Thursday, 19 September 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: பேனருக்கு பலியான சுபஸ்ரீ


           -- ஆர். வி. ஆர் 


     ஆபீஸ் முடிஞ்சு ஸ்கூட்டர்ல போயிண்டிருந்த 23 வயசு பொண்ணு சுபஸ்ரீ. அப்பாம்மாக்கு அவ ஒரே குழந்தை. ஸ்கூட்டர்ல வீடு திரும்பிண்டிருந்தா. எவனோ அரசியல்வாதி, தன் வீட்டு கல்யாணத்தை ஊருக்கு அறிவிச்சு, யாரோ தலைவருக்கு 'வருக வருக' சொல்லி, தெரு நடுவுல  வரிசையா 'பேனர்' வச்சிருக்கான். அதுக்கு  அரசாங்க அனுமதி வாங்காத அளவுக்கு அநத பேனர் தலைவர் பெரிய மனுஷனாம். அந்த பேனர்ல ஒண்ணு காத்துல பிச்சுண்டு சுபஸ்ரீ மேல விழுந்து அவளை ஸ்கூட்டரோட சாய்க்க, பின்னால வந்த லாரி அவ மேல மோதி குழந்தைய எமலோகத்துக்கே அனுப்பிடுத்து. ஜம்பத்துக்கு பேனர் வச்சானே, வைக்க எதிர்பாத்தானே, அவனை கொலைகாரப் பாவின்னா தப்பா?

கல்யாணத்துக்கு பந்தாவா பேனர் எழுப்பறது  ஏன் எதுக்குன்னு பாருங்கோ. கல்யாணம்கறது யாருக்கு பிரதானம்? வாழ்க்கைல இணையப்போற மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும்தான? அவா ரண்டு பேரை மையப்படுத்தி, அவாளை கொண்டாடி அவா கல்யாணத்தை நடத்தணும். அதுதான் பண்பு, நாகரிகம். ஆனா, தன் பொண்ணு பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கற தமிழ்நாட்டு  அரசியல் அப்பாக்கள் என்ன பண்றா? கல்யாண மண்டபத்தை ஒட்டியோ பக்கத்துலயோ இருக்கற தெரு நடுவுலயும் பிளாட்பாரத்துலயும் அடுத்தடுத்து மைல் கணக்குல பேனர் கட்டி வைக்கறா. அதுல தன் பேருகல்யாணத்துக்கு வரப் போற கட்சித் தலைவர் பேரு படம்லாம்  கலர் கலரா போட்டுண்டு, கல்யாணப் பொண்ணு பிள்ளை  பேரை ஓரம் கட்டறா, இல்லை   உதாசீனம் பண்றா. இதெல்லாம் எதுக்கு? தலைவர் அந்தக் கல்யாணத்துக்கு வரும்போது, தன்னோட பெரிய சைஸ் படத்தை பேனர் கூட்டத்துல பார்த்து  ரசிக்கணும், பேனர் வைச்சவன் காக்கா குரல்ல "கா... கா..."ன்னு கத்தறா மாதிரி தலைவர் உணரணும்.

தமிழ் நாட்டு தெருக்கள்ள அனுமதி இல்லாம பேனர் வச்சா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்னு ஹை கோர்ட் உத்தரவு போடறது. ஆனா அதை ஆளும் கட்சியே மஜாவா அலட்சியம் பண்றது. எதிர்க் கட்சிகளும் கண்டுக்கறதில்லை. குறிப்பை நன்னா புரிஞ்சுண்ட அதிகாரிகளும் தேமேன்னு இருக்கா. இது ஏன்னா, பேனர் நாயகர்கள் எல்லாரும் பல கட்சிகளோட பெரும் தலைவர்கள்தான். அவா சிரிக்கற மாதிரி,  நடக்கற மாதிரி, கும்பிடற மாதிரி, பேனர்லேர்ந்து ஸ்டைலா போஸ் குடுக்கறா.  தன்னோட படங்களை அந்தத் தலைவர்கள் பேனர்ல பாக்கும்போது அவாளுக்கே ஜிலு ஜிலுன்னு இருக்கும். கோர்ட்டோட காகித உத்தரவுக்காக அந்தப் புளகாங்கித அனுபவத்தை அவா இழக்கத் தயாரா இல்லை. அவாளை ப்ரீதி பண்றதுக்காக, பலமான தொண்டர்கள் விழா தினங்கள்ள தலைவர் கண் பார்வை படற இடத்துல எக்கச்சக்கமா பேனர் வச்சு தன்னோட ஆதாயத்தையும் பாத்துக்கறா. 

பாத்தேளா, இப்ப நிலைமை மாறி வரது. சுபஸ்ரீயோட உயிரிழப்பு,  அரசியல்  கட்சித்  தலைவர்களை  நிஜமாவே பாதிச்சு பேனர் கலாசாரத்தை கைவிடப் பண்ணலாம். பெரிய கட்சிகளே ஒவ்வொண்ணா "எங்க கட்சில இனிமே யாரும் சட்ட விரோதமா பேனர், பிளக்ஸ் போர்டு, கட்-அவுட்   வைக்கக் கூடாது"ன்னு அறிக்கை விடறா. இதுல சட்டத்தை மதிக்கற மண்ணாங்கட்டி எண்ணம்லாம் யாருக்கும் இல்லை.  தற்காப்பு சிந்தனைதான் இருக்கும். எப்படின்னு சொல்லட்டா?

இப்ப, ரோடுலேர்ந்து ஆரம்பிக்கலாம். பல ஊர்ல காண்ட்ராக்டர் போடற ரோடுகள் எப்படி இருக்கு? அநேகமா கண்ராவியாத்தான இருக்கு? ஒரு மழை பேஞ்சா பல்லைக் காட்டும்.  ஏன்னா, போனதெல்லாாம் போக காண்ட்ராக்டர் கைக்கு வந்து சேர்ற காசுக்கு என்ன முடியுமோ அந்த லட்சணத்துக்கு அவன் ரோடு போடுவான். அந்த மோசமான ரோடுல வாகனம் மாட்டிண்டு வாகன ஓட்டிகள், பிரயாணிகள்,  காயம் படறதும் உயிர் விடறதும் அப்பப்ப நடக்கும். அதுக்கெல்லாம் பரிதாபம் காட்டி, ரோடுல சம்பாதிக்கற பெரிய மனுஷா தன் வருமானத்தை குறைச்சு ரோடுகள் தரத்தை உயர்த்த மாட்டா.  

பொது மக்கள் உடம்பையும் உயிரையும் உண்மையாவே மதிக்கற தலைவர்களா இருந்தா ஏன் ரோடுகளை நன்னா  கெட்டியா போட மாட்டேங்கறா? சுபஸ்ரீக்காக நிஜமாவே  அனுதாபம் காட்டறவான்னா, பாடாவதி ரோட்டுல அடி படறவா, உயிர் விடறவா மேலயும் கட்சித் தலைவர்களுக்கு பச்சாதாபம்  வரணுமே? ஏன் வரலை? இங்கதான் இருக்கு தலைவர்களோட சொரூபம்.

 ரோடு விஷயத்துல, இந்தத் தலைவர்தான் சம்பத்தப் பட்டிருக்கார், பலன் இவருக்குத் தான் போறதுங்கற  விஷயம் வெளில தெரியாது, ஆதாரம் கிடைக்காது. பேனர் விஷயம் வேற. இந்த இந்த பேனர்கள்ள இந்த இந்தத் தலைவர்கள் சம்பத்தப்படறா அப்படிங்கறது மறைக்க முடியாத விஷயம். அவா திருப்திப்படணும், அவா எதிர்பார்ப்பு நிறைவேறணும்னு  அவா படத்தை  பெரிசா  போட்டு  பேனர் தயாராகறது. அப்படின்னா, பேனர் உண்டாக்கற  விபத்துக்கு அந்த பேனர் படத் தலைவரும் ஒரு முக்கிய காரணம்னு பொதுமக்கள் கணிப்பா. டி.வி, பேப்பர்லயும் எதிர்ப்பு தொடர்ச்சியா வரும். தலைவர் இதை டபாய்க்க முடியாது, என்ன உளறினாலும் எடுபடாது. கடைசில அவருக்கும் கட்சிக்கும் வரக்கூடிய  ஓட்டை பாதிக்கும். தன்னோட காரியத்துனால பத்து ஓட்டுக்கு பாதகம்னு உணர்ந்தா எந்த அரசியல் தலைவரும் தன்னை மாத்திப்பார்.

ரண்டாவது, பேனர் விபத்துக்காக  கோர்ட்டும்  சட்டத்தை காட்டி, குறிப்பிட்ட கட்சிகள், தலைவர்களைப் பாத்து  சாட்டையை சொடுக்க எத்தனிக்கறது.  அது நடந்தா கட்சிக்கும் தலைவருக்கும் ஆபத்து. இது வரைக்கும் ஜெயிலுக்கு அனுப்ப முடியாதவான்னு நினைச்ச 74 வயசு தலைவர்கள் கூட இப்ப விசாரணைக் கைதியா கம்பி எண்ண ஆரம்பிச்சுட்டா. ‘பேனர்ல  நம்ம படத்தை பாக்கறதைவிட, ஓட்டிழப்பு இல்லாம சுதந்திரமா நடமாடினா அதுவே போறும்’னு  தலைவர்கள் இப்ப கணக்குப் போடறா.  இந்த தற்காப்பு எண்ணத்துலதான் தலைவர்கள் பேனர் போனா போகட்டும்னு புத்திசாலியா நினைக்கறா. ஓட்டு பாதிப்பு இருக்கற வரை, அவா பேனர், பிளக்ஸ் போர்டு, கட்-அவுட்டை தள்ளி வைப்பா. மத்தபடி செந்தமிழ் நாட்டுத் தலைவர்கள் சிந்தனைல, உங்களுக்கோ எனக்கோ சுபஸ்ரீக்கோ கைகால்  இருந்தா என்ன, மூச்சு இருந்தா என்ன? வாங்கோ, ஏதோ மக்கள் நலனுக்காக தலைவர்கள் ஒரு முடிவை அறிவிச்சுட்டான்னு அசடா நினைக்காம, நம்ம உடம்பை பாத்துப்போம், நம்ம வேலையைப் பாப்போம்.

* * * * *
Copyright © R. Veera Raghavan 2019


2 comments:

  1. இன்னும் அவாளுக்கு உறைக்கிற மாதிரி சொல்லி இருக்கலாம். வழக்கமாக உங்கள் கட்டுரையில் காணப்படும் உத்வேகம் இதில் குறைவுதான். ஆனாலும் எடுத்துப் சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete