- ஆர்.வி.ஆர்
இட
ஒதுக்கீடு (‘ரிசர்வேஷன்’) ஒரு சிக்கலான விஷயம். அது நாம் நாட்டில் பல இடங்களில் உண்டு. இதைச் சரியாகப் புரிந்துகொள்ள, எதில்
யாருக்கு சட்டம் இட ஒதுக்கீடு வழங்குகிறது, அதன் பிரதான நோக்கம் என்ன, என்பதை முதலில்
பார்க்க வேண்டும். முக்கியமான இரண்டு இட ஒதுக்கீடுகளை கவனிப்போம்.
சமூகத்தில்
பின்தங்கிய குடிமக்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்காக,
அவர்களின் ஜாதிப் பெயர்களைச் சொல்லி அவர்களை ‘பட்டியல் சமூகத்தினர்’ , ‘பழங்குடியினர்’ மற்றும் ‘இதர பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்று சட்டம்
வகைப்படுத்துகிறது. அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து ‘பின்தங்கியவர்கள்”
என்று பெயர் வைத்துக் கொள்வோம்.
பின்தங்கியவர்கள்
பிற மக்களுடன் தகுதி அடிப்படையில் போட்டியிட்டுக் கல்லூரிக் கல்வி – அதிலும் தொழிற்கல்வி
– பெறுவது கடினம். ஆகையால் அந்தக் கல்விக் கூடங்களில் அவர்களில் சிலர் எளிதாக இடம்
பெறச் செய்யவேண்டும் என்று கணக்கிட்டு சட்டம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்கிறது.
அவர்களுக்கான சேர்க்கைத் தகுதியைச் சற்றுத் தளர்த்தி, அவர்களுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம்
வரை இட ஒதுக்கீடு தருகிறது. தகுதிக் குறைவை ஓரளவு ஏற்றுக் கொண்டுதானே இட ஒதுக்கீடு
அளிக்க முடியும்?
சிறுபான்மையினர்
நடத்தும் கல்வி நிலையங்களில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. அது வேறு
விஷயம்.
கல்விச்
சேர்க்கைகள் தவிர்த்து இன்னொரு இட ஒதுக்கீடும் சட்டத்தில் உண்டு – அதாவது வேலை வாய்ப்புகளில்.
அரசு மற்றும் அரசு-சார் அலுவலகங்கள், பல்கலைக் கழகங்கள், கல்விக் கூடங்கள் ஆகியவற்றில்
உள்ள பணியிடங்களில் ‘பின்தங்கியவர்’களுக்கு அதே போன்ற இட ஒதுக்கீட்டினால் வேலை சற்று
எளிதாகக் கிடைக்கிறது.
இந்த
இட ஒதுக்கீடுகளின் பிரதான நோக்கம் என்ன? இது முக்கியம்.
இட
ஒதுக்கீட்டினால் கல்லூரிகளில் படிப்பவர்கள்
கல்வித் தகுதியை சுலபத்தில் பெற்று வெளி உலகில் அனைவருடனும் போட்டியிட்டு வேலை தேடிக்
கொள்ளலாம், தொழில் தொடங்கலாம். அரசு மற்றும் அரசு-சார் வேலை வாய்ப்புகளை இட ஒதுக்கீட்டு
அடிப்படையில் பெறுபவர்கள் தங்கள் பொருளாதார வசதியை எளிதில் பெருக்கிக் கொள்ளலாம். இவ்வாறு
பயன் அடைபவர்களின் பிள்ளைகளோ அவர்களின் சந்ததிகளோ
காலப்போக்கில் இட ஒதுக்கீடு இல்லாமலே அனைவருடன் சமமாகப் போட்டியிட்டு கல்லூரிப் படிப்புக்கும்
வேலைக்கும் தயாராவார்கள். இதுதான் அந்த நோக்கம்.
