Thursday, 2 April 2026

கேள்வி-பதில் (31.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக இடையே கூட்டணி அமைந்ததில், அண்ணாமலையை பாஜக உதாசீனம் செய்து விட்டதா? தமிழக பாஜக-வில் மற்ற தலைவர்கள் அண்ணாமலையை முன்னுக்கு வரவிடாமல் தடுக்க முனைகிறார்களா?

 

பதில்: தமிழக பாஜக-வுக்கும் தமிழக அரசியலுக்கும் அண்ணாமலையை ஒரு பொக்கிஷமாகப் பார்க்கும் பலரின் மனதில் மேற்காணும் கேள்விகள் எழலாம். சில விஷயங்களை நாம் அமைதியாக, கூர்மையாகப் பார்த்தால் நமக்குத் தெளிவு கிடைக்கும்.

 

நம் அனைவரையும் விட மோடியும் அமித் ஷாவும் ஒன்றைத் தீர்க்கமாக உணர்ந்தவர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக-வின் முக்கிய குறிக்கோள் இது: திமுக-வைத் தோற்கடித்து ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். அதே சமயம், எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு திமுக-வை விட ஒரு சிறந்த ஆட்சியைத் தமிழகத்தில் நிறுவ வேண்டும்.

 

இந்த முக்கிய குறிக்கோளை இழந்து, திமுக மறுபடியும் ஜெயித்து ஆட்சி அமைத்தாலும் பரவாயில்லை, அது நடக்கையில் பாஜக-வும் தமிழகத்தில் தனது வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துக் காட்டி, அதைச் சொல்லி மார் தட்டலாம் என்று நினைப்பது முதிர்ச்சியற்ற, தொலைநோக்கில்லாத, பார்வை. முற்றிலும் தீய திமுக-வைத் தேர்தலில் தோற்கடிப்பது எல்லாவற்றையும் விடப் பிரதானமானது. மற்ற அனைத்தும் பிறகு.

 

பாதத்தில் பெரிய எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் அதற்கான கட்டுப் போட்டு கட்டிலில் படுத்து பாதத்தைச் சரி செய்துகொள்ள வேண்டும். எலும்பு முறிவு ஏற்பட்ட பாதத்திலுள்ள பித்த வெடிப்புக்கு முதலில் வைத்தியம் பார்க்கிறேன், எலும்பு முறிவு சிகிச்சைக்கான கட்டை அப்புறம் போட்டுக் கொள்கிறேன் என்று நாம் இருக்க மாட்டோம். இங்கு எது அதி முக்கியமோ, அதைப் போல் முக்கியம் திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்குவது.

 

அதிமுக தூய்மையான அரசியல் கட்சி அல்ல. அவர்களிடம் ஆட்சி இருந்தால் அவர்கள் தூய்மையாக, நேர்மையாக, திறமையாக, ஆட்சி செய்வார்கள் என்று மோடியும் அமித் ஷாவும் நினைக்க மாட்டார்கள். ஆனால் திமுக-வைப் போல தேச விரோத, ஹிந்து விரோத, சூப்பர் கில்லாடித்தனமான ஆட்சியாக அதிமுக ஆட்சி இருக்காது என்பது நிச்சயம். ஒரு மாம்பழம், ஒரு செவ்வாழைப் பழம் மட்டும் ஒரு கடைக்காரரிடம் இருக்கின்றன. மாம்பழம் மிகவும் அழுகியது, செவ்வாழைப்பழம் மிகவும் கனிந்தது என்றால், நாம் செவ்வாழைப் பழத்தை வாங்குவோம். அப்படியான வாழைப் பழம், அதிமுக - இப்போதைக்கு வயிறு நிறைய உதவும்.

 

அண்ணாமலையின் வரவுக்குப் பின் தமிழகத்தில் பாஜக-வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கும் - அதற்கு முக்கிய காரணம் அவர்தான்.

ஆனாலும் மாநிலத்தில் தற்போதைய பாஜக வாக்கு சதவிகிதம், அதிமுக-வின் வாக்கு சதவிகிதத்தை விடக் குறைவுதான். அதிமுக-வின் ஜென்ம எதிரி திமுக என்பதால், திமுக-வைத் தேர்தலில் வீழ்த்தும் நோக்கில் பாஜக அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும். தமிழகத்தில் பிற்கால நல்லாட்சி குறித்தும் தேசநலன் பற்றியும் அதிகம் சிந்திக்கும் பாஜக-வுக்கு இந்தக் கூட்டணி அமைந்தது மிக முக்கியம் - அதிமுக இதைத் தன் பக்கத்திலிருந்து அவ்வளவு முக்கியமாகக் கருதியதோ இல்லையோ.

 

2026 சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க விரும்பிய பாஜக-விடம், "எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் ஒத்துவராது. ஆகையால் இந்தக் கூட்டணி ஏற்படவேண்டும் என்றால், அண்ணாமலை பாஜக-வின் தமிழகத் தலைவராக நீடிக்கக் கூடாது, அவர் இடத்தில் வேறு ஒருவரைப் பாஜக நியமிக்க வேண்டும்" என்று அதிமுக நிபந்தனை விதித்ததா, அதைப் பாஜக மேலிடம் ஏற்றுக் கொண்டுதான் அவ்வாறு செயல்பட்டதா என்பது பொதுவெளியில் யாருக்கும் தெரியாது. அது உண்மை என்றாலும், மாநில ஆட்சியிலிருந்து திமுக-வை இறக்க வேண்டும், அதைத் தீவிரமாக முயற்சிப்பதற்கு அதிமுக-வுடனான கூட்டணி அவசியம் என்று பாஜக நினைத்துச் செயல்பட்டால் அது நல்ல அரசியல் யுக்தி.

 

அண்ணாமலை தமிழக பாஜக-வின் தலைவராக வருவதற்கு, அல்லது அதையும் விடக் கட்சியிலும் அரசாங்கத்திலும் உயர்ந்த இடங்களை அடைவதற்கு, அவருக்கு வயது இருக்கிறது. அதுபோன்ற கால சௌகரியம் அற்றது, திமுக ஆட்சியிலிருந்து விடுபடக் காத்திருக்கும் தமிழகம்.

 

வரும் தேர்தலில் அதிமுக துணையுடன் திமுக-வைத் தோற்கடிக்க முடிந்தால், அதன் பிறகு பாஜக-வின் நோக்கங்கள் இவ்வாறு இருக்கும்: திமுக-வை ஆட்சியிலிருந்து தள்ளியே வைத்திருக்க வேண்டும்; அதற்காகக் கூடிய வரை அதிமுக-வுடன் கூட்டணி தொடர வேண்டும்; அதே நேரம் பாஜக-வைத் தமிழகத்தில் மேலும் வளரச் செய்ய வேண்டும்; பிறகு தனது கட்சி பிரதான கூட்டணிக் கட்சியாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் நிலையை பாஜக எட்ட வேண்டும். மோடியும் அமித் ஷாவும் - குறைந்த பட்சம் அமித் ஷா மட்டுமாவது - தேக ஆரோக்கியத்துடன் தீவிர அரசியலில் இருக்கும்போதே இந்த நோக்கங்களைப் பெருமளவு நிறைவேற்ற - அதற்கான வலுவான அடித்தளம் அமைக்க - பாஜக முயற்சிக்க வேண்டும். அதுதான் விவேகம்.

 

இதே எண்ண ஓட்டம், அண்ணாமலைக்கும் இருக்கும் என்று நாம் கருதலாம்.

 

அடுத்ததாக, தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை மீது, அவருடைய வளர்ச்சி மீது, பொறாமை கொண்டு, கட்சிக்குள் அவருக்கு ஒத்துழைப்பு தராமல் இருக்கிறார்களா என்று பொதுமக்களில் சிலர் சந்தேகம் கொள்கிறார்கள், அதைச் சமூக வலைத் தளங்களில் வெளிப்படுத்துகிறார்கள், அதன் மறுபக்கமாக மற்ற தமிழக பாஜக தலைவர்களைக் கண்டனம் செய்கிறார்கள். இது, நல்ல எண்ணத்தில் செய்யப்படும் தவறு.

 

அண்ணாமலையின் வரவால், அவரது தடலடியான பேச்சுகளால், அவருக்குக் கிடைக்கும் எழுச்சியான மக்கள் ஆதரவால், சில சீனியர் தமிழக பாஜக தலைவர்களுக்கு அவர் மீது சிறிதளவு பொறாமை ஏற்பட்டிருந்தாலும், அது சாதாரண மனித குணம், உலக இயல்பு. அது ஏற்பட்டாலும் அந்த சீனியர் தலைவர்கள் பண்பு மிக்கவர்கள், அவர்களின் அர்ப்பணிப்பும், தேச சேவையும் மதிப்பு மிக்கவை, பிற கட்சிகளில் காணக் கிடைக்காதவை. அவர்களும் பாஜக-வின் சொத்து.

 

அண்ணாமலையும் அந்த சீனியர் தலைவர்களும் காலப் போக்கில் ஒருவருக்கு ஒருவர் சரியாகி விடுவார்கள். நல்லவர்களுக்கு இடையில் இதுதான் நடக்கும். அவர்கள் தங்களுக்குள் சரியாகிக் கொண்டிருந்தாலும், பாஜக ஆதரவாளர்கள் எதையும் ஊதி ஊதிப் பார்க்காமல் இருப்பது நல்லது. இந்த இயல்புகள், இந்தப் போக்குகள் அனைத்தையும் அண்ணாமலை உணர்ந்திருப்பார் என்று நாம் நம்பலாம்.

