Tuesday 24 April 2018

என்று தணியும் இந்தக் கல்வியாளர்களின் தாகம்?



இந்தியாவில் இயங்கும் பல்கலைக் கழகங்களில், பலவற்றின் துணைவேந்தர்கள் யார் என்று அந்த அந்த மாநிலங்களில் உள்ள படித்தவர்களுக்கே தெரியுமா? தெரியாது.  தனது ஊரில் உள்ள களவாணிகளின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியுமா? அதுவும் தெரியாது.  தான் இருப்பதே தெரியாமல், வந்த வேலையை முடித்துவிட்டுப் போய்விட வேண்டும் என்றுதான் அந்தக் களவாணிகளும் அதே ரகத் துணைவேந்தர்களும் நினைக்கிறார்கள். பிடிபட்டு பெயர் வெளியானவுடன் இந்தத் திருடர்கள் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் அவமானத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மதுரைக்கு அருகில், ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஒரு பெண் இருக்கிறார்.  அந்தக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிகிரி படிப்பு படிக்கும் தனது மாணவிகள் நான்கு பேரை அவர் போனில் தொடர்பு கொண்டார்.  அந்தக் கல்லூரி சார்ந்த மதுரை-காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பதவிகள் வகிக்கும் சிலரது பெண்-ஆசைகளுக்கு அந்த மாணவிகள் இணங்கவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்லி அழைத்தார்.  ஒத்துழைத்தால் மாணவிகள் தங்களின் பரீட்சைகளை சுலபமாகக் கடக்கலாம், நல்ல பணமும் வரும், பின்னர் முதுநிலைப் படிப்பு,  பிஎச்.டி படிப்பும் நிறைவேறும், அதற்கான உதவித் தொகைகளும் கிடைக்கும், அரசாங்க வேலைகள் கூட அவர்களுக்குக் கிட்டும் என்றெல்லாம் ஆசை காட்டினார்.

போனில் பேசும்போது, “கண்ணுங்களா, இது ஒரு நல்ல வாய்ப்பு” என்று திரும்பத் திரும்ப அந்தப் பேராசிரியர் அப்பாவி மாணவிகளை வசியப்படுத்த முயற்சித்தார். குறி வைக்கப்பட்ட மாணவிகள் ”சம்மதம் இல்லை. இனிமேல் இதுபற்றி எங்களிடம் பேசவேண்டாம்” என்று உடனே மறுத்துவிட்டார்கள். அதைக் கேட்ட பேராசியரும், “இல்லை கண்ணுங்களா, நீங்க சந்தேகப் படற மாதிரி நான் ஒண்ணும் தப்பான அர்த்தத்துல பேசலை. அவங்க வீட்டு கல்யாணம், காது குத்தல் நிகழ்ச்சிகள்ள வாசல்ல நின்னு வரவேற்கத்தான் உங்களை எதிர்பாக்கிறாங்க!” என்கிற மாதிரியும் தெளிவு படுத்தவில்லை.   ”சரி, இந்த விஷயம் வெளில தெரியாம இருக்கட்டும். எதுக்கும் ரண்டு நாள் கழிச்சு போன் பண்றேன்” என்று ஒரு நப்பாசையுடன் பேச்சை முடித்துக் கொண்டார் அந்தப் பேராசிரியர்.

பேராசிரியையின் இருபது நிமிட டெலிபோன் பேச்சு எப்படியோ பதிவாகி அந்த ஆடியோ மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. கேட்டால் மனதை சங்கடப்படுத்தும் நயவஞ்சகப் பேச்சு அது. இப்போது அந்தப் பாதகி கைதாகி அவர்மீது விசாரணை நடக்கிறது.

கல்லூரி மாணவிகளை ஒரு மானக்கேடான தவறில் தள்ளிவிட்டு அவர்களின் கௌரவ உணர்வை அழிக்க முனைந்திருக்கிறார் ஒரு பேராசிரியர் – தானே ஒரு பெண்ணாக இருந்தும்.  டெலிபோன் குரல் தன்னுடையது அல்ல என்று அவர் இதுவரை மறுக்கவில்லை.  யாரோ தனது கழுத்தில் கத்தியை வைத்து கட்டாயப் படுத்தியதால் அப்படிப் பேசியதாகவும் அவர் சொல்லவில்லை. அகையால் போலீசுக்கும் கோர்டுக்கும் அவர் என்ன விளக்கம் கொடுத்தால் என்ன?.

சமீப வருடங்களாக தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் ஒவ்வொருவராக லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுகளில் மாட்டுகிறார்கள். உள்ளே அவர்களுடன் கைகோர்த்து ஊழலில் லாபம் அடைந்தவர்களும்  கீழ் நிலைகளில் இருப்பார்கள். ஒரு அரசாங்கத்தின் மேல் மட்டத்தில் ஊழல் நடந்தால் கீழ் மட்டம் வரை வழிகிறதே, அது மாதிரி.  ஊழல்வாதிகள் அனேகமாகத் தனி மனித ஒழுக்கத்திலும் பலவாறாக சறுக்கத் தயாராக இருப்பார்கள். பிடிபட்ட பேராசியை விஷயத்தில், அவரது பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று நான் சொல்லவில்லை.  ஆனால் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் பல விதத்திலும் படு வீழ்ச்சி அடைவதால், அவற்றில் உயர் பதவிகள் வகிக்கும் யாருக்கும் பொதுமக்களிடம் மதிப்பு இருக்காது. மற்றபடி, யார் வண்டவாளம் எப்போது தெரியுமோ? 

தங்கள் பல்கலைக் கழகத்தின் உயர்ந்த பதவிகளில் இருக்கும் சிலரை இருட்டு வழிகளில் திருப்திப்படுத்தினால் நான்கு அப்பாவி மாணவிகளுக்குப் பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதை அவர்களின் பேராசியரே ஏன் எடுத்து விவரிக்கிறார்?   அவர் முயற்சித்தது நடந்தால், அந்தப் பேராசியருக்கும் முறைகேடாகப் பெரிய ஆதாயம் கிடைக்கும்  என்றுதானே அர்த்தம்?  அந்தப் பல்கலைக் கழகத்தில் உயர் பதவிகள் வகிக்கும் சிலர், அந்தப் பேராசியரிடம் முன்னதாக இதுபற்றிப் பேசி உதவி கேட்டதால்தானே அந்தப் பெண் பேராசியரும் தனது மாணவிகளிடம் பேசி இருக்க முடியும்? இது வெறும் ஊகமல்ல. அப்படித்தான் சில உயர் பதவிக்காரர்கள் தன்னைக் கேட்டுக் கொண்டார்கள் என்று அந்தப் பேராசிரியரும் அடிக்கடி தனது போன் பேச்சில் குறிப்பிடுகிறார். என்ன பல்கலைக் கழகமோ, பிஎச்.டி படிப்பு வரை அதில் என்ன படிப்போ, அதில் படிக்க வேண்டிய மாணவர்களுக்கு என்ன துர்பாக்கியமோ  என்று நீங்கள் நினைக்க மாட்டீர்களா? 

மனித வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை நினைத்துக் கொள்ள, வயதானவர்கள் மத்தியில் ஒரு பேச்சு உண்டு: “நீ முந்திண்டா உனக்கு. நான் முந்திண்டா எனக்கு”. அது போல, ஒரு நிறுவனத்தில் கூட்டு ஊழலும் தனித்தனி ஊழலும் செய்பவர்களிடம் ஒரு புரிந்துணர்வு உண்டு: “நீ மாட்டிக்கிட்டா உனக்கு, நான் மாட்டிக்கிட்டா எனக்கு”. ஆகையால், பிடிபட்ட ஒருவரோ இருவரோ மட்டும்தான் ஒரு பல்கலைக் கழகத்தில் லஞ்ச ஊழல் செய்பவர்கள் என்று கணக்கிட்டு, அதில் பணிபுரியும் மற்ற சிலரின் வல்லமையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

தமிழ் நாட்டு பல்கலைக் கழகங்களில் ஊழல் ஊற்றெடுத்துப் பொங்கி வருவது 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் – கழகங்களின் ஆட்சி தொடங்கியதில் இருந்து.  அப்புறம் என்ன?  'கழகம்' என்ற பெயரோடு ஒரு அமைப்பு செயல்பட்டால் அதோடு பலவித முறைகேடுகளும் ஒட்டிக்கொண்டுதான் வருமோ என்னவோ.

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு கூத்தை கவனித்திருப்பீர்கள். ’நாங்கள்தான் தமிழை வளர்க்கிறோம்.  இல்லாவிட்டால் தமிழ் தேய்ந்து போய்விடும்’ என்ற வெட்டி வீராப்பான சிந்தனை உடைய பல அரசியல் கட்சித் தலைவர்களும் வேறு சிலரும் தமிழ்நாட்டில் உண்டு. “தமிழ்நாட்டில் அனைவரும் ஊழல் பல்கலைக் கழகங்களில் சிக்கித் தவிக்கட்டும். அது எங்கள் கவலை இல்லை.  இந்த மாநிலத்தில் தகுதியையும் திறமையயும் அடக்கி வைத்து, தமிழர்கள் பலரையும் நாங்கள் அமெரிக்காவிற்கு விரட்டினோம் அல்லவா? அந்த அமெரிக்காவில் தமிழ் வளர்ப்பதற்காக, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ் இருக்கையை ஏற்படுத்த அந்தப் பல்கலைக் கழகத்தின் நிபந்தனையை ஏற்று கோடி கோடியாக நன்கொடை வசூலித்துக் கொடுப்போம்!” என்று புட்டுப் புட்டு விளக்காத குறையாக அந்தத் தமிழ்க் காப்பாளர்கள் செயல்பட்டார்கள்.  

ஹார்வர்டுக்கு அதிமுக-வின் தமிழக அரசு பத்து கோடி ரூபாய் கொடுத்தது. திமுக ஒரு கோடி ரூபாய் கொடுத்தது. இப்போது ஊழல் புகாரை எதிர்நோக்கும் மதுரை-காமராஜர் பல்கலைக் கழகமும் அதன் பணியாளர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களிடம் சுமார் இருபத்தி ஒன்று லட்ச ரூபாய் கெடுபிடியாக வசூலித்து அப்போது அளித்தது. ஊழலை வளரவிட்டு தமிழர்கள் முன்னேற்றத்தை முடக்கிவிட்டு, அமெரிக்காவில் தமிழ் வளர்க்கிறார்களாம். கல்வியைப் பற்றி தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் போலி அக்கறைக்கு வேறு உதாரணம் வேண்டுமா? 

தமிழ் நாட்டை ஐம்பது வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு  பிரதான கழகக் கட்சிகள்தான் இந்த மாநிலத்தின் கல்வித் தரத்தை அதள பாதாளத்துக்குக் கொண்டு சென்றவர்கள்.  இதில் சந்தேகமே வேண்டாம். ”1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த நாங்களும், முன்னர் ஆட்சி செய்த அந்தக் கால காங்கிரஸ்காரர்கள் மாதிரி மிக நேர்மையானவர்கள், திறமையானவர்கள், அர்ப்பணிப்பு மிக்கவர்கள்தான். ஆனால் இப்போது அரசாங்கத்தில் வேலை செய்பவர்களும் துணைவேந்தர்களும் முன்பு போல் இல்லை. வேண்டும் என்றே எங்கள் ஆட்சிக் காலங்களில் மட்டும் ஊழல் பெருச்சாளிகள் ஆகிவிட்டார்கள்” என்பார்களா இரு கழகங்களின் தலைவர்களும்? அப்படி என்றால், கல்வியில் உள்ளூர் தரத்தை உயர்த்தி உலகத் தரத்தை நெருங்குவதற்கு ஏதாவது வெள்ளைக்கார துணைவேந்தரையும் வெள்ளைக்கார அதிகாரிகளையும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் நியமனம் செய்தால்தான் உண்டா? நாம் வெளியில் சிரிக்கலாம். உள்ளுக்குள் அழலாம். எல்லாரும் அமெரிக்கா போகமுடியாதே?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

5 comments:

  1. uNmai, Vetkam, Vedhanai. Enna thamiz naado, thamizarkaLO?

    ReplyDelete
  2. இரண்டு கழகங்கள் தவிர வேறு கதியில்லை என்ற நிலை மாறினால் அன்றி செவிடன் காதில் ஊதிய சங்கு தான் எருமை மேல் பெய்த எண்ணெய் மழைதான்.

    ReplyDelete
  3. After spoiling the educational standards, why these Political parties fight against NEET etc., Other than corruption are these people really care for future of Tamilnadu ?

    ReplyDelete
  4. Unfortunate, educational system getting degraded by a faculty (!), Preposterous !
    Also the dravidian rule only pushed the system to the bottom

    ReplyDelete
  5. Since University is named as Palkalaikazhagam, it was owned and spoiled by Kazhagam party rulers. Let us rechristen Palkalaikazhagam as PALKALAIMUNAYAM. Let us hope for best to happen henceforth

    ReplyDelete