Sunday, 1 September 2019

ஜனநாயக பாப்பா பாட்டு

மஹாகவி பாரதியின் 'பாப்பா பாட்டு' எந்தக் காலத்துக்கும் ஏற்ற அற்புதம்.

'ஜனநாயக பாப்பா பாட்டு', இந்தக் காலம் எழுத வைத்தது - படித்தவுடன் நம்புவீர்கள்.


பாரதியின் 'பாப்பா பாட்டு' 
சில பகுதிகள் (பலரும் அறிந்தது)
ஜனநாயக பாப்பா பாட்டு
(பலரும் அறியவேண்டியது)



ஓடி விளையாடு பாப்பா – நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா;
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.




ஓடி விளையாடு பாப்பா - நீ
ஒன்றாதே மொபைலில் பாப்பா;
மோடி போல உழைக்கணும் பாப்பா - யார்
தூற்றினாலும் முன்னேறணும் பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.




காலை எழுந்தவுடன் வாட்ஸப் - பின்பு
கண்டகண்ட வெட்டிப் பேச்சு;
மாலை முழுதும் டி.வி - என்ற
வழக்கத்தில் விழாதே பாப்பா.


சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா;
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.




சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
காணாமல் போகிடாதே பாப்பா;
உன் வாழ்வு வளத்தை நசுக்கி - கொழிக்கும்
தலைவரிடம் எச்சரிக்கை பாப்பா.


வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில் 
வாழும் குமரிமுனை பாப்பா; 
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.




வடக்கில் கங்கை நதி பாப்பா - தெற்கில்
பாயும் காவிரி பாப்பா;
கிடக்கும் ஆற்று மணல் கண்டாய் - அதைக்
கொள்ளையிட லாகாது பாப்பா.


சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே –அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.




சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – இருந்தும்
ஹிந்தி படித்திடடி பாப்பா;
தேசமெங்கும் காரியங்கள் கிட்டிட - அது
துணையாக நிற்குமடி பாப்பா.


சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் 
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.




சாதிகள் இல்லையடி பாப்பா - என்றால் 
ரிசர்வேஷன் இருக்குதடி பாப்பா;
உள்ளங்களும் சட்டங்களும் மேம்பட - உயர்
தெய்வத்தருள் வேண்டுமடி பாப்பா.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா;
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.




பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
கும்பிட லாகாது பாப்பா;
ஓட்டுக்குப் பணம்தரும் கைகளை - பற்றி
முறுக்கி உடைத்துவிடு பாப்பா.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா;
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.




தமிழ்த்திரு நாடுதன்னைக் காக்க – நல்
ஆட்சியாளர் வேண்டுமடி பாப்பா;
ராஜாஜி காமராஜர் கக்கனென்று – பல
தூயவர்கள் தேசமடி பாப்பா.


* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

1 comment:

  1. மிகவும் அருமையான பதிவு.. நல்ல சிந்தனை.

    ReplyDelete