இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைல ராகுல் காந்தி சொல்றதைப் படிச்சேளா? உடனே,
'இந்த படவா காதைப் பிடிச்சு பொடனில
ஒண்ணு கொடுக்கணும்'னு
உங்களுக்கு தோண்றதா? ஆமான்னா நீங்க
தேசத்தை நேசிக்கறவர்னு அர்த்தம்.
சீனா சர்வாதிகார நாடு. அங்க கம்யூனிஸ்ட்
கட்சிதான் ஒரே அரசியல் கட்சி. எதிர்க்கட்சி கிடையாது. சீனா நம்ம இந்தியாட்ட என்ன அக்கிரமம்
பண்ணினாலும், சீன அரசாங்கத் தலைவர்களுக்கு உள்நாட்டு விமர்சகர்களை சமாளிக்கற அவசியமே
இல்லை.
இந்தியா ஜனநாயக நாடு, ஆனா முதிர்ச்சிக்கு வரணும். இங்க வருஷக்கணக்கா,
அதுவும் இந்திரா காந்தி காலத்துலேர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைமையோட போக்கு என்னன்னா, கட்சிலயோ
ஆட்சிலயோ தர்ம-நியாயம், ஜனநாயகப் பண்பு, திறமைக்கு அங்கீகாரம்னு அலட்டிக்கறது இல்லை.
சோனியா காந்தி பட்டத்து ராணியா வந்தப்பறம்
கோல்மால்
கோலோச்சினது. அவாளோட பொறுப்பில்லாத பிள்ளை ராகுல் காந்திக்கு கட்சில எல்லாரும் சலாம்
போட்டா. அது சோனியா காந்திக்கு ரசிச்சது. அதுவே நமக்கும் ஆதாயம்னு, போடறவா ரண்டு கைலயும்
சலாம் போடறா.
இப்படி இருக்கற காங்கிரஸ் கட்சிக்கு, பாரதிய ஜனதா கட்சிலேர்ந்து நரேந்திர மோடின்னு ஒரு தலைவர் சத்ருவா வந்தார்.
அதுவும் எப்படி? நேர்மை, நியாயம், நெஞ்சுரம், தேசப்பற்று, அரசியல் சாதுர்யம்னு சோனியா
காங்கிரஸ் பார்க்காத ஆயுதங்களோட வந்தார்.
2014, அப்பறம் 2019-ன்னு அடுத்தடுத்து ரண்டு லோக் சபா தேர்தல்ல காங்கிரஸ்,
அதோட சேர்ந்த உதிரிக் கட்சிகள், எல்லாத்தையும் ஒரு கூட்டணி தலைமைல தோக்கடிச்சு பிரதமர்
ஆனார் மோடி. இப்படி பத்து வருஷம் ஆட்சி கைல இல்லைன்னா காங்கிரஸ் கட்சித்
தலைவர்களுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்னு உங்களுக்கும் எனக்கும் என்ன தெரியும், எவ்வளவுதான்
தெரியும்?
இப்ப சோனியா காந்தி, பையன் ராகுல், பொண்ணு பிரியங்கா, மாப்பிளை ராபர்ட் வத்ரான்னு அவா அவா ஏகப்பட்ட
நஷ்டத்துலயும் கஷ்டத்துலயும் புழுங்கிண்டிருக்கா. அதோட, அவாளோட
தப்புத் தண்டாவை மோடி அரசாங்கம் புலன் விசாரணை
பண்ணி கேஸ் மேல கேஸா போடறா. நேர்மையான மோடி ஆட்சில இதெல்லாம் எப்படி
முடியுமோன்னு சில பேர்க்கு பக் பக்னு இருக்கும்.
இவ்வளவு சிக்கல்ல, சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ நிதானமா இருக்க முடியுமா?
அதுவும் அறைகுறை புத்தி, அச்சுப் பிச்சுப் பேச்சு, அம்மா செல்லம்னு ஜொலிக்கற ராகுல்
காந்திக்கு புத்தி பேதலிச்சே போயிடுத்து.
2017-ம்
வருஷம் ஜூன் மாசம் இந்தியா-சீனாவுக்கு
ஒரு பிரச்சினை வந்தது. அப்ப ராகுல் காந்தி
என்ன வேலை பண்ணினார் தெரியுமா? சொல்றேன்.
சீனாவுக்கு, பூட்டான் நாடும் ஒரு அண்டை நாடுதான். பூட்டான் நாடு டோக்லம் பகுதில, 2017 ஜூன் மாசம் சீனா தனக்கு ரோடு போட ஆரம்பிச்சது.
