முந்நாள் மத்திய சுற்றுத்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சோனியா
காந்திக்கு 2014 நவம்பரில் எழுதிய கடிதம் இப்போது வெளிவந்திருக்கிறது.
‘நீங்களும் ராகுல் காந்தியும் செய்த தவறுகளும் முறைகேடுகளும் இவை இவை. எவ்வாறு செய்யலாம் நீங்கள்?’ என்ற நியாயத்தின்
கேள்விகள் அதில் இல்லை. ‘கட்சிக்கு நான் விசுவாசமாக இருந்தேன். நீங்கள் இருவரும் என்ன சொன்னாலும் – நீங்கள்
சொன்னதாக யார் சொன்னாலும் – அவற்றை உத்திரவுகளாக நினைத்து எனது அமைச்சர் பணிகளைச்
செய்தேன். அப்போது சக மந்திரிகள் மாற்றுக்
கருத்துடன் எனக்கு நெருக்கடி கொடுத்தாலும் தாங்கிக் கொண்டேன். பிறகு ‘பதவி விலகு’ என்று நீங்கள் கூறியதாக
பிரதமர் கேட்டுக்கொண்ட உடன் அப்படியே செய்தேன்.
என்னை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கேட்டால் தெரிவிக்காமல்
இருக்கிறீர்களே. ‘கூப்பிட்டுச் சொல்கிறேன்’ என்று சொன்ன ராகுல் காந்தியும் இன்னும்
கூப்பிடாமல் இருக்கிறாறே. எத்தனை நாள்
காத்திருப்பேன் இதை அறிந்துகொள்ள? இதனால்
என் குடும்பப் பரம்பரையின் நற்பெயரும் களங்கம் அடைகிறதே. ஐயகோ!’ என்கிற கௌரதையற்ற அழுகுரலே அதில் ஒலிக்கிறது.
ராகுல் காந்தியின் வார்த்தைகளை உத்திரவுகளாக ஏற்று ஜெயந்தி நடராஜன் தன்
அமைச்சர் பணியில் அவ்வாறே நடவடிக்கை எடுத்திருந்தால் – அல்லது அவ்வாறே எடுக்காமல்
இருந்திருந்தால் – தவறு அமைச்சர் பெயரிலும் உண்டு. தேசிய பாதுகாப்பு கௌன்ஸிலின்
தலைவர் பதவி, பிரதமர் பதவியை விட உயர்ந்ததோ அதற்கு நிகரானதோ அல்ல. அப்பதவியில் அமர்ந்து சோனியா காந்தி
அமைச்சருக்கு பரிந்துரைத்ததையும் ஜெயந்தி நடராஜன் அவற்றை நிறைவேற்றியதையும் கடிதத்தில்
சுட்டிக் காட்டியிருப்பது ஒப்புதல் வாக்குமூலம்தான். இந்தச் செயல்கள் முந்நாள் அமைச்சருக்கு பழியைக்
கொண்டுவருமே தவிர பாராட்டை அல்ல. மூவரும்
அரசியல் சட்டத்தை அலட்சியம் செய்து எழுதப்படாத – பகிரங்கமாக சொல்லவும் கூடாத – ஒரு
சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்திருக்கிறார்கள் என்பது அம்பலம் ஆகியிருக்கிறது.
அன்றைய குஜராத் முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடியைத் தனிப்பட்ட
முறையில் தாக்குவதை இவர் மனம் ஏற்காவிட்டாலும், கட்சியின் வெகு உயர்மட்டத்தின்
உத்திரவு என்று கீழ் மட்டத்தில் ஒருவர் சொல்ல ஜெயந்தி நடராஜன் அந்தச் செயலையும்
சொன்னபடி செய்தாராம். தற்போது இதை
வெளிப்படுத்தும் போதும் ‘சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய நீங்கள் இருவரும்
(கட்சியின் வெகு உயர் மட்டத்தில் வேறு யார் இருக்க முடியும்?) அநியாயமாக இப்படி
என்னை நிர்பந்தித்தீர்களே’ என்று அந்த இருவர் மீதும் குறை சொல்ல வரவில்லை.
‘பாருங்கள். தவறு என்று எனக்குத் தெரிந்தாலும் உங்களின் உத்திரவு என்று இன்னொருவர்
சொன்ன மாத்திரத்திலேயே செய்து விட்டேன்.
இருந்தும் என்னைப் பதவி நீக்கம் செய்துவிட்டீர்களே. சரி போகட்டும். நீக்கியதற்கான காரணம் சொல்லி என்னை சாந்தப்படுத்தவில்லையே. எனது பரம்பரை குடும்ப கௌரவத்தை எண்ணிப்
பாருங்கள். ஊஊஊ …..’ என்றுதானே இவர் கடிதம் அர்த்தம் ஆகிறது?
ஜெயந்தி நடராஜனின் தாத்தா பக்தவத்சலம் தமிழ் நாட்டின் நேர்மையான முதல்
மந்திரியாக இருந்தார். பேத்தியின் நிலையில் அவர் இருந்திருந்தால் அமைச்சராக
செயல்படும்போது அமைச்சரவைக்கு வெளியில் உள்ளவர்களின் கட்டளைகளை அப்படியே ஏற்று
அரசாங்க வேலை பார்த்திருக்க மாட்டார்.
அப்போது அவருக்குச் சேர்ந்த நற்பெயருக்கு இப்போது காங்கிரஸ் கட்சி அவர்
பேத்தியை நடத்திய விதத்தால் எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. ஆனால் கட்சித்
தலைமையின் எல்லா உத்திரவுகளையும் ஏற்று அவற்றை அரசு அலுவல்களில் நிறைவேற்றியதால்
பொது ஊழியர் என்ற முறையில் பேத்தி தனக்குத் தானே களங்கம் எற்படுத்திக் கொள்ளலாம். ‘அவரின் பேத்தியா இவர்?’ என்று ஜெயந்தி
நடராஜனைப் பற்றித்தான் விவரம் அறிந்தவர்கள் சந்தேகமாகக் கேட்பார்களே தவிர ‘இவரின்
தாத்தாவா அவர்?’ என்று கேட்டு பக்தவத்சலத்தை யாரும் குறைத்து மதிக்க மாட்டார்கள்.
* * * *
*
No comments:
Post a Comment