திராவிடர் கழகத்
தலைவர் கி. வீரமணி ஒரு முழு பகுத்தறிவுவாதி – அவர் பேசாமல்
இருக்கும் வரை. பகுத்தறிவு என்று நினைத்து அவர் பேசும்போதுதான் அவரது
பகுத்தறிவு பல்லிளிக்கிறது.
பொள்ளாச்சியில் பல
இளம் பெண்களிடம் தறிகெட்ட இளைஞர்கள் சிலர் பாலியல் அக்கிரமங்கள் செய்தது
சமீபத்தில் தெரியவந்தது. இப்போது போலீஸ் விசாரிக்கிறது. சில குற்றவாளிகள் கைதாகி
இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் வீரமணி திருவாய் மலர்ந்தார். இந்துக்கள்
வழிபடும் பகவான் கிருஷ்ணரை இழிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், 'பொள்ளாச்சி
பாதகர்கள் தமது சுபாவத்தில் அப்பாவிகளாக இருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கு
கிருஷ்ணர்தான் தனது லீலைகள் மூலமாக மோசமான முன்னுதாரணமாக இருந்து தவறான
வழியைக் காட்டி விட்டார்!' என்கிற அர்த்தத்தில் உளறிக்
கொட்டியிருக்கிறார் வீரமணி.
‘கடவுள் இல்லை,
அதுவும் இந்துக் கடவுள்கள் இல்லவே இல்லை’ என்கிற ரீதியில் இந்து மதத்தையும் அதன்
தெய்வ வழிப்பாட்டையும் பழித்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழி வந்தவர் வீரமணி. வந்த வழியை விட, ஈ. வே.ரா சேர்த்து வைத்து
அதனால் வளர்ந்த சொத்துக்களை ஏதோ டிரஸ்டு மற்றும் நிறுவனங்கள் பெயரில்
நிர்வாகம் செய்யும் அதிர்ஷ்டத்தை வீரமணி பெரிதும் மதிப்பார். காரணம் கேட்காதீர்கள்
- இது எளிதில் புரியாத பெரிய பகுத்தறிவு சமாசாரமாக இருக்கும் என்று நாம் பக்குவமாக
நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். சரி, இப்போது சிறிய பகுத்தறிவு
விஷயங்களைப் பார்க்கலாம்.
எந்த மதத்திலும்,
கடவுள் என்பவர் கருணை மிக்கவர், தன்னை நம்புகிறவர்களைக் காப்பவர், தீயவர்களை தண்டிப்பவர்
என்றுதான் அந்த மதத்தை சார்ந்தவர்கள் நினைப்பார்கள். கடவுளின் சக்தியையும்
மகிமையையும் வெளிப்படுத்தும் வகையில் எல்லா மதத்திலும் அதன் கடவுளைப் பற்றிய புராணங்கள்,
இதிகாசக் கதைகள் உண்டு. சிலர் இவை எவற்றையும் நம்புவதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை, ’கடவுள் என்று யாரும் கிடையாது, அதனால் கடவுளைப்
பற்றிய, கடவுளின் வாழ்க்கை மற்றும் செய்கைகள் பற்றிய, எந்தக் கூற்றும் உண்மையல்ல,
வெறும் கற்பனை’. அவர்கள் கடவுளை வணங்குவதும் இல்லை, இழிவு செய்வதும்
இல்லை. இந்த சிந்தனை சரியோ தவறோ, இது நேர்மையானது. ஆனால் வீரமணியின்
ஆட்டம் அலாதி. அவரது டான்ஸ் உடான்ஸ்.
கடவுள் மறுப்புக்
கொள்கையை அடிக்கடி சத்தம் போட்டு சொல்லுகிறவர்கள் - அதுவும் தமிழ் நாட்டில்
அப்படியானவர்கள் - தங்களை 'பகுத்தறிவுவாதிகள்' என்று சொல்லிக் கொள்வதுண்டு.
அதாவது, இவர்கள் எந்த விஷயத்தையும் 'பகுத்து' 'அறிந்து' செயல்படுகிறவர்கள்
என்று தங்களைப் பெருமிதமாக நினைப்பார்கள். மற்றவர்களும் தங்களைப் பற்றி அதே
போல் நினைக்க ஆசைப்படுவார்கள். இப்படி ஒரு பகுத்தறிவு லேபிளை தன்
மீது ஒட்டிக் கொண்டவர் வீரமணி.
புராணங்கள்,
இதிகாசக் கதைகள் மூலமாக இந்துக் கடவுள்களின் மகிமையை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகளை
ஒரு பகுத்தறிவாளர் 'கடவுள் என்பவரே கற்பனை' என்ற அடிப்படையில் நிராகரிக்கிறார்
என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதே ஆசாமி, அந்தக் கதைகளில்
வரும் வேறு சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு - அதையும் தவறாகப்
புரிந்துகொண்டு - கடவுளைத் திட்ட வேண்டும் என்பதற்காக அந்த நிகழ்ச்சிகள்
மட்டும் நிஜமாக நடந்தவை என்பது போல் பேசினால் அவர் ஒரு டுபாக்கூர் -
அல்லது வீரமணி. அவர் கடவுளைத் திட்டுகிற போர்வையில் கடவுள் நம்பிக்கையாளர்களின்
மீதான வெறுப்பைக் காட்டுகிறார் என்றும் அர்த்தம். இந்தியாவில் மிகக்
பெரும்பான்மையாக இருக்கும் இந்துக் கடவுள்களை மட்டும் அவர் இகழ்ந்து கொண்டு,
மற்ற சிறுபான்மை மதத்தினரின் கடவுள்களை பற்றி மூச்சு விடாமல் இருந்தால்,
'இந்துக்களின் தோள்கள் துவண்டு இருக்கும், மற்றவர்களின் முஷ்டி உயர்த்தப்
பட்டிருக்கும்' என்று அவர் கருதுவது நிரூபணம் ஆகிறதா இல்லையா?
பெரும்பான்மையான
இந்துக்கள் தங்களின் முஷ்டியை வீரமணிக்கு நேராக சுழட்டி வீச வேண்டாம். தள்ளி நின்று உயர்த்திக்
காண்பித்தாலே அவர் புரிந்துகொள்ள வேண்டும். கவிஞர் வைரமுத்துவும் அவருக்கு இன்றைய
இந்துக்களின் மனநிலையை உணர்த்தலாம். பாம்பின் காலுக்கு ஏற்பட்ட சறுக்கலை, அது இன்னொரு
பாம்பும் அறியச் செய்யலாம்.
இன்னொரு
விஷயம். "ஒரு டிரஸ்டின் நோக்கத்தை செயல்படுத்தி மக்களிடையே பகுத்தறிவை
வளர்க்கப் பார்க்கிறோம். ஆனால் மக்கள் விழிப்படையவில்லை. ஆகையால் நாங்களும்
தொடர்ந்து பகுத்தறிவைப் பரப்புகிறோம். அப்போதுதான் டிரஸ்டுக்கு உயிர் இருக்கிறது, அதன்
நோக்கம் பூர்த்தி ஆகவில்லை, அதன் நோக்கம் இன்றும் செயல்படுத்தப் படுகிறது
என்பதற்கு ஆதாரம் இருக்கும். தோற்றம் அப்படி இருந்தால்தான், அம்மாடியோவ்
என்றிருக்கும் டிரஸ்டின் சொத்துக்களை நாங்கள் கட்டிக்கொண்டு நிர்வாகம் செய்வது
சுலபம். இதில் சட்டத்தின் நிர்பந்தங்கள் எப்படி எப்படியோ இருக்கும். அதை வெளிப்படையாக
பேசக் கூடாது என்பது பலன் அனுபவிக்கிற பேர்வழிக்குத்தான் தெரியும்!' என்று
ஒரு மனதின் குரலை பலர் ஊகிக்கலாம். இதற்கு என்ன அர்த்தம் என்றால்: பகுத்தறிவாவது பக்கோடாவாவது!
கத்திரிக்காய்
விற்பது மாதிரி "பகுத்தறிவு வாங்கலையோ பகுத்தறிவு!" என்று கூவிக் கூவி
மார்க்கெட்டிங் செய்து வருகிறார் வீரமணி. இரண்டிலும் ஒரு ஒற்றுமை – இவை வாங்குபர்களின்
லாபத்துக்காக நடக்கும் வியாபாரம் இல்லை. யாருக்கும் புரியுமே!
*
* * * *
Copyright © R. Veera Raghavan 2019