காங்கிரஸின் ப.சிதம்பரம் சட்டத்தை நன்கு படித்த மேதாவிதான், சந்தேகம் இல்லை. ஆனால் தனது அரசியல் ஆதாயத்துக்காக நாட்டைக் கேவலப் படுத்திய மாபாவி அவர். இதிலும் சந்தேகம் இல்லை.
ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்திய நமது அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370-ன் பல்லை லாவகமாகப் பிடுங்கிவிட்டது மத்திய அரசு. இப்போது அந்த மாநிலமும்
மற்ற மாநிலங்களைப் போல் இந்தியாவின் ஒரு முழு அங்கம். இந்த நடவடிக்கை பற்றி பரூக் அப்துல்லாவும், மெஹபூபா முப்தியும் சொல்லாததை, ஸ்டாலினும் பேசாததை - ஏன், பாகிஸ்தானும் கூறாததை - உளறி இருக்கிறார் ப.சிதம்பரம். "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முஸ்லிம்கள் மிகுந்த மாநிலமாக இருபதால்தான், 370-வது பிரிவில் பி.ஜே.பி அரசு மாற்றம் செய்தது. அந்தப் பிரதேசம் ஹிந்துக்கள் நிறைந்ததாக இருந்தால் அரசு இதை செய்யாது" என்று பித்துக்குளியாகவும் தேச நலன் விரோதியாகவும் பேசி இருக்கிறார் அவர்.
சுதந்திரம்
கிடைத்த நாளிலேயே ஜம்மு-காஷ்மீர் ஹிந்துக்கள் நிறைந்த பகுதியாக இருந்தால் என்ன நடந்திருக்கும்? அப்படியான
சூழ்நிலையில் ஷேக் அப்துல்லா அங்கு மக்களின் அபிமான தலைவராக ஆகி இருக்க மாட்டார். அப்போது ஹிந்துவான எவரும் ஜம்மு-காஷ்மீரில்
மக்களின் தலைவராக தோன்றி இருந்தால், தனது
மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அந்தத்
தலைவர் கேட்டிருக்க மாட்டார். 370-வது பிரிவும் அரசியல் சட்டத்தில் சேர்ந்திருக்காது.
இது கற்பனையான வாதமல்ல.
ஹிந்துக்கள்
நிறைந்த நூற்றுக்
கணக்கான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் சேர்ந்தன. அவை அனைத்தும், ஜம்மு-காஷ்மீர் போல
ஒரே மாதிரியான இணைப்புப் பத்திரங்களின் கீழ்தான் இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் அந்த
ஹிந்து மெஜாரிடி சமஸ்தானங்கள் தங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மாதிரியான சிறப்பு அந்தஸ்து
வேண்டும் என்று இந்தியாவை நிபந்திக்கவில்லை. ஆகையால், சுதந்திரம் பெற்ற காலத்தில்
ஜம்மு-காஷ்மீரிலும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக நிறைந்திருந்தால், 370-வது பிரிவு
அரசியல் அமைப்புச் சட்டத்தில்
நிச்சயமாக நுழைந்திருக்காது. பிறகு அந்த
சட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்காக இந்த நாளில் எந்த மாற்றத்தையும் பி.ஜே.பி-யின்
மத்திய அரசு நினைக்க அவசியம் இருக்காது. ப.சிதம்பரமும் "அது அப்படி
இருந்தால் இது இப்படி நடக்காது" என்று இப்போது உளறிக் கொட்டும் சந்தர்ப்பம் வந்திருக்காது.
தற்போது குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஜுனகாத், சுதந்திரத்திற்கு முன்னால் ஒரு சமஸ்தானமாக இருந்தது. 80 சதவிகிதத்திற்கும் மேலாக அங்கு ஹிந்துக்கள் வசித்தனர். அதன் மன்னர் ஒரு முஸ்லிம். அவர் தனது சமஸ்தானத்தை பாகிஸ்தான் நாட்டுடன் இணைக்கிறேன் என்று அதற்கான இணைப்புப் பாத்திரத்தில் கையெழுத்து போட்டு அந்த நாடும் அதை ஏற்றுக் கொண்டது. ஆனால் ஜுனகாத்தின் மக்கள் அந்த
இணைப்பை எதிர்த்தார்கள்,
இந்தியாவுடனான இணைப்பை விரும்பினார்கள்.
மேற்குப் பகுதியில் கடல், மற்ற மூன்று புறத்திலும் இந்தியாவின் நிலப்பரப்பு சூழ்ந்தது ஜுனகாத் சுமஸ்தானம். அது பாகிஸ்தானின் ஒரு பகுதியாகி இந்தியாவிற்குள்ளே கான்சர் கட்டி மாதிரி அமைந்துவிட்டால் நமது நாட்டிற்குப் பெரிய தலைவலி உண்டாகும்.
இந்த சூழ்நிலையில் ஜுனகாத் பிரதேசத்தை இந்தியா முற்றுகையும் இட்டதாக குறிப்புகள் உண்டு.
மக்களின் எதிர்ப்பையும், இந்தியாவின் அழுத்தத்தையும் சமாளிக்க முடியாமல் ஜுனகாத்தின் மன்னர் பாகிஸ்தானின் கராச்சிக்கு கடல் வழியாக தப்பித்தார். இந்தியா அந்த சமஸ்தானத்தின்
நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. ஜுனகாத் மக்களிடம் இந்தியா ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தியது. அதில் ஓட்டளித்த மக்களில் 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ஜுனகாத்
இந்தியாவின் அங்கமாவதை ஆதரித்தார்கள். முடிவாக இந்தியாவும் அந்த சமஸ்தானத்தைத் தன்னுடன்
இணைத்துவிட்டது.
ஜுனகாத் சமஸ்தானம்
அதன் மன்னரின் போக்கின்படி பாகிஸ்தானின் ஒரு பகுதியாகி இருந்தால் இன்று என்ன நடந்திருக்கும்?
இந்தியா மாதிரி வேற்று மத குடிமக்களை மதித்து
அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாடு அல்ல பாகிஸ்தான். அந்த நாட்டு ஆட்சியாளர்களின் ஹிந்து விரோதப் போக்கினால்,
ஜுனகாத் பிரதேசத்தில் ஹிந்துக்களின் சதவிகிதம் குறையும். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த
தினத்தில் மேற்கு பாகிஸ்தானில் (இப்போது அது மட்டும்தான் பாகிஸ்தான் நிலப்பரப்பு)
ஹிந்துக்கள் 15 சதவிகிதம் இருந்தனர். தற்போது அது சுமார் 2 சதவிகிதம். அதுபோல்தான்
ஜுனகாத் பகுதியிலும் ஹிந்துக்கள் குறைவார்கள். பிரதான பாகிஸ்தான் பகுதியில் இருந்து
சுலபமாக கடல் மார்க்கமாகவே எவரும் ஜுனகாத்திற்கு வந்து போகலாம், எதையும் கொண்டுவரலாம்
என்று ஆகும். பிறகு, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு
ஜுனகாத் ஒரு பாதுகாப்பான புகலிடமாக அமைந்திருக்கும்.
இப்போதைய பஸ்கிஸ்தான் நாட்டிலேயே சுமார் நாற்பதாயிரம் பயங்கரவாதிகள் நடமாடுகிறார்கள் என்று அதன் பிரதமர் இம்ரான் கான்
பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஜுனகாத்தை அந்த நாட்டுடன் இணைய விட்டிருந்தால்,
இன்றைக்கு பல்லாயிரக் கணக்கான பயங்கரவாதிகள்
ஜுனகாத் பகுதியிலும் வளர்க்கப்பட்டு இந்தியாவில் குண்டு வைத்து நாச வேலைகள் செய்ய முனைவார்களா
இல்லையா?
காங்கிரஸ் கட்சியின் உள்துறை மந்திரியாக இருந்த சர்தார் வல்லபாய் படேல்தான்
ஜுனகாத் சமஸ்தானத்தை
இந்தியாவுடன் இணைக்க முன்நின்று நடவடிக்கை எடுத்தார். இதை சிதம்பரம்
எப்படிப் பார்ப்பார்? ஜுனகாத் மன்னர் தனது சமஸ்தானத்தை
முறையாக பாகிஸ்தான் நாட்டுடன் இணைத்துவிட்ட பிறகு, அவர் ஒரு முஸ்லிம் என்பதால்தான் படேல் ஜுனகாத்தை எடுத்துக் கொண்டார் என்று சொல்லுவாரா மேதாவி சிதம்பரம்?
அடுத்தது ஹைதராபாத் சமஸ்தானம்.
இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்த அந்த சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர் ஒரு முஸ்லிம். அதன் மக்கள் தொகையில் சுமார் 85 சதவிகிதம் ஹிந்துக்கள். அந்த மன்னர் தனது சமஸ்தானம் இந்தியாவுடன் இணையாமல் ஒரு தனி நாடாகவே இருக்க ஆசைப்பட்டார். அப்படி இருப்பது ஒரு விதத்தில் அதன் உரிமையும் ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்து ஒரு வருடம் ஆகியும் அது இந்தியாவுடன்
இணையாமல் இருக்குமாறு அந்த மன்னர் பார்த்துக் கொண்டார். ஆனால் ஹைதராபாத்தின் பெருவாரியான ஹிந்துக்கள் இந்தியாவுடன் இணைவதை விரும்பினார்கள்.
ஹைதரபாத்
சமஸ்தானம் ஒரு தனி நாடாகவே தொடர்ந்தால் இந்தியாவுக்கு சிக்கல்களும் ஆபத்தும் நேரலாம்
என்று இந்தியா கருதியது. அப்போதைய உள்துறை மந்திரி படேல், செப்டம்பர்
1948-ல் ஹைதராபாத் சமஸ்தானத்திற்குள்
இந்திய ராணுவத்தை அனுப்பி ஐந்தே நாட்களில்
அந்த சமஸ்தானத்தை சரண் அடைய வைத்தார்.
