நிம்மதி, மகிழ்ச்சி.
இந்த இரண்டையும் நேற்றைய லோக் சபா தேர்தல் முடிவுகள் உங்களுக்கு அள்ளிக்
கொடுத்ததா? ஆம் என்றால் நீங்கள் இந்தியாவை நேசிப்பவர்.
அரசியல் பற்றி
அதிகம் விவாதிக்காதவர்களும் பா.ஜ.க லோக் சபா தேர்தலில் அடைந்த அமோக
வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். அடக்கத்துடன் கருத்துக்களை தெரிவிக்கிற பலர்கூட, எதிர்க்கட்சிகளின் படுதோல்வியை வாங்கு
வாங்கென்று நக்கல் செய்யும் மீம்களை வாட்ஸ்-அப்பில் முன் நகர்த்துகிறார்கள். பாரதியின் 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே'
பாடல் வரிகளை சற்று மாற்றி, பிரதமர் நரேந்திர மோடியை
சிலாகித்து நாட்டு வளர்ச்சியை எதிர்நோக்கி, தான் பாடிய குரல் பதிவை அனுப்புகிறார்
அரசியல் பேசாத ஒரு பெண். இவர்களையும் மனதில் குதியாட்டம் போட வைத்திருக்கும் மகத்தான தேர்தல் வெற்றி, பா.ஜ.க கூட்டணிக்கு நேற்று
கிடைத்தது. தனியாக 300 இடங்களுக்கு மேல், கூட்டணியாக 350-க்கு மேல், வென்றது பாரதிய ஜனதா கட்சி. இந்த உயர்ந்த சாதனைக்கு காரணங்கள் உண்டு.
பேச்சில், தோரணையில்
பலமானவராக தோன்றும் மனிதரைத்தான் சாதாரண இந்திய மக்கள் அரசியல் தலைவராக ஏற்பார்கள்.
அவர்தான் அந்த மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவார். அவர் குறைவாக யோசிக்கலாம்.
குயுக்தியாக சிந்திக்கலாம். கெட்டவராக இருக்கலாம். என்னென்னவோ
செய்யலாம். அதெல்லாம் சட்டம் தலை தூக்காத, முதிர்ச்சி அடையாத, ஒரு
ஜனநாயக நாட்டில் பொருட்டில்லை. மம்தா பானர்ஜி, மாயாவதி, முலயாம் சிங், லாலு பிரசாத் போன்றவர்கள்
இப்படி பாதுகாப்பு உணர்வு அளித்து தலைவர்களாக எழுந்தவர்கள்.
இப்படியான தலைவர்கள் ஏழைகளின் காப்பாளன், ஒரு மொழியின் காவலன், ஒரு ஜாதியின்
தலைவன், ஒரு நிலப்பரப்பின் அடிதடி ராஜா, போன்ற
தோற்றங்களில் தங்களை நிலை நிறுத்தியவர்கள். இவர்களின் குணாதிசயங்கள் பொது வெளியில்
பலரும் உணர்ந்ததுதான். இவர்கள் ஜெயிலுக்குப்
போனால் அங்கிருந்தும் அதிகாரம் செய்வார்கள்.
இத்தகைய தலைவர்கள்
பேட்டை வஸ்தாத்கள் மாதிரி. வஸ்தாதை எதிர்த்தால் நமக்கு திண்டாட்டம் என்று பேட்டைவாசிகள் ஐயாவுக்கு
சலாம் வைத்து பணிவு காட்டி ஜே போடுவார்கள். ஐயா மறைந்தால், அல்லது கைகாட்டினால்,
அவர் அறிமுகம் செய்த வாரிசு அல்லது சொந்த பந்தத்திற்கு சலாம் வைப்பார்கள். இல்லை
என்றால் தலைவரின் நிழலாக இருந்த ஒரு கூட்டாளி அவர் இடத்திற்கு வரலாம். வெறும் நல்லவர்கள், புத்திசாலிகள்
இந்தத் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர்த்து நிற்க முடியாது. சமூக வலைத்தளங்களில்
கத்தலாம், எத்தலாம். அதோடு சரி.
இன்றைய இந்தியாவில்,
காலத்தின் பரிசாக வந்த ஒரு தலைவர்தான் இந்த வஸ்தாத்-தலைவர்களை நிமிர்ந்து எதிர்த்து வெல்ல
முடியும், மக்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் காண்பிக்க முடியும். அத்தகைய ஒருவருக்கு,
வஸ்தாத்-தலைவர்களுக்கும் மேலான மனோ பலம் இருக்கும். அவர் அரசியல் சூது வாதில் அத்துப்படியாக
இருப்பார். சாதுரியமான பேச்சிலும் காரியத்திலும் கைதேர்ந்தவராக இருப்பார். பலரையும்
அணைத்துச் செல்வார். தேசத்தை ஆழ்ந்து நேசிப்பார்.
சாதாரண மக்களின் பரிதாபத்தை உணர்ந்து அவர்களை கைதூக்கிவிட முயல்வார், அவர்களின் மனங்களைத்
தொடுவார். பலராலும் பெரிதாக மதிக்கப் படுவார். அந்த ஒருவர் நரேந்திர மோடி. அதனால்தான்
மோடியைப் பார்த்தாலே ஜனங்கள் சல்யூட் வைப்பது என்றில்லாமல் குதூகலத்தில் 'மோடி
மோடி' என்று அடிமனதிலிருந்து குரல் எழுப்புகிறார்கள்.
கட்சியில் மோடிக்கு உறுதுணையாக
நிற்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்களில் 99 சதவிகிதம் நாட்டின் நலனை
மட்டும் அரசியலில் நினைப்பவர்கள். ஏனென்றால் மோடியும் அதை தீர்க்கமாக பேச்சிலும்
செயலிலும் பிரதிபலிப்பவர். இவர்களும் மோடியின் பலம்.
பல எதிர்க் கட்சிகளின்
தலைவர்களுக்கு நேரான அரசியல் எண்ணங்களோ செயல்களோ கிடையாது. கட்சிக்குள் இருக்கும்
அவர்களின் ஆதரவாளர்களில் 99 சதவிகிதத்தினர், அவர்கள் முன்னர் செய்த முறைகேடுகளை
மறைக்கவும், ரகசியமாக வளம் பெறவும் மோடியை எதிர்த்தாக வேண்டும். அதற்கு அவர்கள் தங்களின்
தலைவர்களை அண்டி இருக்க வேண்டும். அவர்களின் செயல்களை ஊக்கப் படுத்தி அதே வழியில் அவர்களை
விட பயன் அடைபவர்கள் அந்த கட்சித் தலைவர்கள். அவர்களும் மோடியை எதிர்துத்தான் அரசியல்
செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் தேச நலனுக்கு ’டூ’ விட்டவர்கள். நாட்டில் நிறைய கட்சிகள் இந்த கதியில்
இருக்கின்றன. ஏன் இருபத்தி இரண்டு கட்சிகள் மோடியை எதிர்ப்பதற்காகவே கூடுகின்றன என்று
புரிகிறதா?
எப்படி வஸ்தாத்-தலைவர்கள்
பொது மக்களை வஞ்சித்தார்களோ, அதன் மறு பக்கமாக மோடி என்ற அரசியல் மாமனிதர் மக்களின்
மனம் தொட்டு அவர்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறார். அவர் பிரதமராக இருந்த ஐந்தாண்டு காலத்தில், அவர்
நல்ல மனிதர், தேசத்துக்கு நன்மை செய்ய அரசியலில் இருக்கிறார் என்ற என்ணம் மக்களுக்கு
இன்னும் ஆழமாக பதிந்து விட்டது. இத்தகைய
மனிதர் தனக்கு நேரடி அரசியல் எதிரியாக இருந்தால், அவரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல்
குழம்பினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. சாதாரண மக்களிடம் அவர்கள் ஆர்வம் காட்டாத
ரஃபால் போர் விமான ஒப்பந்தத்தைப் பேசி, தூய்மையான தலைவராக அவர்கள் மதிக்கும் மோடியை
‘திருடன்’ என்று எப்போதும் தேர்தல் பிரசாரத்தில் வர்ணித்தார் ராகுல். ஆனால் வாக்காளர்கள்
ராகுல் காந்தியை நம்பவில்லை. இதைப் புரிந்துகொண்ட மோடி, ராகுலின் ‘திருடன்’ பேச்சுகளுக்கு பதில் சொல்லவும் இல்லை. இருவரில் யார் மக்களை சரியாக புரிந்து கொண்டவர் என்பதற்கு இதுவே உதாரணம்.
மோடியின் நேர்மை மீது
நம்பிக்கை வைத்த மக்களிடம் சென்று, “நான் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு மாதா மாதம்
ஆறாயிரம் ரூபாய் இலவசமாகத் தருவேன்” என்று ராகுல் காந்தி வாக்குறுதி சொன்னார். பாரம்பரியமான
காங்கிரஸ் கட்சியே இப்படி ஒரு தேர்தல் வாக்குறுதி அளித்தது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில்
நிறைவேறும் என்று மக்கள் நம்பலாம். ஆயிரம்
ரூபாய் கிடைத்தாலும் அதிர்ஷ்டம் என்று நினைக்கும் மக்கள், காங்கிரஸ் ஆட்சியின் ஆறாயிரம்
ரூபாய் ’ஆஃபரை’யும் தள்ளினார்கள் என்பது தெரிந்துவிட்டது. தேசிய அளவில்
வாக்காளர்கள் யார் மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்தார்கள்,
எவர் மீது பெரிய அவநம்பிக்கை கொண்டார்கள் என்பதற்கு இது நிரூபணம்.
மோடியின்
இன்னொரு பக்கமும் கோடிக்கணக்கான இந்தியர்களை வசீகரித்தது. இந்துக்கள் கிட்டத்தட்ட 80% வாழும் நாடு இந்தியா.
அவர்களின் மத நம்பிக்கைகளும் மத சம்பிரதாயங்களும் வழிபாட்டு முறைகளும் அவர்களின் வாழ்க்கைக்கு
முக்கியமானவை. சுதந்திர இந்தியாவில் எந்த தேசியத் தலைவரும் இது வரை காண்பிக்காத தனது
இந்து மத நம்பிக்கையை, மோடி தைரியமாக வெளிப்படுத்தினார். இது இந்துக்களோடு அவருக்கு உள்ளார்ந்த பிணைப்பை
உண்டாக்கியது. வேற்று மதத் தலைவர்கள் மூலமாக
இந்துக்கள் பலருக்கும் ஏற்பட்ட கவலைகளுக்கு அவரது சொல்லும் செயலும் மருந்தாக இருந்தன. இவரைப் பார்த்து ராகுல் காந்தி ’நானும் இந்துதான்!’
என்று அவ்வப்போது வேஷம் கட்டினாலும், போறாத நடிப்பில் நகைச்சுவை செய்தார்
தான் ஒரு இந்து என்பதை
மோடி நேர்மையாக வெளிப்படுத்தினாலும், மற்ற மதத்து மக்கள் இந்துக்களிடம் அச்சப் படாமல்
இருக்கலாம் என்கிற நம்பிக்கையை மோடி பெரிதும்
ஏற்படுத்தினார். அதாவது, அவர் ஒருவரை மற்றோருவருக்கு பயம் காட்டி அந்த மற்றோருவர்
மீது சவாரி செய்யவில்லை. எல்லா மதத்தினரின்
இணக்கத்தையும் மோடி விரும்புகிறவர் என்று பல தரப்பட்ட மக்களும் உணர்கிறார்கள்.
இப்படி பல வகைகளில் பா.ஜ.க-வின் பிரும்மாண்டமான தேர்தல் வெற்றிக்கு மோடி காரணம் ஆகிறார்.
இவ்வளவு உயர்ந்த அரசியல் தலைவரான மோடியின் பெருமை
தமிழ் நாட்டில் ஏன் எடுபடவில்லை? இந்த மாநிலத்தில் ஒரு பா.ஜ.க வேட்பாளர் கூட நடந்து
முடிந்த லோக் சபா தேர்தலில் வெற்றியை தொடவில்லை. பா.ஜ.க-வை எதிர்த்த தி.மு.க கூட்டணிக்கு
தமிழ் நாட்டில் பெரிய வெற்றி கிடைத்தது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? தமிழ் நாட்டு
வாக்காளர்கள் மோடியின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களா? இதைப் புரிந்து கொள்ள வஸ்தாத்-தலைவர்களிடம்
இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
தமிழ்
நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் கட்சித் தலைவர்கள் இருந்தார்கள். தி.மு.க-வை
கருணாநிதியும் அ.தி.மு.க-வை ஜெயலலிதாவும் சக்கரவர்த்திகளாக நிர்வகித்து வந்தார்கள். இவர்கள் தலைமையை ஏற்பது தங்களுக்கு பாதுகாப்பானது என்று கருதிய பெருவாரியான மக்கள்
அவ்வப்போது இந்தக் கட்சி அல்லது அந்தக் கட்சி, அல்லது அவர்கள் தலைமையிலான கூட்டணி
என்று ஆட்சியில் அமர்த்தினார்கள். கடைசிவரை, அடுத்த தலைவர் என்று எவரையும் கட்சியில்
வரவிடாமல் வளரவிடாமல் செய்து ஜெயலலிதா 2016-ல் மறைந்தார். அடுத்த வஸ்தாத்-தலைவர் இல்லாத அ.தி.மு.க இப்போது தள்ளாடுகிறது.
ஜெயலலிதா-வின் நிஜ உருவத்துக்கு தாங்கள் காட்டிய மரியாதையை அவரின் புகைப்படத்திற்கும்
காட்டி இப்போது அ.தி.மு.க-வை நடத்துபவர்களுக்கு
ஓட்டு போட மக்களில் பலர் தயார் இல்லை.
தி.மு.க-வை பொறுத்தவரை,
கருணாநிதி இறப்பதற்கு 5 வருடங்களுக்கு முன்பே, தனது மகன் ஸ்டாலின்தான் தனக்கு அடுத்த தி.மு.க தலைவர் என்று உறுதியாகக்
காட்டிவிட்டார். ஆகையால் கட்சியும் கட்சியை
ஆதரிக்கும் பொது மக்களும் தி.மு.க-வின் அடுத்த வஸ்தாத்-தலைவர் ஸ்டாலின் என்று புரிந்துகொண்டார்கள்.
அதோடு, அவருக்கு ஈடு கொடுக்கும் எந்த வஸ்தாத்-தலைவரும் எதிர்க்கட்சியிலும் இப்போது
இல்லை என்பதையும் அறிந்து ஸ்டாலினுக்கே சாதாரண மக்கள் பலரும் பாதுகாப்பாக சலாம் வைக்க
ஆரம்பித்து விட்டார்கள். இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வின் வேட்பாளர்களும்,
அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் சென்ற லோக் சபா தேர்தலிலில் 37 தமிழக தொகுதிகளில்
வெற்றி அடைந்தார்கள். நேற்று அரசியலுக்கு வந்த கார்த்தி சிதம்பரமும், பலமான ஸ்டாலின்
தலைமை தாங்கும் தி.மு.க ஆதரவால் தமிழ் நாட்டு லோக் சபா தொகுதியில் இப்போது ஜெயிக்க
முடிகிறது – ஆனால் ராகுல் காந்தி, பரம்பரையாக வென்ற அமேதியில் வெட்கப்படும் தோல்வியை சந்திக்கிறார்.
மோடி எவ்வளவு பெரிய தலைவராக
இருந்தாலும், நேரடியாக அவர் மக்களிடம் பேசித்தான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
அதை செய்வதற்கு அந்த மக்களின் மொழி அவருக்குத் தெரிய வேண்டும். இந்தி பேசும் மக்களிடம்
அவர் இந்தியில் பேசி அதை சாதிக்கிறார். அவரது பேச்சை நேரில் கேட்டு, அதை இயல்பாக புரிந்துகொண்டு,
அந்த மக்களும் அவரோடு ஒன்று படுகிறார்கள். அதனால்தான் குஜராத்தியரான மோடி, உத்திர
பிரதேசத்திலும், பிஹாரிலும், மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கூட அந்த மாநில
மக்களிடம் இந்தியில் பேசி அவர்களைக் கவர்ந்து பிரமிக்கும் தேர்தல் சாதனைகள் புரிகிறார்.
இன்னொரு மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு சென்று அந்த மக்கள் கூட்டத்தில் இந்தியில் பேசி
அந்த தொகுதியிலேயே போட்டியிட்டு பெரிய வெற்றி பெறுகிறார்.
தமிழ் நாட்டை கவனித்தால்,
இந்த மாநில மக்களை இந்தி படிக்காமல் செய்த தி.மு.க, அதன் பெரிய பலனை இன்று அனுபவிக்கிறது
– அதாவது மோடி பேசும் இந்தி இங்கு யாருக்கும் புரியாது, அதனால் மோடியின் தாக்கம் தமிழ்
நாட்டில் கொஞ்சமும் இல்லை என்று ஆகிவிட்டது. வாரணாசி தமிழ் நாட்டில் இருக்கிறது
என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, இந்தி பேசும் மோடி அந்த தமிழ்நாட்டு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது. ராமேஸ்வரம்
உ.பி-யில் இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். அப்போது, அந்த வட இந்திய புனித
நகரத் தொகுதியில் போட்டியிட்டாலும் இந்தி பேசும் மோடி ஜெயிப்பார். தமிழ் நாட்டில் இந்த
லோக் சபா தேர்தலில் மோடி எடுபடாமல் போனதற்கு பெரும் காரணம் இதுதான். மக்களைப் பரவலாக ஈர்க்கும் தலைவர்கள் தமிழ் நாட்டு
பா.ஜ.க-வில் உருவாகவில்லை என்பது கட்சியின் மாநில வளர்ச்சி பற்றியது. அது வேறு விஷயம். ஆனாலும், அதுவும் ஓரளவு காரணம்.
நடந்த லோக் சபா தேர்தலில்
பா.ஜ.க கூட்டணி தமிழ் நாட்டில் பெரும் தோல்வி
அடைந்ததால், ”தமிழ் நாட்டு மக்களுக்கு தேசிய சிந்தனை இல்லை. இந்து மத நம்பிக்கை கொண்ட
தமிழர்களுக்கு, யார் அவர்களின் மத உணர்வுகளுக்கு பாதுகாவலர்கள் என்பதும் புரியவைல்லை”
போன்ற விமரிசனங்கள் எழுகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் சரியில்லை. உண்மை என்னவென்றால், நமது ஜனநாயகத்தின் குறைகளும் நமது மாமூல் அரசியல்வாதிகளின் சக்தியும் அலாதியானவை. மக்கள் நலனுக்காக மக்களுக்குப் புரியும் மொழியில் பேசும் நிஜத் தலைவர்களை
தமிழ் நாடு பல மாமாங்கம் ஆகியும் பார்க்கவில்லை. பின்னடைவில் இருக்கும் தமிழக மக்களை உயர்த்திவிட முனைப்பான தலைவன் அவசரத் தேவை. தமிழ்நாடு காத்திருக்கிறது.
* * * * *
Copyright © R.
Veera Raghavan 2019