-- ஆர். வி. ஆர்
2019 லோக்
சபா தேர்தல் பிரசாரத்தின் போது பாளையங்கோட்டையில் திமுக தலைவர்
மு.க. ஸ்டாலின் பேசியது காற்றோடு போயிருக்கும். அவர் சொன்னது: "திமுக
ஹிந்துக்களுக்கு எதிரான அமைப்பு அல்ல. மத சார்பின்மையிலும் சமத்துவத்திலும் திமுக முழு
நம்பிக்கை
கொண்டது.” - (thehindu.com, 9.4.2019).
ஸ்டாலின் என்ன
பொருளில் பேசினார் என்றால், ‘அனைத்து மதங்களையும் சமமான கண்ணோட்டத்தில், பாரபட்சம்
இல்லாமல் திமுக பார்க்கும். ஆகையால் திமுக
ஹிந்துக்களுக்கு மட்டும் எதிரானது என்ற விமர்சனம் தவறு’ என்று அர்த்தம் வரும்படி சொன்னார்.
திமுக இதை மறுப்பதற்கில்லை. பின்பற்றுவதும் இல்லை.
சமீபத்தில்
கறுப்பர் கூட்டம் என்ற ஒரு குழு, கந்த சஷ்டி கவசம் பாடலை ஆபாசமாக இழிவு செய்து
ஹிந்துக்களைப் புண்படுத்தியது. இதற்கு திமுக-வின்
மறைமுக ஆதரவு உண்டு என்ற பரவலான குற்றச்சாட்டும் எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. இதன்
தொடர்ச்சியாக, ஸ்டாலின் இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் (thehindu.com,
21.7.2020). அதில், "திமுக-வின் எதிரிகள்
தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் நமது கட்சியை ஹிந்துக்களுக்கு
எதிரான வகையில் சித்தரிக்கிறார்கள். திமுக-வினர் இந்த குற்றச்சாட்டிற்கு எதிர்வினை செய்யாமல், இதை வெறும் தமாஷாகப்
பார்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல தமாஷ்தான்.
திமுக ஹிந்துக்களுக்கு
எதிரானதா இல்லையா என்பது திமுக தலைவர்களின் சில பேச்சுக்களிலில் இருந்தும் சில செய்கைகளில்
இருந்தும் விளங்கும். ஆனால் ஸ்டாலின் பூசி மெழுகிச் சொல்வது இதுதான்: “திமுக ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. ஆகவே ஹிந்துக்கள்
யாரும் திமுக-வில் சேர வேண்டாம், திமுக-விற்கு ஓட்டுப் போடவும் வேண்டாம் - என்று திமுக
தலைவர்கள் யாரும் அப்பட்டமாகச் சொன்னார்களா?
இல்லையே! ஆகையால் திமுக ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல என்பது நிரூபணம் ஆகிவிட்டது”. இது ஸ்டாலின் செய்யும் தமாஷ்.
சாதாரணமாக
ஒரு தமாஷை விளக்கிச் சொல்லக் கூடாது. ஆனால்
திமுக செய்யும் தமாஷ் தமிழக ஹிந்துக்களுக்கே சரியாகப் புரியவில்லை என்பதால் இதை சற்று
விவரிக்கலாம்.
2011-ம் வருஷ ஜனத்தொகை கணக்கின்படி, தமிழ் நாட்டில் ஹிந்துக்கள் கிட்டத்தட்ட 88
சதவிகிதம், முஸ்லிம்கள் 6 சதவிகிதத்திற்கு சற்று குறைவு, கிறிஸ்தவர்கள் 6 சதவிகிதத்திற்கு
சற்று மேல் என்று உள்ளார்கள். இவர்களில் எந்த
மதத்தினருக்கு அவர்களின் முக்கிய பண்டிகைக் காலங்களில் ஸ்டாலின் வாழ்த்து சொல்கிறார்?
ரம்ஜானுக்கு உண்டு. கிறிஸ்துமஸுக்கு உண்டு. 88 சதவிகித ஹிந்துக்களின் தீபாவளிக்குக் கிடையாது, விநாயக சதுர்த்திக்கும் கிடையாது.
ஒருமுறை ஸ்டாலின்
விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லியதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வந்தது.
இது நடந்தது 29.8.2014-ம் தேதி. அனைவரும் ஆச்சரியப்பட,
இரண்டு நாட்களில் திமுக-வின் தலைமைக் கழகம் பத்திரிகைகளுக்கு இப்படி ஒரு செய்திக்குறிப்பு
அனுப்பியது (dinamalar.com, 31.8.2014):
“மு. க. ஸ்டாலினின் இணையதளத்தை பாராமரிக்கின்றவர்களில்
சிலர் ஆர்வமிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவிப்பதைப் போல மு,கஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது மு. க. ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும்.
இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”
நன்றாகக் கவனியுங்கள்.
விநாயக சதுர்த்திக்கு ஒருவர் வாழ்த்து சொல்வது
என்பது, “எல்லோரும் தெரிவிப்பதைப் போல” என்ற
உண்மை திமுக-வின் செய்திக் குறிப்பிலேயே இருக்கிறது. தமிழ் நாட்டின் 88 சதவிகித
மக்களுக்கு, தமிழ் நாட்டின் ஆட்சியில் பலமுறை இருந்த ஒரு கட்சியின் முக்கியத் தலைவர் - அப்போது
ஸ்டாலின் கட்சியின் பொருளாளர் - விநாயக சதுர்த்தி வாழ்த்து சொல்வதை விரும்பவே மாட்டார், அது அவருக்குக் கசக்கும், என்பது கட்சியின் அதிகாரபூர்வ செய்தி.
ஸ்டாலின் மட்டும்
அல்ல. 2018-ல் மறைந்த அவரது தந்தையும் திமுக-வின் தலைவராகவும் இருந்த மு. கருணாநிதியும் விநாயக சதுர்த்திக்கோ மற்ற ஹிந்து பாண்டிகைகளுக்கோ
வாழ்த்து சொன்னதில்லை – காரணம், அவரும் அப்படி வாழ்த்து சொல்வதை விரும்ப மாட்டார். அப்படியானால் திமுக ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு
எதிரானது என்பது உதய சூரியன் மாதிரி பளிச்சென்று தெரிகிறதா இல்லையா?
நமக்குத் தெரிந்தவர்களுக்கு,
நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு, ஏதேனும் கெட்டது நேர்ந்தால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும், நல்லது நடந்தால் – அல்லது அவர்கள்
கொண்டாடும் நிகழ்ச்சி வந்தால் – அவர்களுக்கு
வாழ்த்து தெரிவிப்பதும் ஒரு பண்பு, ஒரு நாகரிகம்.
தமிழ் நாட்டு ஹிந்துக்கள் திமுக-வுக்கு ஓட்டளித்து பல முறை அந்தக் கட்சியை மாநிலத்தில் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள்.
அப்படி அரசை நடத்திப் பலவிதமான பயன்களையும்
அனுபவித்தும், அந்த மக்கள் குதூகலமாகக் கொண்டாடும் தீபாவளிக்கோ விநாயக சதுர்த்திக்கோ
திமுக-வின் தலைவர் வாழ்த்து சொல்வதில்லை, ஆனால் ரம்ஜானுக்கும் கிறிஸ்துமஸுக்கும் அந்தந்த
மதத்தவர்களுக்கு அவர் வாழ்த்து சொல்லுவார் என்றால் என்ன அர்த்தம்? ஹிந்துக்களிடம் எந்த பாரபட்சமும்
காட்டாமல், ‘மத சார்பின்மையிலும் சமத்துவத்திலும்
முழு நம்பிக்கை கொண்டது திமுக’ என்று அர்த்தமா? என்ன தமாஷ்
இது?
நமது ஜனாதிபதியாக
இருந்த அப்துல் கலாம் ஒரு முஸ்லிம். அவர் நாட்டு மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையின் போது
வாழ்த்து சொன்னதுண்டு. அதே போல் தீபாவளிக்கும் கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
ஹிந்துவான பிரதமர் மோடியும் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அப்படிச் செய்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாத கேரள முதல் அமைச்சர்
பினராயி விஜயனும் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய மூன்று மதப் பண்டிகைகளுக்கும்
மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால் தமிழ் நாட்டில், திமுக-வின் பகுத்தறிவுத்
தலைவர்கள் ஹிந்து பண்டிகைகளின் போது மட்டும் அடாவடியாக மௌனம் காப்பார்கள்.
வெளி நாடுகளைப்
பாருங்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் கிறிஸ்தவர்கள். அந்த மூவரும் தங்கள் நாட்டு கிறிஸ்தவர்களுக்கு
கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்கிறார்கள். அதோடு,
தங்கள் நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்தும் இந்திய வம்சாவளி ஹிந்துக்களுக்கு
தீபாவளி வாழ்த்தும் சொல்கிறார்கள். இது மட்டுமல்ல. துபாய் நாட்டு முஸ்லிம் அரசரும் முஸ்லிம்களுக்கு
ரம்ஜான் வாழ்த்து சொல்வதோடு, தனது நாட்டில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்தும்
தெரிவிக்கிறார். இத்தனைக்கும் அவர் ஸ்டாலின் மாதிரி தனது பிரதேச ஹிந்துக்களின் ஓட்டுக்களை
தாஜா செய்து வாங்கி அவ்வப்போது பதவியைப் பிடிக்க
வேண்டாம். இருந்தாலும் வேற்று மதத்தினாரான
ஹிந்துக்களிடம் அவர் காட்டும் பண்பு, ஆட்சிக்கு அலையும் திமுக தலைவர்கள் அறியாதது.
இப்படி அமெரிக்கா,
இங்கிலாந்து, கனடா, துபாய் நாடுகளில் ஆட்சி செய்பவர்கள் யாராவது தங்கள் நாட்டிலுள்ள தம் மதத்து மக்களின் முக்கிய பண்டிகைக்கு
வாழ்த்து சொல்லாமல், தமது தேசத்து சிறுபான்மை மக்களின் திருநாளுக்கு மட்டும் வாழ்த்து
சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அப்படியானால், அந்தந்த நாட்டின் மக்கள்
தங்களின் தலைவர்களை, அரசரை, என்ன நினைப்பார்கள்? ‘சொந்த மத வெறுப்பாளன்’ மற்றும் ‘வக்கிர
புத்தி உடையவன்’, என்றுதானே வாழ்த்துக் கிடைக்காத அந்த மக்கள் நினைப்பார்கள்? அப்படியானால்
அதுவும் சரிதானே? ஆனால் பல விஷயங்களில், பல நேரங்களில், ஹிந்துக்கள் தம் நலன் அறியாதவர்கள், மிகவும் பொறுமைசாலிகள்.
இதை நன்றாக அறிந்து லாபம் அடைகிறவர்கள் இந்திய அரசியல்வாதிகள் – அதில் திமுக-வினர் கில்லாடிகள்.
கருணாநிதி காலத்தில் அவர் ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும். அதாவது, ஹிந்துக்களை வேண்டுமென்றே இப்படி மலிவாகப் புறக்கணித்தால் 'சிறுபான்மை மக்கள் திமுக-வுக்கு நேசமாக இருப்பார்கள், அவர்கள் ஓட்டுக்களை மொத்தமாகப் பெற இதுவும் ஒரு யுக்தி' என்று கணக்குப் போட்டார். சிறுபான்மை மக்களோ அவர்களின் தலைவர்களோ அதைக் கருணாநிதியிடம் எதிர்பார்க்கவில்லை, அதற்காக மகிழவும் இல்லை. அவரது துர் சிந்தனையின் விளைவுதான் அந்த பாரபட்சம். தந்தை செய்ததை இப்போது ஸ்டாலினும் தொடர்கிறார்.
ராஜீவ் காந்தி
காங்கிரஸின் பெரிய தலைவராக இருந்தபோது, “நான் ஒரு ஹிந்து” என்று உரக்கச் சொல்லி ஓட்டு
கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இப்போது ஹிந்துக்களின் ஓட்டுக்கள் தங்களுக்கு உத்தரவாதமல்ல,
அவை வட இந்தியாவில் இன்னொரு கட்சிக்கு அதிகம் செல்கின்றன என்பதை காங்கிரஸும் மற்ற கட்சிகளும்
2014 லோக்சபா தேர்தல் முடிவுகளில் உணர்ந்துவிட்டன.
ஆகவே 2019 லோக் சபா தேர்தலுக்கு முன்கூட்டி ஆயத்தம் செய்கிறபோது, காங்கிரஸ் கட்சியே
அதன் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றி “அவர்
ஒரு பூணூல் அணிந்த ஹிந்து” என்று பகிரங்கமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ராகுலும் தான் இன்ன கோத்திரம் என்பதை
குறிப்பிட்டு சொல்லி, தான் ஒரு ஹிந்து, காஷ்மீர் பிராமணர், என்றும் விளக்கி சொல்லிக் கொண்டார். அப்பா செய்ய வேண்டாததைப் பையன் செய்தார்.
ஸ்டாலினைப்
பொறுத்தவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அளவுக்கு வக்கிர எண்ணமும் அதை
மறைக்கும் சாமரத்தியமும் அவர் மகனுக்குக் கிடையாது. அதனால்தான், “என் மனைவியே தினமும்
கோவிலுக்குப் போகிறவர்” என்ற அளவிறக்காவது – அதாவது, திமுக ஹிந்து மக்களைப் புறக்கணிக்கும்
கட்சி அல்ல, நான் அப்படியான தலைவர் அல்ல, என்று சொல்வதற்காக - அவர் தயங்காமல் பேச முடிகிறது.
இருந்தாலும் அவர் திமுக-வின் பழைய பிம்பத்தைச் சார்ந்துதான் ஒரு கட்டாயத்துடன் நிற்க முடிகிறது. அதைத் தாண்டி அவருக்குத் தெளிவான
சிந்தனையும் இல்லை, திடமான மனதும் இல்லை.
தமிழக ஹிந்துக்கள்
திமுக-வை எதிர்த்து அதிக அளவில் ஓட்டளித்தால், ஸ்டாலினும் ராகுல் காந்தி மாதிரி தந்தை
பேசாதாதைப் பேசுவார். அப்போது, “எங்கள் குடும்பம்
ஹிந்து குடும்பம்தான். என் குல தெய்வம் இந்த
மாவட்டத்தில் இந்த ஊரில் தான் இருக்கிறது.
என் மனைவி கோவில்களுக்கு சென்றும் நான் மானசீகமாகவும் பல கடவுள்களை வழி படுகிறேன். கழகத்
தொண்டர்கள் அனைவரையும் ‘ஒன்று தொழுவோம் வா’
என்று அன்புடன் அழைக்கிறேன்” என்ற அறிவிப்பை
ஸ்டாலினிடம் எதிர்பார்க்கலாம் அல்லவா?
* * * * *
Copyright © R. Veera Raghavan 2020