Thursday, 5 April 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: அஸ்வினியும் அழகேசனும் – காதலால் விழுந்தார்கள்


அஸ்வினியோட சோகக் கதை ஞாபகம் இருக்கா? கொஞ்ச நாளைக்கு முன்னால, சென்னை நகர்ல ரோட்லயே ஒரு உயிர்ப்பலி நடந்ததே, அதைக் கேக்கறேன். ’ஒருத்தர் மாத்தி  ஒருத்தர் அடிக்கடி நகரத்துல வெட்டுக் குத்து நடத்தினா அதுல எது ஞாபகம் இருக்கும்’னு கேக்கறேளா? சரி, நானே சொல்றேன்.

அஸ்வினி 19 வயசுப் பொண்ணு. சாதாரண குடும்பம்தான். காலேஜ்ல முதல் வருஷம் படிச்சிண்டிருந்தா.  அழகேசனுக்கு 26 வயசு. வீடுகளுக்கு குடிநீர் கேன் சப்ளை பண்ணிண்டிருந்தான். ரண்டு வருஷத்துக்கு முன்னால, அஸ்வினி ஸ்கூல்ல படிக்கறபோது அவாளுக்குள்ள  சிநேகம் வந்ததாம்.  கொஞ்ச காலத்துக்கு அப்பறம் அவளுக்கு அவன் மேல இருந்த சிநேகம் போயிடுத்துங்கறா. அதாவது காதல்னு இருக்கே, அது ரண்டு பேருக்கும் வந்ததாம். அப்பறம் அவளுக்கு போயிடுத்தாம், அவனுக்கு மட்டும் இருந்ததாம். அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு  தீவிரமா இருந்தானாம் அழகேசன். அவ மேல இருந்த பிரியத்துல, தன்னோட சொத்தை அடமானம் வச்சு ரண்டு லட்ச ரூபா கடன் வாங்கி அவளுக்கும் அவ படிப்புக்கும் செலவழிச்சேன்னு சொல்றான் பையன்.

அஸ்வினிக்கு இஷ்டமோ இல்லையோ, தன்னை விட்டுட்டு அந்தப் பொண்ணு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சானாம் அழகேசன். ஒரு நாள் அவளை ரோட்டுல பாத்து கல்யாணம் பண்ணிக்கோன்னு அவன் கேக்க, முடியாதுன்னு அவ சொல்ல, மறைச்சு வச்சிருந்த கத்தியை எடுத்து ராஸ்கல் நடு ரோட்டுலயே அவளைக் குத்தி பரலோகத்துக்கு அனுப்பிட்டான். அதை முடிச்சுட்டு தன் மேலயே பெட்ரோல் ஊத்தி கொளுத்திக்கப் பாத்தான். அதுக்குள்ள பக்கத்தில இருந்தவா அவனைப் பிடிச்சு போலீஸ்ல குடுத்துட்டா. இப்ப ஜெயில், கோர்ட், கேஸ்னு தவிக்கறான்.

ஒரு ஆணும் பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் பரஸ்பரமா விரும்பினா அதுக்கு பேர் காதல்னு வச்சுக்கலாம். ரைட்டா? யார் யாருக்கு இடைல எதுக்காக பரஸ்பர அன்பு முளைக்கலாம்கறதுக்கு ரூல்ஸ் கிடையாது. பரஸ்பர அன்பு இல்லைன்னா, அங்க காதல் இல்லைங்கறதுதான் ஒரே ரூல். 

இன்னொருத்தருக்கு என் மேல ஆசை இல்லாட்டாலும்  நான் மட்டும் அவா மேல ஆசை வச்சுப்பேன்னு ஒருத்தர் நினைச்சா அதுக்கு பேர் காதல் இல்லை. அது அசட்டு ஆசை. அதை ஏதோ 'ஒருதலைக் காதல்'னு பத்திரிகை, டி.வி, சினிமால உருகிப் பேசறவாளும் பாடறவாளும் இருக்கா. அதுல மயங்கற அறியாப் பையன்களும் பொண்களும் இருக்காளே?  அந்தப் பையன்கள் பொண்களுக்கு ஒண்ணு ரண்டு சொல்லத் தோண்றது.

நம்மளை வேண்டாம்னு அலட்சியம் பண்றவாதான் நமக்கு வாழ்க்கைத் துணையா இருக்கணும்னு நாம அவாளையே தொடர்ந்தா என்ன ஆகும்?  அவா நம்மளை இன்னும் இளப்பமா நினைப்பா, உதாசீனம் பண்ணுவா.  அதுனால ஒண்ணும் தப்பில்லைன்னு நாம நினைச்சா, நமக்கு சுய மரியாதை இல்லைன்னுதான அர்த்தம்?

