியது அந்த நாடு. "எங்கப்பன் பயங்கரவாத முகாமில் இல்லை"
என்பது போல்.
பாகிஸ்தான்
எதற்காகப் பயங்கரவாதக் கட்டமைப்புகளையும் பயிற்சி
முகாம்களையும் தனது நாட்டிற்குள், பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அமைய அனுமதித்தது – அதாவது பாகிஸ்தான்
நாடே அவற்றை அமைத்தது?
பாகிஸ்தான்
உருவாக்கும் அந்தப் பயங்கரவாதிகள் ஒரு எதிரி நாட்டில் அவ்வப்போது புகுந்து
நாசவேலைகள் புரியட்டும், படுகொலைகள் செய்யட்டும்,
என்று பாகிஸ்தான் கெடுதலாக நினைப்பதுதான் அதற்கான காரணம். பாகிஸ்தான்
கூறு கெட்டு பாவிக்கும் ஒரே எதிரி நாடு இந்தியா. ஆகையால்
இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றத் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து
வருகிறது.
பாகிஸ்தான்
ராணுவ ரீதியாக இந்தியாவுடன் நேருக்கு நேர் பெரிய அளவில் மோதினால், பாகிஸ்தானை இட்லிப்
பொடியாக அரைத்து விடும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. அது அந்த நாட்டிற்கும் தெரியும்.
ஆகையால் பாகிஸ்தான் வேறு ஒன்றைச் செய்கிறது. அதாவது, பாகிஸ்தான் நிர்வகிக்கும் நிலத்தில்
பயங்கரவாதிகளுக்கான முகாம்களை அமைத்து, அவற்றில் பயங்கரவாதிகளை உருவாக்கிப் பயிற்சி
அளித்து, அவர்கள் மூலம் இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தியப் பொதுமக்கள் மீது அவ்வப்போது
கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது அந்த நாடு.
தற்போது
மோடி பிரதமராகவும் அமித் ஷா உள்துறை அமைச்சராகவும் இருக்கும் இந்தியாவை பாகிஸ்தான்
சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா இப்போது என்ன செய்தது
என்றால்: ஆபரேஷன் சிந்தூரை ஆரம்பித்து வைத்து, தனது பதிலடி நடவடிக்கையை சற்று நிறுத்திப்
பாகிஸ்தானைக் கவனித்தது இந்தியா – 9 பயங்கரவாத முகாம்களைத் தகர்த்த பின் பாகிஸ்தான்
வாலைச் சுருட்டி சும்மா இருக்குமா என்று தெரிந்து கொள்ள.
ஆபரேஷன்
சிந்தூரின் முதற் கட்ட நடவடிக்கையில் நூற்றுக்கும் மேலான பயங்கரவாதிகள் மடிந்த பின்,
எஞ்சியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தலைவர்கள் அந்த நாட்டு ராணுவத் தலைமையிடம் என்ன
கேட்பார்கள்?
“இந்தியாவில்
நாச வேலைகள் நடத்தவும் படுகொலைகள் செய்யவும் அந்த வேலைகளின் போது எங்களில் பலர் இந்திய
ராணுவத்தால் சுடப்பட்டு மடியவும் தானே எங்களை வளர்த்து வைத்திருக்கிறீர்கள்? அப்படி
மடிந்தால் அது புனிதம் என்றீர்கள், நாங்களும் அதை நம்பி இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய
ரெடியாக இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தானில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், உள்ள
எங்கள் முகாம்களை ஏவுகணைகள் அனுப்பித் தகர்த்து எங்களையும் நூற்றுக் கணக்கில் இந்தியா
மேலோகம் அனுப்புவதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?
இந்த மண்ணிலாவது எங்களைக் காக்க, நீங்கள் இந்தியாவின் மீது எதிர்த் தாக்குதல் நடத்துங்கள்.
இல்லாவிட்டால் நாங்கள் பயங்கரவாதிகளாக உங்கள் ராணுவத்திற்கு வேலை பார்ப்பதில் அர்த்தமில்லை.”
தனக்காகவும்,
தன் சேவகர்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றவும், பாகிஸ்தான் ஒன்று செய்தது.
அதாவது, ஆபரேஷன் சிந்தூரின் முதற்கட்ட நடவடிக்கைக்கு எதிராக, மறுநாள் இந்தியாவின் 15
எல்லைப் பகுதி ஊர்களின் மீது, இந்தியாவின் சில விமானத் தளங்களின் மீது, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பித் தாக்குதல்
நடத்த முனைந்தது பாகிஸ்தான். அவை அனைத்தையும் இந்தியா வெற்றிகரமாக வான்வெளியிலேயே தடுத்து
வீழ்த்தியது. பாகிஸ்தானின் இந்த ஆரம்ப ராணுவத் தாக்குதல் முயற்சியில் அது ‘ஷேம் ஷேம்’
தோல்வி அடைந்தது.
இப்போது
ஆபரேஷன் சிந்தூரின் அடுத்த கட்டத்திற்கு இந்தியா நகர வேண்டி இருந்தது. அதன்படி – வேறு
வழி இல்லாமல் – பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தளங்களை இந்தியா ஏவுகணைகள் கொண்டு தாக்கியது.
அந்த நாட்டில் பல இடங்களில் உள்ள வான்வழிப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் பலவற்றை – முக்கியமாக
லாகூர் நகரின் வான்வழிப் பாதுகாப்புக் கவசத்தை – ஏவுகணைகள் மூலம் நாசம் செய்தது இந்தியா.
பயங்கரவாத
முகாம்களை ஒன்பது இடங்களில் அடித்து நொறுக்கிய மறு நாளில், பாகிஸ்தானின் ராணுவத் தளங்கள்
சிலவற்றையும் அழித்திருக்கிறது இந்தியா. பாகிஸ்தானிலோ,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலோ, இயங்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் நிஜத்தில் பாகிஸ்தான்
ராணுவத்தின் பினாமி முகாம்கள் தான். ஆகையால்
இந்தியா அவற்றைத் துவம்சம் செய்தது, முகமூடி அணிந்த பாகிஸ்தானின் ராணுவ முகத்தில் குத்திய
மாதிரி – இதில் முகமூடிக்குப் பின்னால் உள்ள அந்த ராணுவ முகத்திற்கு வலிக்கும். இதுபோக பாகிஸ்தான் நாட்டில் பல இடங்களின் வான்வழிக்
கவசத்தை இந்தியா நொறுக்கியது, முகமூடி இல்லாத
பாகிஸ்தானின் ராணுவ முகத்தில் நேராகக் குத்து விட்ட மாதிரி.
இந்தியா,
பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடையே ஒரு போர் ஏற்பட்டால், இந்தியாவின் கை ஓங்கி நிற்கும்
என்பதை இந்தியா இப்போது பாகிஸ்தானுக்குத் தெளிவாக்கி இருக்கிறது, உலகத்திற்கும் புரிய
வைத்திருக்கிறது. நாம் இதற்காக நமது ராணுவத்திற்கு ஒரு சல்யூட்டும் பிரதமர் மோடிக்கு
ஒரு சல்யூட்டும் வைக்கலாம்.
இனி
உலகம் இந்திய ராணுவ வலிமையின் மீது, அதன் போர்த் தந்திரங்களின் மீது, அறிந்து மரியாதை
வைக்கும். அது நமது தேசத்தின் மீதான ஒட்டுமொத்த மதிப்பை, நமது வர்த்தக வலிமையை, உயர்த்தும்.
அதோடு இன்னும் ஒரு பலன் நமக்குக் கிடைக்கும்.
இந்தியாவைப் பார்த்து உதார் விடுவது பயனில்லை, இனி பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பினால் லாகூர்,
ராவல்பிண்டி மற்றும் கராச்சி வரை பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்படும், என்பதெல்லாம் இப்போது
பாகிஸ்தானுக்கு உறைக்கும். அதுபோக, சமீபத்தில் இந்தியா அறிவித்தது போல் இந்திய வழி நதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர்
செல்வதையும் இந்தியா நிறுத்தினால் – அதைச் செய்ய நாட்கள் பிடித்தாலும் – பாகிஸ்தானில்
மக்களே அங்கு வீதிக்கு வந்து தண்ணீர் கேட்பார்கள். ராணுவம் மக்களை லத்தியால் அடித்தோ துப்பாக்கியால் சுட்டோ அவர்களின் தண்ணீர்த்
தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்ற கவலையும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வரும். இதனால்
பாகிஸ்தானுக்கு இந்தியா மீது ஒரு அச்சம் கலந்த மரியாதை ஏற்பட வழி உண்டு. அது ஏற்பட்டால்,
பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தை இந்தியாவில் பிரயோகிக்கத் தயங்கும்.
பைத்தியக்காரன்
பத்தும் செய்வான், அதன் விளைவையும் ஏற்பான். அதனால் எந்தக் காலத்திலும் – இப்போது சில
நாட்களில் கூட – பாகிஸ்தானின் ராணுவ அக்கிரமங்கள் அல்லது பினாமி பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் நிகழலாம். அவற்றை முதலில் எப்படி அளவோடு
கையாள்வது, பிறகு பாகிஸ்தானை எப்படி அடிப்பது என்பதில் நம் நாட்டிற்கு அனுபவமும் ராணுவத் திறனும் உண்டு. பாகிஸ்தானுக்கு இன்னொரு நாடு என்றும் ஆயுதங்கள்
தரலாம். தண்ணீர்?
எல்லாவற்றுக்கும்
மேலாக, பாகிஸ்தானை அண்டை நாடாகக் கொண்டிருக்கும் இந்தியா தனக்கு இதைச் சொல்லிக் கொள்ள வேண்டும்:
அடி உதவுவது போல் அடுத்த நாடு உதவாது!
* * * * *
Author: R. Veera
Raghavan, Advocate, Chennai