இந்த நல்ல நோக்கம்தான் இட ஒதுக்கீட்டின் இனிப்புப் பக்கம். அந்த நோக்கம் செயலாவதற்கான நடவடிக்கைகளை எடுத்தவாறு, அதையும் கண்காணித்து, அமல் செய்யப்படும் இட ஒதுக்கீடு பயன் தரும். அப்போதுதான் இட ஒதுக்கீடு பெறும் மக்களின் கண்ணியம் காப்பாற்றப் பட்டு அவர்களின் சமூக மதிப்பும் நாளடைவில் உயரும். இந்த ஆரோக்கியமான சிந்தனையும் கண்ணோட்டமும் அநேகமாக அனைத்து அரசியல் தலைவர்களிடமும் இல்லை.
இப்போது
இன்னொரு பக்கத்தைப் பாருங்கள்.
தகுதியுள்ள
சிலரை வேண்டும் என்றே தள்ளி வைத்துத்தான் அவர்களின் இடங்களைத் தகுதி குறைந்த மற்றவர்களுக்கு,
அதாவது பின்தங்கியவர்களுக்கு, அளிக்க முடியும். அதனால் ஒரு நல்ல கல்லூரியில் அல்லது வேலையில் சேரும் வாய்ப்பை
இழக்கும் மற்ற சமூகத்து நபர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சமாதானம் அடைய முடியாது.
இதனால் இட ஒதுக்கீடு கிடைக்கும் சமூகத்தினருக்கும்
விட்டுக் கொடுக்க வேண்டிய சமூகத்தினருக்கும் இடையே அதிருப்தி உருவாகும். இது இயற்கை.
இந்த நிலை தொடர்வது இரு தரப்பு மக்களுக்கும்
நல்லதல்ல. ஆகையால் கல்லூரிச் சேர்க்கைகளில், அரசு மற்றும் அரசு-சார் வேலை வாய்ப்புகளில், தரப்படும் இட ஒதுக்கீடு நூறு
இருநூறு ஆண்டுகள் என்று தொடர்வது சரியல்ல.
சமூகத்தில்
பின்தங்கிய மக்களை சற்று விரைவாக முன்னேற்ற உதவும் ஒரு ஆயுதம் இட ஒதுக்கீடு. இந்த ஆயுதம்
நல்ல பலன் தரவேண்டும் என்றால், இதை உபயோகிக்கும் அரசு அர்ப்பணிப்புள்ள தலைவர்களால்
தொடர்ந்து நடத்தப் படவேண்டும், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க
வேண்டும். இன்றைய இந்தியாவில் இது சாத்தியமல்ல.
இட
ஒதுக்கீடு என்பது, பின்தங்கியவர்கள் காலம் காலமாக அனுபவிக்க வேண்டிய வெறும் சலுகை என்ற அளவில்தான் இட ஒதுக்கீட்டை அரசியல் தலைவர்கள்
பின்தங்கிய மக்களுக்குத் தெரியப் படுத்துகிறார்கள். இட ஒதுக்கீட்டு சதவிகிதத்தையும் படிப்படியாக ஐம்பது,
அறுபது, அறுபத்தி ஒன்பது என்று உயர்த்துகிறார்கள்.
மேன்மேலும் சில ஜாதியினரை இட ஒதுக்கீட்டு வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள். சமூகத்தில் தாழ்வாகப் பார்க்கப் படுகிறவர்கள், ஒடுக்கப்
பட்டவர்கள் என்பது போக, ஓட்டு சக்தியை மிரட்டலுடன் வெளிப்படுத்தும் வகுப்பினரையும்
‘பின்தங்கியவர்கள்’ லிஸ்டில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கிறார்கள். அதிக மக்களுக்கு அதிக அளவில் இட ஒதுக்கீடு அளித்தால்
அவர்களின் ஓட்டுக்களை எளிதாக வேட்டையாடலாம் என்பது நம் சுயநலத் தலைவர்களின் கணக்கு. அதில்
வெற்றியும் பெறுகிறார்கள்.
சுயநல அரசியலில் பலியான இட ஒதுக்கீடு இப்போது இடியாப்பச் சிக்கலில்
மாட்டி இருக்கிறது. எப்படி என்று பார்க்கலாம்.
