Thursday, 14 November 2024

'அமரன்' திரைப்படம். பெரிய ஷொட்டு, சிறிய குட்டு

 

-- ஆர். வி. ஆர்

 

  சிவகார்த்திகேயன், சாய்  பல்லவி அற்புதமாக நடித்து வெளிவந்திருக்கும் ஒரு வெற்றித் திரைப்படம் ‘அமரன்’. பாராட்டுகள்.


     இந்தப் படம்  ஒரு  நிஜ ராணுவ வீரரின் பாராக்கிரமம், கடமை உணர்ச்சி, நாட்டுக்கான தியாகம், என்ற மேலான குணாதிசயங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சில சினிமா அம்சங்கள் சேர்த்து,  எடுக்கப் பட்டது. அந்த நிஜ மனிதர், இந்திய ராணுவத்தில் பணி புரிந்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற இளம் தமிழர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் தீரத்துடன் ஈடுபட்டவர். அந்தச் சண்டையின் போது தனது 31-வது வயதில் அவர் வீர மரணம் அடைந்தார்.  

 

மேஜர் முகுந்த் வரதராஜன் பிராமண வகுப்பில் பிறந்தவர். அவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர் ஒரு கிறிஸ்தவப் பெண். அவர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியாக இருந்தனர்.


படத்தின் கதாநாயகன், அவன் மனைவி, பற்றித் திரையில் காட்டப்படும் சில குறிப்புகள் தொடர்பாக, படத்தைப் பார்த்தவர்கள் பலர்  ஆதங்கத்துடன் ஒன்றைச் சொல்கிறார்கள்.

 

‘திரை நாயகனான அமரன் ஒரு பிராமணர் என்று போகிற போக்கிலாவது அந்தப் படம் தொட்டுக் காட்டியிருக்க வேண்டும். அது இல்லாமல், அவர் பிராமணர் அல்லாதவர் என்று அழுத்தமாக உணர்த்தும் சில காட்சிகளும் உண்டு’ என்று படம் பார்த்த பலர் சுட்டிக் காட்டுகிறார்கள். 

 

கதாநாயகனின் நிஜ வாழ்வில், அவரது மனைவி ஒரு கிறிஸ்தவர் என்பதைத் திரைப்படம் உண்மையாக வெளிப்படுத்துகிறது. அது சரிதான், அது வரவேற்கத்தக்கது. ஆனால் கதாநாயகனின் ஒரு அடையாளத்தை – அவர் பிராமணர் என்பதை – திரைப்படம் வேண்டுமென்றே மறைத்தது சரியல்ல, நேர்மையல்ல. அதற்குக் காரணம் வியாபார நோக்கம் அல்ல.


திரைப் படத்தில் கதாநாயகனை, அல்லது ஒரு முக்கிய கதா பாத்திரத்தை, பிராமணர் என்று காண்பிக்கப் பட்டால் படம் ஓடாது என்று பொய்யான ஒரு வணிகக் காரணம் தமிழ்நாட்டில் எடுபடாது. எதிர்நீச்சல், அரங்கேற்றம், கௌரவம் ஆகிய வெற்றிப் படங்கள் இந்த உண்மையைச் சொல்லும்.

 

அமரனில் கதாநாயகன் ஒரு பிராமணர் என்று  ஓரமாகக் கூட சொல்லவில்லை என்றால், அதற்குச் சிலரது உள்நோக்கம் தான் காரணம். அது என்ன உள் நோக்கம்? சற்று விளக்கினால் தெளிவாகும்.

 

இந்தியாவில் ஒரு ஹிந்துவுக்கு, அவர் எந்த ஜாதியானாலும், தான் பிறந்த ஜாதியின் மீது தனியான ஒட்டுதல் உண்டு. பல நேரங்களில் அவர் தனது மதத்தின் மீதான பற்றைக் காட்டிலும் தனது ஜாதியின் மீது அதிக ஒட்டுதலும் பற்றும் வைத்திருப்பார். அதற்கு சமூகக் காரணங்கள் உண்டு. 


என்ன இருந்தாலும் தமது ஜாதியின் மீது ஒருவர் வைத்திருக்கும் இயற்கையான அபிமானம் அவருக்கு ஒரு emotional bond-ஐயும் தருகிறது. அந்த வகையில் அது நல்லது. சில தமிழக அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கலைஞர்கள், விஷயம் வேறு.

 

சில திராவிட அமைப்புகளும் திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டில் ஹிந்து மதத்தை இழித்தோ பழித்தோ பேசினாலும், பொதுவாக ஹிந்துக்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அப்படிப் பேசுவோர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை ஏளனம் செய்து பேசினால் அவர்கள் பிழைப்பில் மண் விழும். உடம்பிலும் ஏதாவது விழும். வீட்டில் சமர்த்தாக சாத்வீகமாக வளரும் பிராமணர்களிடம் இருந்து யாருக்கும் இந்த அபாயம் இல்லை.

 

பிராமணர்களை ஏளனம் செய்து, உதாசீனம் செய்து, அதில் குரூர திருப்தி கொண்டு, பிழைக்கும் அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் வேரூன்றி இருக்கின்றன. பிராமணர்கள் எல்லா அரசியல் உதாசீனத்தையும் நினைத்துப் பார்த்து, ஆனால் அதைத் தள்ளிவிட்டு, தங்கள் வழியில் முன்னேறுகிறார்கள். கையில் கல்லையும் தடியையும் எடுத்து அவர்களும் வீதிக்கு வந்து நியாயம் கேட்பவர்களாக இருந்தால், அமரன் கதாநாயகன் சந்தியாவந்தனம் செய்யும் காட்சி  திரையில் சில நொடிகளாவது வந்து போயிருக்கும்.

 

‘பிராமணர்கள் மீது இழிப்பு, பழிப்பு, ஏளனம்,  ஆகியவற்றையே காண்பிக்கும் நமக்கு, மேஜர் முகுந்த் வரதராஜனின் பிராமண ஜாதியை மட்டும் படத்தில் மறைக்கச் செய்வது எளிது, அதற்கு ஒரு சப்பைக் கட்டு கட்டிவிடலாம்’,  என்பது உள் நோக்கத்துடன் அமரனுக்குப் பின்னால் செயல்படுபவர்களின் எண்ணம்.

 

‘ஒரு இந்திய ராணுவ வீரனின் தீரத்தை நன்றாகக் காட்டும் ஒரு படத்தைப் பற்றி, இப்படி ஜாதிக் கோணத்தில் ஒருவர் பேசலாமா’ என்று படத்தின் பின்னால் இருக்கும் உள்  நோக்கம்  கொண்ட சிலர் எதிர்க் கேள்வி கேட்கலாம். சிலருக்கு அந்த உள் நோக்கம் சுயமாக இருக்கலாம். சிலருக்கு ‘கதாநாயகனின் பிராமணப் பின்புலத்தை திரைக்கதையில் மறைப்பது தான், அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்களை மகிழ்விக்கும். அவர்களின் மகிழ்வால் படமும் பிழைக்கும்’ என்ற எண்ணம் மேலோங்கி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இது பிராமணர்களுக்கு விளைவிக்கப் பட்ட ஒரு அநீதி.

 

ஏன் இது அநீதி? ஏனென்றால், ராணுவத்தில் சேர்ந்து, தீவிரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட்டு, 31 வயதில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ஒருவன் கொண்டாடப் படும்போது, பிரபல்யம் செய்யப் படும்போது, “அந்த மனிதன் எங்கள் ஜாதியைச் சார்ந்தவன்” என்ற ஒரு சாந்தமான நிறைவும் பெருமையும் அந்த ஜாதி மனிதர்களுக்கு – அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் – கிடைக்கும்.  அதை அபகரிக்க நினைப்பதும், அந்த மனிதர்கள் தங்கள் ஜாதியுடன் கொண்ட emotional bond-ஐ அலட்சியம் செய்வதும், அந்த ஜாதி மக்களுக்கு செய்யப்படும் அவமரியாதை, அநீதி.

 

'புரியவில்லையே' என்று பாசாங்கு செய்பவர்களுக்கு ஒன்றிரண்டு உதாரணம் சொல்லலாம்.

 

காமராஜரை மையமாக வைத்துச் சினிமா எடுத்தால், அவர் இன்ன ஜாதியைச் சார்ந்தவர் என்பதை மறைத்து, அவர் எந்தக் குறிப்பிட்ட ஜாதியிலும் இல்லாதவர் என்று காண்பிப்பது தவறல்லவா? திராவிட சக்திகள், அதுவும் அரசியல் பின்புலம் கொண்ட திராவிட அமைப்புகள், அப்படி நிகழ்வதை நினைத்தும் பார்க்காதே, அனுமதிக்காதே?  

 

நமது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அரசியல் பயணத்தை, அவரின் முன்னேற்றத்தை, ஒருவர் சினிமாவாக்க விரும்பினால், திரவுபதி முர்மு பழங்குடியைச் சார்ந்தவர் என்ற உண்மையை மறைப்பது தவறல்லவா – அதுவும் நடக்காதல்லவா?

 

பிராமணர்களைத் திராவிட அரசியல் சக்திகள், அவற்றுக்குத் துணை போகிறவர்கள், ஏளனம் செய்யலாம், கொச்சைப் படுத்தலாம், புறக்கணிக்கவும் செய்யலாம். ஆனால் பிராமணர்களின் அமைதியான முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது.  இப்போது அந்த ஜாதியினரே மெலிதாக உறுமவும் ஆரம்பிக்கிறார்கள்.

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

4 comments:

  1. I have not seen the film.But your comments are interesting.Dr G.Sundaram.

    ReplyDelete
  2. The film is about the valorous soldiers of the Indian Army. All soldiers are heroes of our nation.
    They are brave soldiers and have no caste or religion associated with them. You are cheap to gain popularity by talking about some means or the other out of context.

    ReplyDelete
  3. I totally agree they shd have included few instances to show that the hero was from a brahmin family . They have purpusfky avoided

    ReplyDelete