சுய மரியாதை வேண்டாம்னு நினைக்கற யாருக்கும் வாழ்க்கைல பெரிய காரியங்கள் பண்ற ஆசையோ, சக்தியோ கிடைக்காது. அப்படிப் பட்டவா கல்லு மண்ணு மரக் கட்டை மாதிரி இருக்கலாம்.  அதாவது ஜடமா இருக்கணும்.  குழந்தைகளா, இந்த நிலைமை உங்களுக்கு வேண்டாம். முதல்ல உங்களையே நீங்க காதலிங்கோ. உங்களுக்குன்னு மதிப்பும் மரியாதையும் சேர்த்துக்கப் பாருங்கோ. அது கைகூடினா பலவிதமான கோளாறுகள் உங்க கிட்டயே வராது.  காதல் தோல்வி ஏற்பட்டாலும் உங்களை கவுக்காது. வெறும் ஜம்ப வார்த்தையா இதைச் சொல்லலை. உண்மையான சுயமரியாதைக்கு அப்படி ஒரு தடுப்பு சக்தி இருக்குங்கற அர்த்தத்துல சொல்றேன். ஏன்னா அந்த சுயமரியாதைக்கு தலைக்கனம் கிடையாது.  அது பிறத்தியாரை வம்படியா இம்சிக்காது. இம்சிக்கிற இன்னொருத்தர் கிட்டயும் பல்லிளிக்காது. அப்படின்னா, தனிப்பட்ட வாழ்க்கைல நம்மளை வேண்டாங்கறவரோட ஏன் நிரந்தர சண்டையோ வெட்டுக்குத்தோ வரப்போறது?

   உங்களைக் காதலிச்ச பொண்ணு ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களை விட்டு விலகிட்டா, அது உங்களுக்கு பெரிய ஏமாத்தம் தான். சந்தேகமில்லை.  ஆனா உங்களுக்குன்னு சுய மரியாதை  உணர்வு இருந்தா, இந்த மனக் கஷ்டத்துலேர்ந்து நீங்களாவே மெள்ள மெள்ள விடுபடுவேள்.  நிச்சயமா கொலை பண்ணமாட்டேள், தற்கொலையும் பண்ணிக்க மாட்டேள்.  இன்னொண்ணு – ஒருத்தரை ஒருத்தர் ஆழமா ஆடம்பரம் இல்லாம நேசிக்க ரண்டு வருஷப் பழக்கம்லாம் போறாது குழந்தைகளா. ரண்டு வருஷப் பழக்கத்துக்கு  நடுவுலயே இந்த காதல் நமக்கு  சரிப்படுமான்னு ஒருத்தர் யோசிக்கலாம்.  அதுவும் ஒரு பொண்ணு பதினேழு வயசுல காதலிக்க ஆரமிச்சா, ஒண்ணு ரண்டு வருஷத்துல புரிதல் அதிகமாகி சில சந்தர்ப்பத்துல இது மாதிரி யோசிக்கலாம்.  பதினேழு வயசு அஸ்வினிக்கு அவ அம்மா எடுத்துச் சொல்லி  அப்பவே அவ காதலை  தடுத்திருக்கணும்னு நினைக்கறேன். அஸ்வினியும் பொழைச்சிருப்பா, அழகேசனும் தப்பிச்சிருப்பான்.

அஸ்வினியோட பதினேழு வயசுக் காதல் கேக்கறதுக்கு இனிக்கலாம்.  ஆனா படிக்கற பொண்கள் இந்த வயசுல காதல்ல விழுந்தா அனேகமா தடம் புரண்டுதான் போவா.  கல்யாணம்னு வரும்போதும், இருபத்து ரண்டு வயசுக்கு முன்னால யாரும் கல்யாணம் பண்ணிக்காம இருந்தா நல்லதும்பேன். ஏன்னா, அந்த வயசு வரைக்கும் கல்வி, மன வளர்ச்சி, ரண்டையுமே கல்யாண பந்தம் பொறுப்புன்னு அடைபடாம சுதந்திரமா அனுபவிக்கறதுதான் விசேஷம்.  இதையும் விவரம் புரிஞ்ச அம்மா அப்பா குழந்தைகளுக்கு எடுத்துச் சொன்னா நன்னா இருக்கும்.  ஆனா  புரியறது - நாட்டுல சட்டம் ஒழுங்கு, வீட்டுல பொருளாதாரம் இதெல்லாம் ஒரு சாதாரணப்பட்ட பொண்ணுக்கு சாதகமா இருந்தாதான் அப்படி வயசு வரம்பு பாக்க முடியும்.   

பாவம் அஸ்வினி. அப்பாவிப் பொண்ணு அல்பாயுசுல இப்படி சாக வேண்டாம். அவளைத் தீத்துக் கட்டிட்டு தானும் தற்கொலை பண்ணிக்கப் பாத்தானே மட சாம்பிராணி அழகேசன், அவனும் தன் தலைலயே நெருப்பை அள்ளிப் போட்டுக்க வேண்டாம். ஒரு தினுசுல அந்த மடையனும் பாவம்தான்.  அது மத்தவாளுக்கு தெரியாட்டாலும், அவன் அம்மா இருந்தா அவளுக்குத் தெரியும்னு நினைச்சுப்பேன். "இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ணிட்டு நீயும் நாசமா போய் நிக்கறையே என் அசட்டுப் பிள்ளை, இது என்னடா காதல்?"னு அழுதிருப்பாளோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018



4 comments:

  1. Ambujam paatti is right! But then------the so called PHYSICAL LOVE knows nothing and it simply blinds the affected. In a way it all depends how the children are brought out with discipline, good and noble habits by their parents right from very early and young age. May God bless the young world!

    ReplyDelete
  2. Excellent article. Must ne published/circulated widely

    ReplyDelete
  3. V v nicely put. I keep telling d young ones that if love s not reciprocated, it s wasted. I can show them this too. Tku.

    ReplyDelete
  4. ஆசையால் அழிந்தவர்களின் வரிசையில் இவர்கள் முதலுமல்ல, கடைசியுமல்ல.

    அவர்களின் ஆசையா காதல் என்றா சொல்ல?

    ReplyDelete