இந்தியா-பூட்டான் பாதுகாப்பு ஒப்பந்தப் படி இந்தியப் படைகள் அங்க போய் பூட்டானுக்கு
ஆதரவா ரோடு வேலையை நிறுத்தினது. அப்ப சீனா
முரண்டு பிடிச்சது. ரண்டு மாசத்துக்கு மேல இந்தியா சீனா துருப்புகள் எதிரும் புதிருமா டோக்லம் பகுதில
முறைச்சது. இந்தியா-சீனா யுத்தம் வருமோன்னு
ஒரு உணர்வு இந்தியால பொதுவா பரவி இருந்தது. ஆனாலும், கூச்சல் போட்டுண்டிருந்த சீனாவை
அதிகம் பேசாம, திடமா அமைதியா கையாண்டார் மோடி. அந்த வருஷம் ஆகஸ்ட் கடைசில அந்தப் பிரச்சனை
ஒரு வழியா ஓய்ஞ்சது. நாம தடுத்த ரோடு வேலையை
சீனா நிறுத்தினது.
சீனா டோக்லம் பகுதில பிரச்சினை உண்டாக்கின போது, ராகுல் காந்தி ஏதோ பேருக்கு
அரை குறையா சீனாவை கண்டிக்கறது, மோடியை அப்பப்ப மட்டம் தட்டி ஏதாவது பேசறது, ட்வீட்
பண்றதுன்னு பொழுதைப் போக்கினார். ஆனா அதோட
நிக்கலை.
ஜூலை 2017-ல, நம்ம அரசாங்கத்துக்குத் தெரியாம இந்தியாவுக்கான சீன தூதரை திடீர்னு
சந்திச்சார் ராகுல். அந்த செய்தி வெளில கசிஞ்சு வந்தது. அப்பறம் ராகுல் காந்தியே சீன
தூதரை பாத்துப் பேசினேன்னு வெக்கமில்லாம ட்வீட் விட்டார், “முக்கிய விஷயங்கள் பத்தி எனக்கு தெரிஞ்சாகணும்.
அதுனால நான் சீன தூதரை சந்திச்சேன், பூட்டான் தூதரையும் பாத்தேன், முந்தைய தேசிய பாதுகாப்பு
ஆலோசகரையும் பாத்தேன், வட கிழக்கு காங்கிரஸ் தலைவர்கள் கிட்டயும் பேசினேன்” அப்படின்னு அந்த எல்லாரையும் அவியலா போட்டு, ஏதோ பத்தோட பதினொண்ணா
சீன தூதரை பாத்தா மாதிரி கெக்கே பிக்கே விளக்கம்
சொன்னார் ராகுல்.
நம்ம பிரதமர்
என்ன சொல்றார்னு கேட்டு அவருக்கு முழுசா தோள் குடுக்காம, எதிரி நாட்டு தூதரைப் பாத்து
“எப்படி இருக்கேள் சார்! சௌக்கியமா? நம்ம நாட்டு ராணுவ வீரர்கள் ஏன் சார் உரசிண்டிருக்கா?
நீங்கதான் தகவல் சொல்லணும்!” அப்படின்னு பேச இந்தியாலேர்ந்து ஒரு மட சாம்பிராணி போவானா?
ராகுல் காந்தி போனார்.
இப்ப மூணு
வருஷம் கழிச்சு நம்ம லடாக் நிலப்பரப்புல, கல்வான் பள்ளத்தாக்குல சீன ராணுவம் பிரச்சினை பண்றது. நம்ம
பகுதிக்குள்ள வந்து கட்டுமானம் எழுப்பினது. அதுக்கு நம்ம ராணுவம் எதிர்ப்பு சொன்னது. இந்த ஜூன் 15-16 தேதில, ரண்டு பக்கத்துக்கும் அந்த இடத்துல கைகலப்பு கட்டை
வீச்சுன்னு ஆகி, ரண்டு நாட்டு ராணுவத்துக்கும் உயிரச் சேதம் ஏற்பட்டது. நமக்கு 20,
சீனாவுக்கு 40-ன்னு தகவல் வந்திருக்கு.
டோக்லம் பிரச்சினையை விட இப்போதைய எல்லைப் பதட்டம் சீரியஸான விஷயம். சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நம்ம ஜவான்கள் உயிர்
துறந்தது நமக்கு பெரிய துயரம்தான். இருந்தாலும் மோடி அமைதியா, உறுதியா, தம்பட்டம் இல்லாம, வீர வசனம் பேசாம இந்த எல்லைப் பிரச்சினையை கையாள்றார். ஆனா ராகுல்
காந்தி தினமும் ஏதாவது பெனாத்திண்டே இருக்கார்.
“பிரதமர் ஏன் மௌனமா இருக்கார்? அவர் ஏன் ஒளியறார்? என்ன நடந்ததுன்னு
நமக்கு தெரியணும். சீனா எப்படி நம்ம ஜவான்களை கொல்லத் துணிஞ்சது? அவா எப்படி நம்ம நிலத்தை
எடுத்துக்கறது?” அப்படின்னு சீனாவை லேசா ஒரு தட்டு தட்டி, அந்த ஜோர்ல நம்ம பிரதமரை
கேவலமா இழிவு பண்ணி ட்வீட் குடுத்தார் ராகுல்.
இது ஜூன் 17-ம் தேதி.
“நம்ம படை வீரர்களை ஆயுதம் இல்லாம ஆபத்தை நோக்கி அனுப்பினது யாரு? யார் இதுக்கு
பொறுப்பு?” அப்படின்னு அடுத்த நாள் 18-ம் தேதி ராகுல் ட்வீட் பண்ணினார்.
அப்பறம் ஒரு நாள் “மத்திய அரசாங்கம் தூங்கிடுத்து”ன்னு கமெண்ட் அடிச்சார்.
அடுத்த
நாள், “பிரதமர் இந்திய நிலத்தை சீனாக்கு தாரை வாத்துட்டார்” அப்படின்னு மோடிக்கு ஒரு
இடி குடுத்தார். அதுக்கு அடுத்த நாள், “நரேந்திர மோடி சரண்டர் மோடியாக்கும்” அப்படின்னு
மலிவா கீழ்த்தரமா தேசப் பிரதமரை கேலி பண்ணி சீனாவை குளிர்விச்சார் ராகுல்.
நேத்திக்கு, ஜூன் 26-ம் தேதி கூட ராகுல் சும்மா இல்லை. “பிரதமர் சார்! தைரியமா
பேசுங்க. பயப்படாதீங்க. ‘ஆமா, சீனா நம்ம நிலத்தை எடுத்துண்டிருக்கு. நாம அதன் பேர்ல நடவடிக்கை எடுப்போம்’னு சொல்றதுக்கு
பயப்படாதீங்க.” அப்படின்னு ட்வீட் பண்ணிருக்கார். ஒரு நாசூக்கு, இங்கிதம், கௌரதை எதுவும் இல்லாம கன்னா
பின்னான்னு காமெடி வில்லன் மாதிரி பேசறார் ராகுல் காந்தி.
மோதல் களத்துல நாளுக்கு நாள், மணிக்கு மணி, என்ன நடந்தது, அதோட பின்னணி என்னன்னு
ராகுலுக்கு தெரியாது. நம்ம ராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் மட்டும்தான் எல்லா விவரமும்
தெரியும். இந்த மாதிரி எல்லைப் பிரச்சினைல, அதுவும் சீனா சம்பத்தப்பட்ட பிரச்சினைல, அரசாங்கமே பொதுவுல எந்த அளவு பேசணும்,
எந்த அளவு ரகசியமா காரியங்கள் பாக்கணும், உலக
நாடுகள் கிட்ட தனியா எப்படி நம்ம பக்க நியாயத்தை
எடுத்து சொல்லணும்னு ஒரு வரைமுறை, விவஸ்தை இருக்கு. ஒரு மண்ணும் தெரியாம, சகட்டு மேனிக்கு
மோடியை குத்தம் சொல்லிண்டே இருந்தா அடுத்த தேரதல்ல ஜெயிக்கறதுக்கு இப்பவே அடி போடலாம்னு
ராகுல் அல்பமா நினைக்கறாரா இல்லையா, சொல்லுங்கோ.
இந்தியாவுக்குள்ள, ராகுல் காந்தியை விட சீனாக்கு ஒரு நண்பர், அதுவும் இந்திய
நலனை ரண்டாம் பட்சமா பாக்கற ஒரு சினேகிதர், வேற யாராவது இருப்பாளா?
தேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்த காங்கிரஸ் கட்சியோட பிரதான தலைவர்,
அதுவும் நேருவோட கொள்ளுப் பேரன், ராகுல் காந்தி. அவர் எப்படி இந்த அளவு தறி கெட்டு,
தேச ஒற்றுமை உணர்வே இல்லாம, எதிரி சீனாவே நம்மளைப் பாத்து சிரிக்கற மாதிரி பேசறார்? இந்த
மகா அக்கிரமத்துக்கு கட்சிக்குள்ளயும் ஏன்
எதிர்ப்பு இல்லைன்னா, அதுக்கான பதில் சீனாவைப்
பாத்தா புரியும்.
"சீனாவோட அடாவடி, அக்கிரமம்,
அராஜகத்தைப் பத்தி பேசினா அந்த நாட்டு அப்பாவி மக்களைக் குறை சொல்றதுன்னு ஆகாது. மக்களை
அடக்கி ஆட்சியைப் பிடிச்சு வைச்சிருக்கிற
சீன கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் சீனான்னு சொல்றோம்" அப்படின்னு அரசியல் விமர்சகர்கள் எடுத்துச் சொல்றா. அது கரெக்ட். அதே மாதிரி, இன்னி தேதிக்கு
காங்கிரஸ் கட்சின்னா என்ன அர்த்தம்? கட்சியைக் கைக்குள்ள போட்டுண்டு, கால்ல நசுக்கற சோனியா
காந்தி, ராகுல் காந்தி ரண்டு பேர் மட்டும்தான் காங்கிரஸ் கட்சின்னு அர்த்தம். இதுவும் ரொம்ப கரெக்ட், இல்லையா?
* * * * *
Copyright © R. Veera Raghavan 2020