நீங்க நல்ல மனசுக்காராள்னா இப்படி நினைக்கலாம்: 'மன்மோஹன் மாமாவோட கதி துரோஹிக்குக் கூட வரவேண்டாம்.’
நிலக்கரி ஊழல் கேஸ்ல மன்மோஹன் சிங்குக்கு சி.பி.ஐ கோர்ட்டு சம்மன்
அனுப்பிருக்கு. இது கோர்ட் நடவடிக்கையோட ஆரம்பக் கட்டம்தான். கேஸ் நடந்து சுப்ரீம்
கோர்ட்டுக்கும் போயி கடைசி ஜட்ஜ்மெண்ட் எப்படி வரும்னு இன்னிக்கு யாருக்குத் தெரியும்? நடுவுலயே கூட கோர்ட் அவரை விடுவிக்கலாம். இப்ப வெறும் சம்மன் வந்ததுக்காக நாம ஆ-ஊ-ங்கப்டாது. கேள்விப் பட்டிருப்பேளே -
கோர்டுன்னா குற்றத்துக்கு ப்ரூஃப் கிடைக்கற வரை அக்க்யூஸ்டும் நிரபராதிதான்.
இந்த சம்மன் வேற ஒரு சமாசாரத்துலயும் லைட் அடிக்கறதுன்னு தோண்றது. அதான் நான்
சொல்ல வந்தது.
மன்மோஹன் சிங் - அவரைப் பொறுத்தவரை நல்லவர்தான். எகனாமிக்ஸ் பத்தி
ஆக்ஸ்ஃபோர்டுல படிச்சு டாக்டர் பட்டம் வாங்கினவர்தான். ரிசர்வ் பாங்க் கவர்னர், மத்திய நிதி அமைச்சர்னு இருந்தும் பேர் எடுத்தவர்தான். மந்திரி,
பிரதம மந்திரின்னு இருந்தப்போ அரசாங்க விஷயமா பாக்க வரவாகிட்ட கன்னா பின்னான்னு
பேசினவர் இல்லை. அதாவது, “எனக்குக் கமிஷனக் குடு. கட்சிக்கு டொனேஷனக் கொடு.
இல்லாட்டி உனக்கு காண்ட்ராக்ட் கிடையாது. குடுத்தியானா உன் கம்பெனி எவ்வளவு
பாடாவதின்னாலும் சரி, உன் பொருளோட தரம் தகர டப்பான்னாலும் சரி, உனக்கு அரசாங்க
சப்ளை காண்ராக்ட் நான் தரேன்”ங்கறா மாதிரில்லாம் கண்டிப்பா பேசிருக்க மாட்டார். அவரைப் பொறுத்த வரை
நேர்மையானவர்தான். இதுல பி.ஜே.பி காராளுக்குக் கூட சந்தேகம் இருக்காதுங்கறேன்.
சரி. மன்மோஹன் சிங்குக்கு இன்னும் ஷொட்டு கொடுக்கறவா கிட்ட ஒண்ணு சொல்றேன். ”அவர் மாதிரி நல்ல மனுஷருக்கு, ’உன்
பேர்ல பெத்த பெரிசா ஊழல் கேஸ் வந்திருக்கு.
கோர்ட்டுக்கு வா’ன்னு கிரிமினல் கோர்ட் சம்மன் அனுப்பினா, இதென்னடா சோதனை? இந்த மாதிரி சோதிச்சா, படிச்சவா நல்லவா நேர்மையானவா
யார் அப்பறம் அரசியலுக்கு வருவா?”ன்னு உங்களுக்குத் தோண்றதா?
அப்படீன்னா வாங்கோ, இதைக் கொஞ்சம் பொறுமையா இன்னொரு ஆங்கிள்ளயும் பாக்கலாம்.
அரசியல்ல உழண்டு உருள்றாளே, அவா ஒரு பாலபாடத்தைக் கத்துண்டிருப்பா.
அதாவது, ’மத்தவா தன்னை உபயோகிச்சுக்கறத விட நாம மத்தவாள நன்னா உபயோகிச்சுக்கணும்’.
அரசியல்வாதிகள்ள தப்புத் தண்டா பண்றவா இப்படிக்கூட நினைப்பா: ‘நாம தப்புப் தண்டா
பண்ணும்போது யாராவது நல்லவா கிடைச்சா அவாளத் தொட்டுண்டு –
முடிஞ்சா அவாளயே தலைவரா ஆக்கிவச்சுண்டு - அவா முதுகுக்குப் பின்னாடி நம்ம
ஆதாயத்தைப் பாத்திண்டிருந்தோம்னா, பாதிப்பேர் நம்மள சந்தேகிக்க மாட்டா.
அவரைத் தொட்டுண்டு நாம நிக்கறதுக்கு அந்த அப்பாவி மனுஷர் சம்மதிக்கணும். அந்த
அளவுக்கு ரொம்ப நல்லவர் ஒர்த்தர் மாட்டினா நமக்கு லக்கி ப்ரைஸ்தான்’. ஆனா, மாட்டிக்கப்போறவர் இதை சரியா தெரிஞ்சுக்காம அரசியல் கேம்ல சிக்கினார்னா, அவர் வெறுமனே இன்னொருத்தர் முதுகத் தட்டிக் கொடுத்து பாராட்டலாமே தவிர, மத்தவா அவர் தலைலதான் தட்டிண்டிருப்பா – அது அவருக்கு அப்பத் தெரியாது. பின்னால தெரியலாமோ
என்னவோ.
