Thursday, 12 November 2020

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ஓம் கொரோனாயா நமஹ

          -- ஆர்.வி.ஆர்

 

          ஊரெல்லாம் பரவி நம்மளை சங்கடத்துல வச்சிருக்கே கொரோனா வைரஸ், அதைப் போய் யாராவது வணங்கறேன்னு சொல்லுவாளா? இப்படி வெறும்ன கேட்டா, ‘சொல்ல மாட்டா’ன்னு நினைப்பேள். ஆனா நம்ம வாழ்க்கைக்கு உபயோகமா இந்த வைரஸ் ஒரு படிப்பினையைக் காமிக்கறதுன்னா, கொரோனாக்கு ஒரு சலாம் வைக்கறது தப்பில்லையே?   

         

          உங்களையே எடுத்துக்குங்கோ – ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். நீங்க நடமாடறேள், நன்னா தெரியறேள். இருந்தாலும் டாக்டர்லாம்  உங்க உடம்புல தீர்க்க முடியாத ஏதோ வியாதி இருக்கு. நீங்க இன்னும் அஞ்சாறு மாசம்தான் ஜீவிப்பேள்னு சொல்லிட்டா நீங்க மத்தவாள்ட இன்னும் கனிவா இருக்க ஆரம்பிப்பேள். மத்தவாளும் உங்ககிட்ட கரிசனம் காட்டுவா. அவா உங்களுக்குப் பண்ணின தப்பை நிறைய மன்னிப்பேள். நீங்க அவாளுக்கு பண்ணின தப்பை அவாளும்  மன்னிக்கத் தயாரா இருப்பா. புருஷன் பொண்டாட்டி ஒருத்தருக்கு ஒருத்தர்  இன்னும் விட்டுக் குடுப்பா.  அஞ்சாறு மாசத்துல உலகத்தை விட்டுப் போற வருத்தம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனா மனஅமைதியும் உங்களுக்குத் தானா கூடி இருக்கும் ஏன்னா எந்த மனுஷா கிட்டயும் உங்களுக்கு பிரச்சனை இருக்காது.   

 

இப்ப நிஜத்துக்கு வரலாம். நீங்க நன்னாத்தான்  இருக்கேள், டாக்டர் உங்க ஆயுசுக்கு கெடு வைக்கலைன்னே இருக்கட்டும். நீங்க மூக்கும் மாஸ்க்குமா, சோப்பும் கையுமா இருக்கேள்,  சமூக இடைவெளி பாத்து இருக்கேள்னும் வச்சுக்கலாம்.  இருந்தாலும்  கொரோனா பயத்தை விட முடியறதா, இல்லையே? இந்த கொரோனா பூதம்  நம்ம ஆயுசைப் பத்தி நமக்கே சந்தேகத்தை ஏற்படுத்திருக்கு. நம்ம சந்தேகம் இதோட நிக்கறதில்லை. ‘கொரோனாக்கு தடுப்பூசியோ மருந்தோ வந்தாலும், அது நமக்கு ஒழுங்கா வேலை செய்யுமா, நம்ம காலத்துலயே கொரோனா மாதிரி வேற சில பூதங்கள் எங்கேர்ந்து எப்ப வருமோ, நம்ம இப்ப தப்பிச்சாலும் அப்ப தப்பிக்க முடியுமா’   அப்படிங்கற கலக்கம் எல்லாருக்கும் இருக்கும்.

 

இந்த கொரோனா கலக்கத்தை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு, மனுஷா பிரச்சனை ஒண்ணைப் பாக்கலாம்.   வயத்துக்கு சாப்பாடு, தங்கறதுக்கு இடம், அதுக்கு உண்டான சம்பாத்தியம், இதெல்லாம் இருக்கறவாளையே எடுத்துக்குங்கோ. இவாள்ள,  நூத்துல தொண்ணூறு பேருக்கு பெரிய பிரச்சனை என்னன்னா பிறத்தியார்தான், வேற மனுஷாதான்.  அதுவும் ஆபீஸ்லயோ அக்கம் பக்கத்துலயோ இருக்கறவா இல்லை – அதெல்லாம் சொற்பம். வீட்டுக்கு உள்ள சேர்ந்து வாழறவா, அப்பறம் அங்க இங்க இருக்கற நெருங்கின சொந்தக்காரா சில பேர், அவாதான் பிரச்சனை. அவா பேச்சும் செயல்பாடும் இவாளுக்கு பிடிக்கலை, சகிக்கலை. அதான் பெரிய பிரச்சனை. அந்தப் பேச்சும் செயல்பாடும்  இவா கையைக் காலை கட்டிப் போடாது. அப்பக்கூட அதுதான் இவாளுக்கு பிரச்சனை, இவா நிம்மதியைக் குலைக்கறது.  இந்தப் பிரச்சனைய நிவர்த்திக்க, கொரோனா நமக்கு ஒரு கண்ணோட்டத்தைக் காமிக்கறது.  கொஞ்சம் விளக்கட்டுமா?   

