Tuesday, 27 June 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: கண்ணு செந்தில் பாலாஜி, அல்லார் கண்ணும் உம் மேலதான்!

 

-- ஆர். வி. ஆர் 

 

செந்தில் பாலாஜி விசயம் தெரியுமில்ல? ஆமா, அந்த கில்லாடி மந்திரிதான்.

 

அமலாக்கத்துறை இவுரை விசாரிக்கப் போச்சு.  இவுரைப் பத்தி எல்லா விசயமும் தெரட்டி வச்சிக்கினு, “இப்பிடி இப்பிடி இருக்கு. இங்க இங்க இவ்ள போயிருக்கு. இதான் ரூட்டு. இந்த ரூட்ல நீ நிக்கிற. உன் குடும்பத்துல, உனக்கு வேண்டப்பட்டவங்க இந்த ரூட்ல வந்துகிறாங்க. இந்த ரூட்டு லாங்கா எங்க போவுது. வெவரம் சொல்லு” அப்பிடின்னு கேக்கப் போயிருப்பாங்க.  அது  இல்லாம, “அண்ணாத்தே, ஊர்ல யாரோ உன்னப் பத்தி தப்புத் தப்பா பேசிக்கிறாங்க. அதுல உண்மை இருக்குதா, யோசிச்சு சொல்லு.  அதெல்லாம் பொய்யி.  நீ உத்தமன்னு சொன்னியானா, டாங்க்ஸ்  சொல்லிட்டு போயிக்கினே இருப்போம்”னு டைலாக் பேசவா செந்தில் பாலாஜிய  விசாரிப்பாங்க?

 

அமலாக்கத் துறை கேட்ட கேள்விக்கு செந்தில் மேலயும் கீளயும் பாத்துக்கினு, தாகமா இருக்குன்னு தண்ணி வாங்கி குடிச்சிக்கினு, “என்ன கேட்டீங்க?”ன்னு கேள்விய திருப்பிக் கேக்க வச்சு, அப்பறம் கொட்டாவி விட்டுக்கினு,  ‘தெரில, நாபகம் இல்ல”ன்னு சிரிச்சிக்கினே பதில் சொல்லிருப்பாரு. வேற வளி இல்லாம இவுரைக் கைது பண்ணி கார்ல ஏத்துனப்போ, இவுரு பின் சீட்டுல படுத்துகினு நெத்திலயும் மார்லயும் கை வச்சு சீட்லயே அரை உருளு உருண்டு அளுதாரு. இவுருக்கு ஆர்ட்டுல என்னவோ மக்கர் பண்ணுது, அதுனால அந்த நிமிட்லேர்ந்து டாக்டருங்க மட்டும்தான் இவருகிட்ட பேசணும். அமலாக்கத்துறை அப்பால போயிக்கணும்னு சிக்னல் குட்தாரு.     

 

டிவி-ல பாத்தில்ல?  செந்தில் கார் சீட்டுல படுத்துக்கினு இருக்காரு. அவர் வாய் அளுவுது, ஆனா கண்ணு அளுவல. மெய்யாலும் மார்ல வலி இருந்திச்சுனா வாய் மட்டும் பெரிசா அளுவும், ஆனா கண்ணுல தண்ணி வராதா? நீ நடிச்சுக்கினே வாயை மட்டும் அள வச்சிரலாம். அளுவுற சவுண்டும் குட்துக்கலாம். ஆனா நடிப்புல கண்ணை அள வெக்கணும்னா, சிவாஜிக்கே கிளிசிரீன் ஊத்தணும்.  அதான், அளுவாத ரண்டு கண்ணையும் ஒரு கைல மூடி வச்சிக்கினு சவுண்டுல மட்டும் அளுதாரு செந்திலு. கார் சீட்டுல கொஞ்சமா பொரண்டப்ப, அவுரு போட்டிருந்த டீ சர்ட்டு மேல ஏறி வயிறு தெரியப் போச்சு. அப்ப வலியை மறந்துட்டு அவுரே டீ சர்ட்டைக் கரீக்டா புடிச்சு கீள இளுத்து விட்டுக்கினாரு. அப்பறம் பாதுகாப்பு ஆளுங்க இவுரு காலை ஆதரவா தொட்டு மெள்ள இவுரை இறக்கலாம்னு பாத்தா, அரெஸ்ட் ஆன கோவத்துல படுத்துக்கினே மெஸ்ஸி மாதிரி காலால ஓங்கி ஓங்கி உதை விட்டாரு. தத்ரூவமா இல்லபா!

 

எனக்குப் புரிது. யாருக்கும் நெஞ்சு வலி எப்ப வேணா வர்லாம். தூக்கத்துல வர்லாம். டான்ஸ் பண்ணும்போது வர்லாம்.  போலீஸ் விசாரிக்கும்போது வர்லாம். அதெல்லாம் சர்தான்.  உனக்கு இதயக் குளாய்ல அடைப்பு இருக்குது, பைபாஸ்னு அறுவை சிகிச்சை பண்ணத்தான் வேணும்னா  பண்ணிக்க. பாரு செந்திலு, நீ நல்ல உடம்போட திரும்பி வரணும்னு யார் இப்ப நெனச்சிக்கிறாங்க? மொதல்ல உங்க வூட்டம்மா, அப்பறம் உன் குடும்பத்துக் காரவுங்க. அடுத்தது யாருன்ற? உன்னை விசாரண பண்ணிக்கிற அமலாக்கத் துறை ஆபீசருங்க.  பதட்டமா இருந்துக்கினு ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்து உன்னை பாத்த ஸ்டாலினு, அவுரு மருமகப் பிள்ளை, மந்திரிங்கல்லாம் அவுங்க நல்லதுக்குதான் உன்னைப் பாக்க வந்துக்கினாங்க. ஏன்னு உனக்குத் தெரிமில்ல?

 

உன் பிரச்சினை இதான் செந்திலு. உனக்கு ஆசை இருக்கற அளவு திருப்தி கெடியாது, நிதானமும் இல்ல.  உன் நிம்மதிய நீ அடுத்தவன் கிட்டயும் ஆடிட்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் விட்டுக்கினு ஜாலியா ஏதோ பண்ணிக்கின.  அவன்லாம் நீ வாள்ந்தாலும் பொளைப்பான், விளுந்தாலும்  பொளைப்பான். “எனக்கு வாய்ப்பு குடுத்து எனக்கும் மேல ஒருத்தர் குந்திக்கினு இருக்காரே, அவுரும் அப்பிடித்தான இருக்காரு?”ன்னு கேட்டுக்காத. அவுங்கல்லாம் ஆடிட்டர் வக்கீல் நிம்மதியைக் கூட தன் கைல வச்சிக்கிறாங்க. சக்தியானவுங்க. நீ காரியத்தை  முடிச்சு கைல கொணாந்து குடுக்கற எடுபிடி, அவ்ளதான். மாட்டுனா நீதான் மொதல்ல மாட்டுவ. அடுத்தவனும் பின்னாடியே ஜெயிலுக்கு வந்தாலும் உனக்கு என்னபா பெனிபிட்டு?  

 

சரி நீ ஒரு தப்பும் பண்ணலன்னு வச்சிக்கலாம். உனக்காவும் பண்ணலை, அடுத்தவனுக்கு குடுக்கவும் பண்ணலன்னு வச்சிக்கலாம். அதத்தான் ஸ்டாலினும் சுத்தி வளச்சு சொல்றாரு. ஆனா பதட்டமா சொல்றாரு, துடிக்கிறாரு.  டவுட்டு வருமா இல்லியா?

 

 அதிமுக ஆட்சிக் காலத்துல நீ போக்குவரத்து அமைச்சரா இருந்து டிரைவரு, கண்டக்டரு, மெகானிக்குன்னு வேலைக்கு ஆள் சேக்க வாங்கின பணம் பத்தி விசாரிக்க அமலாக்கத்துறை வந்தா, திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் பதறணும்?  விசாரணைல புது புது விசயமா நீ என்ன சொல்லுவ, எங்கல்லாம்  கை காட்டுவன்னு ஸ்டாலினுக்கு பயம் பத்திக்கின மாதிரி தெரிதே?

 

ஸ்டாலினுக்கு கனிக்சனே இல்லாம, கட்சிக்காரன் எவன் எவனோ எங்கயோ வாய் தவறிட்டான், கை ஓங்கிட்டான்னு வருத்தப் பட்டு கட்சி மனுசங்களப் பாத்து அவுரு என்ன பேசினாரு? “எனக்கு கெட்ட பேரு வெக்காதீங்க. உங்களால என் தூக்கமே பூட்சு"ன்னு மைக்குல ஒரு தபா அவரே அளுதாருல்ல? இப்ப அமலாக்கத் துறை உன்னைக் கைது பண்ணிருச்சு, குடைஞ்சு குடைஞ்சு விசாரிப்பாங்கன்னு தெரிஞ்ச உடனே, “அல்லாருக்கும் சொல்லிக்கிறேன். திமுக-வை சீண்டிக்காத. தாங்க மாட்ட" ன்னு சண்டியர் கணக்கா சவால் விடறாரு. ஏன் செந்திலு? தூக்கம் போன மேட்டர்ல அவருக்கு தெரியாம எவனோ தப்பு பணணிக்கினான், அதுல அவுருக்கு  ஒரு பங்கும் இல்ல. ஆனா உன் மேட்டர்ல ஸ்டாலின் இப்பிடி துள்றாரே,  இதுல யாருக்கு எவ்ள பங்கு இருக்குமோன்னு ஜனங்க பேசிக்குவாங்களே?

 

வருமான வரித்துறை உன் வூட்டுக்கு ரெய்டு வந்தப்போ, “அவுங்க எதுக்கு வந்திருக்காங்கன்னு தெர்ல.  நாங்க எல்லா கணக்கையும் வச்சிருக்கோம். நல்லா ஒத்துளைப்பு குடுப்போம்.  கொறை இருந்தா சொல்லுங்க. சரி பண்ணிக்கிறோம்”னு அடக்கமா பேசிக்கின. இப்ப பைபாஸ் முடிஞ்சு ரூம்புக்கு வந்துட்ட,  திட சாப்பாடு சாப்பிடறன்னு ஆஸ்பத்திரி சொல்லுதுன்னு டிவி-ல நூஸ் வருது. வாயை  ஓப்பன் பணணித்தான சாப்பிடுவ? அதே வாயைத் தெறந்து, “நான் உடம்பு தேறிக்கினு இருக்கேன்.  வெளிய வந்து அமலாக்கத் துறைக்கு நல்லா ஒத்துளைப்பு  குடுப்பேன்.  எல்லாக் கேள்விக்கும் எங்கிட்ட பதில் இருக்குது. எனக்கு மடில கனம் இல்ல. வளில பயம் இல்ல” அப்பிடின்னு ஏன் சொல்லிக்கலை? அதையே ட்விட்டர்லயும் தட்டி விடலாமே? நீ ஏன் அந்த மாதிரி அறிவிப்பு குடுக்கல?  அப்பிடிப் பேசிட்டா நீ கூட ‘தாங்க மாட்ட’ – சர்தானா ?

 

அமலாக்கத்துறை சட்டம் எப்பிடி ஆளை வளைக்கும், அவுங்க விசாரணை தொட்டுத்தொட்டு எங்கல்லாம் போகும், எல்லாத்தயும் நீ இப்ப புரிஞ்சிட்டிருப்ப. ஆனா நீயும் மனுசன்தான். இன்னிக்கி  உன் நெனப்பு இப்பிடித்தான்  இருக்கும். ‘நம்ம இருதயம் இப்ப நல்லா இருக்குது. எப்பிடியும் ஒரு நாள் ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு வந்துதான் ஆவணும். அமலாக்கத்துறை கேள்விக்கு பதில் சொல்லி ஆவணும். புது விசயம்லாம் கூட வெளிய வரும். அதுலயும் விசாரணை நடக்கும். பல வெவகாரத்துல நான் தப்பிக்க முடியாதுன்னு ஆவும். என் தப்புக்கு நான் ஜெயிலுக்கு போவணும்னா போய்க்கிறேன். ஆனா என்னை வேலை வாங்குனவன் மட்டும் சொகம்மா சுத்திக்கினு இருப்பானா?’

 

பாரு செந்திலு. சட்டம் ஓரமா தூங்கிக்கினு இருக்கும். அதை கைல வாங்கி சொடுக்கற ஆளு யாரு, அதை நேர்மையா நாயமா பண்ணிக்கிறானா அப்பிடின்றத பொறுத்துதான் அது வேலை செய்யும். அது நல்லா வேலை செஞ்சா, கூட்டு சதி பண்ணவன் ஒர்த்தன் மட்டுனா போதும். அவனைப் பிடிச்சு உலுக்கினா, மத்தவன் பேருல்லாம் அவன் வாயிலேர்ந்து வரும். ‘மத்தவன் மட்டும் எதுக்கு தப்பிக்கணும்’னு அவனே பாதி போட்டுக் குடுத்துருவான். இல்லாட்டியும், அவுங்க கூட்டு சதி பத்தி மத்த ஆதாரம் இருந்திச்சினா அது பேசும். ராஜீவ் காந்தி கொலை, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு கேஸ்ல எல்லாம் இப்பிடித்தான் கூட்டுசதி பண்ண அல்லாரும் மாட்டிக்கினாங்க.

 

உன் விசயத்துல, நீ தப்பு பண்ணலைன்னு வையி, நீ நிம்மிதியா இருக்கலாம். நீ தப்பு பணணிட்ட, அமலாக்கத் துறைட்ட ஆதாரமும் இருக்குது, அப்பிடின்னா நீயும் உன் கூட்டாளியும் முடிஞ்ச வரை டிராமா பண்ணிக்கினே இருக்கணும், வீர வசனம் பேசிக்கினே இருக்கணும்.  

 

சொல்லு, நீ நிம்மிதியாத்தான் இருக்கியா? எப்பிடி ஆனாலும் பத்திரமா இருந்துக்க.  அது முக்கியம் கண்ணு. 

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Saturday, 24 June 2023

பிரதமர் மோடி உலகளவில் பிரபலம். ஏன், எப்படி?

 

-- ஆர். வி. ஆர்

 

இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்கள், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் ஆகிய பலரும் மோடிக்கு அளித்த அங்கீகாரமும் மரியாதையும் மிகப் பெரியவை. டிவி அனைத்தையும் காட்டியது.

 

அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகளின் பல தலைவர்களும் பிரதமர் மோடியைப் போற்றுகிறார்கள், அவரைச் சந்திக்க ஆர்வம் காட்டுகிறார்கள. தயங்காமல் அவரைப் புகழ்கிறார்கள், அதில் மகிழவும் செய்கிறார்கள். இது ஏன் நடக்கிறது?

 

நீங்கள் செயல்படும் துறையில் ஒரு ஜாம்பவான் வல்லுநர் இருந்தால் அவர் மீது உங்களுக்கு இயற்கையான மதிப்பு ஏற்படும். நீங்கள் ஆசைப்பட்டு ஆனால் எட்ட முடியாத உயரத்தை அவர் அடைந்தார் என்பதால் அந்த மனிதரிடம் காட்டும் பண்பான பணிவின் வெளிப்பாடுதான், நீங்கள் அவர் மீது வைக்கும் உயர் மதிப்பு.  நாடுகள் கடந்து ஐன்ஸ்டீனிடம், சச்சின் டெண்டுல்கரிடம், அவர்கள் துறை மனிதர்கள் வைத்திருக்கும் மதிப்பு இதற்கு உதாரணம். அந்த மாதிரி மோடி உலக அரசியல் தலைவர்களின் போற்றுதலைப் பெற்றவர்.

 

மற்ற உலக அரசியல் தலைவர்கள் பலரும் செய்ய முடியாத எதை மோடி சாதித்தார்? முதலில் எளிதில் தெரிவது, ஒரு ஜனநாயக நாட்டில், அதுவும் பல மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில், பல தரப்பட்ட மக்களின் அமோக ஆதரவையும் அபிமானத்தையும் பெற்றவர் மோடி. அது இரண்டு தொடர் தேர்தல்களிலும் வெளிப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஆங்கிலம் அனைவராலும் அறியப்பட்ட மொழி. ஆங்கிலம் பேசும் ஒரு தலைவர் அந்த நாடுகளில் மோடி அளவுக்குத் தமது மக்களின் அபிமானத்தைச் சமீப காலங்களில் பெறவில்லை. ஓட்டுகள் வாங்கிப் பிரதமர் அல்லது ஜனாதிபதி ஆவதை விடவும் மேலானது மக்களின் அபிமானத்தை மோடி அளவில் ஜெயிப்பது. இது போக, மோடி பற்றி உலகத் தலைவர்கள் பலருக்கும் ஒரு ஏகோபித்த கணிப்பு இருக்க வேண்டும். நாம் அதை இந்த வழியில் ஊகிக்கலாம்.

 

மோடி கெட்டிக்காரர், கடும் உழைப்பாளி, திறமையானவர். அரசியலில் கெட்டிக்காரர்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். 99.99 சதவிகிதம் அந்த குணம், அவர்கள் பிழைப்பதற்கும், அவர்களைக் காப்பதற்கும், அவர்கள் செழிப்பதற்கும் பயனாகிறது. ஆனால் ஒரு கெட்டிக்காரன் இன்னொரு கெட்டிக்காரனை அதற்காக மட்டும் பெரிதாக மதிப்பதில்லை.

 

அரசியல்வாதிகளின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதமாவது  கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். நன்கு உழைத்துத் தன்னை, தன் சுய நலத்தை, அவர்கள் பெரிதாக வளர்ப்பார்கள். இதிலும் போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்வார்கள், அவ்வளவுதான்.  திறமையான அரசியல்வாதிகளும் ஆயிரக் கணக்கில் உண்டு. இவர்கள் சற்று எட்ட நின்று ஒருவரை ஒருவர் ரகசியமாக மதிக்கலாம் – வெளியில் சொல்ல மாட்டார்கள்.

 

இந்த மூன்று குணங்களுக்கும் அப்பால், மோடியிடம் ஒரு அசாதாரண நேர்ப் போக்கும், நாட்டுக்கான அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சேவை உள்ளமும் தூக்கலாக இருக்கின்றன. அவருடைய பேச்சுத் திறன் மட்டுமே அவரது எல்லாக் குணங்களையும் தெளிவாக முன்நிறுத்துகிறது – இது மிக முக்கியம். இதைத் தவிர, மோடியின் தலையில் ஐஸ் வைத்தோ அவர் கண்களை மூடியோ அவரை எளிதில் கவிழ்த்து இந்தியாவைச் சுரண்டுவது கடினம், ஆனால் அங்கு போதுமான லாபம் பார்க்கலாம், என்று உலக வியாபாரிகளும் உணர்கிறார்கள். மோடியின் இந்த எல்லாத் தன்மைகளும்  சேர்ந்துதான் அவருக்கான பெரு மதிப்பை உலகத் தலைவர்களிடம், தொழில்துறையினரிடம்,  இயற்கையாகக் சுரந்து வெளிப்பட வைக்கின்றன.

 

மோடி மீதான தங்களின் வியப்பையும் மதிப்பையும் தெரியப் படுத்தினால் அவர் கர்வம் கொள்ள மாட்டார்,  தங்களைக் கீழ் நோக்கிப் பார்க்க மாட்டார் என்று அவரைப் போற்றும் உலகத் தலைவர்கள் உணர்கிறார்கள்.  அப்போதும் மோடி பணிவாகவே இருக்கிறவர். மோடியின் இந்த குணாதிசயம் அவர் முக பாவத்திலும் உடல் மொழியிலும் கூட பளிச் என்று தெரிகிறது. அதனால் அந்தத் தலைவர்கள் மோடி மீதான போற்றுதலை இயல்பாகக் காண்பிக்கிறார்கள்.

 

பிற நாடுகளின் தலைவர்கள் மோடியிடம் இப்படி அசாதாரணமான மேன்மைகளைக் காண்கிறார்கள். ஆனால் உள் நாட்டில் ஏன் எல்லா எதிர்க் கட்சிகளும் மோடியைத் தீவிரமாக,  காட்டமாக எதிர்க்கின்றன? உதாரணம்: மோடிக்கு முன்பாக காங்கிரஸின் ராகுல் காந்தி இந்த மாதம் அமெரிக்கா சென்ற போது, “நான் அன்பு பேசுகிறேன். மோடி வெறுப்பைப் பேசுகிறார். என் அன்பு வெல்லும்” என்று அங்கு கூட வழக்கம் போல் குழந்தைத் தனமாகவும் போலியாகவும் பேசினார். பாஜக-வின் மிகப் பெரிய சக்தி பிரதமர் மோடி என்று உணர்ந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், “பாஜக-வை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், இந்தியாவின் எதிர் காலத்திற்கும் கேடாக முடியும்” என்று ஜன்னி கண்டவர் போல் நான்கு நாட்கள் முன்னர் திருவாரூர் நிகழ்ச்சியில் பிதற்றினார்.   

 

மோடியைப் பாராட்டும் உலகத் தலைவர்கள், நம்பகத் தன்மை உடையவர்கள். அவர்கள் மோடியை ஒரு தலைவராக, ஒரு ராஜதந்திரியாக மட்டும் பார்த்துப் பிரமிக்கிறார்கள். அவர்களிடம் அரசியல் நேர்மையும் உண்டு, அந்த குணத்தை மோடியும் தனது உயர் பண்புகளால் வெளிப்பட வைக்கிறார்.

 

மோடியை எதிர்க்கும் இந்திய எதிர்க் கட்சித் தலைவர்களிடம் நம்பகத் தன்மை இல்லை. தாங்கள் பல வழிகளில் செழிப்பதற்கு மோடி ஒரு தடையாக இருந்து தங்களுக்குச் சொல்ல முடியாத நஷ்டத்தை ஏற்படுத்துகிறவர் மோடி என்று அவர் மீது கோபம் கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் அவரவர்களின் செழிப்பில் குறியாக இருப்பதால், ஒருவர் மீது ஒருவர் போட்டியும் போறாமையும் மிக்கவர்கள். ‘நானே அடுத்த பிரதமராக வரவேண்டும். அதற்கு ஏற்பாடாக, மற்ற எந்த எதிர்க் கட்சித் தலைவரையும் நான் பெரிதாக ஆதரித்து எதிர்க் கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தக் கூடாது’ என்று எச்சரிக்கையாக இருந்து ஒருவரை ஒருவர் காமிரா முன்னால் அணைப்பவர்கள்.  ஆனாலும், முதலில் பாஜக-வைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த வெற்றிடத்தில் தங்களுக்குள்ள ‘யார் பிரதமர்’ கணக்கைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து மோடியை எதிர்க்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றுசேர்ந்து மோடியை எதிர்க்கும் போது, ‘எங்களுக்குள் அடுத்த பிரதமர் நான்தான் என்பதையும் இப்போதே ஊர்ஜிதம் செய்ய வேண்டும். இல்லை என்றால் மோடியை நீக்கிவிட்டு அடுத்தவன் பிரதமராக வர நானே உதவி செய்ததாக ஆகும்’ என்ற கிலியும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

 

இந்தக் காரணங்களால் எதிர்க் கட்சித் தலைவர்கள் காலை முன்னே வைக்க முடியாமல், பின்னே வைக்க முடியாமல், சேர்ந்தும் வைக்க முடியாமல், ஒவ்வொருவரும் தங்களின் கால்கள் பின்னி நிற்கிறார்கள். இவர்களின் வில்லத் தனமே ஒருவரை ஒருவர் கட்டிப் போட்டு நாட்டைக் காப்பாற்றட்டுமே?  அந்த வினோத வகையில் இவர்களும் உலகத் தலைவர்கள் போல் மோடிக்கு உதவட்டுமே?


* * * * *

R. Veera Raghavan, Advocate, Chennai

Sunday, 18 June 2023

திமுக-வுடன் சேர்த்து அதிமுக-வையும் எதிர்ப்பது, பாஜக-வுக்கு அவசியமா? அது சாத்தியமா?

 

-- ஆர். வி. ஆர்

 

 

தமிழகத்தில் திமுக-வும் அதிமுக-வும் தான் பல வருடங்களாகப் பெரிய கட்சிகள். பிற மாநிலங்களில் எப்படி இருந்தாலும், தமிழகத்தில் பாஜக சிறிய கட்சி.

 

ஜூலை 2021-ல் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, பாஜக இங்கு சிறிய கட்சி என்ற எல்லையில் முடங்க முடியாமல் துடிக்கிறது. காரணம், அண்ணாமலையின் அரசியல் வல்லமை மற்றும் மக்களை ஈர்க்கும் சக்தி. ஒரு தலைவரிடம் அந்த இரண்டு குணங்கள் இருந்தால்தான் அவர் கட்சி பெரிய கட்சியாக வளர முடியும். அப்படித்தான் அண்ணாத்துரையும் கருணாநிதியும் திமுக-வை நிலை நிறுத்தினார்கள், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதிமுக-வை வளர்த்தார்கள். இந்த ஐவரின் தலைமைக் குணங்களும் நோக்கங்களும் வேறு. ஆனால் இவர்கள் அனைவரும் வல்லமை கொண்ட தலைவர்கள்.

 

ஒரு கட்சியைப் பெரிய கட்சியாக்கிய தலைவர் மறைந்து அடுத்து வரும் கட்சித் தலைவர் சாதாரணத் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை. அதன் பழைய கட்டமைப்பில், பழைய வாசனையில், பின்வரும் பல வருடங்கள் அது பெரிய கட்சியாக மக்கள் மனதில் நீடிக்கும் இன்றைய திமுக-வும் அதிமுக-வும் மாதிரி.  

 

ஸ்டாலின் தலைமையிலான இன்றைய திமுக, எல்லாவித அதிகார துஷ்பிரயோகத்திலும் முறைகேட்டிலும் ராட்சஸத் தன்மை கொண்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அதில் ஒரு துளி. சட்ட ரீதியாக வதம் செய்யப்பட வேண்டிய கட்சி திமுக.  அதற்குப் பதிலாக அதிமுகவோ அதன் தலைமையிலான கூட்டணியோ ஆட்சிக்கு வருவதும் நல்லதல்ல.

 

ஊழலையும் அரசியல் முறைகேடுகளையும் எதிர்க்கும் கட்சி பாஜக, அது மக்களுக்கு முன்னேற்றமும் நல்லாட்சியும்  தரும் கட்சி என்று சாதாரண மக்களிடம் – குறிப்பாக வட மாநிலங்களில் – பெரிதாகப் பெயர் எடுத்திருக்கிறது. இந்தியாவில், ஒரு அரசியல் தலைவன் நல்லவனோ இல்லையோ, அவன் வல்லவன் என்றால்தான் சாதாரண மக்கள் பலரும் ஒரு பணிவில் அந்தத் தலைவனுக்கு, அவனது கட்சிக்கு, வாக்களிப்பார்கள். வல்லமையோடு அவனிடம் நல்லதனமும் தூக்கலாக இருந்தால் அந்த மக்கள் அவனை மனதில் வணங்கிக் கொண்டாடுவார்கள். அப்படித்தான் பாஜக-வின் நரேந்திர மோடி கோடானு கோடி இந்திய மக்கள் மனதில் அமர்ந்திருக்கிறார். அதே வகையில் பல்லாயிரத் தமிழக மக்கள் மனதை அண்ணாமலை வென்றிருக்கிறார் – இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே.  

 

நாள்தோறும் பெருகிவரும் தனது மக்கள் செல்வாக்கை வைத்து பாஜக-வைத் தமிழகத்தில் ஒரு பெரிய கட்சியாக ஆக்கவேண்டும் என்று அண்ணாமலை ஆசைப் படுகிறார். அதை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். அதைச் செயலாக்க, பாஜக திமுக-வை எதிர்த்தால் போதாது, அதிமுக-வையும் சேர்த்து எதிர்க்கவேண்டும். ஒன்றை மட்டும் எதிர்த்து மற்றதுடன் மாநிலத்திற்குள் கூட்டு வைத்தால், பாஜக-விற்குப் பெரிய கட்சி என்ற அடையாளம் கிடைக்க வாய்ப்பு குறைவு,  சேர்ந்திருக்கும் கட்சியும் அதற்கு இடம் தராது.  

 

அண்ணாமலையை உள்ளத்தில் போற்றும் சாதாரண மக்கள், அவர் திமுக-வைத் தில்லாக எதிர்க்கும் திறன் கொண்டவர் என்று நினைக்கிறார்கள், அதை வரவேற்கிறார்கள். அப்படியான மக்கள், அண்ணாமலை அதிமுக-வையும் சேர்த்து எதிர்த்தால் அதை ஆதரிப்பார்கள். காரணம்: ஊழல் மற்றும்  அதிகார முறைகேடுகள் என்ற அடிப்படையில்  அதிமுக-வை இன்னொரு திமுக-வாகத்தான், வேண்டுமானால் சற்று சாயம் வெளுத்த திமுக-வாக, அந்த மக்கள் பார்க்கிறார்கள்.  

 

‘அண்ணாமலை என்னதான் நல்லவராக வல்லவராக இருந்தாலும், தேர்தல் சமயத்தில் இரண்டு பெரிய கட்சிகள் பெயரிலும் யாராவது பணத்தை மக்களிடம்  வாரி இறைக்கப் போகிறார்கள், அதனால் மக்கள் அந்த இரண்டு  கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டு அவை அதிக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளை வெல்லும். பாஜக பணம் தராது,  அதனால் அதிக ஓட்டுக்களைப் பெறாது. பிறகு எப்படி இரண்டு பெரிய கட்சிகளையும் ஒன்றாக எதிர்த்து, பாஜக கணிசமான எம்.எல்.ஏ  மற்றும் எம்.பி தொகுதிகளை வெல்ல முடியும்? பாஜக அதிமுக-வை எதிர்க்காமல் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான், சில தொகுதிகளையாவது பாஜக ஜெயிக்க முடியும்’ என்ற வாதம்  சிலரிடமிருந்து வருகிறது.  

 

சாதாரண வாழ்க்கை வசதிக்கே போராடும் நமது மக்களிடம், யாராவது ஓட்டுக்காகப் பணம் கொடுத்தால், அதுவும் ஆயிரக் கணக்கில் கொடுத்தால், அவர்களின் ஏழ்மை நிலையில் அதை வாங்கிக் கொள்வார்கள்.  இது போக, ‘நம்மிடமிருந்து எடுத்த பணத்தில் சிறிது நமக்கு இப்படி வரட்டுமே’ என்றும் சிலர் நினைத்து வருவதை வாங்கிக் கொள்வார்கள். பிறகு அரசியலில் எந்தத் தலைவன் வல்லவன் என்று பார்த்து அதற்கு ஏற்பப் பணம் வாங்கியவர்கள் ஓட்டுப் போடுவார்கள். அதிக வல்லவன் அதிகப் பணம் கொடுத்து, அந்த வகையிலும் தன் வல்லமையை சாதாரண மக்களிடம் காண்பிக்கலாம். இதை எல்லாம் தாண்டி, மிக வல்லவனான ஒரு தலைவன் மிக நல்லவனாகவும் மக்களால் உணரப் பட்டால், அவனது கட்சியின் சார்பாகப் பணம் தரப்படா விட்டாலும் அவனால் ஈர்க்கப் பட்டு அவனுக்கு வாக்களிக்கும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள்.

 

இன்னொன்று. பணம் கொடுத்து மக்களிடம் ஓட்டைப் பெறலாம் என்றாகி விட்டால், எந்த அரசியல் தலைவர்தான் இதை மாற்ற முயல்வது? எப்போதுதான் மக்களின் வாழ்க்கைத் தரம் அரசின் நடவடிக்கைகளால் முன்னேறும் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, ஓட்டுக்கான லஞ்சம் அவர்களுக்குத் தேவையில்லை, அதைப் பெறுவது கௌரவமல்ல, என்று  அவர்களுக்கும்  ஒரு அரசியல் கட்சி உணர்த்துவது? கட்டாய சீரழிவுப் பாதையில்தான் தமிழக ஜனநாயகம் போக வேண்டுமா? இதற்கு விடிவே கிடையாது என்று எல்லா அரசியல் தலைவர்களும் நினைப்பதா ?  

 

குயுக்தியான சுயநலத் தலைவர்கள் ஒரு நாட்டை, ஒரு மாநிலத்தை, வீழ வைப்பது எளிது. அது தமிழகத்தில் நடந்து விட்டது. பின்னர் அந்தப் பிரதேசத்தை மீட்டெடுப்பது கடினம்.  இப்போது ஒரு சரியான தலைவர் மூலமாகத் தமிழகத்தை மீட்க வாய்ப்பிருக்கிறது.

 

தமிழகத்தில் அதிமுக-வையும் சேர்த்து பாஜக எதிர்க்க முடிந்தால், அது அண்ணாமலை போன்ற தலைவர் இருப்பதால்தான் நினைத்துப் பார்க்க முடியும். இதைச் செயலாற்றினால் அது எந்த அளவிற்குப் பயன் தந்து பாஜக-விற்கு எத்தனை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ சீட்டுக்களைப் பெற்றுத் தரும், அது அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தால் கிடைக்கும் எண்ணிக்கையை விடவும் குறைவாகப் போகுமா என்று பார்ப்பது ஒரு நடைமுறை அவசியம்தான்.

 

சென்ற லோக் சபா தேர்தலில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் அதிமுக தலைமையில் ஏழு-கட்சிக் கூட்டணி ஒன்று போட்டியிட்டது. அதில் பாஜக-வும் உண்டு. அந்தக் கூட்டணியில் அதிமுக மட்டும் ஒரு தொகுதி வென்றது, மற்ற கூட்டணிக் கட்சிகள் ஒரு தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை.  அதே தேர்தலில் திமுக-வின் ஒன்பது-கட்சிக் கூட்டணி போட்டியிட்டு, 38 லோக் சபா தொகுதிகளை வென்றது. அந்த ஒன்பது கட்சிகள் ஒவ்வொன்றுமே ஒரு தொகுதியிலாவது ஜெயித்தன. அதிலும், தலா ஒரு லோக் சபா தொகுதியில் மட்டும் போட்டியிட்ட திமுக-கூட்டணிக் கட்சிகள் நான்கு, அந்த ஒரு தொகுதியிலும் ஜெயித்தன. அடுத்த வருடம் 2024-ல், மீண்டும் லோக் சபா தேர்தல் வருகிறது.

 

இப்போது திமுக மெஜாரிட்டியில் உள்ள தமிழக சட்டமன்றத்தில் பாஜக-விற்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அது அதிமுக-வுடன் கூட்டணி  வைத்துப் போட்டியிட்டதில் கிடைத்தது. மாநிலத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2026-ல்  வரும்.

 

இத்தகைய பலமான திமுக-வை வீரியமாக எதிர்க்கின்ற தமிழக பாஜக, அதிமுக-வையும் சேர்த்து எதிர்ப்பதால் பாஜக-விற்குப் பெரிய நஷ்டமில்லை. இந்தக் காரியம் மிகப் பெரியது, மக்கள் நலன் கொண்டது. அண்ணாமலையின் தலைமையில் பாஜக இதை நினைக்க முடியும், செய்ய முடியும். இந்தக் காரியத்தைத் தானும் செய்து, தமிழகத்தில் மதிப்பிழந்து கிடக்கும் காங்கிரஸ் மீண்டும் இங்கு பெரிய கட்சி ஆக முடியுமா? முடியாது. அதைச் செய்யும் ஆர்வமும் தைரியமும் கௌரவமும் காங்கிரஸ் கட்சியில் இல்லை – மாநிலத்திலோ தில்லியிலோ. ஆனால் இன்றைய பாஜக வேறு ரகம்.

 

அரசியல் சட்டப் பிரிவு 370 நீர்த்துப் போகும் சட்ட நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு துணிவாக எடுத்தது – தேசத்திற்கும் ஜம்மு காஷ்மீருக்கும் அது நன்மை செய்யும் என்பதால். அதன் விளைவுகளைச் சந்திக்கும் ஆற்றலும் மோடி-யிடம் இருக்கிறது. இதே துணிவுடனும் ஆற்றலுடனும் அவர் பாகிஸ்தான் பாலகோட்டிற்குப் போர் விமானங்கள் அனுப்பி அங்கிருந்த பயங்கரவாதிகள் பயிற்சி முகாமைத் தகர்க்கும் முடிவை எடுத்தார். பின்பு எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் செய்த அத்துமீறல்களையும் நமது ராணுவத்தின் மூலம் தைரியமாக, சாமர்த்தியமாக, எதிர்கொண்டார்.

 

இதைப் போன்ற மனோ தைரியம் உள்ள ஒரு கட்சித் தலைமைதான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தமிழக பாஜக ஒரு சேர எதிர்க்கலாம் என்று அண்ணாமலைக்குப் பச்சைக் கொடி காட்ட முடியும். அதை எந்த நேரத்தில் செய்வது, எந்தத் தேர்தலில் செய்வது – 2024-லா,  2026-லா, அல்லது இரண்டையும் பார்த்துவிட்டு 2029-லா – என்ற சிக்கலான கூட்டல் கழித்தல் கணக்கும் கட்சித் தலைமைக்குத்தான் தெளிவாகத் தெரியும். அதற்கு ஏற்ப அதிமுக-வுடனான அணுகுமுறையும் இருக்கும்.

 

அரசியல் கட்சிகள் எப்போதும் தேர்தல்களை நோக்கி அவர்கள் பாணியில் நகரும். தேர்தல் போட்டிகள், ஒரு செஸ் விளையாட்டு. எப்போது எந்தக் காயை எங்கு நகர்த்துவது என்பது ஒரு கணக்கு, ஒரு கலை. சிறந்த தேர்தல் செஸ் வீரர்கள் பாஜக-வில் இருக்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தில் சமஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, என்ற இரு பெரிய கட்சிகளையும் எதிர்த்து வென்று அங்கு பாஜக-வை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்திலும் வெல்லட்டும், தமிழகத்தையும் மீட்க வழி செய்யட்டும், என்று நாம் விரும்பலாம், அவர்களை வாழ்த்தலாம், காத்திருக்கலாம்.  