அரசியல்ல மன்மோஹன் சிங்கைச் சுத்தி நின்னவா எத்தனையோ பேர்னு உங்களூக்குத்
தெரியும். ஆனா மன்மோஹன் சிங்குக்கு நீங்க பேஷாக் குடுக்கற நல்லவர்-நேர்மையாளர்
மெடல் இருக்கே, அதை அவரைச் சுத்தி நெருக்கமா நின்னவாள்ள எத்தனை பேருக்குக்
குடுப்பேள்? அந்த மத்தவா யாராவது அதுக்குத் தேறுவாளா?
அனேகமா யாரும் பெருசா கிடைக்க மாட்டா. அப்ப அந்த மாதிரி மனூஷாள்ட இவர் போய் ஏன்
ஒட்டிக்கணும்? நல்லவர், நேர்மையாளர்ங்கற விஷயம் வேற. சூழ்நிலை கெட்டிக்காரத்தனம் வேற. பனை
மரத்தடில பால் குடிக்கப்டாதுன்னு ஏன் பழமொழி வச்சிருக்கா? மன்மோஹன் சிங் மாதிரி கெட்டிக்கார அசடுகளும் இருக்கான்னுதான?
மன்மோஹன் சிங் கிட்ட நான் இதைச் சொல்லுவேன்; ”பாருங்கோ, உங்கள முன்னால
வச்சுண்டு உங்க பின்னால தப்புக் காரியம் பண்ணினவாளுக்கு இருந்த சூழ்நிலை
கெட்டிக்காரத்தனம் உங்களுக்கு இல்லாமப் போயிடுத்து. நீங்க
உங்களுக்குன்னு தனியா லாபம் சம்பாதிக்கலன்னு ஆனாலும், பிரதம மந்திரியா இருக்கறபோது
பொதுவுல எங்க, எவ்வளவு, யாரால நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்னு நீங்க கண்கொத்திப் பாம்பா
பாத்தேளா?. கட் அண்ட் ரைட்டா டாக்குமெண்டு, ப்ரூஃபு-ன்னு இருக்கற சட்டத்தையும்
தாண்டி வர்ர கேள்வி இது. ”நான் முழிச்சுப் பாத்துண்டுதான் இருந்தேன், அதையும் மீறி சில கில்லாடிப்
பேர்வழிகள் என் கண்ல மண்ணைத் தூவி அதையும் இதையும் பண்ணிட்டா”ன்னு நீங்க சொன்னா
அது வேற விஷயம் - அது எப்படி ஆச்சுன்னும் யோசிக்கணும். ஆனா நீங்க ஒண்ணுத்தையும்
பாக்காம கண்ணை மூடிண்டிருந்தேள்னா அது வேற விஷயம்.
ரிசர்வ் பாங்க் கவர்னர், மத்திய நிதியமைச்சர்னு மட்டும் நீங்க
நின்னிருந்தேள்னா, அதுவரைக்கும் உங்களூக்குக் கெடச்ச பேரே பெரிசு.
வெறும் அமைச்சரா மட்டும் இருக்கும்போது உங்களை யூஸ் பண்ணியோ முன்னால வச்சோ மத்தவா
யாரும் தப்புப் பண்றதுக்கும் பெரிசா எடம் இல்லை. அப்டி யாராவது
பண்ணினாலும் உங்களால தாக்குப் பிடிக்க முடிலயா - “எனக்கு முதுகு வலி, நெஞ்சு வலி.
இனிமே ரெஸ்ட்லதான் இருந்தாகணும்னு டாக்டர் கண்டிப்பா சொல்லிட்டார்” ங்கறா மாதிரி நாசூக்கான ஸ்டேட்மெண்டோட அமைச்சர்
பதவியை ராஜினாமா பண்ணிட்டு நீங்க பாட்டுக்குப் போயிண்டிருக்கலாம். அது வரைக்கும்
எடுத்த பேரும் மிஞ்சும். ஆனா பிரதம மந்திரியா ஆனதுக்கப்பறம் இந்த மாதிரி டஸ்கு
புஸ்கு காரணம் சொல்லி நீங்க ரிசைன் பண்ணிருக்க முடியாது. அப்படிப் பண்ணினா உங்க
கட்சி ஆயிரம் பேருக்குப் பதில் சொல்லணும், நீங்களும் ‘கட்சியை இந்த இக்கட்டுக்குக்
கொண்டு வந்துட்டமே’ன்னு தாங்கமுடியாத விசனத்துக்குப் போவேள் – நீங்கதான் ரொம்ப
நல்லவர் ஆச்சே! அதுனால, பிரதம மந்திரி பதவிங்கறது உங்க மென்னியைப் பிடிச்சா
பிடிச்சதுதான். ஒரு வேளை மகுடத்துக்கு ஆசைப்பட்டு மென்னியைக் குடுத்துட்டேளோ?
* * * *
*
Classic!! Wish all our Learned Men/Women think twice before jumping into the well called Politics. Yes, we need more of the learned crowd to govern us, but will our Netas allow that?
ReplyDelete