Wednesday 19 July 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: காலை எழுந்த உடன் குவாட்டரா? முத்சாமி, நீ எங்கியோ போய்க்கின!

 

-- ஆர். வி. ஆர்

 

முத்சாமி தெரிமா? அதான்பா, முத்துசாமின்னு நீட்டமா சொல்வாங்க பாரு, அந்த முத்சாமிதான். அவுருதான் இப்ப திமுக ஆட்சில மதுவிலக்கு மந்திரி. அதான், டாஸ்மாக் மந்திரி. இப்ப அவுரு ஒரு ஸ்டேட்மென்ட் குட்தாரு பாரு, சும்மா தூள்!

 

“காலைல சாராயம் குடிக்கிற மன்சனை, குடிகாரன்னு எவனாச்சும் சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும். அத்தை மட்டும் என்னால பொறுத்துகினு போ முடியாது. சாயங்காலம் குடிக்கிறவன் விசயம் வேற. ஆனா காலைல குடிக்கிறவன் சும்மா இல்லை. அவன் கடுமையா வேலை செய்றவன். பாவம், வேற வளி இல்லாம குடிக்கிறான்.  அவன் சாக்கடைல எறங்கி வேலை செஞ்சா அது மட்டும் வேணுமா? அந்த ஆளப் போய் ஏன் குடிகாரன்னு கேவலமா சொல்லிக்கிறீங்க?  எதுனா மாத்து வளி இருந்தாக்க சொல்லு. ஆனா அவனை மட்டும் குடிகாரன்னு சொல்லிக்காத” அப்பிடின்னு எகிறினாரு  முத்சாமி.

 

முத்சாமி, நீ நிதானத்துல இல்லாம இப்பிடி பேசிருந்தா, போவட்டும்னு  உன்னை மன்னிச்சிக்கலாம். ஆனா நீ சாதாரணமா இருந்தாலும் லூசா பேசிக்கிற.

 

டாஸ்மாக் யாவாரம் பெர்சாவணும், அரசாங்கம் நெறய சம்பாரிக்கணும், அதுல நீ பேர் வாங்கணும்னு உனக்கு ஆசை. காலைல வேலைக்கு போறவன் குவாட்டர் எத்திக்கினு போனாலும், வேலைல தடுமாற்னாலும், வர்ற காசை குடிச்சே தீத்தாலும், அவன் குடும்பம் சீரளிஞ்சாலும் ஒனக்கு என்னா கவலை? டாஸ்மாக் யாவாரத்துல ஒனக்கு பேர் கெடிக்கணும்னு நீ ஜாலியா பெனாத்திகினு இருக்க. அவ்ளதான்.  

 

சாக்கடைல எறங்கி கடுமையா வேலை செய்றவனுக்காவ பேசுறயே, அப்பிடி எத்தினி ஆள் தமிள் நாட்டுல இருப்பான்ற? நீ சொல்றதைப் பாத்தா, பத்தாயிரம் இருவதாயிரம் பேர் டெய்லி தமிள் நாட்டுல சாக்கடை அடைப்பு எடுத்துக்கினே இருப்பானா? அம்பத்தி அஞ்சு வருசமா திராவிடக் கட்சிங்க  தமிள் நாட்ல ஆட்சி பண்ணியும், அத்தினி பேர் வாள்க்கை சாக்கடைலதானா?

 

உன் முதல் அமைச்சரு லண்டன், துபாய்னு போய் வந்தாரே, அந்த நாட்ல தெனம் இப்பிடித்தான் வார்டுக்கு வார்டு சாக்கடைல ஆள் எறங்கி அடைப்பு எடுத்துக்கினே இருக்கானா? அங்க சாக்கடை திட்டம் ஒளுங்கா அமைஞ்சிருக்கு, பராமரிப்பு மொறையா இருக்கு, அடைப்பு எடுக்க மிசின் இருக்குல்ல? நீ தமிள் நாட்டுல அதை செய்வியா, இல்லை நம்ம ஆளுங்க சும்மா தண்ணியப் போட்டு சாக்கடைக்குள்ள எறங்கி மூணு மணி நேரம் வேலை செய்யட்டும்னு நெனப்பியா?  

 

உடம்பால கடுமையா வேலை செய்றவன் மேல பீலிங்கா இருக்கியா, முத்சாமி? அப்ப அதே போல வேற யாரு வேலை செய்றான்னு பாரு. நெலத்துல வெவசாயம் பாக்கறவன் குனிஞ்சு நிமிந்து உளைக்கறான். வெயில்ல நின்னு ரோடு போடறவன் கடுமையா வேலை செய்றான். நெடுஞ்சாலைல லாரி பஸ் ஓட்றவனும் அப்பிடித்தான். மூணு சக்கர சைக்கிள்ள எல்.பி.ஜி சிலிண்டர் வச்சு தள்ளிக்கினு வீடு வீடா போறானே, அவனும் கடுமையா வேலை பாக்கறான். நடு ரோட்ல நிக்கிற டிராபிக் போலீசும் சுளுவா வேலை பாக்கலை. அப்பறம் மிலிட்டிரி ஆளையும் கவனி. அவன் வேலை செய்யாம தொப்பை வளத்துக்கினு இருக்கானா? சீனா பாகிஸ்தானோட எப்பவும் சண்டை வரலாம்னு அவன் வருசம் பூரா தயாரா இருக்கணும். அதுக்கு தெனம் கடுமையா பயிற்சி எடுத்துக்கினே இருக்கணும். இவுங்க எல்லாரும் காலைல தண்ணி போட்டுக்கினு வேலைய ஆரம்பிச்சா, பாவம் அவுங்களுக்கு வேற வளி இல்லை, அவுங்களை குத்தம் சொன்னா உனக்கு கோவம் பொத்துக்கினு வரும்னு பேசுவியா?

 

டாஸ்மாக் கடைங்க போர்டை பாத்துக்கிறயா?  ‘மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு’ன்னு அதுலயே எளுதிருக்கு. கொரோனா நோய் வந்துச்சே, அதுவும் அப்பிடித்தான்  நாட்டுக்கு, வீட்டுக்கு, உசிருக்கு கேடு. அப்பறம் ஏன் அரசாங்கம் சாராயம்னு ஒரு கேட்டை விக்குது? சரி, விக்கிற. அதோடு நிறுத்திக்க. வேலைக்குப் போறவன் காலைலயே சரக்கடிச்சிட்டுப் போனா அவனைத் தட்டிக் குடுத்து ‘நீ ஊத்திக்க ராசா’ன்னு சொல்லுவியா? அப்ப குடிச்சா மட்டும் நாட்டுக்கு. வீட்டுக்கு, உசிருக்கு தாவலையா?  இன்னா பேசுற முத்சாமி?

 

சாயங்காலம் குடிக்கிறவனைப் பத்தி தப்பா பேசலாம், ஆனா காலைல குடிக்கிறவனைப் பத்தி தப்பா பேசக் கூடாதுன்னு சொல்லிக்கிற. முத்சாமி, நீ பேசுறது உனக்கே டமாஸா இல்லை?

 

மது குடிக்கிறவன் எல்லா நாட்டுலயும் இருக்கான். மேலை நாடுகள்ள அது சமூக கலாசாரமா இருக்குது. வேலை முடிஞ்சு சாயங்காலம் ரிலாக்ஸ் பண்ண சொல்ல, அவன் அவன் அளவோட குடிப்பான். குடும்பத்தோட கூடி உக்காந்தும் குடிப்பான். அது அவன் கலாசாரம். அதுக்கு ஏத்த வருமானமும் அவனுக்கு இருக்கு. நம்ம அன்னாடங் காச்சி மக்கள் அப்பிடி இல்லியே? நம்ம சாதாரண மக்களோட குடும்ப நன்மைக்கு, வளர்ச்சிக்கு, சாராயம் கெடுதலா இருக்கு, பேஜார் பண்ணுது. நம்ம நாட்டு சமூக கலாசாரத்துக்கும் சாராயம் முக்கியம் இல்லை. அதான் விசயம். இதுல போய், காலைல குடிக்கிறவன் பாவம், ஒஸ்தின்னு பேக்கு மாதிரி பேசிக்கிற.

