Thursday, 6 March 2025

மும்மொழிக் கொள்கை. திமுக பழனிவேல் தியாகராஜனின் கேள்விகள் அபாரமா அபத்தமா?


          -- ஆர். வி. ஆர்

 

பழனிவேல் தியாகராஜன் ஒரு முக்கியத் தமிழக அமைச்சர். பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அவர் அளித்த யூ-டியூப்  பேட்டியில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்தார், எதிர்த்துக் கேட்டார். அதை தளத்தில்  மெச்சிப் பகிர்ந்திருக்கிறார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்.


மும்மொழிக் கொள்கை என்பது, மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்ய விரும்புகிறது மத்திய அரசு. தமிழகத்தில் மாநில அரசு எதிர்க்கிறது. 

 

மும்மொழிக் கொள்கையின் படி, நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை, முடிந்தால் எட்டாம் வகுப்பு வரை, முக்கியப் பிரதேச மொழி தான் பயிற்று மொழியாக இருக்கும். தமிழ்நாடு என்றால், தமிழ். ஆங்கிலப் பாடமும் கட்டாயம்.  தவிர, மாணவர்கள் தங்களின் விருப்பப்படி வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியை ஒரு பாடமாகப் பயில்வார்கள்.


சரி, பழனிவேல் தியாகராஜன் பத்திரிகையாளரிடம் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து என்ன பேசினார்? அதிலென்ன சாரம், அதிலென்ன லாஜிக்? அவர் பேசியதின் ஒரு முக்கியப் பகுதி இது:

 

இருமொழிக் கொள்கை மூலம்தான் தமிழகம் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை. உத்தரப் பிரதேசம், பீஹார், குஜராத்தில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழி தெரியும்? எத்தனை மாணவர்களுக்கு இரண்டு மொழி தெரியும்?”  

 

ஒரு தேசத்தின் அல்லது பிரதேசத்தின் மக்களுக்குக்  கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அதிகமாக அல்லது குறைவாகக் கிடைத்திருக்கச் சில காரணங்கள் இருக்கும். அதனால் உ. பி மாநிலத்தை விட, பீஹார் மாநிலத்தை விட, தமிழகம் அதிகளவு வளர்ச்சி பெற்றிருக்கலாம். தமிழகத்திற்குள் ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டங்களை விட கோயம்பத்தூர் அதிக வளர்ச்சி கண்டிருக்கலாம். இதற்கெல்லாம் தமிழகத்தின் இருமொழிக் கொள்கை காரணமல்ல என்பது அமைச்சருக்குப் புரியுமா? புரியாவிட்டால் அவருக்கு இப்படிச் சொல்லி விளக்கலாம்.

 

ஜப்பான் மொழியால்தான் ஜப்பான் வளர்ச்சி அடைந்தது, ஹீப்ரு மொழியால்தான் இஸ்ரேல் வளர்ச்சி அடைந்தது என்றும் சொல்லலாமா? ஒரு மக்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தொழில் சிந்தனை, அவர்களின் அரசியல் தலைமை எல்லாம் சேர்ந்தல்லவா அவர்களின் வளர்ச்சிக்கு வழி காட்டும்? தமிழகத்தில் அதற்கு வலுவான அடித்தளம் இட்டது திமுக-வுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியல்லவா?

 

இன்னொன்று. தேசிய கல்விக் கொள்கை இப்போதுதான் சில மாநிலங்களில் ஆரம்ப நிலையில் அமல் ஆகி வருகிறது. அதைப் பூரணமாக அமல் செய்து அந்த மாநிலங்களில் மூன்றாவது இந்திய மொழியையும் பரவலாகப் பயிற்றுவிக்க, அதன் பலன்கள் தெரிய, வருடங்கள் ஆகும்.  இந்த நிலையில், “உ. பி, பீஹார், குஜராத்தில் எத்தனை மாணவர்களுக்கு மூன்று மொழி தெரியும்?” என்று பழனிவேல் தியாகராஜன் கேட்டதன் லாஜிக், அவரும் முதல்வரும் மட்டும் அறிந்த ரகசியம்.

 

அடுத்ததாக, வட மாநிலத்து மாணவர்களில் “எத்தனை மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் தெரியும்?” என்றும் கேட்கிறார் அமைச்சர். அதாவது, “தமிழக மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்த அளவுக்கு உ.பி, பீஹார் மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது. ஹெ ஹே!” என்கிற தொனியில் பேசியிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

 

உ. பி மற்றும் பீஹார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை என்றால் அது இருக்கட்டும், அது கவனிக்கப்பட வேண்டும்.  ஆனால் தற்போதய தமிழக மாணவர்களுக்கு – பன்னிரண்டு கிளாஸ் படித்தவர்களுக்கும் – தமிழே முறையாகப் பேசவும் எழுதவும் தெரிகிறதா? பலர் கோர்வையாகக் கூடத் தமிழ் பேசுவதில்லையே? முதலுக்கே இங்கு மோசமாக இருக்கிறதே?

 

1967-ல் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலத்தின் பள்ளிகளில், அதுவும் அரசுப் பள்ளிகளில், படித்த மாணவர்களின் தமிழறிவு குறைந்துகொண்டே வருகிறது. இதை நினைத்து வருத்தப் படாமல் உ. பி, பீஹார் மாணவர்களின் ஆங்கில அறிவைப் பற்றி அங்கலாய்ப்பதில் என்ன பயன்? அதிலும் கூட, தற்காலத்தில் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வெளிவரும் மாணவர்களின் ஆங்கில மொழியறிவு எப்படி இருக்கிறதாம்? ஆங்கிலப் பாடத்தில் ஒரு பீஹார் மாணவன் நூற்றுக்கு இருபது மார்க் வாங்குகிறான், தமிழக மாணவன் சிறப்பாக இருபத்தி ஐந்து மார்க் வாங்குகிறான் என்று தம்பட்டம் அடிக்கிறாரா பழனிவேல் தியாகராஜன்?

 

தேசிய கல்விக் கொள்கை நாட்டில் பெரிதும் அமலானால், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துதான் ஆகும். அதற்கான  கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியது அந்தக் கொள்கை.  அப்போது அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்க முன் வருவார்கள். அதன் விளைவாக, மூன்றாவது மொழியை இப்போதும் கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் திமுக தலைவர்களின் கொழுத்த கல்வி வியாபாரம் அடி வாங்கும். அது அவர்களின் கவலை.

 

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை நடைமுறையானால், சாதாரண மக்களின் பிள்ளைகளின் கவனம் கல்வியில் பிடித்து வைக்கப்படும் – முக்கியமாக இது அரசுப் பள்ளிகளில் நிகழும்.  அதோடு இன்னொரு இந்திய மொழியையும் அவர்கள் கற்றால் தங்களின் கல்வி, சுய அபிவிருத்தி, தமிழகம் தாண்டியும் வேலை என்று அவர்கள் முனைப்பாக இருப்பார்கள். அது நடந்தால், தமிழக மக்களின் அறியாமையை, எதற்கும் அரசை நோக்கிக் கையேந்தி நிற்கும் நிலையை மூலதனமாக்கி இப்போது ராஜாங்கம் நடத்தும் அரசியல் தலைவர்களின் நஷ்டங்கள் சொல்லி மாளாதே?

 

59 வயதாகும் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலம் நன்றாகப் பேசுவார். அவர் பேட்டியளித்ததும்  ஆங்கிலத்தில். இளமையில் படிப்பு, வேலை என்று அமெரிக்காவில் இருபது வருடங்கள் வாழ்ந்தவர். அப்படி இருந்ததால், அவர் தமிழ் மிகக் சரளமாகப் பேசுபவர் அல்ல. ஆங்கிலம் படித்து அவர் அமெரிக்கா போய் மேற்படிப்பு முடித்து நிறைய சம்பாதிக்கலாம், சற்றுத் தடுமாறித் தமிழ் பேசிக் கொள்ளலாம், ஆனால் வேறு இந்திய மொழியை அரசுப் பள்ளியில் ஒரு தமிழக மாணவர் எளிதாகப் படித்து வேறு மாநிலத்தில் எளிதாக ஒரு நல்ல வேலைக்குப் போகக் கூடாதா?   

 

தமிழ் 2,000 ஆண்டுகளுக்கும் மேல் தொன்மையானது. இன்றுவரை அது நம்மிடையே வழக்கு மொழியாக நீடித்திருக்க ஒரு முக்கிய காரணம் அதன் அபரித அழகும் செறிவும். அதாவது, ஒருவர் நேராகக் கைகால் வீசி நடப்பது போல் மட்டும் இல்லாமல், ஒரு நாட்டிய மங்கையின் வசீகர அசைவுகளையும் நகர்வுகளையும் தனது சொற்பிரயோகத்தில் ஏற்றி நம்மை மகிழ்விப்பது தமிழ். அதோடு, தமிழ் மொழியின் அந்த அழகையும் செறிவையும் ரசிக்கத் தெரிந்த மக்களாகத் தமிழர்கள் தொடர்ந்து வந்ததும் தமிழை நம்மிடையே இன்றுவரை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. 


தமிழ் மக்களின் தமிழார்வத்தைத் திமுக உளமாறப் பேணுவதில்லை, 1967-ல் இருந்து. தமிழ்நாட்டில் தமிழின் அழகையும் செறிவையும் கற்றறிந்து கொண்டாடுபவர்களின் ஆர்வம் குறைந்து வருவதற்குத் திமுக-வும் ஒரு காரணம். முறைகேடான அரசு நிர்வாகத்தை நிலைநிறுத்தி, தமிழைத் தங்கள் அரசியல் வியாபாரத்துக்கான கடையாக மட்டும் உபயோகித்து வரும் திமுக என்ன சாதித்திருக்கிறது? பொதுவாழ்வில் தமிழர்கள் தரம் தாழவும் அதைத் தொடர்ந்து தமிழ் வாடவும் வகை செய்திருக்கிறார்கள் அதன் தலைவர்கள். 


தமிழகப் பள்ளிகளில் மூன்றாவது இந்திய மொழி ஒரு பாடமாக வருவது இருக்கட்டும். திமுக மாடல் ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்தால், முதல் மொழி தமிழ் பிழைக்குமா,  செழிக்குமா?


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai