சங்கீதத்தை
ரசிக்கற தமிழ்க்காராளுக்கு சுதா ரகுநாதன் யாருன்னு தெரியும். அந்த மாமி கர்நாடக
சங்கீதத்துல பேர் வாங்கின பாடகி. அவாளை பத்தி கேள்விப்படாத மத்தவாளும், இப்ப
ஒரு சம்பவத்துல சுதா ரகுநாதன் சங்கீத வித்தகர்னு வாட்ஸ்-அப் வழியா
தெரிஞ்சிண்டிருக்கா. இப்படியே கர்நாடக சங்கீதமும் புதுசா நாலு பேருக்கு பரிச்சயமானா நன்னா இருக்குமேன்னு ஒரு நப்பாசை. சரி, மெயின் விஷயத்துக்கு
வரேன்.
சுதா
ராகுநாதனும் அவ ஆத்துக்காரரும் ஹிந்து மதம்னு எல்லாருக்கும் தெரியும்.
அவாளுக்கு ஒரு பொண்ணு - அவளும் பிறப்புல ஹிந்துதானே? அந்தப் பொண்ணு, ஒரு கிருஸ்தவ பெயர் உள்ள பையனை கல்யாணம் பண்ணிக்கப் போறா. அதுக்கு சுதா
ராகுநாதனும் அவ ஆத்துக்காரரும் சேர்ந்து ஒரு கல்யாண ரிசப்ஷன் அழைப்பிதழ்
அடிச்சிருக்கா. சில பேர் அந்த இன்விடேஷனை வாட்ஸ்-அப்புல படமா போட்டு,
"தன் பொண்ணு ஒரு கிருஸ்தவனை கல்யாணம் பண்ணிண்டாலும், சுதா மாமி அதுக்கு
ரிசப்ஷன் வச்சு அழைக்கறாளே! இது அடுக்குமா? இனிமே ஹிந்து கடவுள்கள் மையமான கீர்த்தனைகளை
சுதா ரகுநாதன் பாடலாமா? அது தப்பாச்சே!"ன்னு கண்டனம் பண்ணி சுதாவை வறுக்கறா.
சுதாட்ட முதல்ல ஒண்ணு சொல்றேன். "வருத்தப்படாதம்மா. நான் உனக்கு
வக்காலத்து வாங்கறேன்."
அந்நிய
தேச முஸ்லிம் ராஜாக்கள் இந்தியவுல படையெடுத்து ஆட்சி பண்ணின போது, அவா ஹிந்துக்களை
இம்சை பண்ணினா, கத்தி முனைல மதம் மாத்தினா, ராமர் கோவிலை இடிச்சு மசூதி கட்டினா,
ஹிந்து மதத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினா. அப்பறம் வெள்ளைக்காரன் ஆட்சி வந்தது,
போனது. இப்ப சுதந்திர நாட்டுல நம்மளே விசித்திரமான மத சட்டங்களை
வச்சிருக்கோமே? அதையும் சாதகமா பயன்படுத்தி வக்கிர அரசியல்வாதிகள் என்ன பண்றான்னா,
பொறுமையான ஹிந்துக்களை உதாசீனம் பண்றா, சிறுபான்மை ஜனங்களை
தாஜா பண்ணி ஓட்டு வாங்கறா, முஸ்லிம் ராஜாக்கள் ஆரமிச்ச ஹிந்து மத சரிவையும்
தீவிரம் ஆக்கறா. இது ஒரு பக்கம்.
இன்னொரு
பக்கத்துல சிறுபான்மை மத தலைவர்கள், அதுவும் கிறிஸ்தவ பாதிரியார்கள், சாதாரண
ஹிந்துக்களை ஏமாத்தி மதமாற்றம் பண்றா. இதெல்லாம் இந்தியாவோட
உயிர் அடையாளமான ஹிந்து மதத்துக்கும் ஹிந்து கலாசாரத்துக்கும் பெரிய இடி.
தன்னோட மதத்தை பெருமையா நினைக்கற ஹிந்துக்களுக்கு ரணம். அதுனால, பேரிழப்புல
தவிக்கற ஹிந்துக்களுக்கு, தங்கள்ள ஒருத்தர் தானாவே, யார் கட்டாயமும் இல்லாம,
இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாலும் அதை ஏத்துக்கறது கஷ்டமா இருக்கு.
தானா அப்படி மதம் மாறினவாளை, அவா அம்மா அப்பா தள்ளி வைக்காம இருந்தா, அந்த
அம்மா அப்பாவும் பல ஹிந்துக்கள் கோபத்துக்கு ஆளாகலாம்.
