Saturday, 29 March 2025

அண்ணாமலை, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான், விஜய் – இவர்களில் யார் எப்படி?

         

          -- ஆர். வி. ஆர்

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் ஒரு அலாதியான காரணத்தினால் கூடுகிறது.  அது என்ன?

 

திமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.

 

மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கும் திமுக ஒரு அராஜகக் கட்சி என்பது தமிழக மக்களின் பரவலான எண்ணம். வேண்டாதவர்களிடம் முஷ்டி வீசுதல், எட்டி உதைத்தல், காது கூசும் சொற்கள் பேசுதல் போன்ற அநாகரிகச் செயல்கள் அக் கட்சியின் கீழ் மட்டத்திலும் நடு மட்டத்திலும் இயல்பாகப் பரவியிருக்கிறது என்பது தமிழ்நாட்டில் பலரின் கருத்து. அந்தக் கட்சியினரைப் பகைக்கிற மாதிரி வெளியில் பேசவோ செயல்படவோ சாதாரண மக்கள் பயப்படுவார்கள்.

 

தமிழ்நாட்டில் சில அரசியல் தலைவர்கள் திமுக-வை எதிர்க்கலாம், ஆனால் தமது சுயலாபத்திற்காக மட்டும் எதிர்க்கிறார்கள், அல்லது அவர்கள் திமுக மாதிரி தில்லானவர்கள் கிடையாது, சமத்து சாதுப் பேர்வழிகள், அவர்களை நம்பிப் பயனில்லை, என்பதும் பெருவாரியான சாதாரண மக்களின் கருத்து. இந்த நிலையில் தமது அறியாமையால், இயலாமையால், அடாவடிக் கட்சி திமுக-வுக்கு ஓட்டுப் போடுவது பாதுகாப்பானது என்ற ஒரு எண்ணத்தில் சாதாரண மக்கள் அந்தக் கட்சியை வேறு வழி தெரியாமல் ஆதரிக்கிறார்கள். இருக்கிற ஏழ்மையில் வருகிற பணத்தை அவர்கள் தேர்தல் காலங்களில் வாங்கிக் கொள்வது வேறு விஷயம். திமுக-வுக்கு அநேக சாதாரண மக்கள் வாக்களிப்பதன் பிரதான காரணம் பணம் அல்ல.  

 

எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றால், அவரது இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப் போடும் 55+ வயதுள்ள வாக்காளர்கள் இன்றும் அதிமுக-வை ஆதரிக்கிறார்கள் – தலைமைக் குணம் இல்லாத, தகுதிக்கு மீறிய பேராசைகள் நிறைந்த, எடப்பாடி பழனிசாமிக்காக அல்ல. பழனிசாமியோ அல்லது அதிமுக-வின் வேறு முன்னாள் இந்நாள் தலைவரோ இன்று மக்களை ஈர்க்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் இரட்டை இலையின் நிழலில் இளைப்பாறுகிறவர்கள்.

 

ராமதாஸின் பாமக, அடிப்படையில் ஒரு ஜாதிக் கட்சியாகவே தெரிகிறது. அதனால் பிற ஜாதி மக்கள் பலரும் அந்தக் கட்சியிலிருந்து தள்ளி இருக்க விரும்புவார்கள். மற்ற மக்களுக்கும் அவரவர் ஜாதிகள் மேல் பிடிப்பு இருப்பதால், அவர்களில் பலரும் பாமக-வில் சேர, அந்தக் கட்சியை நேரடியாக ஆதரிக்க, விரும்ப மாட்டார்கள்.  தன் ஜாதி மக்களை முக்கியமாக ஈர்த்திருக்கும் ராமதாஸ், ஒவ்வொரு தேர்தல் நிலவரப்படியும் திமுக மற்றும் அதிமுக-வுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்தாலும் தன் கட்சியினரின் ஆதரவை அவர் இழக்க மாட்டார்.

 

நாம் தமிழர் கட்சியின் சீமான் மேடைகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில், கைகள் வீசி, முக பாவங்கள் மாற்றி, குரலை ஏற்றி இறக்கி, பஞ்ச் டயலாக் பேசி, நாடகத் தனம் செய்கிறார். துடிப்பான உணர்ச்சி மிகுந்த இள வயதினரை, அதுவும் ஆண்களை, அவர் கவர்கிறார். போட்டிக் கட்சிகளின் அரசியல் தலைவர்களிடம் சீமான் டெக்னிக் இல்லை. மற்றபடி அவர் ஒரு திமுக பாணி கட்சியாகவும், திமுக-வுக்குப் போட்டியாகவும், வளர நினைக்கிறார்.  மற்ற யாரும் கவுரமான தலைவர்களாக அவர் கட்சியில் உருவாக முடியாது. அவர்தான் கட்சி.

 

நடிகர் விஜய்க்கு சினிமா ரசிகர்கள் ஏராளம். அரசியலுக்கு வந்து அரசியல்வாதியாக உழைத்துச் செயல்பட்டு மக்கள் ஆதரவைத் திரட்டியவர் அல்ல விஜய்.  தனக்கு ரெடிமேடாக இருக்கும் சினிமா ரசிகர்களின் ஆதரவை,  தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்காளர் ஆதரவாகப் பெற்றவர் அவர். அவர் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அவரது ரசிகர்களின் ஆதரவு அவருக்கு உண்டு. அவரிடம் முதிர்ச்சி ஏதும் காணப்படவில்லை. அரசியலில் விஜய் நிலைப்பாரா, வெற்றி அடைவாரா, என்று தெரியாது. அவர் இன்னொரு எம். ஜி. ஆரும் அல்ல.

 

இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்டவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 41 வயதுதான் ஆகப் போகிறது. கட்சியில் சேர்ந்த பதினோரு மாதங்களில் தமிழக பாஜக தலைவர் ஆக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அவர் மக்களிடம் தனக்கென்று ஒரு அபரிதமான செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

 

தமிழகத்தில் ஏற்கனவே மிகப் பிரபலமான ஒரு கட்சித் தலைவரின் மடியில் தவழ்ந்தோ, காலில் விழுந்தோ, விரல் பிடித்தோ, அடியொற்றி நடந்தோ மக்களிடம் அறிமுகமாகி வளர்ந்தவர் அல்ல அண்ணாமலை. அவர் ஒரு சுயம்பு – அதை சரியாக அடையாளம் கண்டவர் பிரதமர் மோடி.

 

அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக-வின்  ‘அநியாய அக்கிரம அராஜகத்திற்கு’ப் பயந்து, அதன் காரணமாக அதிகமான மக்கள் அண்ணாமலையை ஏற்கிறார்கள் என்பதில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மாதிரி, தோற்றக் கவர்ச்சியும் இல்லாத தலைவர் அண்ணாமலை. ராமதாஸ் மாதிரி, தன் ஜாதி மக்களை நம்பி, தன் ஜாதி மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல அண்ணாமலை. சீமானின் நாடகப் பாசாங்கும் அவரிடம் கிடையாது. விஜய் மாதிரி தமிழகத்தில் ரெடிமேட் ஆதரவாளர்கள் கொண்டவரும் அல்ல அவர்.  ஏற்கனவே உள்ள பாஜக-வில் சேர்ந்து, எப்படி அவரால் தமிழக பாஜக-வுக்குப் புத்துயிர் அளிக்க முடிந்தது, அவரும் நாளுக்கு நாள் அதிகம் பிரபலம் அடைகிறார்?

 

அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கிற்கான காரணம் இதுதான்.  ‘அராஜக திமுக-வை, முறைகேடுகள் நிறைந்த திமுக-வை, தைரியமாக, தில்லாக, தெனாவெட்டாக, நேருக்கு நேர், வார்த்தைக்கு வார்த்தை, பளீர் சுளீரென்று எதிர்க்க வல்ல ஒரே தமிழகத் தலைவர் அண்ணாமலை, அதையும் அவர் தனது சுயலாபத்திற்காகச் செய்யவில்லை, நமக்காகச் செய்கிறார். அவர் பேச்சும் தெளிவாக, நேராக, நியாயமாக, நச்சென்று இருக்கிறது. இந்த மனிதர் நமக்குப் பாதுகாப்பாகவும் இருப்பார். இவரை நம்பலாம்’ என்ற எண்ணம் அதிகமான தமிழர்களின் மனதில் பதிகிறது. இதுதான் அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கின் அடித்தளம்.  

 

ஒரு காலத்தில் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரை நோக்கிக் கல்லெறிந்தனர் சாதாரண மக்கள். ஏனென்றால் அப்போது காஷ்மீரில் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருந்தது. தில்லான தீவிரவாதிகள்தான் தமக்கு அதிகப் பாதுகாப்பு என்று நினைத்து, தீவிரவாதிகளின் கட்டளைப்படி காஷ்மீரில் அன்று சாதாரண மக்கள், கைகள் கட்டப்பட்ட நமது ராணுவத்தினர் மீது கல் வீசினர். ஆனால் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப் பட்ட பிறகு,  தீவிரவாதிகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் ராணுவத்தை வைத்திருக்கும் மத்திய அரசின் மீது இப்போது காஷ்மீர் மக்கள் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள்.

 

யார் தில்லானவர்களோ, யார் சக்தி மிக்கவர்களோ, அவர்களை ஆதரிக்கும், அவர்களுக்கு ஓட்டுப் போடும் இந்தியர்கள் அதிகம். அந்த சக்திமான்கள் நல்லவர்களாகவும் இருந்துவிட்டால் சாதாரண மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அந்த நல்ல வல்லவர்களின் பின்னால் நிற்பார்கள்.  அப்படியாகத்தான் திமுக-வைத் துணிவோடு எதிர்த்துப் பேசி, அதற்கான காரண காரியங்களை விரிவாக, பொறுமையாக, எடுத்துச் சொல்லும் அண்ணாமலையைத் தமிழக மக்கள் பலரும் ஆதரிக்கிறார்கள்.

 

ஒரு அரசியல் கட்சியைக் குறியாக, தில்லாக, தளராமல் எதிர்ப்பதால் மட்டும் ஒரு புதிய பெரிய தலைவர் மக்களிடையே உருவாக முடியும் என்று காண்பித்தவர் அண்ணாமலை. அது ஏன் சாத்தியம் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அப்படி ஒதுக்கப்பட வேண்டிய பெரும் தீய சக்தி திமுக என்று சாதாரண மக்களே பரவலாக நினைக்கிறார்கள். இரண்டு, அந்த நினைப்பை அரசியல் உலகில் செயல்படுத்தக் கூடிய நேர்மையான, உறுதியான, நெஞ்சுரம் மிக்க, ஒரே தலைவர் அண்ணாமலை என்றும் மக்கள் நம்புகிறார்கள்.  

 

தமிழகத்தில் பாஜக ஒரு கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவது, வரமுடியாமல் போவது, வேறு விஷயம். ஏனென்றால் தேர்தல் வெற்றிக்கான சரியான கூட்டணிக் கணக்குகள் தனியானவை, அவை மெய்ப்பட வேண்டும். ஆனால் அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி, தமிழக பாஜக-வுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு வரப் பிரசாதம் என்பது நிச்சயம் தானே?


* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

2 comments: