-- ஆர். வி. ஆர்
.
நடிகர் எஸ். வி. சேகர் நீண்ட காலம் நடிப்புத் துறையில் இருப்பவர், விருதுகள் பெற்றவர், பிரபலமானவர். அரசியல் களத்தில் அவர் இப்போது பெரிய தவறு செய்கிறார்.
பிராமணர்களுக்காகத் தமிழ்நாட்டில் ஒரு ஜாதிக் கட்சியை சிலர் துவங்க இருந்தபோது, அந்த முயற்சியை ஆதரித்திருக்கிறார் எஸ். வி. சேகர். அந்தக் கட்சி ஆரம்பிக்கப் பட்ட பிறகு, சமீபத்தில் மைலாப்பூரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து ‘தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்’ என்ற தலைப்பில் அவர் பேசினார்.
அடுத்துவரும்
தமிழக சட்டசபைத் தேர்தலில், அந்தப் புதிய கட்சி எல்லா பொதுத் தொகுதிகளிலும் பிராமணர்களை
வேட்பாளர்களாக நிறுத்த முயலும் என்று சொல்லி அதை வரவேற்றார்
எஸ். வி. சேகர். “அரசியல் அங்கீகாரம் இல்லாத எந்த ஜாதிக்கும் மரியாதை கிடையாது” என்றும்
அவர் சொன்னார்.
இந்த
அளவிற்கு எஸ். வி சேகர் பேசியது இன்றைய நடைமுறை அரசியலில் தவறல்ல என்று எடுத்துக் கொள்ளலாம். மற்ற ஜாதியினர்
சிலரும் தங்கள் மக்களின் நலனுக்காக என்று அப்படிச் செய்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் ஜாதியின் பேரில் ஓட்டு சேகரிக்க முனைந்தால், ஜாதிப் பிரமுகர்களும் அரசியலுக்கு வந்து ஆதாயம் தேடலாம். என்ன – பிராமணர்கள்
நலனுக்கு மட்டும் என்று ஒரு அரசியல் கட்சி
செயல்படுவதைப் பெருவாரியான தமிழக பிராமணர்களே வரவேற்பார்களா என்பது பற்றி கருத்து வேறுபாடு இருக்கும், அவ்வளவுதான்.
தான் பேச வந்த விஷயத்தின் எல்லைக்குள் நிற்கவில்லை எஸ். வி. சேகர்.
அதைத் தாண்டி, தனது வழக்கமான அண்ணாமலை-எதிர்ப்பையும் கூட்டத்தில் கொட்டினார்.
பிராமணர்களை அரசியலில் வலுப் படுத்த முயற்சிப்பதற்கும் அண்ணாமலையை எதிர்ப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. முன்பு ஒருமுறை எஸ். வி. சேகர் பேசும்போது, சினிமாவில் ஒருவர் மற்றவரை உருவக் கேலி செய்து ஏளனமாகப் பேசுவது போல் அண்ணாமலையைக் கீழ்த்தரமாகக் கிண்டல் செய்தார். அது மன்னிக்க முடியாதது.
மைலாப்பூரில் பேசும்போது, “அண்ணாமலை பிராமணர்களை வெறுப்பவர். நூறு
சதவிகிதம். ஒரு பிராமணனும் பாஜக-வில் இருக்கக் கூடாது என்று செயல்படுகிறவர்” என்றெல்லாம்
அபத்தமாக வார்த்தைகள் விட்டார் எஸ். வி. சேகர். ஒரு கட்டத்தில், “மாண்புமிகு தமிழக
முதல்வர்” என்று ஸ்டாலினை மரியாதையாகக் குறிப்பிட்டார். அது சரிதான், ஆனால் பல விஷயங்களில் ஸ்டாலின் ஒட்டுமொத்த ஹிந்துக்களைப் புறக்கணிப்பதைப் பற்றி எஸ். வி. சேகர் ஒன்றும் சொல்லவில்லை. “திராவிடர் கழகத்தின்
சுப. வீ எனது நல்ல நண்பர்” என்றும் அவர் சிலாகித்தார். எதுவோ இங்கெல்லாம் இடிக்கிறது.
அந்தக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் அளவிற்கும் கீழிறங்கிப் போனார் எஸ். வி. சேகர். “மத ரீதியாகவோ சமூக ரீதியாகவோ அண்ணாமலை ஏதாவது ஒன்றைச் சொல்லி அதனால்
ஒரு கலவரம், ஒரு கலாட்டா ஏற்பட்டு நாலு பேர் உயிரை விட்டுட்டா அதை வைச்சு ஓட்டு வாங்கலாம்னு கேடு கேட்ட புத்தி உடையவர் அண்ணாமலை" என்று குரூரக் கற்பனை செய்து மிக மலிவாகப் பேசினார் எஸ். வி. சேகர்.
அதிகமான பிராமணர்கள் தேசிய சிந்தனை உள்ளவர்கள், அவர்கள் அநேகமாக பாஜக-வை ஆதரிப்பவர்கள் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. அதிலும் தமிழ்நாட்டில் திமுக-வை, குறுகிய நோக்கமுள்ள திராவிட அரசியலை, தினம் தினம் தீர்க்கமாக எதிர்க்கும் அண்ணாமலை என்ற அரசியல் தலைவரை பிராமணர்கள் ஆர்வத்துடன் ஆதரிக்கிறார்கள் என்பதும் பரவலான எண்ணம். இந்த நிலையில் அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரி என்று கொளுத்திப் போட்டால், அதை நம்பிப் பல பிராமணர்கள் தங்களின் பாஜக ஆதரவை விலக்கி எஸ். வி. சேகர் கைகாட்டும் பிராமணர்கள் கட்சிக்குத் துணை நிற்பார்கள் என்று அவர் ஆசைப்படுகிறார். அவர் ஆசை நிறைவேறாது.
அண்ணாமலை
மாநிலத் தலைவராக இருக்கிற வரை தமிழ்நாட்டில் பாஜக வளராது என்று எங்கும் சொல்லி வருகிறார்
எஸ். வி. சேகர். மோடிதான் 2024 லோக் சபா தேர்தலில்
ஜெயித்து மெஜாரிட்டியுடன் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் சொல்கிறார். இந்த இரண்டு
விஷயத்தை அவர் மைலாப்பூர் மேடையிலும் வெளிப்படுத்தனார். இதற்கு என்ன அர்த்தம்?
தமிழ்நாட்டு பாஜக-விற்கு மட்டும் தகுதியே இல்லாத ஒருவர் மாநிலத் தலைவராக இருக்கிறார், அது எஸ். வி. சேகருக்குத் தெரிகிறது, ஆனால் அதை உணராதபடி பாஜக-வின் தேசியத் தலைமையில் சில மக்கு பிளாஸ்திரிகள், மண்டூகங்கள் – மோடி, அமித் ஷா, நட்டா உள்பட – அமர்ந்திருக்கிறார்கள் என்று எஸ். வி. சேகர் நினைப்பதாக அர்த்தம் ஆகிறது.
மோடியை ஒருவர் மனமார ஆதரித்துவிட்டு, மோடியும் அமித்
ஷாவும் பாராட்டுகிற அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் எதிர்ப்பது கோளாறாக
இருக்கிறது. இதை எஸ். வி. சேகரும் பின்மண்டையில் லேசாக உணர்கிறார். இதை நேர் செய்ய நினைத்த அவர், “இங்க இருக்கறவங்க அங்க யாரையோ சந்தோஷப்படுத்தி,
அவர்களும் இவங்களைத் திருப்பி சந்தோஷப்படுத்தி, ஒருவரை ஒருவர் சந்தோஷப் படுத்தினால்
ஜனங்க துக்கமா இருப்பாங்க” என்று அவரே சிரிக்கும் ஒரு தன்னிலை விளக்கத்தைக் கூட்டத்தினரிடம்
சொன்னார்.
தமிழ்நாட்டு
பாஜக தலைமையிடமிருந்து, குறிப்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடமிருந்து, எஸ். வி. சேகர்
எதிர்பார்த்த விசேஷ அங்கீகாரமும், கூடுதல் மரியாதையும் அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த
ஏமாற்றத்தை எஸ். வி. சேகரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தனது ஈகோ பாதிக்கப்பட்டு அவர் காட்டமாக, நாகரிகம் இல்லாமல், அண்ணாமலையை எதிர்க்கிறார். இதுதான் விஷயம்.
மாறிவரும் அரசியல் களத்தின் நிஜத்தை ஏற்பதும், அதில் தன் நிலையை உணர்வதும், நடிகர் எஸ். வி. சேகருக்கு நல்லது. இல்லை என்றால், கடைசியில் வேஷம் கலையும்.
* * * * *