Friday, 20 July 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: அயனாவரத்து அரக்கர்கள்



வயத்தைப் பிசையறது.

பதினோரு வயசுப் பொண்ணு. அதுக்கு காதும் சரியா கேக்காது. அந்தக் குழந்தைய பதினேழு ராட்சச மனுஷா ஆறு மாசமா சீரழிச்சிருக்கா. எங்க, காட்டுலயா? இல்லை, சென்னை மாநகரம் அயனாவரத்துல, 300 குடியிருப்புகள் உள்ள ஒரு பில்டிங்ல. அதுல ஒரு குடியிருப்புலதான், அந்தக் குழந்தையும் அதோட அப்பா அம்மாவும் வசிக்கறா.

அந்த ராட்சசாள்ளாம் யூனிபார்ம் போட்டுண்டு லிஃப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன்,  ப்ளம்பர், தோட்டக்காரன்னு அந்த பில்டிங்லேயே வேலை பாத்துண்டு இந்தக் கிராதகத்தை பண்ணிருக்கா.  அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரத்துக்கு அந்தப் பதினேழு பேர்தான் காரணம்னு உலகம் தெரியாதவாதான் நினைப்பா. அந்தக் குழந்தையும் நினைக்கலாம். ஆனா அதோட அப்பா அம்மாவையும்  குத்தவாளின்னு ஒரு பிடி பிடிக்கணும். அவா முதுகுலயே வச்சாலும் சரிதான்.

பள்ளிக்கூடத்துக்கு போயிருந்த குழந்தையை யாராவது தலைல லேசா குட்டினாலும் அது அம்மாட்ட வந்து சொல்லுமே? அப்படி சொல்லலைன்னா அது குழந்தையோட தப்பு இல்லை. தனக்கு வந்த வலியை அம்மாட்ட சொன்னாலும் ஆறுதலாான அரவணைப்பு அம்மாட்ட கிடைக்காதுன்னு அந்தக் குழந்தை சரியா நினைச்சிருக்கும். தன் குழந்தைட்ட பிரியமும் வாஞ்சையும் காட்டாத் தெரியாத அப்பா அம்மாதான் அப்படி ஒரு நினைப்பை குழந்தைக்கு குடுப்பா. ஒரு நாள்ள மறக்கற குட்டு வலியை குழந்தை பெத்தவாட்ட சொல்லலைன்னா போறது, பரவால்ல. ஆனா அயனாவரம் குழந்தைக்கு ஏற்பட்ட கொடுமையை அதுவே அப்பா அம்மாட்ட தெரிவிக்கலைன்னா, பெத்தவாளை என்னன்னு சொல்றது?  ஆறு மாசமா நடந்ததைக் கூட அந்த அப்பா அம்மா தெரிஞ்சுக்க முடியலையா? 

குழந்தை ஸ்கூல்லேர்ந்து சரியான டயத்துக்கு வீட்டுக்கு வராளா, மத்த நேரத்துல எங்க போறா, என்ன பண்றா, யாரைப் பாக்கறா, எதுக்குப் பாக்கறான்னு அப்பா அம்மா கவனிக்கணும்னு யாரும் சொல்லித் தரவேண்டாம். வீட்டுல இருக்கற  அம்மாக்கு அந்த கவனிப்பு இல்லைன்னா அதுக்கு மன்னிப்பே கிடையாது - அதுவும் பதினொரு வயசு பொண் குழந்தைன்னா. 

இப்படி ஒரு அராஜகத்தைத் தாங்கிண்டு எந்தப் பொண் குழந்தையும் சாதாரண முகத்தோட வீட்டுக்குள்ள திரும்பி வராது. வர்ற குழந்தையோட நடையையும் முகத்தையும் பார்த்து அம்மாக்காரி, "என்னடி கண்ணு"ன்னு குழந்தையை அணைச்சாலே அது அழுதுண்டே யார் தப்பு பண்ணினான்னு சொல்லிடுமே? அயனாவரம் வீட்டுல அதெல்லாம் நடக்கலை. அம்மாக்காரி சுவத்தொட சுவரா வீட்டுலயே இருக்கா. அப்பா ஏதோ பிசினஸ் பண்றார். குழந்தைக்கு சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சுக்கலைன்னு, அது மேல பொறுப்பா கண் வச்சுக்க வேண்டாம்னு இருந்துட்டார். கடைசில, குழந்தையோட அக்கா வெளியூர்லேர்ந்து வந்தபோது அது அக்காட்ட தெரிவிச்சு போலீசுக்கு விஷயம் போனது. இப்ப சொல்லுங்கோ, ஆறு  மாசம் பதினேழு பேர்னு சேர்ந்த இந்த பாதகத்துல  அப்பா அம்மாவோட அலட்சியத்துக்கும் பங்கு உண்டா இல்லையா?

சரி, கோர்ட்டுல கேஸ் நடக்கும். போலீஸ் கேஸை ஒழுங்கா நடத்தி சட்டப்படி தண்டனை வாங்கி குடுக்கட்டும். ஆனா அந்தப் பதினேழு பேரைப் பத்தி ஒண்ணு சொல்லணும்.  தான் பண்ற காரியம் மஹா தப்பு, பிடிபட்டா ஜெயில் தண்டனை அனுபவிக்கற குற்றம்னு அவா எல்லாருக்கும் தெரியும். அப்பறம் ஏன் துணிஞ்சு பண்ணினா?  'ஜெயிலுக்கு போனாலும் பரவால்ல. பாத்துக்கலாம்'ன்னு நினைக்கற ஊறின குற்றவாளிகள் இல்லை அவா. பல தேசத்து சராசரி ஆண்களை விட, இந்திய ஆண்கள் பாலியல் குற்றம் அதிகமா பண்ணுவான்னும் அர்த்தம் இல்லை. இதுல வேற ஒரு விஷயம் இருக்கு.

எல்லா நாட்டுலயும் திருத்தவே முடியாத பலதரப்பட்ட  குற்றவாளிகள் இருப்பா. அவாளைப் பிடிச்சு தண்டனை குடுத்தே ஆகணும். வேற சில குற்றவாளிகள் இருக்கா. அவா இஷ்டப்படி குற்றம் பண்றதுக்கு மானசீக தெம்பு குடுக்கறவா இருந்தா அதிகம் பண்ணுவா. இல்லாட்டி குறைச்சு பண்ணுவா, இல்லை அடங்கி இருப்பா. அப்படி ஒரு தெம்பு குடுக்கறவாளோ குடுக்காதவாளோ யாருன்னு கேக்கறேளா?  நம்மளை ஆள்ற அரசியல் தலைவர்கள் இருக்காளே, அவாதான்.

ஆட்சி அதிகாரத்துல நமக்கு வாச்ச தலைவர்கள் நேர்மையாளர்களா இருக்காளா, கயவர்களா இருக்காளான்னு எல்லா மக்களுக்கும் உணர்ந்திருப்பா. அந்த மனுஷா உத்தமார்களா இருந்தா சாதாரண மக்களுக்கும் அது நல்ல சிந்தனைகளை மேம்படுத்தும், நல்ல செயல்களை ஊக்கப்படுத்தும். லட்சக்கணக்கான இந்தியர்களை தேச விடுதலையைப் பத்தி நினைக்க வச்சு, அதுல எத்தனையோ பேரை தியாகிகளா ஆக்கி விடுதலைப் போராட்டத்துக்கு வரவழைச்சாரே மஹாத்மா காந்தி, அவர் ஒரு உதாரணம் போதும். அதுக்கு மாறா, தேசத்துல ஆட்சி பண்ற தலைவர்களோட லட்சணம் அவலட்சணமா இருந்தா, 'அவன் பங்குக்கு அவன் பண்றான். என் பங்குக்கு நான் பண்றேன்'னு சமூகத்துல இருக்கற அரை கிளாஸ் கயவர்களும்  தீய வழில தெம்பா நடப்பா. இந்த மாதிரி தலைவர்கள்தான் இப்ப நாட்டுல ஏராளமா இருக்காளே?

தலைவர்கள் போக்குனால மக்களும் பாதிக்கப் படற மன நிலையைத்தான், 'யதா ராஜா, ததா பிரஜா'ன்னு ஒரு பழமொழியா சொல்றோம். இது வாழ்க்கையோட யதார்த்தம். அதைப் புரிஞ்சுண்டு நல்ல தலைவர்கள் கிடைக்கணுமேன்னு பிரார்திச்சா சரிதான். அதை விட்டுட்டு, தலைவர்களோட ரௌடியிஸம், பித்தலாட்டம், சொத்துக் குவிப்புனால பொது மக்கள் எந்த எந்த நடவடிக்கைல எத்தனை பெர்சன்டேஜ் பாதிக்கப் படுவான்னு விவாதிக்கறது வெட்டிப் பேச்சு. நம்ம என்ன டி.வி நிகழ்ச்சியா நடத்தறோம்?

இன்னொண்ணும் சொல்லணும். இந்த 'யதா ராஜா ததா பிரஜா' பழமொழி இருக்கே, அது இந்தியாவுக்கு பாதி உண்மையைத்தான் சொல்றது. ராஜாக்கள் தப்பாவே இருந்தா, ஜனங்களும் அந்த வழில போவாங்கறது சரி. ஆனா ராஜாக்கள் சட்டத்துக்கும் தண்டனைக்கும் சுலபமா டேக்கா குடுக்கலாம். அதுவே ஜனங்கள் பண்ற குற்றம்னா, அதுவும் வெளில வந்த குற்றம்னா, ராஜாக்கள் சும்மா இருக்க மாட்டா. இந்தக் கால ராஜாக்கள் லேசுப்பட்டவா இல்லை. பாதிக்கப் பட்டவாளுக்கு கஜானாலேர்ந்து  நிவாரணம்  அள்ளிக் குடுப்பா. 'குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கணும்'னு அந்த நாள், இந்த நாள், அடுத்த நாள் ராஜாக்கள் எல்லாரும் சேர்ந்து குரல் குடுப்பா. ஒரு கணத்துல அவா எல்லாரும் நீதி தேவதைகளா காட்சி அளிப்பா. அதுவே அவாளுக்கு ஒரு கவசம். 'யதா ராஜா'ன்னு இருக்கற ஜனங்களுக்கு, அதுவும் பாரத நாட்டு ஜனங்களுக்கு, இந்த சௌகரியம் கிடையாது. அவா வெறுமனே ஓட்டுப் போடற  பிசாத்து பிரஜாதான். அயனாவரம் அரக்கர்களும் இந்தப் பழமொழி சொல்ற பாதி உண்மைக்கு சாட்சியான்னு யோசிக்கணும். நீங்க என்ன நினைக்கறேள்?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018



5 comments:

  1. MOST UNFORTUNATE EVENT. People have lost faith in morality, law, ethics, discipline and all.

    ReplyDelete
  2. Very bad reflection on the society. The famous Baburao Patel, Editorial of Mother India said, "People indulging in adulteration should be hanged by their testicles". This is a fit case for this sort of punishment.

    ReplyDelete
  3. What is the reason for sudden outburst of so much of sexual excesses all over India in the past few years? Girl children are not safe even with lady "ayah"s and lady school teachers. What has come over our people suddenly?

    ReplyDelete
  4. As suggested by Mr. Baburao Patel , if such culprits are hanged by their testicles in full public view (within a month of crime ) fear will be instilled in the mind of public and discourage them from even thinking of rape .

    ReplyDelete
  5. Punishment is the best deterrent. You have pertinently pointed out the indifference of the parents in rearing this child. Unfortunate.

    ReplyDelete