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Saturday, 10 June 2023

தமிழகத்தில் பிராமணர் கட்சி எடுபடாது. காரணங்கள் இவை.


-- ஆர். வி. ஆர்

 

தமிழக அரசியலில் ஜாதிக் கட்சிகள் பல உண்டு – டஜனுக்கு மேல் இருக்கும். பிராமணர்களுக்கு என்று  தனியாக ஒரு கட்சி கிடையாது. அப்படி ஒரு கட்சி புதிதாக உருவாகப் போகிறது, அதற்கான ஆயத்த வேலைகள் முடிந்து விட்டன, நடிகர் எஸ். வி. சேகர் இதன் பின்னணியில் இருக்கிறார், என்ற செய்தி வந்திருக்கிறது. இது பற்றி அவரும் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் யார் ஆரம்பித்தாலும் பிராமணர் கட்சி தமிழகத்தில் எடுபடப் போவதில்லை. காரணங்கள் இவை.

 

இந்தியாவில் பெருவாரியான மக்களுக்கு, அவர்கள் ஜாதியின் அடிப்படையில் கல்விக் கூட நுழைவுகளிலும் அரசு வேலைகளிலும் சட்டம் சில விகிதங்களில் இட ஒதுக்கீடு அளிக்கிறது. அதைத் தக்க வைக்கவும், புதிதாகச் சில ஜாதிகளுக்கு இட ஒதுக்கீட்டு கிடைக்கவும், அந்த அந்த ஜாதிக் கட்சிகளின் இருப்பும் போராட்டங்களும்  உதவும். பிராமணர்களுக்கு என்று ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் சட்டத்தில் கிடையாது. அதை அவர்கள் பெறவும் முடியாது – அவர்களுக்கு அப்படியான ஆர்வமும் இல்லை. ஆகையால் ஜாதிக் கட்சி இவ்விதத்தில் பிராமணர்களுக்குப் பயன் தராது. 

 

அடுத்ததாக, அரசியல் கட்சிகளின் தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகிய பதவிகளும் அவற்றின் சுகமும் பிராமணர்களை அழைப்பதில்லை. அவர்களில் மிக மிகச் சிலரே அமைச்சர், எம்.எல்.ஏ அல்லது கார்ப்பரேஷன் கவுன்சிலர் என்று தேர்வாக விரும்புவார்கள். அதற்கான தகுதியும் ஈடுபாடும் உள்ள மிகச் சில பிராமணர்கள், தமது ஜாதி தாண்டிய மக்கள் ஆதரவை எதிர்நோக்குபவர்கள், அல்லது ஒரு பெரும் அரசியல் தலைவரின் நம்பிக்கையைப் பெற்றவர்கள். இவர்கள் ஒரு தேர்தலில்  பிராமணர் ஓட்டுக்களையும் பெற்று ஜெயித்தால், அது போனஸ் வரும்படி.

 

சில பகுத்தறிவு அமைப்புகள், சில திராவிடக் கட்சிகள், வெளிப்படுத்தும் பிராமண எதிர்ப்பைப் பிராமணர்கள் சட்டை செய்கிறார்களா? இல்லை. அவற்றின் தலைவர்கள், பொறாமை மற்றும் வெறுப்பின் காரணமாக பிராமணர்களை எதிர்க்கிறார்கள் – பிராமணீயம் என்ற மெகா ஓட்டை பாலூனில் காற்று நிரப்பிப் பறக்கவிட முனைகிறார்கள் – என்பதைப் புரிந்துகொண்டு, அந்த அரசியல் பகுத்தறிவாளர்களை பிராமணர்கள் பொருட் படுத்துவதில்லை. மற்ற சாதாரண மக்கள் கூட, இத்தகைய பிராமண எதிர்ப்பைப் புறம் தள்ளுகிறார்கள். பிராமணர்கள் இல்லங்களில் விரும்பி வீட்டு வேலை செய்யும் பெண்களே இதற்கு சாட்சி.

 

சத்தில்லாத பிராமண எதிர்ப்பைத் தட்டிவிட்டுத் தங்கள் வாழ்க்கையை, படிப்பை, வேலையை, தொழிலை – கிரிக்கெட்டையும் கூட – மேம்படுத்திக் கொள்வதில் கவனமாக இருப்பவர்கள் பிராமணர்கள். ‘பிராமண எதிர்ப்பை எதிர் கொள்ள, அதை முறியடிக்க, நமக்கு அரசியல் கட்சி தேவை’ என்று பிராமணர்கள் நினைப்பதில்லை.

 

அரசியல் உலகில் நேரானவர், தூய்மையானவர், திறமையானவர் என்று தாங்கள் கணிக்கும் அரசியல் தலைவருக்கு, அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சிக்கு, பிராமணர்கள் ஆதரவு அளிக்கத் தயார். ஆட்சியிலும் நிர்வாகத்திலும் இருப்பவர்கள் கைசுத்தமாகப் பணிசெய்ய வேண்டும், அது போல் தாங்களும் தங்கள் வேலையிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து, அந்த நினைப்பில் பிராமணர்கள் பெருமிதம் கொள்கிறவர்கள். தேச நலனை முக்கியமாக விரும்புகிறவர்கள். தவறாமல் தேர்தலில்  ஓட்டுப் போடுகிறவர்கள்.

 

"பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது", "தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்", "பாவம் செய்தவன் எம லோகத்தில் எண்ணைக் கொப்பரையில் வறுக்கப் படுவான்" என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிச் சிறுவர்கள் வளர்ந்ததும் பிராமண சமூகத்தின் பொதுவான நிதானத்திற்கும் நேர்மைக்கும் ஒரு காரணம்.

 

ஒரு அரசியல்வாதி பிராமணராக இருந்து, அவருடன் போட்டியிடுபவர் வேறு ஜாதிக்காரராக இருந்தால், இந்த வேறுபாட்டை மட்டும் வைத்து, அந்த பிராமண அரசியல்வாதியை பிராமண சமூகம் ஆதரிக்காது. இருவரில் யார் சிறந்தவர், யார் பதவிக்கு வரத் தகுதியானவர், யார் தேச நலன் மிக்கவர் என்று பார்த்து அந்த அடிப்படையில் பிராமணர்கள் ஒரு அரசியல் தலைவரை ஆதரிப்பார்கள். 

 

கமல் ஹாசன் ஒரு பிராமணர், ரஜினி காந்த் பிராமணர் அல்லாதவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ரஜினிகாந்த் தீவிர அரசியலில் வருவதாக இருந்த சமயத்தில், கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து விட்டார். நடிப்பில், அதன் பல பரிமாணத்தில், ரஜினி காந்தை விட கமல் ஹாசனுக்கு பிராமணர்கள் அதிக மார்க்குகள் கொடுக்கலாம். ஆனால் அரசியல்வாதி கமல் ஹாசனை, அவர் பிராமணர் என்பதால், பிராமண ஜனங்கள் பரவலாக ஆதரிக்கவில்லை – ரஜினியைத்தான் அவர்கள் வரவேற்றார்கள். சுயநலம் குறைந்து தேச நலன் அதிகம் கொண்டவர் ரஜினிகாந்த் என்பது அதற்கான முக்கிய காரணம்.

 

பாஜக தலைவர் அண்ணாமலை பிராமணர் அல்ல. இவரையும் கமல் ஹாசனையும் பார்க்கும் போது பிராமணர்கள் அண்ணாமலையின் பின்தான் நிற்பார்கள், கமல் ஹாசனை ஆதரிக்க மாட்டார்கள். காரணம், அண்ணாமலை சிறந்த தனிமனிதர், நேர்மையாளர், தேச நலன் போற்றுபவர், சுயநல காரணத்திற்காக அரசியலைப் பயன்படுத்துகிறவர் அல்ல, துணிவானவர், தெளிவாகப் பேசுபவர், தலைமைப் பண்புகள் உடையவர், ஆனால் இந்தத் தகுதிகள் கமல் ஹாசனிடம் துளியும் இல்லை என்று பிராமணர்கள் நினைக்கிறார்கள். அண்ணாமலையின் இந்த குணங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்னதாகவே பல்லாண்டுகளாக புடம் போட்டு ஒளிவீசுகின்றன. மோடியும் பிராமணர் அல்ல. தமிழக பிராமணர்கள் மோடியைத்தான் கொண்டாடுவார்கள், பிராமணக் கொள்ளுத் தாத்தா – கொள்ளுப் பாட்டியைக்  கொண்ட ராகுல் காந்தியை அல்ல.

 

பிராமணர்களுக்காக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப் பட்டால், அதனால் மட்டும் அந்தக் கட்சி பிராமணர்களின் ஓட்டைப் பெருவாரியாகக் கவராது. புதிய பிராமணர் கட்சியானது, மற்ற எந்தக் கட்சியின் தலைவரை, மற்ற எந்த அரசியல் கட்சியை, ஆதரிக்கிறது அல்லது எதிர்க்கிறது, அந்த மற்ற கட்சியின் கொள்கை, கோட்பாடு, லட்சணம் என்ன என்பதைப் பார்த்துத் தான் அந்தப் பிராமணக் கட்சியின் சொல்லுக்கு பிராமணர்கள் மத்தியில் மதிப்பு கிடைக்கும்.  

 

வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டு வைக்காமல், ஒரு புதிய பிராமணர் கட்சி தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு எம்.எல்.ஏ  சீட் ஜெயிப்பதும் நடக்காது.  ‘புதிய பிராமணர் கட்சி எந்தக் கட்சியுடனாவது கூட்டணி அமைக்கட்டும். பிராமணர் கட்சியின் பிரதிநிதியாக, தங்கள் ஜாதி மனிதர்கள் ஒன்றிரண்டு பேராவது எப்படியோ எம்.எல்.ஏ-வாக உட்காரட்டும். அதுவே நமக்குத் திருப்தி’ என்றும் பிராமணர்கள் நினைக்கப் போவதில்லை.

 

ஒரு எம்.எல்.ஏ தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள ஒரு பிரபல பழைய கட்சி, புதிய பிராமணர் கட்சிக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கி ஒரு பிரமணரை அங்கு ஜெயிக்க வைத்தால், அது பிராமணர் கட்சியின் வெற்றி ஆகாது. யாரையோ தோற்கடித்து மக்களுக்கு ஏதோ சேதி சொல்ல நினைக்கிறது பழைய கட்சி, என்று அர்த்தம். எந்த விளையாட்டிற்கும் சிலர் கிடைப்பார்களே?

 

பிராமணர்களுக்கு அரசியலில் என்னதான் ஆசை? ‘இந்துக்கள் பொதுவாக ஒன்றுபடவேண்டும், அவர்களை அரசியல்வாதிகள் கிள்ளுக் கீரையாக நினைத்து, இந்துக்கள் தலைமீது ஆரசியல் கட்சிகள் நடக்கக் கூடாது. இந்திய தேசத்தில் காணப்படும் இந்தப் பெரும் சோகம் நீங்க வேண்டும்’ என்பதுதான் பிராமணர்களின் பிரதான அரசியல் ஆதங்கம் – நல்லாட்சி தவிர.  இந்த எண்ணத்தைப் பிரதிபலித்து, இந்தியாவில், தமிழகத்தில், ஏற்கனவே ஒரு  அரசியல் கட்சி தீவிரமாகச் செயல் படுகிறது என்பதும் பிராமணர்களின் கணிப்பு.    

 

மேலே சொன்னதுதான் மிகப் பெருவாரியான தமிழக பிராமணர்களின் எண்ணமாக இருக்கும். வருகின்ற  பாராளுமன்ற அல்லது தமிழக சட்டசபைத் தேர்தல்களில் முதன்முறை ஓட்டளிக்கத் தகுதி பெறும் இளம் பிராமணர்கள், எந்தப் புதிய பிராமணர் கட்சியையும் ஏறெடுத்துப் பார்ப்பதே சந்தேகம். “நம்ம படிப்பைக் கவனிப்போம்” என்று பலரும், அவர்களில் பலர் “விசா கிடைக்கணும்” என்றும் மும்முரமாக இருப்பார்கள். 


தமிழகத்தில் ஒரு புதிய பிராமணக் கட்சியை எளிதில் உருவாக்கலாம். ஆனால் அந்தக் கட்சி கணிசமான பிராமணர்களின் ஆதரவை ஈர்க்காது – அவர்களின் சக்தியைத் தேர்தல் முடிவுகளில் ஒருமுகமாக வெளிக்காட்டும் தெர்மா மீட்டராக இருக்காது.  

 

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai