Friday 20 September 2024

ஹரியானா தேர்தலில் பெண்களுக்குப் பண வாக்குறுதி – காங்கிரஸ் 2,000! பாஜக 2,100!


-- ஆர். வி. ஆர்

 

தேர்தல் வாக்குறுதிப் போட்டா போட்டிகளில், காங்கிரஸ் கட்சியும் பாஜக-வும் ஹரியானாவில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.  

 

ஹரியானா மாநிலத்தில் பாஜக இப்போது ஆட்சி செய்து வருகிறது. மாநில சட்டசபைக்கான அடுத்த தேர்தல், வரும் அக்டோபர் 5-ம் தேதி நடக்கவிருக்கிறது. பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியும் பாஜக-வும் இப்போது மல்லுக் கட்டுகின்றன.

 

18 முதல் 60 வயதுள்ள ஹரியானா பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்போம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது. அடுத்த நாள் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த மகளிருக்கு மாதம் இரண்டாயிரத்து நூறு ரூபாய் உதவித் தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தது. மற்ற பல வாக்குறுதிகளையும் அந்த இரண்டு கட்சிகள் கொடுத்திருக்கின்றன.

 

'நாங்கள் தொழில்வளத்தைப் பெருக்குவோம், வேலை வாய்ப்பை அதிகரிப்போம், கேஸ் சிலிண்டர்கள் குறைந்த விலையில் தருவோம், மருத்துவ சிகிச்சை வசதிகள் லட்சக் கணக்கில் தருவோம்', என்று ஒரு கட்சி என்ன வாக்குறுதி அளித்தாலும், சுமாரான வருமானம் கிடைக்கும் அல்லது ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு அவை பெரிய பொருட்டல்ல. சில வாக்குறுதிகள் மிக நிச்சயம் அல்ல என்பதும் அந்த மக்களுக்குத் தெரியும்.

 

ஒரு அரசியல் கட்சி, ‘எங்கள் அரசு மாதா மாதம் பண உதவி செய்யும்’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் அது சாதாரண மக்களால் கேள்வியின்றி வரவேற்கப் படும்.  ஏனென்றால் ஆட்சிக்கு வரும் கட்சி அந்த வாக்குறுதிப்படி பாவமான மக்களின் கைகளில் அந்தப் பணம் உடனே கிடைக்கச் செய்யமுடியும். அதற்காகக் காலமெடுக்கும் தயார் நடவடிக்கைகள் அவசியமில்லை.

 

இப்படியான பண விநியோக வாக்குறுதியைப்  பொறுப்பற்ற முறையில் ஒரு அரசு செயல்படுத்தினால், என்ன ஆகும்? அரசு கஜானா சுகவீனம் ஆகும். ஆக்க பூர்வமான பல திட்டங்கள் படுக்கும். ரோடுகள் பாடாவதியாகப் பல்லிளிக்கும்.  அரசுப் பேருந்துகள் டப்பாவாக ஓடும். அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு டாக்டர்கள், நர்சுகள் இருக்க மாட்டார்கள். நடைமுறையில் இந்த விளைவுகளைப் பெரிதளவு அரசின் மாதா மாதப் பண விநியோகம் சரிசெய்யும். அப்படித்தான் நமது மக்கள் அவலமாக வைக்கப் பட்டிருக்கிறார்கள் – சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும்.

 

நமது சாதாரண மக்களின் பரிதாப நிலையை நன்றாக உணர்ந்த காங்கிரஸ், இப்படி அரசுப் பணத்தை விநியோகம் செய்யும் வாக்குறுதியை அளித்து ஹரியானாவில் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சி மக்கள் நலனில் பெரிதாக ஒன்றும் செய்யாது.  அரசாங்கப் பணத்தில் அது ‘என்னவெல்லாம்’ செய்ய நினைக்குமோ, அதைச் செய்யும். இப்படியான காங்கிரஸ் கட்சியைத் தேர்தலில் எதிர்க்கும் பாஜக, தேர்தல் களத்தைச் சரியாகக் கையாள வேண்டும்.  

 

நமது சாதாரண மக்கள் அப்பாவிகள், பொதுவாக நல்லவர்கள். மாதா மாதம் பண விநியோகம் செய்வதாக ஒரு கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தால், அந்தப் பணம் தங்கள் வாழ்க்கைக்கு அவசியம் என்று கருதி, அவர்கள் அந்தக் கட்சிக்கே நல்லதனமாக, விசுவாச எண்ணத்துடன்,  வாக்களிக்கலாம்.

 

நமது பெரும்பாலான அரசியல்வாதிகள் குயுக்தியானவர்கள். நாட்டுக்கு, மக்களுக்கு, எது தொலைநோக்கில் நல்லது என்பது அவர்களுக்குப் பொருட்டல்ல. தங்களுக்கு, தங்களின் வம்சப் பரம்பரைக்கு, எது நல்லது என்பது பற்றியே அவர்கள் சிந்திப்பார்கள். சாதாரண மக்களின் நல்லதனத்தை அந்த அரசியல்வாதிகள் நன்றாக அறிந்தவர்கள்.  ஆனால் அந்த அரசியல்வாதிகளின் கெட்ட நோக்கத்தை அந்த மக்கள் அறியாதவர்கள்.

 

இந்த நிலையில், பாஜக மாதிரி தேச நலனை சிந்திக்கும் ஒரு கட்சி, இப்படி யோசிப்பதைத் தவிர்க்க முடியாது. எப்படியென்றால்:

 

‘மக்களுக்குப் பெரிதாக நல்லது செய்ய, மக்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்தால்தான் முடியும்.  ஹரியானா தேர்தலுக்காக, பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் தருவதாகக் காங்கிரஸ் கட்சி நல்லெண்ணம் இல்லாமல் வாக்குறுதி அளித்தால், நாம் நல்லெண்ணத்துடன் இரண்டாயிரத்து நூறு தருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளிப்போம். மக்களின் ஓட்டுக்களைப் பெற்று, தேர்தலில் வென்று, நல்லாட்சி செய்து, நிர்வாகத்தைச் செம்மையாக நடத்தி, மாநிலத்தில் தொழில்வளம் பெருக்கி, மக்களுக்கு நாம் உண்மையிலேயே நன்மை செய்யவேண்டும்.’

 

ஹரியானா தேர்தல் நேரத்தில் பாஜக இப்படித்தான் நினைத்திருக்க முடியும். அது புரிந்து கொள்ளக் கூடியது.

 

இன்றைய காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்திலோ மத்தியிலோ ஆட்சிக்கு வாராமல் பார்த்துக் கொள்வதும் நாட்டு நலனுக்கு உகந்தது. அதற்காக அந்தக் கட்சியின் ஒரு சில வாக்குறுதிகளைச் செயலிழக்கச் செய்யும் விதமாக பாஜக-வும் தேர்தல் வாக்குறுதிகள் தந்து பின்னர் தனது அனைத்து வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதும் பாஜக-வின் நல்ல நோக்கம் அல்லவா?  

 

பாஜக இன்றைய தேதியில் இதைச் செய்யாமல், சாதாரண மக்களின் ஓட்டுக்களைக் காங்கிரஸ் கட்சி எளிதாகவும் குயுக்தியாகவும் ஈர்க்க அனுமதித்து, பின்னர் ‘காங்கிரஸ் கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து சாதாரண மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது’, என்று பாஜக அலுத்துக் கொண்டால் யாருக்கு என்ன லாபம்?

 

ஹரியானவில் பாஜக காண்பித்திருக்கும் நல்லெண்ணத்தை, நல் முயற்சியை,  வாழ்த்தலாம்.  

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Monday 16 September 2024

ராகுல் காந்தி பேசியது சரியா? இந்தியா ஒரு நியாயமற்ற தேசமா?


-- ஆர். வி. ஆர்

 

சமீபத்தில் அமெரிக்கா சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் அமலில் இருக்கும் இட ஒதுக்கீடு பற்றி – நமது சட்டசபைகளிலும் அரசு வேலைகளிலும் உள்ள இட ஒதுக்கீடு பற்றி – கருத்து சொன்னார். அவர் பேசியது:

 

“தற்போது இந்தியா ஒரு நியாயமற்ற இடம். அது நியாயமான இடமாக ஆகும்போது, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி நாங்கள் சிந்திப்போம்.”

 

ராகுல் மேலும் விளக்கினார்: “இந்தியாவின் 90 சதவிகித மக்கள் செயல்பட்டு முன்னுக்கு வரமுடியவில்லை.  இந்தியாவில் உள்ள தொழில்துறைத் தலைவர்கள் பட்டியலைப் பாருங்கள். அதில் ஒரு பழங்குடி மனிதனைக் காண்பியுங்கள். ஒரு தலித்தைக் காண்பியுங்கள். ஒரு ஓபிசி வகுப்பினரைக் காண்பியுங்கள்.  அந்தப் பட்டியலில் ஒரு ஓபிசி மனிதர் மட்டும் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஓபிசி மக்கள் இந்தியாவின் ஐம்பது சதவிகிதம். இப்படியான மக்களுக்கு இந்தியா வரவேற்பு முகம் காட்டவில்லை. இதுதான் பிரச்சனை.”

 

“அனைத்து மக்களும் முன்னேற இட ஒதுக்கீடு மட்டும் கருவியல்ல. மற்ற கருவிகளும் இருக்கின்றன. ஆனால் இந்தியா ஒரு நியாயமான இடமாகும் போது (when India becomes a fair place) நாங்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி யோசிப்போம்” என்று முடித்தார் ராகுல் காந்தி.

 

என்ன சொல்கிறார் ராகுல் காந்தி? பழங்குடிகள், தலித்துகள், ஓபிசி வகுப்பு மக்கள் – அல்லது வேறு சமூகத்து மக்கள் – ஆகியோரிலிருந்து பத்து இருபது மனிதர்கள் தொழில்துறைத் தலைவர்கள் ஆகிவிட்டால், அந்த அந்த சமூகத்து சாதாரண மக்கள் அனைவரும் பயனடைந்ததாக அர்த்தமா?

 

வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வருவாய் ஆகியவை ஒரு  மனிதனுக்கு அவன் எந்த மதமோ, ஜாதியோ, பிராந்தியமோ – எளிதில் கிடைப்பதில்லை, அதைப் பெறும் வழிகளை அந்த நாட்டு அரசாங்கம் ஏற்படுத்தவில்லை, விரிவாக்கவில்லை,  என்ற சூழ்நிலை இருந்தால் அந்தக் குறைதானே ஒரு மனிதனுக்கு நேரும் அநியாயமும் அநீதியும்?

 

அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகள், நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் திட்டங்களை வகுத்து அவற்றை முறையாகச் செயல்படுத்த வேண்டும். அதோடு, ஆளும் அரசியல்வாதிகள் நேர்மையாகவும் திறமையாகவும் நிர்வாகம் செய்து, லஞ்ச ஊழல் தவிர்த்து, மக்கள் நலனைப் பிரதானமாகக் கவனிக்க வேண்டும். ராகுல் பிரசங்கம் செய்த அமெரிக்காவில் அரசாங்கம் அப்படி நடப்பதால் தானே அங்கு மக்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகள் தரமாக இருக்கின்றன?

 

ஒரு காலத்தில் அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப் பட்ட கறுப்பர்கள் இன்று அந்த நாட்டு மக்களில் 14 சதவிகிதம். அமெரிக்க அரசியல்வாதிகளின் பொதுவான நேர்மையான ஆட்சியால், திறமையான நிர்வாகத்தால், இப்போது நல்ல வாழ்க்கை வசதிகள் பெறும் வழிகளைக் காண்பவர்கள் அங்கு வாழும் கறுப்பர்கள் – இந்தியாவில் கிடைப்பது போலான இட ஒதுக்கீட்டினால் அல்ல.

 

ராகுல் காந்தி பேசுவதைப் பார்த்தால், அமெரிக்காவில் 86 சதவிகித மக்கள் 14 சதவிகித மக்களிடம் நியாயமாக நடந்து அந்தப் பதினாலு சதவிகித மக்களும் முன்னேற உதவுகிறார்கள் – ஆனால் இந்தியாவில் 10 சதவிகித மக்கள் 90 சதவிகித மக்களிடம் அநியாயமாகச் செயல்பட்டு, அந்தத் தொண்ணூறு சதவிகித மக்களை நலிவுறச் செய்கிறார்களா? ஆளும் அரசியல்வாதிகள் முயன்றாலும் இதை 77 ஆண்டுகளாகத் தடுக்க முடியவில்லையா? ராகுல் பிதற்றுகிறார், பித்தலாட்டம் செய்கிறார்.

 

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி 54 வருடங்கள் மத்திய ஆட்சியை நடத்தியது - சில வருடங்கள் தோழமைக் கட்சிகளுடன். மாநிலங்கள் பலவற்றிலும் அந்தக் கட்சி ஆட்சி செய்தது. இன்றும் ஒன்றிரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.

 

ஒரு அரசாங்கமாக, காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சி செய்து நாட்டை ஓரளவுக்குத்தான் முன்னேற்ற முடிந்தது. லால் பகதூர் சாஸ்திரி காலத்துக்குப் பின்னர்  வந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களைத் தவிர யார் யாரோ அதி வேகமாக முன்னேறினார்கள். அதுவும் 2004-2014 பத்தாண்டுகளில், சில அதிர்ஷ்டசாலிகள் ராக்கெட் வேகத்தில் முன்னேறினார்கள். 

 

இந்திய மக்களை முன்னேற்ற இட ஒதுக்கீடு தவிர மற்ற கருவிகள் இருக்கின்றன என்றும் ராகுல் பேசினாரே,  இவைதான் அந்தக் கருவிகள்: அரசாங்கம் நடத்தும் அரசியல்வாதிகளிடம் காணவேண்டிய முனைப்பு, திறமை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, நேர்மை, நாணயம், வாரிசு-அரசியல் செய்யாமை, லஞ்ச ஊழல் தவிர்த்தல், தூய்மையான தேசாபிமானம் ஆகியவைதான் அந்தக் கருவிகள். இவை லால் பகதூர் சாஸ்திரிக்குப் பின் மத்தியில் ஆட்சி செய்த  காங்கிரஸ் கட்சியிடம் இருந்தனவா? ஆராய்ச்சிக்கு உரியது.

 

நமது நாட்டில் பெருவாரியான மக்கள் (அது 90 சதவிகிதமோ, கூடக் குறையவோ) இன்றும் சாதாரண நிலையில் தவழ்கிறார்கள். இதற்கு, நாம் ஒரு பரந்துபட்ட பன்முகம் கொண்ட நாடு, அதை நிர்வகிப்பதில் சிக்கல்கள் உண்டு என்பது ஒரு காரணம்.  மற்றபடி, நம்மை ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நமது மக்களின் சாதாரண வாழ்க்கை நிலைக்கு முக்கிய காரணம் – கடைசியாக ஆட்சி செய்தவர்கள் சற்று அதிகமாக.

 

இந்தக் காரணங்களை ராகுல் காந்தி வெளிப்படையாக ஏற்றுக் கொண்டால், அவர் கட்சியும் அவரது தாயும் தந்தையும், அதற்கு உண்டான பொறுப்பை ஏற்கவேண்டுமே? அதனால், இந்தியா ஒரு நேர்மையான இடமல்ல என்று தேசத்தையே மட்டம் தட்டி ஒரு புளுகை அவிழ்த்து விட்டார் ராகுல். அவர் பேசியதில் ஒரு சுயலாபக் கணக்கும் இருக்கிறது.

 

என்ன இருந்தாலும் பெருவாரியான இந்திய மக்கள் அப்பாவிகள். ராகுல் காந்தி என்பவர் நேரு வம்சத்தவர் என்ற காரணத்துக்காக, ராகுல் என்ன பிதற்றினாலும், அவர் என்ன கோமாளித்தனம் செய்தாலும், அவர் தலைமையே ஏற்க, அவர் சொல்படி ஓட்டளிக்க, அந்த மக்களில் பலர் தயாராக இருக்கிறார்கள். அப்பாவிகளான அவர்கள் சரியாகக் கிரகிக்க முடியாத ஒரு விஷயம் உண்டு.

 

ஒரு காலத்துக்கு மேல், ஒரு அளவுக்கு மேல், இட ஒதுக்கீடு தொடர்ந்தால், அதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் கையாலாகாத் தனம், கபடம், அப்பாவி மக்களை மயக்கி ஏமாற்ற நினைக்கும் குயுக்தி என்று அர்த்தம். இதை அந்த மக்கள் நலனில் ஒருவர் எடுத்துச் சொன்னால், அவர் அடித்தட்டு மக்கள் நலனுக்கு விரோதி என்று அவர்மீது பல அரசியல் கட்சிகள் கீழ்த்தரமாகக் குற்றம் சொல்லும். ஆகையால் இட ஒதுக்கீடு என்பது நடைமுறையில் ஒரு சிக்கலான விஷயம். அரசியலில் இருக்கும் நல்லவர்கள் கூட இதில் எச்சரிக்கையாக இருந்தவாறு,  விட்டுப் பிடிக்கத்தான்  நினைப்பார்கள்.  

 

அப்பாவி இந்திய மக்களிடம் ராகுல் காந்தி வில்லத்தனமாகச் சொல்ல விரும்புவது: “நீங்கள் இந்திய ஜனத்தொகையில் 90 சதவிகிதம். இந்தியா உங்களுக்கு அநியாயம் செய்வதால் நீங்கள் முன்னேறவில்லை. பாஜக-வும் மோடியும்தான் இதற்குக் காரணம். நான் பிரதமரானால்  நீங்கள் ஏதாவது தொழில் தொடங்கி முன்னேற, அல்லது உங்களுக்கு வேலை வாய்ப்புகள் ஓஹோவென்று அதிகரிக்க, உங்கள் வாழ்க்கை வசதிகள் பெருக, நான் இட ஒதுக்கீட்டையும் அதிகரித்து வழி செய்வேன். எங்கள் கட்சிக்கும் கூட்டணிக்கும் ஓட்டளியுங்கள்.”  

 

90 சதவிகித இந்திய மக்களுக்கு அநியாயம் செய்யும் அரசியல் தலைவர் யாரென்று  தெரிகிறதே!

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Saturday 14 September 2024

ராகுல் காந்தி: அமெரிக்காவிலும் அதே அசடு!

 

-- ஆர். வி. ஆர்

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒரு விசேஷ குணம் உண்டு. என்னவென்றால்: தனது சிறுபிள்ளைத்தனம், முதிர்ச்சியின்மை இரண்டையும் மேடை போட்டுக் காட்சிப் படுத்துவார். காங்கிரஸ் கட்சியும்  அதைக் கொண்டாடும்.

 

சமீபத்தில் இதற்காகவே மூன்று நாட்கள் அமெரிக்கா சென்று வந்தார் ராகுல் காந்தி. சில பல்கலைக்கழக விவாத அரங்குகளில், வேறு சில இடங்களில், அவர் பேசினார். கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது, பிரதமர் மோடி வழிநடத்தும் இந்திய அரசை அவர் பல வகையில் குறை சொன்னார். அங்கு அவர் பேசியவற்றில் இவையும் உண்டு:

 

“இந்தியாவில் சீக்கியர்கள் டர்பன் அணிவதற்குப்  பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்”.  (ஓஹோ! மோடி மந்திரி சபையில் இருக்கும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி என்ற ஒரே சீக்கியர்தான் தற்போது இந்தியாவில் சுதந்திரமாக டர்பன் அணிகிறாரா?)

 

“இந்தியாவில் திறன்களை அழிப்பது அதிகம் நடந்துவருகிறது. அதை நிறுத்த வேண்டும். மேலும் திறன்களை வளர்க்க வேண்டும்.”  (காங்கிரஸ் கட்சிக்குள் கூட  சிறிதும் திறன் நுழையாமல் வளராமல் பார்த்துக் கொண்டது நீங்களும் உங்கள் அன்னையும்தானே, ராகுல்!)

 

பல ஆண்டுகளாக பாஜக-வும் பிரதமர் மோடியும் மக்களிடையே பயத்தைப் பரப்பினார்.  ஆனால் 2024 தேர்தலுக்குப் பிறகு மக்களின் அச்ச உணர்வு மறைந்துவிட்டது (காங்கிரஸ் இடம் பெற்ற 'இண்டி' கூட்டணிக்கு மக்கள் 2024 லோக் சபா தேர்தலில் பெரும்பான்மை தராதது, யார் மீதான அச்சத்தினால்?)

 

நான் இந்தியாவில் 4000 கிலோமீட்டர் பாரத் ஜோடோ என்ற பெயரில் யாத்திரையாக நடந்தேன். காரணம், தொலைக் காட்சிகளும் மற்ற ஊடகமும் எங்கள் பேச்சுக்களை மக்களிடம் கொண்டு செல்லவில்லை.  இந்தியாவில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் நான் நேரடியாகச் சென்று மக்களைத் தொடர்பு கொண்டேன்” (அப்படியா? நீங்கள் யாத்திரை போகமலே, அமெரிக்காவில் இப்படிப் பேசியது எப்படி இந்திய ஊடகங்களில் வந்தது?)

 

 

“பிரதமர் மோடியை நான் உண்மையில் வெறுக்கவில்லை. அவர்மீது எனக்கு அனுதாபம்தான் ஏற்படுகிறது.”  (“தேசத்தின் காவலாளி மோடி ஒரு திருடர்” என்று முன்பு நீங்கள் பேசிவந்தீர்கள். அவர் மீதான அனுதாபத்தை நீங்கள்  எப்படியெல்லாம் வெளிப்படுத்தினீர்கள்! மெய் சிலிர்க்கிறதே, ராகுல்!)

 

இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை.”  (சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்க மண்ணிலிருந்து கருத்து சொல்லும்போது, இந்திய சட்டசபைகள் மற்றும் அரசு வேலைகளில் நீடித்து வரும் இட ஒதுக்கீட்டை நீங்கள் நியாயப் படுத்தத் தயங்கினீர்கள். ஆகையால், இந்தியாவை ‘நியாயமில்லாத நாடு’ என்று நீங்கள் வெட்கமில்லாமல் குறிப்பிட்டு, இட ஒதுக்கீட்டில் நமது அநேக அரசியல் தலைவர்கள் ஆடும் கபட நாடகத்தை மறைத்து விட்டீர்களே, ராகுல்!)

 

நாம் அடுத்த வீட்டில் இருக்கும்போது, நமது வீட்டில் உள்ளவர்களைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசலாமா? கூடாது. அது பண்பற்றது. அப்படிப் பேசுவதில் உண்மை இல்லை என்றால் நம் வீட்டிலேயே கூட அப்படிப் பேசுவது தவறு. அசட்டுத்தனமும் கெட்ட எண்ணமும் சேர்ந்த ராகுலுக்கு இது புரியாது.

 

        ஒரு நாட்டின் செயல்பாடுகள், அங்கு ஆட்சியில் உள்ள தலைவரின் பேச்சுக்கள், மற்ற சில நாடுகளின் மீது தாக்கம் ஏற்படுத்துகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த நாடுகளின் மக்களும் அதில் நாட்டம் கொள்ளலாம், அந்த விஷயம் பற்றிக் கருத்து சொல்லலாம். அதில்லை என்றால், ஒரு நாட்டுத் தலைவரின் பேச்சிலும் செயலிலும் மற்ற நாட்டு மக்களுக்கு என்ன ஆர்வம் இருக்கும்? அவருடைய நாட்டின் அரசியல் அக்கப்போரில் மற்ற நாட்டவர் வெட்டியாகக் கவனம் செலுத்துவார்களா?

 

         இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்தியாவுக்கு வந்து அந்த அந்த நாட்டை ஆளும் மற்ற கட்சிகளைப் பற்றி விமரிசனம் செய்ய வந்தால் தில்லியிலும் ஹைதராபாத்திலும் சென்னையிலும் உள்ளவர்கள் அதில் ஆர்வம் காட்டுவார்களா? ராகுலுக்கு இது ஏன் பிடிபடவில்லை? அவர் சிறுபிள்ளைத்தனம் மிக்கவர், முதிர்ச்சியற்றவர், என்றுதானே அர்த்தம்?

 

சரி, ராகுல் காந்திதான் அறியாதவர். அமெரிக்காவில் இருப்பவர்கள் – அவர்கள் பிறப்பால் இந்தியத் தொடர்பு உள்ளவர்களோ அல்லது அமெரிக்கர்களோ – ஏன் அசட்டு ராகுல் பேச்சைக் கேட்க வருகிறார்கள்? காரணம் இருக்கிறது.

 

ராகுல் காந்தி அரசியலில் அறியாதவராக, விளையாட்டுப் பிள்ளையாக, கிட்டத்தட்ட ஒரு கோமாளியாகவே கூட இருப்பதால், அவர் எங்கும் அப்படிப் பேசுவதால், அவருக்கான பிராபல்யம் அப்படி இருக்கிறது. அவரை இளக்காரத்துடன் பார்த்து ரசிக்க, அப்படிப் பொழுது போக்க, வெளிநாட்டிலும் சிற்சில மனிதர்கள் வரத்தானே செய்வார்கள்? இது போக, பிரதமர் மோடியை எதிர்க்கும் சில வெளிநாட்டுச் சக்திகள், இந்தியா பெரிய அளவில் வளர்வதை விரும்பாத அந்த சக்திகள், அவர்கள் நோக்கத்திற்காக அசட்டு ராகுலை முடிந்தவரை இப்படியெல்லாம் கூட உபயோகித்துக் கொள்ளலாம், யார் கண்டது?

 

பிரதமர் மோடி ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் புடினுடன் பேசுகிறார். பிறகு உக்ரைனுக்குச் சென்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசுகிறார். இரு நாட்டுத் தலைவர்களும் அந்த நாட்டு மக்களும், உலகின் மற்ற நாடுகளும் கூட, மோடியின் இந்தச் செயலை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஏன்? அவர் இரண்டு அண்டை நாடுகளுக்குச் சென்று ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் இடித்துப் பேசியதாலா? இல்லை. அந்த இரு நாடுகளுக்கிடையே தொடரும் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தன்னால் ஆனதை மோடி முயற்சிக்கிறார், அவர் முயற்சிக்கு உலகளவில் மதிப்பும் இருக்கிறது,  என்பதால் மோடி கவனிக்கப் படுகிறார்– முடிவு நம் கையில் இல்லை என்றாலும். ரெண்டாம் கிளாஸ் ராகுலுக்கு இதெல்லாம் பத்தாம் கிளாஸ் விஷயம். 

 

பாவமான ராகுல் காந்தி. பரிதாபமான அவர் கட்சி. இவரால், இவர் கட்சியின் லட்சணத்தால், பயனடைந்து  அவரவர் வழியில் சுகிக்கும் அக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். இதுதானே, ரத்தம் சிந்திய காலத்துக் காங்கிரஸின் இன்றைய அவல நிலை

* * * * *

                                 Author: R. Veera Raghavan, Advocate, Chennai