Monday, 16 September 2024

ராகுல் காந்தி பேசியது சரியா? இந்தியா ஒரு நியாயமற்ற தேசமா?


-- ஆர். வி. ஆர்

 

சமீபத்தில் அமெரிக்கா சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் அமலில் இருக்கும் இட ஒதுக்கீடு பற்றி – நமது சட்டசபைகளிலும் அரசு வேலைகளிலும் உள்ள இட ஒதுக்கீடு பற்றி – கருத்து சொன்னார். அவர் பேசியது:

 

“தற்போது இந்தியா ஒரு நியாயமற்ற இடம். அது நியாயமான இடமாக ஆகும்போது, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி நாங்கள் சிந்திப்போம்.”

 

ராகுல் மேலும் விளக்கினார்: “இந்தியாவின் 90 சதவிகித மக்கள் செயல்பட்டு முன்னுக்கு வரமுடியவில்லை.  இந்தியாவில் உள்ள தொழில்துறைத் தலைவர்கள் பட்டியலைப் பாருங்கள். அதில் ஒரு பழங்குடி மனிதனைக் காண்பியுங்கள். ஒரு தலித்தைக் காண்பியுங்கள். ஒரு ஓபிசி வகுப்பினரைக் காண்பியுங்கள்.  அந்தப் பட்டியலில் ஒரு ஓபிசி மனிதர் மட்டும் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஓபிசி மக்கள் இந்தியாவின் ஐம்பது சதவிகிதம். இப்படியான மக்களுக்கு இந்தியா வரவேற்பு முகம் காட்டவில்லை. இதுதான் பிரச்சனை.”

 

“அனைத்து மக்களும் முன்னேற இட ஒதுக்கீடு மட்டும் கருவியல்ல. மற்ற கருவிகளும் இருக்கின்றன. ஆனால் இந்தியா ஒரு நியாயமான இடமாகும் போது (when India becomes a fair place) நாங்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி யோசிப்போம்” என்று முடித்தார் ராகுல் காந்தி.

 

என்ன சொல்கிறார் ராகுல் காந்தி? பழங்குடிகள், தலித்துகள், ஓபிசி வகுப்பு மக்கள் – அல்லது வேறு சமூகத்து மக்கள் – ஆகியோரிலிருந்து பத்து இருபது மனிதர்கள் தொழில்துறைத் தலைவர்கள் ஆகிவிட்டால், அந்த அந்த சமூகத்து சாதாரண மக்கள் அனைவரும் பயனடைந்ததாக அர்த்தமா?

 

வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வருவாய் ஆகியவை ஒரு  மனிதனுக்கு அவன் எந்த மதமோ, ஜாதியோ, பிராந்தியமோ – எளிதில் கிடைப்பதில்லை, அதைப் பெறும் வழிகளை அந்த நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தவில்லை, விரிவாக்கவில்லை,  என்ற சூழ்நிலை இருந்தால் அந்தக் குறைதானே ஒரு மனிதனுக்கு நேரும் அநியாயமும் அநீதியும்?

 

அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகள், நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் திட்டங்களை வகுத்து அவற்றை முறையாகச் செயல்படுத்த வேண்டும். அதோடு, ஆளும் அரசியல்வாதிகள் நேர்மையாகவும் திறமையாகவும் நிர்வாகம் செய்து, லஞ்ச ஊழல் தவிர்த்து, மக்கள் நலனைப் பிரதானமாகக் கவனிக்க வேண்டும். ராகுல் பிரசங்கம் செய்த அமெரிக்காவில் அரசாங்கம் அப்படி நடப்பதால் தானே அங்கு மக்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகள் தரமாக இருக்கின்றன?

 

ஒரு காலத்தில் அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப் பட்ட கறுப்பர்கள் இன்று அந்த நாட்டு மக்களில் 14 சதவிகிதம். அமெரிக்க அரசியல்வாதிகளின் பொதுவான நேர்மையான ஆட்சியால், திறமையான நிர்வாகத்தால், இப்போது நல்ல வாழ்க்கை வசதிகள் பெறும் வழிகளைக் காண்பவர்கள் அங்கு வாழும் கறுப்பர்கள் – இந்தியாவில் கிடைப்பது போலான இட ஒதுக்கீட்டினால் அல்ல.

 

ராகுல் காந்தி பேசுவதைப் பார்த்தால், அமெரிக்காவில் 86 சதவிகித மக்கள் 14 சதவிகித மக்களிடம் நியாயமாக நடந்து அந்தப் பதினாலு சதவிகித மக்களும் முன்னேற உதவுகிறார்கள் – ஆனால் இந்தியாவில் 10 சதவிகித மக்கள் 90 சதவிகித மக்களிடம் அநியாயமாகச் செயல்பட்டு, அந்தத் தொண்ணூறு சதவிகித மக்களை நலிவுறச் செய்கிறார்களா? ஆளும் அரசியல்வாதிகள் முயன்றாலும் இதை 77 ஆண்டுகளாகத் தடுக்க முடியவில்லையா? ராகுல் பிதற்றுகிறார், பித்தலாட்டம் செய்கிறார்.

 

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி 54 வருடங்கள் மத்திய ஆட்சியை நடத்தியது - சில வருடங்கள் தோழமைக் கட்சிகளுடன். மாநிலங்கள் பலவற்றிலும் அந்தக் கட்சி ஆட்சி செய்தது. இன்றும் ஒன்றிரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.

 

ஒரு அரசாங்கமாக, காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சி செய்து நாட்டை ஓரளவுக்குத்தான் முன்னேற்ற முடிந்தது. லால் பகதூர் சாஸ்திரி காலத்துக்குப் பின்னர்  வந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களைத் தவிர யார் யாரோ அதி வேகமாக முன்னேறினார்கள். அதுவும் 2004-2014 பத்தாண்டுகளில், சில அதிர்ஷ்டசாலிகள் ராக்கெட் வேகத்தில் முன்னேறினார்கள். 

 

இந்திய மக்களை முன்னேற்ற இட ஒதுக்கீடு தவிர மற்ற கருவிகள் இருக்கின்றன என்றும் ராகுல் பேசினாரே,  இவைதான் அந்தக் கருவிகள்: அரசாங்கம் நடத்தும் அரசியல்வாதிகளிடம் காணவேண்டிய முனைப்பு, திறமை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, நேர்மை, நாணயம், வாரிசு-அரசியல் செய்யாமை, லஞ்ச ஊழல் தவிர்த்தல், தூய்மையான தேசாபிமானம் ஆகியவைதான் அந்தக் கருவிகள். இவை லால் பகதூர் சாஸ்திரிக்குப் பின் மத்தியில் ஆட்சி செய்த  காங்கிரஸ் கட்சியிடம் இருந்தனவா? ஆராய்ச்சிக்கு உரியது.

 

நமது நாட்டில் பெருவாரியான மக்கள் (அது 90 சதவிகிதமோ, கூடக் குறையவோ) இன்றும் சாதாரண நிலையில் தவழ்கிறார்கள். இதற்கு, நாம் ஒரு பரந்துபட்ட பன்முகம் கொண்ட நாடு, அதை நிர்வகிப்பதில் சிக்கல்கள் உண்டு என்பது ஒரு காரணம்.  மற்றபடி, நம்மை ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நமது மக்களின் சாதாரண வாழ்க்கை நிலைக்கு முக்கிய காரணம் – கடைசியாக ஆட்சி செய்தவர்கள் சற்று அதிகமாக.

 

இந்தக் காரணங்களை ராகுல் காந்தி வெளிப்படையாக ஏற்றுக் கொண்டால், அவர் கட்சியும் அவரது தாயும் தந்தையும், அதற்கு உண்டான பொறுப்பை ஏற்கவேண்டுமே? அதனால், இந்தியா ஒரு நேர்மையான இடமல்ல என்று தேசத்தையே மட்டம் தட்டி ஒரு புளுகை அவிழ்த்து விட்டார் ராகுல். அவர் பேசியதில் ஒரு சுயலாபக் கணக்கும் இருக்கிறது.

 

என்ன இருந்தாலும் பெருவாரியான இந்திய மக்கள் அப்பாவிகள். ராகுல் காந்தி என்பவர் நேரு வம்சத்தவர் என்ற காரணத்துக்காக, ராகுல் என்ன பிதற்றினாலும், அவர் என்ன கோமாளித்தனம் செய்தாலும், அவர் தலைமையே ஏற்க, அவர் சொல்படி ஓட்டளிக்க, அந்த மக்களில் பலர் தயாராக இருக்கிறார்கள். அப்பாவிகளான அவர்கள் சரியாகக் கிரகிக்க முடியாத ஒரு விஷயம் உண்டு.

 

ஒரு காலத்துக்கு மேல், ஒரு அளவுக்கு மேல், இட ஒதுக்கீடு தொடர்ந்தால், அதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் கையாலாகாத் தனம், கபடம், அப்பாவி மக்களை மயக்கி ஏமாற்ற நினைக்கும் குயுக்தி என்று அர்த்தம். இதை அந்த மக்கள் நலனில் ஒருவர் எடுத்துச் சொன்னால், அவர் அடித்தட்டு மக்கள் நலனுக்கு விரோதி என்று அவர்மீது பல அரசியல் கட்சிகள் கீழ்த்தரமாகக் குற்றம் சொல்லும். ஆகையால் இட ஒதுக்கீடு என்பது நடைமுறையில் ஒரு சிக்கலான விஷயம். அரசியலில் இருக்கும் நல்லவர்கள் கூட இதில் எச்சரிக்கையாக இருந்தவாறு,  விட்டுப் பிடிக்கத்தான்  நினைப்பார்கள்.  

 

அப்பாவி இந்திய மக்களிடம் ராகுல் காந்தி வில்லத்தனமாகச் சொல்ல விரும்புவது: “நீங்கள் இந்திய ஜனத்தொகையில் 90 சதவிகிதம். இந்தியா உங்களுக்கு அநியாயம் செய்வதால் நீங்கள் முன்னேறவில்லை. பாஜக-வும் மோடியும்தான் இதற்குக் காரணம். நான் பிரதமரானால்  நீங்கள் ஏதாவது தொழில் தொடங்கி முன்னேற, அல்லது உங்களுக்கு வேலை வாய்ப்புகள் ஓஹோவென்று அதிகரிக்க, உங்கள் வாழ்க்கை வசதிகள் பெருக, நான் இட ஒதுக்கீட்டையும் அதிகரித்து வழி செய்வேன். எங்கள் கட்சிக்கும் கூட்டணிக்கும் ஓட்டளியுங்கள்.”  

 

90 சதவிகித இந்திய மக்களுக்கு அநியாயம் செய்யும் அரசியல் தலைவர் யாரென்று  தெரிகிறதே!

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

No comments:

Post a Comment