 

நீ இதுக்கு மேலயும் பேசுனது நாபகம் இருக்கா, முத்சாமி? “இளைஞர்கள் புதுசா குடிக்க வந்தா, டாஸ்மாக் கடைல சேல்ஸ் பண்றவுங்க எங்களுக்கு தெரிவிக்கணும். அந்த இளைஞர்களுக்கு நாங்க கவுன்சிலிங் குடுப்போம்.  குடிக்க வர்றவங்கள்ள, வயசானவுங்க, மோசமான உடல்நிலை இருக்கவங்க யாருன்னு லிஸ்ட் எடுத்து அதையும் எங்களுக்கு டாஸ்மாக் சேல்ஸ்மேன் சொல்லணும். அவுங்களையும் நாங்க கவுன்சிலிங் குடுத்து ஒழுங்கு படுத்தணும்” அப்பிடின்னு ரீல் விட்டுக்கினு கூலா காமெடி பண்ணிக்கிற.

 

புதுசா குடிக்க வர்ற இளைஞர்னா யாரு? நெத்திலயே எளுதி ஒட்டிட்டு டாஸ்மாக் கடைக்கு வருவானா? மொதல்ல யாராவது பிரெண்டு வாங்கிக் குடுத்து குடிக்கப் பளகிருப்பான். அப்பறம் அவனும் குடிக்கப் பளகினவன் தான். அவனே கடைக்குப் போய் வாங்கிக்குவான். டாஸ்மாக் கடைல சரக்கு வாங்கற கஸ்டமரைப் பாத்து “நீ இப்பதான் குடிக்க வர்றியா? உன் விவரம் சொல்லு. நீ வயசானவனா? உன் அட்ரஸ் சொல்லு. முத்சாமி ஆளு அனுப்பி உனக்கு செமத்தியா கவுன்சிலிங் குடுப்பாரு”ன்னு சேல்ஸ்மேன் பேசுவானா? முட்டாத்தனமா ஒரு டாஸ்மாக் சேல்ஸ்மேன் அப்பிடிப் பேசுனா, வர்ற கஸ்டமர் அடுத்த கடைக்குப் போயி அந்தக் கடைல சேல்ஸ் ஜாஸ்தி பண்ணுவானே? பாட்டிலுக்குப் பத்து ரூவா அதிகமா வாங்கும்போது, வர்ற கஸ்டமர் குறையட்டும்னு கடைக்காரன் நெனைப்பானா? இல்ல, முத்சாமி நீதான் அப்பிடி நெனப்பியா?

 

முத்சாமி, மொதல்ல உன் கட்சிக்குள்ள உன் நிலவரம் என்னன்னு தெரிஞ்சிக்கினியா? பளைய டாஸ்மாக் மந்திரி செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால கைதாகி இருக்காரு.  அதுனால அவருக்குப் பதிலா டாஸ்மாக் துறையை ஸ்டாலின் உன் கைல குட்துக்கிறாரு. செந்தில் பாலாஜி டாஸ்மாக் துறைல பெசலா என்ன பண்ணி ஸ்டாலினை எப்பிடி திருப்தி பண்ணிக்கிறாருன்னு பாரு. நீ உசாரா இருந்துக்கினு அதைக் கவனிப்பியா, காமெடி பேசிக்கினு இருப்பியா? போ, திராவிட மாடல் பத்தி கவுன்சிலிங் எட்துக்க!

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

3 comments:

  1. very good writeup
    Wish the concerned Minister reads this takes the advice.

    ReplyDelete
  2. The tamilnadu public are gullible, they dont get good water, good roads, good government schools but the TASMAC to increase sales! Naasama pona thamilnaadu!

    ReplyDelete
  3. If the minister is more concerned about morning drinkers, why can't he give them free?

    ReplyDelete