-- ஆர். வி. ஆர்
மக்களவையிலும் மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யும் அரசியல் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதற்கு எம்.பி-க்களின் அதிக பட்ச அமோக ஆதரவும் கிடைத்தது. இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் – நிபந்தனையாக இதற்கு விதிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் நீண்ட காலம் பிடிக்கும் என்பதால்.
மத்திய மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் ஆவதை எல்லா அரசியல் கட்சிகளும் பேச்சுக்கு வரவேற்கின்றன, ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை எல்லாக் கட்சித் தலைவர்களும் உளமார வரவேற்பார்களா? நிச்சயமாக இல்லை. ஏன் என்று பார்க்கலாம்.
உலகெங்கும் அரசியல் என்பது ஒரு பொதுவெளி அதிகார ஆட்டம். ஆட்சியும் நிர்வாகமும் அதில் அடங்கும். திரைமறைவு வேலைகளும் அதில் உண்டு. ஒரு கட்சியின் தலைவன் என்பவன், அதிகாரத்தைப் பிரயோகித்து செயல்பட வேண்டியவன். அதிகார சக்தியிலும் யுக்தியிலும் கட்சிக்குள் அவனை விடக் குறைந்தவர்கள் அந்தத் தலைவனுக்குக் கட்டுப்பட்டு கட்சியில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களாக இருப்பார்கள்.
அரசியல் என்னும் அதிகார ஆட்டத்தில் அதிக ஆர்வம்
உள்ளவர்கள் ஆண்கள். பெண்களில் மிகக் மிகக் குறைவான சதவிகிதத்தினர் மட்டும் அத்தகைய
ஆர்வம் கொண்டவர்கள். ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்றவர்கள் அரிது. ஆகையால் அரசியலுக்கும் சட்டசபைகளுக்கும் தாமாக வர நினைக்கும் பெண்கள் சுதந்திரமாக வரட்டும் என்ற அளவில்
சட்டம் இருந்தால் போதுமானது. அப்படியான சட்டம் ஏற்கனவே நமக்கு இருக்கிறது. அதன்படி
இப்போது நமது பாராளுமன்றத்தில் சுமார் 15 சதவிகிதம், மாநில சட்டசபைகளில் சுமார் 10
சதவிகிதம், என்ற சராசரி அளவில் பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இப்படித்தான் எல்லா அரசியல் கட்சிகளின் உண்மையான
எண்ணமும் இருக்கும் – அதில் தவறில்லை.
இயற்கையிலேயே
பெண்களுக்கு இந்த அதிகார ஆட்டத்தில் ஆர்வம் இல்லை என்பதால் அவர்கள் மதிப்புக் குறைந்தவர்கள்
அல்ல. அவர்களும் சமூகத்தில் ஆண்களின் அளவிற்கு முக்கியமானவர்கள்தான். இது ஒரு புறம்.
மற்றொரு புறத்தில், பெண்களுக்கே அந்த ஆர்வம் அதிகம் இல்லை என்றாலும் எல்லாக்
கட்சிகளும் மத்திய மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதைக் கைதட்டி வரவேற்கிறார்கள் – மனம் விரும்பி அல்ல. இந்த
விஷயத்தில் கட்சிகளின் எண்ணத்திற்கும் பேச்சுக்கும் இடையே உள்ள முரண்பாட்டிற்கு என்ன காரணம்?
“பெண்களுக்கும் தாய்மார்களுக்கும்
நாங்கள் குறிப்பாகத் துணை நிற்போம்” என்று
பேசி எல்லாக் கட்சிகளும் பெண்களின் ஓட்டிற்கு
வலை வீசுகின்றன. பாஜக இந்தப் பேச்சை செயலிலும் காட்டி இருக்கிறது (உதாரணம்: தகுதியுள்ள பெண்களுக்கு
இலவச எரிவாயு இணைப்பு, வீடுகளில் டாய்லெட்டுகள் கட்ட உதவி) என்பதும்
உண்மை.
பெண்களைக் கவரும் இந்தப் போட்டியில் முன்னேற, “மத்திய மாநில சட்ட சபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்” என்று ஒரு கட்சி சிறிதாக மூச்சு விட்டாலும், மற்ற கட்சிகளும் “ஆஹா, நாங்களும் அதைத்தான் கேட்கிறோம்! முன்னரே கூட கேட்டோம்!” என்று வேறு வழி இல்லாமல் சொல்கிறார்கள் – அப்படியான இட ஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்ற வேண்டுதலோடு. அது உண்மையில் கிடைத்து விட்டால், தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளைப் பெண்களுக்கு அளித்துவிட்டு இதுவரை தங்கள் கட்சியில் ஆண்கள் போட்டியிட்ட தொகுதிகளை, அவற்றின் எண்ணிக்கையை, எந்தக் கட்சி மகிழ்வுடன் குறைத்துக் கொள்ளும்?
நினைத்துப்
பாருங்கள். தமிழகத்தில் இப்போது உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு
என்பது 13. எந்தப் பெரிய கட்சி, அல்லது அது தலைமை வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் 13
இடங்களைப் பெண் வேட்பாளர்களுக்கு முழுமனதுடன் வழங்க விரும்பும்? ஆனாலும் பாராளுமன்றத்தில் அந்தக் கட்சிகள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்து
ஓட்டளித்தன. இந்த இட ஒதுக்கீடு நடைமுறை ஆகும் போது, பெரிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள சிறு சிறு கட்சிகளுக்குக்
கூடியவரை பெண்கள் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, தங்கள் கட்சியில் உள்ள ஆண் வேட்பாளர்களுக்கு
அதிகமான பொதுத் தொகுதிகளைத் தர முயலும்!
பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டிற்கு எல்லாக் கட்சிகளின் மனம் நிறைந்த ஆதரவு உண்டென்றால், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு இதுநாள் வரை நடந்த தேர்தல்களில் அந்தக் கட்சிகள் தாங்களாகவே மூன்றில் ஒரு பங்கு இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கலாமே? அந்தப் பெண் வேட்பாளர்களில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்குத் தேவையான பங்கையும் அந்த அந்தக் கட்சிகளின் விருப்பப்படி அளித்திருக்கலாம். அதைச் செய்ய சட்டத்தின் அனுமதியோ நிர்பந்தமோ தேவையும் இல்லையே?
2024-ல் நடக்கப் போகும் மக்களவைத் தேர்தலிலும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கான மூன்றில்-ஒரு-பங்கு இட ஒதுக்கீட்டை அனேகமாகப் பின்பற்றப் போவதில்லை – சட்டத்தின் கட்டாயம் அப்போது வந்திருக்காது என்பதால். எல்லா அரசியல் கட்சிகளும் பெண்களின் வாக்குகளைக் குறி வைக்கப் பொதுவெளியில் பாசாங்கு செய்து, தங்கள் பாசாங்கிற்குத் தாங்களே இரை ஆகி, இந்த அரசியல் சட்ட திருத்தத்தை இப்போது செய்திருக்கிறார்கள்.
ஆண்கள் பலருக்கும் இந்த சட்டத்தினால் சாதாரணப் பெண்களுக்கு விளையும் நடைமுறைப் பயன்கள் பற்றிய சந்தேகம் இருக்கும். ஆனால் அதைப் பற்றிக் கேட்டால் தாங்கள் பெண்களின் முன்னேற்றத்தை எதிர்க்கும் பழமைவாதிகள் என்ற பெயர் வரலாம் என்று பெரும்பாலான ஆண்கள் பேசாமல் இருப்பார்கள். பெண்கள் பலரும் அவர்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டை வரவேற்பார்கள். தாங்கள் சார்ந்த நாடு, மொழி, மதம், ஜாதி, பாலினம் போன்ற வகைகளில் எல்லாருக்கும் ஒரு இனப் பற்றுதல் இருக்கும். அந்த இயற்கையான இனப் பற்றுதல் காரணமாக, இந்தப் புதிய இட ஒதுக்கீட்டைப் பலதரப்பட்ட பெண்களும் வரவேற்பார்கள்.
இதில்
ஒரு முக்கியக் கேள்விக்கு இடம் உண்டு. பாஜக எதற்கு இந்த சட்ட திருத்தத்தை இப்போது படு
அவசரமாகப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து, அனைத்து எதிர்க்கட்சி
உறுப்பினர்களையும் – எல்லாரும் டி.வி-யில் பார்க்கிற மாதிரி – அவர்கள் முகத்தில் சுரத்தில்லாமல்
அவர்களை உள்ளூர அழ வைத்தது? இந்த சட்டத்தையும்
ஆதரிக்க வைத்தது? இந்த சட்ட திருத்தம் பாஜக-வின் தேர்தல் வாக்குறுதி
என்பது ஒரு சிறிய காரணம் தான். இதன் உண்மையான காரணம் எதிர்க் கட்சிகள் அறிந்தது, ஆனால்
அவர்களும் வெளியில் சொல்ல முடியாதது.
சாமர்த்திய
அரசியல் செய்யாமல் ஒரு பெரிய தலைவன் தேர்தலில் ஜெயிக்க முடியாது, நாட்டுக்கு நல்லதும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த அடிப்படை
உண்மையை நன்கு அறிந்தவர். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக-விடம்
பெரிதாகத் தோற்ற எதிர்க் கட்சிகள் இப்போதும் ஒரு கூட்டணி அமைத்து, 2024 மக்களவைத்
தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக-வைத் தோற்கடிக்க வழி தேடுகின்றன. அந்த எதிர்க் கட்சிகளின்
தலைவர்கள் அனைவரும் விபரீதமானவர்கள்.
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, நீதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கேஜரிவால், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஷரத் பவார், மு. க. ஸ்டாலின், கம்யூனிஸ்டுகள் போன்றவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வருவதை நினைத்தாலே நமக்கு சித்தம் கலங்கும், குலை நடுங்கும். அவர்கள் பாஜக-வைத் தோற்கடிக்க எடுக்கும் எந்த முயற்சியையும் பாஜக உதாசீனம் செய்ய முடியாது. இந்த எதிர்க் கட்சித் தலைவர்களை ஆட்சியில் இருந்து தள்ளிவைத்து மக்கள் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும், நாட்டையும் முன்னேற்றி வலுவாக்க வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி ஒன்று நினைத்திருக்கலாம்.
எதிர்க்
கட்சிகள் எதிர்ப்பே சொல்ல முடியாதபடி பாராளுமன்றத்தில் அவர்கள் வாயைக் கெட்டியாக
அடைத்துவிட்டு, அனைத்துப் பெண் வாக்காளர்களையும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பரவலாக
ஈர்ப்பதற்கு இன்னொரு யுக்தியாக இந்த அரசியல் சட்ட திருத்தத்தை மோடி எண்ணியிருப்பாரோ? அந்தத் தேர்தலில் இது பாஜக-வின் சக்தியை இன்னும் உறுதி செய்யும், அதிகப் படுத்தும். இந்த ஒரு காரணம் போதுமே
– தேச நலனில் நாம் இந்தச் சட்டத்தை வரவேற்க?
*
* * * *
Author:
R. Veera Raghavan, Advocate, Chennai