-- ஆர்.வி.ஆர்
மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடல்களில் சிகரங்கள் தொட்டவர். அவரது குரல் வளம் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரிக்கிறது.
எஸ்.பி.பி-யின் தாய்மொழி தெலுங்கு. அந்த மொழியில் அவர் பல்லாயிர பின்னணிப் பாடல்கள் பாடினார். கன்னடத்தில் பாடினார். தமிழிலும் வெளுத்துக் கட்டினார் மலையாளத்திலும் அவர் குரல் ஒலித்தது. ஹிந்திப் படங்களிலும் அவர் வெற்றி கண்டார் - அதுவும் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடும் அளவிற்கு, சல்மான் கானுக்காகப் பாடும் வரை.
மற்ற இந்திய மொழி ஒன்றுமே தெரியாமல் தெலுங்கில் மட்டும் எஸ்.பி.பி பாடி இருந்தால் அவர் சாதனை அதோடு நின்றிருக்கும். மேலும் விரிந்து பரவி இருக்குமா? இருக்காது.
பல மொழிகள் நம் நாட்டிற்குள் பேசப்படுகின்றன. உள் நாட்டில் ஒரு குடிமகன் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வசிக்கும் உரிமையை அரசியல் சட்டம் தருகிறது. ஆகையால் தாய் மொழியைத் தவிர உபயோகமான வேறு மாநில மொழியை – அதுவும் ஹிந்தியை – நம் நாட்டில் ஒருவர் கற்றுக்கொள்ள தயக்கம் காட்டினால், அல்லது முடியாமல் போனால், அவர் தமிழராகவும் இருந்துவிட்டால், என்ன அர்த்தம்? அவர் தமிழக அரசியல் கட்சிகளால், குறிப்பாக திமுக-வின் கடும் எதிர்ப்பால், கண் கட்டப்பட்டு காது குத்தப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார் என்று அர்த்தம். பல மொழிகளில் பாடிப் பெயர் வாங்கிய எஸ்.பி.பி, இதைப் பக்கவாட்டில் உணர்த்துகிறாார். கட்டாயக் கடுக்கணைக் கழட்ட முடிந்தால் பல தமிழர்களும் இதைப் புரிந்து கொள்ளலாம்.
எஸ்.பி.பி-க்கு முன்னதாகத் தன் மந்திரக் குரலைப் பல மொழிகளில் நிரூபிக்க ஆரம்பித்த பாடகர், லதா மங்கேஷ்கர். ஹிந்தி பின்னணிப் பாடல்களின் அரசி. அவரது தாய் மொழி மராத்தி. ஆயிரத்துக்கும் மேலான ஹிந்தி மற்றும் பிற மொழிப் படங்களில் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவர். மற்ற இந்திய மொழிகள் ஒன்றிரண்டாவது அறிவதின் பயனை, இவரும் எஸ்.பி.பி-யும் அமோகமாக அடைந்தவர்கள்.
ஹிந்தி தெரிந்ததால் அல்லது கற்றதால், லதா மங்கேஷ்கருக்கு மராத்தி மறந்து போனதா, அவர் மராத்தியில் பாடுவதை நிறுத்தி விட்டாரா? தமிழ் சரியாகக் கற்று தமிழில் பாடியதால் எஸ்.பி.பி-க்கு தெலுங்கு மறந்து விட்டதா, தெலுங்கில் பாடுவதை விட்டுவிட்டாரா? பிறகு ஹிந்தி சினிமாவுக்குப் பாட ஆரம்பித்ததும் அவருக்கு தமிழ்தான் மறந்து விட்டதா? இல்லையே? இதில் தமிழ் நாட்டிற்கும் ஒரு சேதி இருக்கிறது.
அதிக தமிழ் நாட்டு இளைஞர்களை பள்ளிப் படிப்பின்போதே ஹிந்தி கற்க விடாமல் முடக்கி வைத்திருப்பதால் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை. அதைச் செய்துவரும் அரசியல் தலைவர்கள்தான் அதன் ரகசிய பலன்களை அனுபவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பிடியில் சிக்காமல் கல்வியில் முன்னேறி பொருளாதாரத்திலும் உயர விரும்பிய தமிழர்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் வசிக்கிறார்கள். இங்கிலாந்திலும் உண்டு. அங்கே அவர்கள் மொழியால் ஒன்றுபட்டு அந்த நாடுகளின் பல ஊர்களில் தமிழ்ச் சங்கங்கள் அமைத்திருக்கிறார்கள். அவற்றைத் துவக்கி அவர்கள் பலரையும் இணைத்தது அவர்களேதான், ‘தமிழ் வளர்க்கும்’ தமிழ்நாட்டுத் தலைவர்கள் அல்ல.
நன்றாகப் படித்து, சுயமாக சிந்திக்கத் தெரிந்து, அடிப்படைத் தேவைக்கான வருமானமும் கிடைத்துவிட்டால், தமிழர்கள் தங்களது இயற்கையான மொழிப்பற்றை அவர்களாகவே பார்த்துக் கொள்வார்கள் – ஹிந்தி படித்தாலும் சரி, வேலைக்காக வேறு நாட்டுக்கே சென்றாலும் சரி. ஆனால் அந்த கௌரவமான தகுதிகள் அடித்தட்டு மக்களுக்கு எளிதாகக் கிடைக்காமல் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர்களை சக்தியற்றவர்களாகவே வைத்திருப்பது நம்மை ஆட்சி செய்த திராவிடக் கட்சித் தலைவர்கள். அப்படி அப்பாவியாகவே நிறையப் பேரை வைத்திருந்தால்தானே, அவர்களிடம் எளிதாக ஓட்டு வாங்கலாம்?
ஹிந்தி-எதிர்ப்பு வாசனை சேர்ந்து அரசியல் நெடி தூக்கலான மாநிலம் தமிழ் நாடு. அதன் சினிமா உலகில் எஸ்.பி.பி தனது பாடல்களால் பெரும் வெற்றியும் புகழும் அடைந்தார். அவர் ஹிந்திப் பாடல்கள் பாடியதற்காக ஹிந்தி-எதிர்ப்பு அரசியல்வாதிகள் யாரும் அவரை விமரிசிக்கவில்லை, எதிர்க்கவில்லை. பல மொழிகளில் அவர் பாடினார் என்பதை ஒரு பெருமையாகக் குறிப்பிட்டே திமுக அவருக்கான இரங்கல் செய்தியை வெளியிட்டது.
தமிழ் சினிமாவில் இருந்துகொண்டே நீங்கள் ஹிந்திப் படங்களில் நடிக்கலாம், பாடலாம். நீங்கள் கல்வித் துறையில் நுழைந்தவரா? கொழுத்த கட்டணம் வசூலித்து ஹிந்தி சொல்லிக் கொடுக்கும் சி.பி.எஸ்.ஸி வழி தனியார் பள்ளிகளை தமிழ் நாட்டில் நடத்தலாம். தமிழராக இருந்துகொண்டு மற்ற மொழிகளில் டி.வி.சானல்களும் நடத்தலாம், அல்லது ஹிந்தி நன்றாகத் தெரிந்த தலைவர்கள் கொண்ட அகில இந்தியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, மத்திய ஆட்சியில் மந்திரி பதவி பெற்று எல்லா வளமும் பெறலாம். எப்படி நீங்கள் பிரபலம் ஆனாலும் பணம் சேர்த்தாலும் – சரியான வழியிலோ வேறு வழியிலோ – தமிழ்நாட்டுப் பொது வாழ்வில், அரசியல்வாதிகளின் பார்வையில், உங்களுக்குத் தனி மரியாதை கிடைக்கும். ஆனால் நீங்கள் சாதாரணத் தமிழராக மட்டும் இருந்துவிட்டால், உங்களுக்குத் தேர்தல் தினத்தன்று இருநூறோ முந்நூறோ கிடைக்கும். அவ்வளவுதான். அரசாங்கமோ கட்சித் தலைவர்களோ உங்களைத் தூக்கிவிட மாட்டார்கள்.
ஐரோப்பாவைப் பாருங்கள். 27 உறுப்பினர் நாடுகளின் 24 மொழிகள் ஐரோப்பிய யூனியனின் அலுவல் மொழிகள். ஒற்றை தேசமான இந்தியாவின் நிலப்பரப்பு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டு நிலப்பரப்பில் கிட்டத்தட்ட முக்கால் அளவு. ஒரு தமிழர் ஹிந்தி மட்டும் கூடுதலாகக் கற்றுக் கொண்டால், ஒரு ஐரோப்பியர் இன்னும் எட்டு பத்து ஐரோப்பிய மொழிகளைக் கற்ற பலனுக்கு சமம் என்று கண் மூடிச் சொல்லலாம். அதாவது, ஒரு தமிழ் இளைஞருக்கு ஹிந்தி தெரிவதால் தமிழ்நாட்டிற்கு அப்பால் உள்ள பரந்த இந்தியப் பிரதேசத்தில் கிடைக்கும் தொடர்புகள், மனதளவில் அந்த மொழியறிவு தரும் கூடுதல் தன்னம்பிக்கை, வரும் வேலை வாய்ப்புக்கள் முக்கியமானவை, அசாத்தியமானவை. ஒரு ஹிந்தி இளைஞன் தமிழ் கற்பதை விட, ஒரு தமிழ் இளைஞன் ஹிந்தி கற்பது இன்னும் அதிகப் பயன் தருவது.
திராவிடக் கட்சித் தலைவர்களிடம் ஒன்று சொல்லலாம். எஸ்.பி.பி. உதாரணத்தை விடுங்கள். குஜராத்தின் நரேந்திர மோடி 2014-இல் இருந்து நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் ஹிந்திக்காரர் இல்லை. இருந்தாலும் அவர் நன்றாக ஹிந்தி கற்று மேடைப் பேச்சிலேயே சரளமாக ஹிந்தியில் பேசுகிறார். அவர் ஹிந்தி பேசுவதால் அவரது தாய்மொழி குஜராத்தி சீரழியவில்லை, குஜராத்தி மொழியைப் பாதுகாக்க அரசியல் பாதுகாவலர்கள் தேவைப்படவில்லை. தமிழுக்கு மட்டும் ஹிந்தியிடம் இருந்து என்ன ஆபத்து? இன்னொன்று. மோடிக்கு சரளமாக ஹிந்தி பேசத் தெரியாவிட்டால் அவர் தனது பலத்தில் பிரதமர் ஆகி இருக்கவும் முடியாது. அப்படியானால் எக்காலத்திலும் தமிழ் நாட்டிலிருந்து ஒருவர் சொந்தக் காலில் நின்று பிரதமர் ஆகவே கூடாதா?
சரி, மீண்டும் எஸ்.பி.பி-யை வைத்து கடைசியாக ஒரு வார்த்தை. அவர் தனது திறமையால், தனது முயற்சியால், தனது புத்திசாலித்தனத்தால் தனது பாட்டை வளர்த்துக் கொண்டார். தமிழக மக்களும் ஹிந்தி எதிர்ப்பிலிருந்து விடுபட்டு, திராவிட அரசியல் கட்சிகளிடம் இருந்து தப்பித்து, தங்கள் பாட்டைப் பார்த்துக் கொண்டால்தான் உண்டு. தமிழ் வாழ்க! தமிழர்களும் வாழ்க!
* * * * *