 

அரசியல் ஆட்டம் என்பது தினம் தினம் சோதனைகளும் சவால்களும் நிரம்பியது - கட்சிக்கு உள்ளே சில, கட்சிக்கு வெளியே சில என்றிருக்கும். எல்லாக் கட்சிகளுக்கும் அதுதான் விதி.   அவற்றைப் பொறுமையாகக் கடந்து, கட்சியில் உள்ள சீனியர்களையும் அரவணைத்து அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று இன்று உச்சம் தொட்டிருப்பவர்கள் மோடியும் அமித் ஷாவும். அந்த வழியில் அண்ணாமலையும் பயணிக்க வேண்டும்.

 

மோடியும் அமித் ஷாவும் அண்ணாமலைக்கு அரவணைப்பாகக் கிடைத்த மாதிரி, மோடி மத்திய அரசியலுக்கு வரும்போது அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த வகையில், பாஜக-வுக்குள் காலடி வைக்கும் போதே அண்ணாமலைக்கு அதிக அதிர்ஷ்டம் உண்டு. அவர் பொறுமை காத்து பாஜக-வில் உயர்ந்த இடத்தை அடைவார், திமுக எதிர்ப்பிலும் தமிழகத்திற்குப் பெரும் சேவை செய்வார்.

 

இப்போது அனைவருக்கும் தேவை பொறுமை. அது பாஜக-வுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யும்.

 

பகுதி 75 // 31.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

கேள்வி-பதில் (30.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 'வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு, எங்கள் அரசு 8,000 ரூபாய்க்கான இல்லத்தரசி கூப்பன்களை வழங்கும். அந்தத் தொகைக்கு அவர்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி என்று விரும்பிய வீட்டு உபயோகப் பொருளை வாங்கிக் கொள்ளலாம்' என்பது திமுக-வின் ஒரு புதிய தேர்தல் வாக்குறுதி. இது மக்களுக்குப் பயனுள்ளதா?

 

பதில்: அறிவித்த கட்சிக்கு இது பயனுள்ளது. திமுக என்ன சொல்கிறதென்றால்: "மக்களே! எங்களை மாதிரி நீங்களும் பலவிதமாகப் பயன் அடையுங்கள்! அரசு தரும் இலவச கூப்பனைக் கொடுத்து நீங்கள் அருகிலுள்ள கடையில் ஒரு வீட்டு உபயோகப் பொருளை வாங்கிக் கொள்ளலாம்! அந்தக் கூப்பனை கடைக்காரர் அரசிடம் கொடுத்துப் பணம் வாங்கிக் கொள்வார் - அதில் ஏதும் கமிஷன் மறைந்திருந்தால் அது உங்களைப் பாதிக்காது! உங்கள் கூப்பனை நீங்கள் உபயோகப் படுத்தாமல் வெளியில் விற்கலாம்! அதை உடனடி ரொக்கத்திற்கு முடித்துக் கொடுக்க வியாபாரிகளோ ஏஜெண்டுகளோ கமிஷன் கேட்டால், அது நியாயம் என்று கருதி நீங்களே கொடுத்து விடுவீர்கள்! இந்தக் கூப்பனை ஒருவர் கல்யாண சீர்வரிசையாகக் கேட்கலாமா, கொடுக்கலாமா, என்பதெல்லாம் மக்களின் விருப்பம்!"

 

அடுத்து இப்படியும் நடக்கலாம்: வருமான வரி கட்டாத ஆண்கள் வெளியில் போகும்போது அவர்கள் பயன் பெறுமாறு 'அனைத்துப் பருவகால சிறப்புத் தொகை' என்ற பெயரில் அரசு அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்க்கு குடிநீர்க் கூப்பன் வழங்கலாம்! டாஸ்மாக் கடைகளிலும் நிறைய குடிநீர் பாட்டில்கள் வைக்கப் படும்! அனைவரும் பயனடையலாம்!

 

 

2. கேள்வி: சில நாட்கள் முன் அதிமுக-வை விட்டு திமுக-வில் சேர்ந்தவர்களுக்கு, சட்டசபைத் தேர்தலில் திமுக சீட் கொடுக்கிறது.  மிகச் சமீபத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து தவெக-வுக்கு வந்தவர்களுக்கு, தவெக -வில் சீட் கிடைக்கிறது. சில மாதங்கள் முன் பெரிய எதிர்பார்ப்பில் அதிமுக-வை விட்டு திமுக-வில் சேர்ந்த ஒருவருக்கு அங்கு சீட் கிடைக்காமல் போய், தவெக வேட்பாளர்களை அறிவிக்கும் தினத்தில் அவர் தவெக-வுக்குத் தாவி அங்கு சீட் பெறுகிறார். தேர்தலில் சீட்டுக்காக, எப்படி இவர்களால் எளிதாகக் கட்சி மாற முடிகிறது?

 

பதில்: ஒரு தொழிலில் பெருத்த லாபம் கிடைப்பதற்காகக் கம்பெனிகளை நடத்தும்  முதலாளிகள், சந்தையில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவார்கள். அந்த முதலாளிகளின் கீழ் வேலை செய்து அவர்களை விடக் குறைவாக சம்பாதிக்கும் பணியாளர்கள், தங்களுக்கு அதிகப் பலன்கள் கிடைக்க ஒரு கம்பெனி விட்டு இன்னொரு கம்பெனிக்குத் தாவலாம். இதுபோக, ஒரு பணியாளர் வேலையை விட்டு அவரே தனிக் கம்பெனி ஆரம்பித்த பின் ஒன்றும் தேறாமல், கடையை மூடிவிட்டு மீண்டும் ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்குப் போய் விடலாம்.

 

முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இந்தச் செயல்களை இயல்பாக எடுத்துக் கொள்வார்கள். பிசினஸ் இப்படித்தான் நடக்கும்.

 

 

3. கேள்வி: "வசதியான வாழ்க்கையைத் தூக்கி எறிஞ்சிட்டு அரசியலுக்கு வந்திருக்கேன். உங்களுக்காக மட்டும்தான் வந்திருக்கேன்" என்று தவெக தலைவர் விஜய் மேடையிலிருந்து மக்களை நோக்கிப் பேசியிருக்கிறாரே?

 

பதில்: அரசியல் பணியை தார்மீகக் கடமையாக, சேவை மனப்பான்மையுடன் செய்கிற ஒருவர், விஜய் பேசிய வார்த்தைகளை நினைக்க மாட்டார், பேசவும் மாட்டார். விஜய் பெரிதும் தனக்காக, தனது ஆசைகளுக்காக, அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை அவரே நிரூபிக்கிறார்.

 

 

4. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தமிழக காங்கிரஸ் தேர்வு செய்யும் விதம், அந்தக் கட்சிக்குள்ளேயே கடுமையாக விமர்சிக்கப் பட்ட நிலையில், "குலுக்கல் முறையில் ஏன் வேட்பாளர்களைத் தேர்வு செய்யக் கூடாது?" என்று அக் கட்சியின் ஒரு மத்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கேட்டிருக்கிறாரே?

 

பதவி: பிரவீன் சக்கரவர்த்தி இப்படி நினைத்திருப்பார்:  தகுதியான ஒரு காங்கிரஸ்காரர் எம்.எல்.ஏ ஆனால், அவரைக் கட்சி மேலிடம் - அதாவது, டெல்லி மேலிடம் - பெரிதாக அங்கீகரிக்காது, ஊக்குவிக்காது. தகுதியற்ற ஒரு காங்கிரஸ்காரர் எம்.எல்.ஏ ஆனால், கட்சி மேலிடம் அது பற்றியும் கவலைப் படாது. ஆகையால் வேட்பாளர் தேர்வு முறை பற்றி, வேட்பாளர் தகுதி பற்றி, விவாதம் நடப்பது பயனில்லை. குலுக்கல் முறையில் காங்கிரஸ் கட்சிக்கான எம்.எல்.ஏ வேட்பாளர்கள் தேர்வானால், அது குறித்து கட்சிக்குள் மாநில அளவில் விவாதம் ஏழாதபடி மாநில நிர்வாகிகளின் வாய் மொத்தமாக அடைபடும்.  வழக்கம் போல் டெல்லித் தலைமை கொட்டாவி விட்டுத் தூங்கலாம்.

 


5. கேள்வி:  அமெரிக்கா ஈரானுடன் தொடர்ந்து போர் நடத்தும் போது, "ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணை எடுக்க விரும்புகிறேன்" என்று அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறாரே?

 

பதில்:  போர் முடிந்து நல்லது நடப்பதற்கு, பாதிப்படைந்த சாதாரண ஈரானியர்களின் கோபம் தணிவதற்கு, டிரம்ப் ஏதுவாக இருக்கமாட்டார்; வெறுப்பை வளர்த்து எரிய விடும் அசட்டுப் பேச்சுகள் பேசுவார்.

 

தீதும் நன்றும் பிறர் தர வாரா;

டிரம்பும் நன்றும் சிறிதும் சேரா.


பகுதி 74 // 30.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr