ராக்கெட் விஞ்ஞானம் கூட ஈஸியா புரிஞ்சுக்கலாம்.
ஆனா ராகுல் காந்தியை புரிஞ்சுக்கணும்னா தலையைப் பிச்சுக்கணும். சரி, முயற்சி பண்றேன்.
லோக் சபாவுல ராகுல் காந்தி பரபரப்பா பேசினார்
இல்லையா? அதான், மோடி அரசாங்கத்துக்கு
எதிரா வந்த
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிச்சு பேசினாரே, அதைச் சொல்றேன். டக்குனு ஞாபகம் வரா மாதிரி சொல்லட்டா? லோக் சபாவுல
ராகுல் திடுதிப்னு பிரதம மந்திரி நாற்காலி கிட்ட போய், உக்காந்து இருந்த மோடிக்கு ஜிப்பா அளவு
எடுக்கற டெய்லர் மாதிரி ரண்டு கையாலும் மோடியோட மார்பைக் கட்டிண்டாரே, அதுக்கு
முன்னால ராகுல் பேசினதைச் சொல்றேன். ராகுல் பேசினதை விட, மோடியைக் கட்டிண்டதுதான எல்லார்க்கும்
ஞாபகம் இருக்கு?
மத்திய அரசங்கத்துக்கு எதிரா ஒரு எதிர்க்கட்சி
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தினா என்ன அர்த்தம்? அதுவும் லோக் சபாவுல
தன் கட்சிக்கே மெஜாரிட்டி உள்ள ஒரு பிரதம மந்திரி இருக்கும் போது? அந்த எதிர்க்கட்சி
இப்படி நினைக்கறதுன்னு அர்த்தம்: 'இந்த அரசாங்கமும் இந்த பிரதம மந்திரியும் நாட்டுக்கு
கெடுதல் பண்றா. இந்த அரசாங்கம் ஒழியணும். லோக் சபாவுல நம்ம பேசறதை கேட்டுட்டு அடுத்த தேர்தல்ல மக்கள் நம்ம
கட்சிக்கோ நம்ம கூட்டணிக்கோ மெஜாரிட்டி குடுப்பா. அதுனால, இப்ப சபைல
இருக்கற எதிர்க்கட்சி தலைவர்கள் முடிஞ்ச வரைக்கும் மக்கள் மனசை அப்படியே புரட்டிப் போடறா
மாதிரி பேசிடணும்.' இந்த ஆசையோட ஒரு எதிர்க்கட்சித் தலைவர், சபைல பேசிட்டு
எதிர்கால முடிவை மக்கள் கிட்ட விட்டா பரவால்ல. அதுக்கு
மாறா அவர் லோக் சபாவுல மத்த எதைப் பண்ணினாலும் அசட்டுத்தனம்னுதான் அர்த்தம். ஆனா
ராகுல் காந்தி வெறும் அசடா இல்லை. அசல் அச்சுப்பிச்சுதான்.
ராகுல் காந்தி நாட்டு மக்களை கவர்ற மாதிரி
பேஷ் பேஷ்னு லோக் சபாவுல பேசலை. காங்கிரஸ் கட்சி வெளில என்ன சொல்றதோ, அதை
ராகுல் அவர் பாணில பேசினார். அந்த அளவுக்கு சரின்னு விடலாம். ஆனா அதோடு அவர் நிக்கலை. "மோடிஜி, நீங்க என்னை வெறுங்கோ. குட்டிப் பையன்னு கூட கிண்டலா கூப்பிடுங்கோ.
ஆனா நான் உங்களை நேசிக்கறேன். ஏன்னா நான்தான் காங்கிரஸ்," அப்படி இப்படின்னு சினிமா
டயலாக்ல உளறலும் உருகலுமா பேசினார்.
"உங்களால நாட்டுக்கு நல்லதில்லை.
உங்க கட்சியோட ஆட்சியும் இருக்கக் கூடாது. அப்பத்தான் நாட்டுக்கே விமோசனம்"னு
ஒரு பிரதம மந்திரியைப் பாத்து குத்தம் சொல்ற எதிர்க்கட்சி தலைவர், "நான் உங்களை
ரொம்ப நேசிக்கறேன்"னு சேர்த்துச் சொன்னா அது வெத்துப் பேச்சு, வெறும் புளுகு.
ஒரு அரசியல் தலைவருக்கு, முக்கியமான ஜனநாயகப்
போர்க்களத்துல காட்டவேண்டிய உறுதியும் முதிர்ச்சியும் இல்லாத அசட்டுத்தனம்.
"அரசாங்கத்தை விட்டு இறங்கிப் போ"ன்னு
மோடியைப் பாத்து அரசியல் பாஷைல சொல்லிட்டு, அதே நிமிஷம் ஓடிப் போய்
அவரை கட்டித் தழுவிக்கறது, தன் நாற்காலிக்கு திரும்பி வந்து தன் கட்சிக்காராளைப்
பாத்து "எப்பிடி என் சேஷ்டை"ங்கற அர்த்தத்துல கண்ணடிக்கறது, இதெல்லாம் லோக்
சபாவுலயே பண்ணினார் ராகுல் காந்தி. அவரை அச்சுப் பிச்சுன்னு சொல்லாம வேற என்ன சொல்றது?
1947-லேர்ந்து பதினேழு வருஷமா இவர் கொள்ளுத் தாத்தா நேரு பிரதம மாதிரியா இருந்தார். அவர் லோக் சபாவுல காத்த கண்ணியம்
என்ன, வெளிப்படுத்தின கம்பீரம் என்ன, இப்ப காங்கிரஸ் தலைவராவும் இருந்து ராகுல்
காட்டற அச்சுப்பிச்சுத்தனம் என்ன? மேலோகத்துல இருக்கற நேரு நினைச்சுப் பாத்தா
வருத்தப் படுவார்.
மனுஷாளுக்குள்ள ஒரு நாகரிகம் இருக்கு. ஒருத்தரோட
அனுமதி இல்லாம, அதாவது மறைமுக அனுமதியாவது இல்லாம, அவரை இன்னொருத்தர் தொடக்கூடாது.
ரண்டு பேர் சந்திச்சா, அந்த ரண்டு பேரும் விருப்பப் பட்டாதான் அவா கையைக் கூட
குலுக்கிக்கலாம். இஷ்டம் இல்லாத ஒருத்தரோட கையை இன்னொருத்தர் பிடிச்சு இழுத்து
குலுக்கக் கூடாது. அது மாதிரித்தான் ரண்டு பேர் பரஸ்பர அபிமானத்துலயோ மரியாதைலயோ
ஒருத்தரை ஒருத்தர் ஆலிங்கனம் பண்றது. ரண்டு பேருக்கும் அதுல நாட்டம் இருக்கணும்.
அனா ராகுல் என்ன நினைச்சார்? ’நாற்காலில உக்காந்து இருக்கற மோடியை அவர் மேலயே விழுந்து கட்டிப்பேன். அவர் சம்மதம் யாருக்கு வேணும்? டி.வி-லயும் பேப்பர்லயும் படம் வந்தா போதும்’னு ராகுல்
பண்ணின கூத்து இருக்கே, அது விஷமத்தனம், அநாகரிகம். அது
மட்டுமில்லை. ’மோடியைக் கட்டிக்கறா மாதிரி போட்டோ வெளிவந்தா, ரொம்ப நல்லவன்னு எனக்கு மக்கள்ட்ட பேர் கிடைக்கும், அதுலயே மோடி கொஞ்சம் அடங்குவார்,’ இப்பிடில்லாம் கூட ராகுல்
நினைக்கறவர்தான். அவரோட அச்சுப்பிச்சு சிரிப்பே
சொல்லலை?
இன்னொண்ணு பாருங்கோ. பாதுகாப்பு அதிகம்
தேவைப் படற ஒரு பிரதம மந்திரியை, இப்படி திடீர்னு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மார்போடு
மார்பா கட்டிண்டு எதிராளிக்கு திகில் குடுத்தா, பயத்துல ஒருத்தரை ஒருத்தர் தாக்கற விபரீதம் கூட ஏற்படலாம். ஆனா நாகரிகம், ஒழுங்கு, கண்ணியம், இதெல்லாம் ஒரு
அச்சுப்பிச்சுக்கு எப்படித் தெரியும்? இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு தோண்றது. விமானத்துக்குள்ள தகராறு பண்ற பயணிகளை இனிமே விமானத்துல ஏத்தறதில்லைன்னு ஒரு ரூல் வச்சிருக்கால்யா? அந்த ரீதில, சட்டசபைல மத்தவாளுக்கு திகில் குடுக்கற உறுப்பினரை சபை நடக்கும்போது அவா நாற்காலியோட மாட்டைக் கட்டறா மாதிரி தாம்புக் கயத்துல கட்டி வச்சா என்ன?
ஏதோ அரசியல்ல ஜென்ம எதிரி ஒருத்தர்
இருந்தாலும் அவர் மேல அன்பை பொழியறவர் ராகுல் காந்தின்னு யாரும் நினைக்க வேண்டாம்.
2013-ல மன்மோகன் மாமா பிரதரமா இருந்தபோது, பிஹார் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன வழக்குல தண்டனை கிடைக்கலாம்னு நிலைமை இருந்தது. அப்ப லாலு பிரசாத் அடுத்த தேர்தல்ல நிக்கறதுக்கு வரக்கூடிய தடையை நீக்கிடணும்னு, மத்திய அரசு ஒரு அவசரச் சட்ட வரைவைக் கொண்டுவந்தது.
அது ஜனாதிபதி ஒப்புதலுக்கும் போயிருந்தது. அந்த நேரத்துல, அந்த சட்டத்தைப்
பத்தி ஒரு பத்திரிகை நிருபர்கள் கூட்டத்துல டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் பேசிண்டிருந்தா.
ராகுல் காந்தி அந்த அவசரச் சட்டம் தேவை இல்லைன்னு நினைச்சார். அதை யார் கிட்ட
எவ்வளவு அன்பா எப்பிடி சொன்னார் தெரியுமா? விறு விறுன்னு அந்த நிருபர்கள் கூட்டத்துக்கு
வந்தவர், "இந்த அவசர சட்டம் சுத்த
நான்சென்ஸ்.
இதைக் கிழிச்சு தூர எறியணும்”னு கத்திட்டு,
அந்த சட்ட வரைவு நகலை அப்பவே கிழிச்சு சூரை விட்டார். நிருபர்கள் கூட்டத்துல அவசர சட்டத்தை விளக்கிப் பேச வந்த காங்கிரஸ் தலைவர்
அஜய் மாகென், “ராகுல் காந்தி எங்க தலைவர். அவர் கருத்துதான் கட்சியோட கருத்து”ன்னு பல்டி அடிச்சார். அதுக்கப்பறம் அந்த அவசர சட்டம் வரவே இல்லை. அதை மந்திரி சபைக் கூட்டத்துல முன்னாடி ஆமோதிச்ச மன்மோஹன் மாமாவும் ஈஸ்வரோ ரக்ஷதுன்னு எல்லா அவமானத்தையும் சிரிச்ச முகமா சகிச்சுண்டார்.
தன்னோட கட்சி பிரதம மந்திரி மன்மோகன் மாமாக்கு
அப்பிடி செயல் மூலமா அன்பு காட்டினார் ராகுல். இப்ப எதிர்க்கட்சி பிரதமர் மோடிக்கு
வாய் வார்த்தைல அன்பு காட்டறார். இவரோட துதி பாடிகள் அப்பவும் இவருக்கு கை தட்டினா.
இப்பவும் இவரோட லோக் சபா பேச்சு, ஆலிங்கனம் எல்லாத்துக்கும் கர கோஷம்
பண்றா. மும்பைல ஒரு காங்கிரஸ் தலைவர், மோடியை
ராகுல் கட்டிப் பிடிச்ச போட்டோவை தெருக்கள்ள
பெரிசா வச்சுட்டார். அச்சுவோ பிச்சுவோ, ராகுலை அண்டி இருக்கறவாளுக்கு தனக்கு எது அனுகூலம்னு
தெரியும்.
பல அரசியல் கட்சிகள்ள, மேல் மட்டத்துலயும் அடுத்த
மட்டத்துலயும் இருக்கற தலைவர்கள் சாதாரண மக்களை முட்டாள்களாவே வச்சு பொழைக்கறா. அது
தெரிஞ்சதுதான். ஆனா, ஒரு அரசியல் கட்சித் தலைவரையே அதோட ரண்டாம் கட்டத் தலைவர்கள் அச்சுப்பிச்சுவா
வச்சு "இப்போதைக்கு இவர்தான் நமக்கு நல்ல சான்ஸ்"னு பொழைக்க வழி தேடறா.
மேலோகத்துல இருக்கற நேரு நினைச்சுப் பாத்தா அழுவாரோ?
* * * * *
Copyright © R. Veera Raghavan 2018