இப்படித்தான் ஹைதராபாத் சமஸ்தானத்தின் பிடரியில் கைவைத்து இழுத்து இந்தியாவுடன் இணைத்து நமக்கு வரவிருந்த ஒரு பெரிய அபாயத்தைத் தடுத்தார்
படேல். ஹைதராபாத் சமஸ்தானத்தின் மன்னர் முஸ்லிமாக இருந்தார் என்ற காரணத்தால் இந்தியா அதன்
உரிமைகளை மிதித்து தன்னுடன் வலுக்காட்டாயமாக இணைத்தது என்றும் பேசுவாரா மேதாவி சிதம்பரம்?
சுதந்திரம்
கிடைத்த நாளில் சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ மாதிரியான ஒருவர் இந்தியாவின் பிரதமர்,
சிதம்பரம் மாதிரியானவர் உள்துறை அமைச்சர்
என்று நினைத்துக் கொள்ளுங்கள் - அப்படியானால் ஜுனகாத்தும் ஹைதராபாத்தும் இன்று நமது
நாட்டின் பகுதிகளாக இருக்குமா என்பது சந்தேகம்தானே? இந்தியாவின் நல்ல நேரம், வேறு மாதிரியானவர்கள் அந்தப்
பதவிகளில் இருந்தார்கள். தேச நலனை, தேச பாதுகாப்பை மனதில் வைத்து எப்படி சர்தார் படேல்
அந்தக் காலத்தில் அந்த இரு சமஸ்தானங்களில் நடவடிக்கை எடுத்தாரோ, அதே காரணத்திற்காக
அதைவிட தீவிரம் குறைந்த நடவடிக்கையை பிரதமர் மோடியின் அரசு இப்போது ஜம்மு-காஷ்மீர்
விஷயத்தில் எடுத்திருக்கிறது.
சர்தார் படேலுக்கு பிரதமர் மோடி இந்தியாவில் ஒரு பிரம்மாண்டமான சிலை அமைத்தார். அதைப் போல் ப.சிதம்பரத்துக்கும் தனது நாட்டில் சிலை எழுப்பலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நினைப்பாரோ?
ஜவஹர்லால் நேரு மாதிரி சுய சிந்தனையும் சுய கௌரதையும் நாட்டுப் பற்றும் மிகுந்த ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தால் சிதம்பரம் இப்படி சிறுப்பிள்ளைத்தனமாக, தான்தோன்றித்தனமாக, தேச விரோத தொனியில் பேசி இருக்க முடியுமா? இல்லை, இதே
நேரத்தில் காங்கிரஸின் மணி சங்கர் ஐயர்தான் ”மோடியும் அமித் ஷாவும் நமது வடக்கு எல்லையில் ஒரு பாலஸ்தீனத்தை ஏற்படுத்திவிட்டார்கள்" என்று பேசி காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு
ஊக்கம் தரும் சமிக்ஞைகள் அனுப்ப முடியுமா? இந்த இருவரின் அற்பமான அபாண்டமான பிதற்றல்களுக்கும்
இன்றைய காங்கிரஸ் தலைமை மறுப்பு சொல்லவில்லை, அவர்களை கண்டிக்கவும் இல்லை.
அறியாமையும்
பலவீனமும் பலவித பேராசைகளும் கொண்ட தலைமைதான் சென்ற பல வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி தமது சுய வளங்களை பெருக்கிக் கொண்ட சில புத்திசாலித் தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம். கட்சித் தலைமைக்குத் தான் ஒரு அரணாக இருக்கும் போர்வையில், தலைமையைக் கிளுக்கிளுப்பூட்டி
மகிழ்விப்பதற்காக எந்த அபத்தத்தையும் அழகான மொழியில் சொல்கிறார். அப்படியே காங்கிரஸ் கட்சியில் தனது முக்கியத்துவத்தை காப்பாற்றிக் கொள்வதில் குறியாக இருக்கிறார். நல்ல அரசியல்
பண்புகள் அற்ற காங்கிரஸ் தலைமை சிதம்பரம் போன்ற விவரமானவர்களை நம்பி இருக்கவேண்டும்.
அதன் மறு பக்கமாக, சிதம்பரத்தைப் போல் அரசியல் மூலமாக சுயலாபம் தேடுபவர்கள் காங்கிரஸ்
தலைமையைச் சார்ந்து இருக்க வேண்டும். இரண்டு தரப்புக்கும் அவரவர் தேவைகளும் நெருக்கடிகளும்
என்ன என்று அவர்களுக்குத் தானே தெரியும்?
நேர்மையும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் மிகுந்த தலைவர்கள்
பங்கேற்று சுதந்திரப் போராட்டம் நடத்திய கட்சி காங்கிரஸ். அது இன்று கிடக்கும் பரிதாப நிலையைத்தான் சிதம்பரத்தின் சுயநலமான தேச விரோதக் கருத்து வெளிப்படுத்துகிறது. மாபாவிகள்தானே இதை நிகழ்த்த முடியும்?
* * * * *
Copyright © R.
Veera Raghavan 2019