-- ஆர். வி. ஆர்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு,
வணக்கம்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை
நீங்கள் ஏற்கவில்லை. அதிலும் தேசிய
கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாக,
தமிழகப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர மாணவர்கள் விரும்பும்
வேறு ஒரு இந்திய மொழியைப் பயிற்றுவிப்பதற்கு
உங்கள் கட்சியும் அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. உங்கள் எதிர்ப்பு சிறுபிள்ளைத் தனம், அசட்டுத்தனம்,
என்று உங்களுக்குப் புரியவே இல்லையா?
"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்பது ஔவையார் வாக்கு. ‘கடல் கடந்து வெளிநாடு
சென்றாவது செல்வத்தைத் தேடவேண்டும்’ என்பது அதன் பொருள்.
ஒளவையார் சொல்லுக்கு நடைமுறையில் என்ன அர்த்தம்? ‘இன்னொரு நாட்டுக்குச் சென்று அந்நாட்டு மக்களை ஒரு
வருடம் பொறுமையாகத் தமிழ் கற்க வைத்து, பிறகு தமிழில் மட்டும் அவர்களிடம் பேசிப் பணம்
சம்பாதித்துக் கொள், தமிழா!’ என்று அர்த்தமா? அல்லது, ‘தொலைதூரம்
செல்லவிருக்கும் நீ, அந்த இடத்து மொழியையும் தேவையான அளவு கற்று அந்த மக்களிடம் எளிதாகப்
பொருள் ஈட்டிக் கொள், தமிழா!’ என்று
அர்த்தமா?
பாரதம் பல மொழிப் பிரதேசங்களைக் கொண்டது. வேலையின்மை அதிகம் உள்ள நாடு. இங்கிருந்து பிற
நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்க முடிகிறவர்களை விட, உள்நாட்டில்
மற்ற பிரதேசங்களுக்குச் சென்று சம்பாதிக்க நினைக்கிற மக்கள்
அதிகம் – அது எளிதில் அவர்களுக்கு சாத்தியமும்
ஆகும். அவர்களின் முயற்சி வெற்றி பெற, அந்த மற்ற பிரதேசத்தின் மொழியை அவர்கள் கற்க
முன்வர வேண்டும். தமிழ் மொழியை நடிகர் ரஜினிகாந்த்
கற்றது போல்.
இல்லையென்றால் நமது தொழிலைப் பொறுத்து, மற்ற பிரதேசத்து மொழி
தெரிந்தவர்களை வேலைக்கு வைத்து அந்தப் பிரதேசத்தில் நாம் தொழில் செய்ய வேண்டும்.
சன் டிவி பல இந்திய மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதற்காகப் பிற மாநிலங்களில்
அலுவலகங்கள் அமைத்து அந்த அந்தப் பிரதேச மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைப்பது
போல்.
என்ன இருந்தாலும், பல மொழிகள் பேசப்படும்
இந்தியாவில் தாய்மொழி தவிர இன்னொரு இந்திய மொழி பயில்வது மிகவும் அனுகூலம்.
பள்ளிப் படிப்பின் போதே நமக்கு உணர்வு ரீதியாக அல்லது வேலை
நிமித்தமாகப் பொருந்தி வரும் இன்னொரு இந்திய மொழியைத் தேர்வு செய்து கற்பது புத்திசாலித்
தனம். முதல்வரே! இந்தக் கட்டம் வரை, இந்த எண்ணத்தின் லாஜிக் பற்றி, உங்களுக்கு ஆட்சேபணை இருக்காதல்லவா?
சரி, பள்ளிகளுக்கான மும்மொழிக் கொள்கையை எதிர்த்து
நீங்கள் பேசுவதின் சாராம்சம் என்ன? அதை இப்படிச் சொல்லலாம்: "தமிழகப் பள்ளி
மாணவர்கள் பிரதேச மொழி தமிழையும் அதோடு ஆங்கிலத்தையும் பள்ளியில் கற்கட்டும். இன்னொரு
இந்திய மொழியை அவர்கள் கற்க விரும்பினால், அவர்கள் வேறு எங்காவது போய் அதைக் கற்றுக்
கொள்ளட்டும்.
அதை மாநில அரசு தடுக்காது. ஆனால் அந்த இன்னொரு இந்திய மொழியை அவர்கள்
பள்ளியில் கற்றால், அவர்களே
எந்த மொழியைத் தேர்வு செய்தாலும், அது மொழித் திணிப்பு. அது ஹிந்தித் திணிப்பாக
உருவெடுக்கும்."
உங்கள் எண்ணம் தமிழகத்தின் அரசுப் பள்ளி ஏழை
மாணவர்களைக் குறிப்பாக பாதிக்கும். தாம் விரும்பும் இன்னொரு இந்திய மொழியை அவர்கள்
எளிதாகப் பள்ளியில் படிக்க முடியாவிட்டால், எங்கே எப்போது அதைக் கற்பார்கள்? அதற்காக
அவர்களுக்கு ஏன் வீண் சிரமம், வெட்டிச் செலவு, கால விரயம் ஏற்படுத்துகிறீர்கள்? அவற்றைச்
சந்திக்க முடியாமல் அவர்கள் மூன்றாவது மொழியைப் பெரும்பாலும் கற்கவே மாட்டார்களே?
உங்கள் நிலைப்பாடு சிறுபிள்ளைத் தனமானது
என்று விவரம் அறிந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் ‘தமிழகத்தில் பெருவாரியான
தமிழர்கள் இந்த விஷயத்தில் விவரமானவர்கள் அல்ல, ஆகையால் அநேக
தமிழர்கள் என் எதிர்ப்பை வரவேற்பார்கள்’ என்று
நீங்கள் நினைத்தால் அது அசட்டுத்தனம்.
நீங்களும் உங்கள் கட்சியினரும் தெருவில்
இறங்கி மும்மொழிக் கொள்கையை எதிர்த்துக் கூட்டங்கள் போடலாம், ஆர்ப்பாட்டங்கள்
நடத்தலாம். ஆனால் உங்கள் வாதத்தை ஏற்காத பொதுமக்கள் தாமாகத் கூடி தெருவுக்கு வந்து
எதிர்க் கோஷம் போட மாட்டார்கள். திமுக என்னும் கட்சியை –மொழி பற்றிய அதன் நிலைப்பாட்டை
– வெட்டவெளியில் பகிரங்கமாக எதிர்ப்பது இந்த ஜனநாயகத்தில் தமக்கு ஆபத்தானது என்று
உணர்ந்தவர்கள் சாதாரண மக்கள்.
இது போக, தங்கள் ஏழ்மையிலும்
இயலாமையிலும் தேசிய கல்விக் கொள்கை பற்றி அக்கறை காட்ட முடியாத மிக எளிய மக்களும் தமிழகத்தில்
இருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை விஷயத்தில் இவர்கள் உங்கள் நிலைப்பாட்டை
ஏற்றவர்கள் என்று அர்த்தமல்ல. இவர்களின் நலனும் காக்கப் படவேண்டும்.
வேலைக்காக இடம் விட்டு இடம், மாநிலம் விட்டு மாநிலம்,
மாறும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். பரந்த இந்தியாவில், வளர்கிற
இந்தியாவில், இடம் பெயர்தல் அதிகம் நிகழும் காலம் இது. அதற்கு
ஏற்ப சாலைகள் நீள்கின்றன, புதிய அதிவேக ரயில்கள் விரைகின்றன,
புதிய விமான நிலையங்கள் எழுகின்றன.
தமிழகத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வட
மாநிலத்தவர்கள் வந்து எல்லா வேலைகளையும் செய்து பிழைப்பதைத் தமிழர்கள்
பார்க்கிறார்கள். இதன் விளைவாக, இன்னொரு இந்திய மொழி நமக்குத் தெரிந்தால் நாம் நல்ல
வேலைகள் தேடும் இடம் இந்தியாவில் விரிவடையும் என்று தமிழக இளைஞர்கள் நினைப்பார்கள், பெண்கள் உட்பட. இதை நீங்கள் உணரவில்லையா முதல்வரே?
வெளி மாநிலம், வெளி நாடு என்று
தமிழர்கள் போய் விட்டால், அந்தந்த இடங்களில் தமக்கான
கோவில்களைக் கட்டிக் கொள்ளலாம். தமிழ்ச் சங்கங்களும் அமைத்துத் தங்களின் தமிழ் உணர்வைக் காத்துக் கொள்ளலாம். அது
நடக்கிறது.
அமெரிக்காவில் பல ஊர்களிலும் ஹிந்துக்
கோவில்கள் உண்டு. மிக அதிகமாகத் தமிழ்ச் சங்கங்களும் அந்த நாட்டில் உண்டு. அந்தத் தமிழ்ச்
சங்கங்களை ஏற்படுத்தியது அங்கு குடியேறிய தமிழர்களின் தமிழ்ப் பற்றுதானே? அந்தத் தமிழ்ச் சங்கங்களுக்கும் திமுக தலைவர்களுக்கும்
சம்பந்தம் கிடையாதே? திமுக-வைத் தவிர்த்து தமிழும் தமிழ்
உணர்வும் அங்கு வாழ்கிறதல்லவா, வளர்கிறதல்லவா? தமிழகத்தில் மட்டும் அது நடக்காதா?
‘எதுவானாலும், மும்மொழிக் கொள்கையை நான் எதிர்ப்பதால்,
மக்களின் மொழி உணர்ச்சியை நான் கிளறுவதால்,
முன்காலம் போல் திமுக-வுக்கு இப்போதும் அதிக
ஓட்டுகள் கிடைக்கும்’ என்று ரகசியமாக நினைக்கிறீர்களா? அப்படித்தான் தெரிகிறது.
ஆனால் உங்கள் நினைப்பு சரியல்ல, இக்காலத்தில்
அது பயன் தராது.
தமிழகச் சிறுவர்கள் தங்கள் பள்ளிகளில் இன்னொரு இந்திய மொழி கற்பதைத் தமிழக மக்கள் பரவலாக விரும்புவதால், மக்களின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஒரு மாற்று அரசியல் சக்தி அசாதாரண உறுதியுடன் தமிழகத்தில் செயல்படுகிறது, வலுப்பெறுகிறது. அதுவே தமிழக மக்களை இந்த விஷயத்தில் தைரியப் படுத்துகிறது. இதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் அசட்டுத்தனம் முதல்வரே!
வாழ்த்துகளுடன்:
தமிழக மாணவர்களின் நலம் விரும்பும்,
ஒரு தமிழன்
* * * * *
Author: R. Veera
Raghavan, Advocate, Chennai
No comments:
Post a Comment