வாட்ஸ்-அப்புல
வம்பு கிடைக்கும். உண்மை கிடைக்குமான்னு யாருக்குத் தெரியும்? சுதா ரகுநாதன்
வீட்டு விஷயத்துலயும், அவாத்து பொண்ணுக்கு இப்படி கல்யாணம் நடக்கப் போறதுங்கறது உண்மை - மத்த சமாசாரங்கள் நமக்கு முழுசா தெரியாது. ஆனா அவா வீட்டுலயும் கல்யாணப் பொண்ணு மதம்
மாறிருக்கா, அதை சுதாவும் அவா ஆத்துக்காரரும் ஏத்துண்டாச்சுங்கற அனுமானத்துல வாட்ஸ்-அப்
கண்டனங்கள் பறக்கறது. இது உண்மையா இருந்தாலும், கோபிக்கறவா கொஞ்சம் யோசிக்கணும்.
இந்தக்
காலத்துல பதினாறு-பதினேழு வயசு பொண்ணு பையன்களையே அம்மா அப்பா வார்த்தை
கட்டுப்படுத்தறதா? ஏதோ குறைச்சலாத்தான் இருக்கும். அதைத் தாண்டி, கல்யாண விஷயம்
எப்படி இருக்கு? ’பொண்ணு பையன் இஷ்டப்பட்டா நம்ம வரன் பார்ப்போம். இல்லை,
அவாளே ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணி வைக்கச் சொன்னா பண்ணி
வைப்போம். ஆனா நாமளே முனைஞ்சு யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி,
அது சரியில்லாம போயி, பழி நமக்கு வரவேண்டாம்’னு பெத்தவா பரவலா கவலைப் படறா. இதுவும்
பெத்தவாளோட நல்ல மனசுலேர்ந்து வர்ற எண்ணம்தான். ஏன்னா, குழந்தைகளுக்கு அவா விருப்பப்படி
வாழ்க்கைத்துணை கிடைக்கும்போது, அவாளோட மண வாழ்க்கைல ஒரு பிரச்னை வந்தா அதை
அவாளே தன் பொறுப்புல சரி பண்ணிப்பா. ஆனா, வீட்டுல பார்த்த வரனை கல்யாணம் பண்ணிண்டு
சின்னதா கணவன்-மனைவி பிரச்சனை வந்தாலும், அம்மா அப்பா நமக்கு சரியா பார்த்து
வைக்கலையோன்னு குழந்தைகள் நினைக்கலாம்’ அப்படின்னுதான் பெத்தவா அக்கறையோட நினைக்கறா.
கால நிலவரம் இப்படி இருக்கு. இந்த விஷயத்துல, அம்மாக்காரி ஒரு பிரபல பாடகியா
இருந்தாலும் அவாளும் அவ ஆத்துக்காரரும் இப்படித்தான்
நினைப்பா.
எந்த
அம்மா அப்பாவும் தன் பொண்ணுக்கோ பையனுக்கோ வரன் பார்க்கணும்னா தன்னோட மதத்துல, தன்னோடா
ஜாதில பாக்கறதுதான் சுபாவம். அந்த மாதிரி குடும்பங்கள்தான் அவாளுக்கு நம்பிக்கையா அறிமுகம் ஆகும், சுலபமா பரிச்சயம் பண்ணிக்க
முடியும். பொண் பிள்ளைகள் தானா விருப்பப்
பட்டு வேற ஜாதி, மதத்துலேர்ந்து ஒரு துணையை தேர்வு பண்ணிண்டா அம்மா அப்பா என்ன
பண்ணுவா? ரகசியமா வருத்தப் பட்டாலும், அந்த கல்யாணத்தை ஏத்துண்டு புது ஜோடியை ஆசீர்வாதம்
பண்றதுதான் அனேகமா நடக்கும். இந்த மாதிரி கல்யாணத்துக்காக, அம்மா அப்பா தன்னோட குழந்தையை
உதற முடியாது. அதுதான் அம்மா அப்பா.
எந்த நாட்டுலயும்,
எந்தக் காலத்துலயும் அம்மா அப்பாக்கள் வேற, பொண் பிள்ளைகள் வேற. அதுவும்
அம்மாக்கள் அவா பொண் பிள்ளைட்ட காட்டற அரவணைப்பு அலாதி. ராஜிவ் காந்தியோட கொலைக்காக ஜெயில்ல ஆயுள் தண்டனை அனுபவிக்கறானே பேரறிவாளன்,
அவனோட அம்மாதான் அற்புதம்மாள். அந்த அம்மா தன்னோட பையன் முன்கூட்டியே விடுதலை ஆகணும்னு தினமும் துடிக்கறா.
பொது நன்மைக்காக அரசாங்கம் அவனை விடுதலை செய்யக் கூடாதுன்னு நாம நினைக்கலாம்.
ஆனா ஒரு அம்மாவா அற்புதம்மாள் ஆசைப்படறதை நீங்க குறை சொல்லக் கூடாது, அவாளை நீங்க அனுதாபத்தோட புரிஞ்சுக்கணும். அதுனால, எல்லா விஷயத்துலயும்
அம்மாக்களோட பாசத்துக்கும் பரிவுக்கும் வந்தனம் சொல்லுங்கோ. அவா நன்னா பாடுவான்னா அதை கைதட்டி பரிபூரணமா ரசிங்கோ. நான் சொல்றது ரைட்டா?
* *
* * *
Copyright © R. Veera Raghavan 2019