   

‘நாமளே நிரந்தரம் இல்லை – அப்ப நம்ம பிரச்சினைகளும் நிரந்தரம் இல்லை’ அப்படின்னா  சரியா, சொல்லுங்கோ. பாதி சரின்னு தோண்றதா? அப்படியே வச்சுக்கலாம். அந்தப் பாதியை பிடிச்சிண்டாலே, இருக்கற நிம்மதியை நாம ரண்டு மடங்கு பண்ணிக்கலாம்.  எப்படின்னா, கொரோனா நம்ம பொடனில அடிச்சு சொல்லிருக்கு, தினமும் சொல்லிண்டிருக்கு  – நாம  நிரந்தரம் இல்லைன்னு. எங்கையோ மறைஞ்சு இருக்காமே, கொரோனா மாதிரியான வைரஸ் பூதங்கள், அதுகளும் “ஆமா ஆமா, மனுஷ வாழ்க்கை  நிரந்தரம் இல்லை”ன்னு கூவறதுகள்.  

 

நம்ம ஞானத்துல அதுவா புரிய வேண்டிய விஷயத்தை, கொரோனா பூதம் நமக்கு முன்னாடி நின்னு  சத்தம் போட்டுச் சொல்றது. அதான், “நாமளே நிரந்தரம் இல்லைன்னா நம்ம பிரச்சனைகளும் நிரந்தரம் இல்லை”.  அப்பறம் எதுக்கு வேண்டாத பிரச்சனையைக் கட்டி அழணும், வேண்டாத மனுஷாளை நினைச்சுப் பொருமணும்? அவாளை  சட்டுனு மனசுலேர்ந்து உதறிடலாம். நிம்மதியை பெரிசு பணணிக்கலாம்.   என்ன சொல்றேள்? இதெல்லாம் வெறும் தத்துவமா தெரியறதா?  சரி, வேற ரூட்டுல வரேன். பஸ் ரூட்டுதான்.  

 

நீங்களே பாத்திருப்பேள். அசௌரியமா இருந்தாலும் மூணு மணி, அஞ்சு மணி, ஏன் பத்து மணி நேர பஸ் பிரயாணத்தையும் நிறையப் பேர் பொறுமையா முடிக்கறா. அந்த அசௌரியத்தைப் பத்தி பெரிசா நினைக்காம, அதைப் பத்திக் கவலைப் படாம, ‘இது முடியப் போறது’ன்னு புரிஞ்சுண்டு பிரயாணத்தை முடிக்கறா.  அந்த மாதிரி, நமக்குப் பிரச்சனைன்னு நாம நினைக்கறோமே, அந்த மனுஷாளை மனசுலேர்ந்து – ஒரு பிரயாண அசௌரியம் மாதிரி - தள்ளி வச்சுடலாமே, எடுத்தே விட்டுடலாமே? நம்ம நிம்மதியைக் கூட்டிக்கலாமே?

 

இன்னொண்ணு. அதையும் சொல்லணும். எல்லார்கிட்டயும்  ஒரு வினோத குணம்  இருக்கு, பாத்தேளா? நம்ம வீட்டுல, நம்ம பழகற ஒரு மனுஷனோட பேச்சு செயல் நமக்குப் பிடிச்சிருந்தா, அவர் நமக்கு நல்லதே பண்ணிண்டு இருந்தாலும்,  அதை சும்மா குறிச்சுப்போம், அதை நினைச்சு பூரிக்க மாட்டோம் – நிறையப் பேர் அவருக்கு தேங்க்ஸ் கூட நினைக்கறதில்லை.  ஆனா அந்த மனுஷனோட பேச்சு செயல் நமக்குப் பிடிக்கலைன்னா, அதை சும்மா கண்டுண்டு மனசுலேர்ந்து விலக்காம அப்பப்ப அசை போடுவோம், அடிக்கடி அவரை நினைப்போம்,  அவரை மனசுக்குள்ள திட்டுவோம், பொருமுவோம், நிம்மதியை இழப்போம். இதுல பெரிய பிரச்சனை எங்க இருக்கு – அந்த மனுஷன் கிட்டயா, நம்ம கிட்டயா?

 

நம்மளை விடுங்கோ.  பீஹார்ல இருக்கற சாதாரண ஏழை ஜனங்களைப் பாருங்கோ.  கொரோனா தொடங்கின காலத்துல அவா லட்சக் கணக்குல வெளி மாநிலங்கள்ள வேலை பண்ணினா. அப்ப நாடு பூரா ஊரடங்கு வந்து அவாளுக்கு வேலை போய் சம்பளமும் இல்லைன்னு ஆயிடுத்து. பஸ் ரயில் போக்குவரத்தும்  நின்னு போச்சு. அந்த பீஹார் ஜனங்கள் தமிழ் நாட்டுலேர்ந்து, மத்த மாநிலங்கள்ள இருந்து, தலைல மூட்டையோட பீஹாரைப் பாத்துண்டு எத்தனை கிலோமீட்டர் நடந்தா? போற வழில அங்க அங்க பிரயாண உதவி அவாளுக்குக் கிடைச்சிருக்கலாம். ஆனா நீங்களும் நானும் நினைச்சுப் பாக்க முடியுமா அவா நடந்த தூரத்தை, அவா பட்ட கஷ்டத்தை?  அந்தக் கஷ்டத்தையும் தாண்டி அவா வாழ முடியும்னு அப்படி நடந்தா. இப்ப திரும்பவும் அவா வெளி மாநிலங்களுக்கு நம்பிக்கையோட வேலைக்கு வரா.  இதுல நமக்கான விஷயம் என்னன்னா, ஒதுக்கித் தள்ள வேண்டிய சில மனுஷாளை நம்மளே ஒரு பிரச்சனையா பாக்காம, போயிண்டே இருக்கணும்.   

 

நமக்கு பிரச்சனையா இருக்கறவா நம்ம வாழ்க்கைல தவிர்க்க முடியாம இருக்கா, அதுவும் வீட்டுலயே இருக்கா  – புருஷன் பொண்டாட்டி, அம்மா அப்பா, பையன் பொண்ணு  மாதிரி – அப்படின்னா என்ன  பண்றது? அதாவது, அவாகிட்ட நம்ம  நேரா நியாயமா நாசூக்கா இருந்தாலும், பிரச்சனை தீரலைன்னு ஆகலாமே? அப்படின்னா அது வேற விஷயம்.  நூத்துக்கு பத்து கேஸ்தான் இந்த ரகமா இருக்கும்.  தொண்ணூறு கேஸ் எப்படின்னா, அஞ்சு மணி, பத்து மணி நேர பிரயாண அசௌரியம் போலத்தான் இருக்கும். இதுதான் வாழ்க்கைல நிறையப் பேரை நிறைய சந்தர்ப்பத்துல பாதிக்கறது. சரியான மனசோட நாம இதைத் தாண்டினாலே பெரிசு.  

 

மனுஷா சம்பத்தப் பட்ட பிரச்சனையால நம்ம நிம்மதி கெடாம இருக்கணும்னா, நம்ம மனசு, நம்ம சிந்தனைதான் நமக்கு உதவணும். அது இப்ப ஆகாதுன்னா, ஒண்ணு பண்ணலாம். பொழைச்சுக் கிடந்தா அடுத்த பூதம் வரும் போதாவது அதுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு புதுசா பாடம் கத்துக்கலாம். இதுதான்  எனக்குத் தோண்றது. நீங்க என்ன நினைக்கறேள்?  

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2020

 

 

2 comments:

  1. welcome Ambujam patti after a long time with a very positive message in these tough corona times. The advice is worth considering by all.

    ReplyDelete