பின்தங்கிய
மக்கள் லிஸ்டில் இருந்து எந்த ஜாதியினரையும் நமது அரசியல்வாதிகள் எப்போதும் நீக்கப் போவதில்லை. அப்படிச்
செய்தால் அந்த ஜாதித் தலைவர் “நான் உங்களுக்காகப் போராடி உங்களைப் பின்தங்கியவர்கள்
லிஸ்டில் மீண்டும் சேர்க்க வைக்கிறேன்” என்று தம் மக்களிடம் பிரசாரம் செய்து ஓட்டுக்களை அள்ளிச் செல்வார், அரசியல்
பேரங்களில் அவர் வலுப்பெறுவார். மற்ற அரசியல்
கட்சிகள் இதை விரும்பாது. ஆகையால் இட ஒதுக்கீட்டிற்குள்
வந்த எல்லா ஜாதிகளும் எப்போதும் உள்ளேதான் இருக்கும். இது ஒரு பக்கம்.
இன்னொரு
பக்கத்தில், பின்தங்கிய மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டினால் கல்லூரிகளில் இடமும்
அரசு வேலைகளும் எந்தக் காலத்திலும் கிடைத்து முடியப் போவதில்லை. ஏனென்றால் ஜனத்தொகையும்
வேலையின்மையும் மிகுந்த நம் நாட்டில், அது யானைப் பசிக்கு சோளப் பொறி. அதோடு, கல்லூரி இடங்களுக்கும் அரசு வேலைகளுக்கும் தயார்
ஆகும் இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் உருவாகிறார்கள். ஆகவே “பின்தங்கிய மக்கள் அனைவருக்கும்
கல்லூரிகளில் இடமும் வேலைகளும் கிடைத்துவிட்டன. இனிமேல் இட ஒதுக்கீடு தேவையில்லை” என்று
எந்தத் தலைவரும் எப்போதும் சொல்ல முடியாது.
இன்றைய
நிலவரம் இதுதான். நம் அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுப் பின்தங்கிய மக்களைத்
தங்களின் ஓட்டு வங்கியாக வைத்து வளர்க்கத்தான் ஆசைப் படுவார்கள். அது நிறைவேறும். பின்தங்கியவர்கள்
வாழ்க்கையில், காலம் கொண்டுவரும் சிறிய முன்னேற்றம் தவிர இட ஒதுக்கீட்டினால் பெரிய
முன்னேற்றம் இருக்காது. திறமை இருந்தும் இந்தியாவில்
உயர முடியாத பலர் மேல் நாடுகளுக்குச் சென்று அங்கே செழிப்பைச் சேர்த்து தாங்களும் வளர்வார்கள்.
இதெல்லாம் இட ஒதுக்கீட்டின் கசப்புப் பக்கம். இனிப்பை விட கசப்பு பன்மடங்கு அதிகமாகி விட்டது.
இட
ஒதுக்கீடு இல்லாமல் பின்தங்கியவர்கள் நாம் நாட்டில் முன்னேற முடியுமா? முடியும். உரிமைகள்
மறுக்கப் பட்டவர்களும் நசுக்கப் பட்டவர்களும் உலகத்தில் மீண்டெழுந்த வரலாறு இதை உணர்த்துகிறது.
அமெரிக்காவின்
ஜனத்தொகையில் கருப்பர்களான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சுமார் 13 சதவிகிதம் (அவர்களைக்
குறிக்கும் ‘நீக்ரோக்கள்’ என்ற சொல்லை அவர்கள் ரசிப்பதில்லை). அவர்களின் முன்னோர்கள் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து
கடத்தப்பட்டு 250 வருடங்களாக அந்த நிலப்பரப்பில் வெள்ளைக்காரர்களின் அடிமைகளாக இருந்தவர்கள். ஆனால் அடிமைத்தனத்தில் இருந்து அவர்களுக்கு
விடுதலை கிடைத்த பின், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அந்த நாட்டில் தற்போது வரை கணிசமான
முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின்
கல்லூரிகளில், அரசு வேலை வாய்ப்புகளில், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு
செய்யப் படவில்லை. அவர்களுக்கு எதிராக அந்த நாட்டில் யாரும் பேதம் காட்டக் கூடாது என்று
மட்டும் படிப்படியாகச் சட்டம் கொண்டு வந்தார்கள். அதனால் தங்களின் உழைப்பால், முயற்சியால்,
அவர்கள் வெள்ளைக்காரர்களுடன் சமமாகப் போட்டி போட்டு முன்னேற்றம் காண்கிறார்கள்.
அமெரிக்காவில்
பிறந்து அந்நாட்டில் பெரும் வெற்றி கண்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் பலர் உண்டு. அதில்
துர்குட் மார்ஷல் என்ற அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஐ.நா-விற்கான அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ யங், காலின்
பவல் என்ற அமெரிக்க முப்படைத் தளபதி, ஒலிம்பிக்
தடகளத்தில் நான்கு தங்கம் வென்ற ஜெஸ்ஸி ஓவன்ஸ் மற்றும் கார்ல் லூயிஸ், சமீபத்தில் இரண்டு
முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வான பராக் ஒபாமா (இவரது தாயார் வெள்ளைக் காரர், தந்தை
ஆப்பிரிக்கர்) ஆகியோர் சிலர். இது போன்ற வெற்றிகளால் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்குப்
பெருமிதம் கிடைக்கும். அவர்களின் வெற்றியை வெள்ளைக்காரர்களும் மதிப்பார்கள். இதைப்
போல இந்தியாவிலும் பின்தங்கியவர்களுக்கு நிகழவேண்டும். இட ஒதுக்கீடு இல்லாமல் இது சாத்தியம்.
உலகெங்கும் சில மனிதர்கள் சரித்திரக் காரணங்களுக்காக மட்டும் பரஸ்பர மனக் கசப்பைச் சுமக்கிறார்கள். அதற்குக் காலமும் விவேகமும்தான் மருந்து, சட்டத்தின் நாட்டாமை அல்ல. இப்போது
அமெரிக்காவில் வாழும் வெள்ளைக்காரர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும்
தங்களின் எள்ளுத் தாத்தாக்கள் யார் யாருக்கு என்ன செய்தார்கள் என்று பேசுவதில்லை. ஒரு
காலத்தில் என்ன நடந்திருந்தாலும் அதற்கு இப்போதுள்ள வெள்ளைக்காரர்களைக் குற்றம் சொல்வது
அர்த்தமில்லை என்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் யதார்த்தமாக நினைக்கிறார்கள். அந்த நாட்டின்
அரசியல்வாதிகளும், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை வெறும் 13 சதவிகித ஓட்டு வங்கியாகக் கருதி
அவர்களிடம் அப்பட்டமான தாஜா அரசியல் செய்வதில்லை. அந்தப்
புரிதல் நாம் நாட்டில் விரிவாக இல்லை என்பது நமது துரதிர்ஷ்டம்.
அந்தக்
காலத்தில் அடிமைகள் வியாபாரத்தை முன்னின்று நடத்தியது இங்கிலாந்து நாட்டவர். அவர்கள்
இந்தியாவையும் ஆண்டார்கள். இன்று இந்தியர்கள், இந்திய வம்சா வழியினர், இங்கிலாந்தில் பல துறைகளில் – முக்கியமாக மருத்துவத்தில்
– மேலோங்குகிறார்கள். இங்கிலாந்தில் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையோ வேறு சலுகையோ
கிடையாது. ஆண்ட மக்களிடம் ஆளப்பட்ட மக்கள்
மதிப்புடன் உயர்ந்திருக்கிறார்கள்.
இரண்டாம்
உலகப் போருக்கு முன்னர் ஜெர்மெனியில் இரண்டு லட்சத்துக்கும் மேல் யூதர்கள் இருந்தார்கள்.
பின்னர் ஜெர்மானிய நாஜிக்கள் நிகழ்த்திய இனப் படுகொலையில், அவர்களில் சுமார் தொண்ணூறு
சதவிகித யூதர்கள் அழிந்தார்கள். இன்று அந்த நாட்டில் யூதர்களின் எண்ணிக்கை முன்பைவிட
அதிகம். இட ஒதுக்கீடு இல்லாமல் அவர்கள் ஜெர்மெனியில்
எழுந்து நிற்கிறார்கள். மதிப்பும் பெறுகிறார்கள்.
நமது
நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து வருடங்கள் ஆயிற்று. அடுத்த ஐம்பது அல்லது நூறு
வருடத்திற்குள்ளாவது பின்தங்கியவர்களைக் கணிசமாக
முன்னேற்றிவிட முடியும் என்று நமது அரசியல் தலைவர்கள் நம்புகிறார்களா? ஜம்பத்துக்காக
அவர்கள் ஆம் என்றாலும், படிப்படியாகத்தானே அப்படி முன்னேற்ற முடியும்? அப்படியானால்
இப்போதே இட ஒதுக்கீட்டு அளவை வருடத்திற்கு ஒரு சதவிகிதமோ அரை சதவிகிதமோ குறைத்து வரலாம்.
அப்படிச்
செய்தால், பின்தங்கியவர்களுக்காக சுப்ரீம் கோர்ட் நிச்சயித்த இட ஒதுக்கீட்டின் உச்ச
வரம்பான ஐம்பது சதவிகிதம் என்பது, அடுத்த ஐம்பது அல்லது நூறு வருடங்களில் மறையும்.
ஆனால் இதைச் செய்து நமது அரசியல்வாதிகள் தங்கள்
பிழைப்பில் தாங்களே மண்ணைப் போட்டுக் கொள்ள மாட்டார்களே!
முடிவில்லாமல்
தொடரும் இந்த இரண்டு இட ஒதுக்கீடுகளும் நமது நாட்டின் மற்ற வகுப்பினருக்கு பாதிப்பு
உண்டாக்குவது நன்றாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அதனால் பின்தங்கியவர்களைத் தவிர்த்து,
பொருளாதாரத்தில் நலிந்த குடிமக்களுக்கு என்று ஒரு புதிய இட ஒதுக்கீட்டை பத்து
சதவிகிதம் வரை செய்ய அனுமதிக்கும் திருத்தம் நம் அரசியல் சட்டத்தில் வந்துவிட்டது.
அது செல்லும் என்று நமது சுப்ரீம் கோர்ட்டும் சொல்லிவிட்டது. ஆனால் நாட்டின் அனைத்து
மக்களின் நன்மைக்கும் நியாயத்திற்கும் இது முழுத் தீர்வாகாது.
நமது
நாட்டின் பொருளாதாரம் பரவலாகப் பெரிதாக முன்னேறினால்,
வேலை வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும். அப்போது நம் மக்களின் புரிந்து கொள்ளும் சக்தியும் கூடும். அந்த நிலையில் இட ஒதுக்கீடு மெள்ள
மெள்ள அர்த்தமில்லாமல் நீர்த்துப் போகும். அது கல்லூரிச் சேர்க்கைகளிலும் நடக்கும்
என்று எதிர்பார்க்கலாம். எல்லா இட ஒதுக்கீடும்
முக்கியமாக வருமானத்துக்கு வழி செய்யத்தான் என்றால் இந்த விளைவை நாம் காணலாமே?
திரும்பவும் சற்று அமெரிக்க ஜனநாயகத்தைப் பாருங்கள்: அங்கே பொருளாதாரம் நன்றாக இருக்கிறது, தாஜா அரசியல் இல்லை, என்பதால்தானே பிற நாடுகளில் உள்ள படித்தவர்களும் நலிந்தவர்களும் இட ஒதுக்கீடில்லாத அமெரிக்காவில் பிழைத்து உயரப் பார்க்கிறார்கள்?
திறமையும் அர்ப்பணிப்பும் மிக்க அரசியல்
தலைவர்கள் நமது நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக
உயர்த்த வழி செய்தால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைக்கும். நமது பொருளாதாரம் அப்படி
உயர்வாதற்கான ஆரம்ப அறிகுறிகள் கிடைக்கின்றன. அது இளசு மாங்காய். அது பெரிதாகட்டும்.
பின்னர் இன்னொரு மாங்காயும் காய்க்கட்டும்.
இந்த விஷயத்தில் நல்லதாக வேறு எப்படி நினைக்க முடியும்?
* * * * *
Copyright © R. Veera Raghavan 2022