Saturday 20 October 2018

நானும்தான் (#MeToo) என்றால் நம்பலாமா?


'நானும்தான்' (#MeToo)  என்கிற கோஷம் இந்தியாவில் இப்போது ஒரு இயக்கம் என்று சொல்லப் படுகிறது. இதற்கு பல பக்கங்கள் உண்டு.

ஒரு வருடம் முன்பு, அமெரிக்காவில் சில பெண்கள் பல வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட ஆண்களிடம் பாலியல் வன்முறை அனுபவித்ததாக சமூக ஊடகத்தில் அறிவித்தார்கள்.  குறிப்பாக, ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரைப் பற்றி பாலியல் வன்முறை புகார்கள் பரவலாக ஆரம்பித்து மற்ற திசைகளிலும் பரவின. இப்போது நமது நாட்டில், 'நாங்கள் சில வருடங்கள்  முன்பு எங்கள் தொழில் சூழ்நிலையில் இன்ன இன்ன ஆண்களின் பாலியல் துர்நடத்தையை தாங்கிக் கொண்டோம்' என்று பல பெண்கள் புகார் சொல்கிறார்கள். இவை பாலியல் வன்முறை என்று முன் வைக்கப்படவில்லை.  கம்மியான அளவில், துர்நடத்தை, அத்துமீறல் என்பதாக சொல்லப் படுகின்றன. கை காட்டப்படும் பிரபல ஆண்கள் இவற்றை அவதூறு என்று மறுக்கிறார்கள். இருந்தாலும் சம்பத்தப்பட்ட சில சினிமா உலக ஆண்களின் மீது சந்தேகம் வலுக்கிறது.  விஷயம் எளிதா? இல்லை.

'நானும்தான்' குரல்கள் அதிகம் கேட்பது நமது சினிமாத் துறையில். அடுத்து, பத்திரிகைத் துறையிலும் விளம்பரத் துறையிலும். குற்றச்சாட்டுகள் இந்த ரகம்: 'கெட்ட பார்வையை வீசினார்', 'கூச்சம் தரும் வார்த்தைகள் பேசினார்', 'தோள்பட்டையில் பிடித்துவிடச் சொன்னார், மனமில்லாமல் செய்தேன்',  'வலுவில் அணைத்தார், விடுவித்துக் கொண்டேன்', 'கட்டாய முத்தமிட்டார்',  தவறான நோக்கில் தனி அறைக்கு அழைத்தார். போனிலும் கூப்பிட்டார். போகவில்லை', மரியாதைக்காக அவரை பொறுத்துக் கொண்டேன்.'

வருடங்கள் பல கடந்து இப்போது புகார்கள் சொல்வதற்கான காரணம் இவை:  'வளரும் நிலையில்  வேலைக்கான வாய்ப்புகளையும் நான்  இழக்க முடியவில்லை', 'அப்போது வெளியில் சொல்லி இருந்தாலும் என்னை யார் கவனித்திருப்பார்கள்? இப்போது வளர்ந்துவிட்டேன்.  தைரியமாக சொல்ல முடிகிறது.’

சினிமா தயாரிப்புகள் பெரும்பாலும் ஒற்றை மனிதனின் வியாபாரம். அவற்றில் பங்கெடுக்கும் மற்ற கலைஞர்களும் அப்படியே. அவர்களின் உலகத்தில் உழைப்பும் திறமையும் ஓங்கி இருந்தாலும் தனி மனிதப் பண்புகள் ஓரமாக நிற்கும். ஓகோ என்று நீங்கள் வெற்றி பெற்றால் கீழே இருப்பவர்கள் உங்களுக்கு அடிபணிவார்கள், அதுவரை நீங்கள் பிற வெற்றியாளர்களை வணங்கி  நிற்கவேண்டும். உள்ளே நுழையும் பெண்களிடம் வேலை தவிர மற்றதையும் எதிர்பார்க்கும் ஆண்கள் அதிகம். சினிமாத்துறைக்கு போகாதவர்களே இதை சரியாக கணிப்பார்கள். போனவர்களுக்கு உடனே உறைக்கும். அதனால்தான் நடிக்கப் போகும் ஆண் இளைஞர்கள் அப்பாவை கூடவே கூட்டிப் போவதில்லை, ஆனால் இளம் நடிகைகள் முடிந்தால் அம்மாவை பக்கத்திலேயே காவலுக்கு வைக்கிறார்கள்.

வேலை இடங்களில் பாலியல் தவறுகள் செய்யும் ஆண்களை கண்ணியமானவர்கள் ஏற்கமாட்டார்கள். அதே சமயம், ஆண்களுக்கு எதிராக ’நானும்தான்’ இயக்கம் என்ற தளத்தில் இப்போது போர்க்கொடி தூக்கும் பெண்களுக்கு சாதாரண மக்கள் பெரிய அனுதாபமோ பேராதரவோ காட்ட தயங்குவார்கள்.  இதற்கு காரணம் உண்டு.  பல ஆண்டுகள் சென்றபின் இப்போது குற்றம் சொல்லும் பெண்கள் தங்களின் சுய முன்னேற்றத்திற்காக, வேலையில் கிடைக்கும் பொருளாதார பலன்களுக்காக, பழைய நாட்களில் சில ஆண்களின் சீண்டல்களை பொறுத்துப் போனது நடைமுறை  புத்திசாலித்தனம் என்ற அளவில் சரி. ஒருவரின் புத்தியை மற்றவர்கள் ஒரு கணம் பாராட்டலாம், ரசிக்கலாம், வியக்கலாம். அவ்வளவுதான்.  வருமானத்துக்கான - அதுவும் நல்ல வருமானத்துக்கான - வேலையின் போது அவர் தனது சங்கடங்களை புத்திசாலித்தனமாக தாண்டி வந்ததால் அவர் மீது மற்றவர்களுக்கு இரக்கம் இயல்பாக பிறக்காது. உங்கள் வெற்றிக்காக, நன்மைக்காக, உங்கள் வருமானத்திற்காக நீங்கள் வளைந்து கொடுத்தால் அது பெரிதும் நீங்களாக ஏற்றுக்கொண்டது என்றுதான் அந்நியர்கள் நினைப்பார்கள்.  மாறாக, உங்கள் எதிர்ப்பையும் மீறி உங்களை ஒருவர் காயப்படுத்தினாலோ சீர் குலைத்தாலோ பொதுமக்களின் அனுதாபம் தானாக வரும். இது மனித இயல்பு. அதனால்தான் டெல்லிப் பெண் நிர்பயாவிற்கு பஸ்ஸில் நேர்ந்ததும் சென்னை அயனாவரத்து சிறுமிக்கு குடியிருப்பு வளாகத்தில் நிகழ்ந்ததும் அனைவரையும் உலுக்கியது. 

இன்னொரு உதாரணம் பாருங்கள். ஜெயலலிதா அ.தி.மு.க-வின் தலைவியாக எப்படி கோலோச்சினார்? அடுத்த கட்ட தலைவர்களான அத்தனை ஆண்களையும் முதுகு வளைத்து கைகூப்பி நிற்க வைத்தார். அவர்கள் தடாலென்று தன் பாதங்களில் விழுவதையும் தடுக்காமல் ரசித்தார்.  தங்களின் சுய கௌரவத்தை ஜெயலலிதாவின் காலுக்கு அடியில் இழந்த அந்த தலைவர்களின் மேல் நமக்கு இரக்கம் வருமா? வராது. காரணம் நமக்கு கல் நெஞ்சம் என்பதல்ல. அந்த குட்டித் தலைவர்கள் தங்கள் நலனுக்காக, தங்களது ஆதாயத்துக்காக அந்த அசாத்திய பணிவை ஏற்றவர்கள். கிட்டத்தட்ட இந்த சாயலில் இருந்தவர்கள் 'நானும்தான்' மனிதர்கள் என்று பொதுமக்கள் அனேகர் நினைப்பாக இருக்கும்.

   ஒன்றை தெளிவாக சொல்ல வேண்டும் – சாதாரண  பாலியல் தொல்லைகளும் கற்பழிப்பு போன்ற பாலியல் பலாத்காரமும் ஒன்றல்ல.  பின்னது நடந்தால் அதை நிகழ்த்திய ஆண் அந்த குற்றத்தையும் ஆதாரத்தையும் மறைப்பது கடினம்.  பாலியல் பலாத்காரம் நடந்ததாக ஒரு பெண் குற்றம் சொன்னால் – அல்லது அதுபற்றி வெளியில் தெரியவந்தால் – அதை விசாரித்து குற்றவாளி தண்டிக்கப் படவேண்டும். இந்த வன்முறைகளுக்கும், பாலியல் மென்தொல்லைகளுக்கு உடன்பட்டு பின்னர் ஆண்டுகள் கழித்து சொல்லப்படும் ’நானும்தான்’ புகார்களுக்கும் சம்பந்தம் இல்லை.

   இப்போது வெளியாகி இருக்கும் நானும்தான் புகார்கள் ஓரளவு – அல்லது பெருமளவு – உண்மையாக  இருக்கலாம்.  ஆனால் போகப் போக, பழைய நிகழ்வுகள் என்று ஆதாரமே காட்டாமல் இத்தகைய புகார் சொல்லும் எல்லாப் பெண்களையும் நாம் வரவேற்று பாராட்டினால் என்ன ஆகும்? சொந்தக் கணக்குகள் சரி செய்ய, வஞ்சம் தீர்க்க, ரகசிய பேரம் நடத்த, மிரட்டிப் பணம் பறிக்க, எந்த ஆணையும் பெயர் சொல்லி ஒரு நொடியில் மானத்தை வாங்குவதற்கான ஒரு புதிய அஸ்திரத்தை பெண்கள் கையில் கொடுத்தது போலாகும். இந்த அஸ்திரத்தை பெண்களே பிரயோகிக்கலாம், அல்லது பின்னாலிருந்து அவர்களை இயக்கி அரசியல் ஆதாயமோ வியாபார பலனோ கிடைக்க ஒரு ஆணே மற்றொரு ஆணுக்கு எதிராக ஏவலாம். ஆதாரமே வேண்டாம், எடுத்து வீச வேண்டியதுதான்.  இந்தியாவில் இது நடக்காதா?  இல்லை, நமது பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் விவாதம் நடத்தி இத்தகைய பொய் குற்றச்சாட்டுகளை விளம்பரப் படுத்தாதா?

ஒரு மனிதரின் ஒழுக்கத்தை பற்றி எவர் பொது வெளியில் குற்றச்சாட்டு சொன்னாலும் அதை நீதி மன்றங்கள் ஏற்று சம்பத்தப்பட்ட மனிதர் தவறு செய்தவர் அல்லது கிரிமினல் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லவேண்டும் என்றால் சட்டம் ஏற்கும் ஆதாரத்தை காட்டியாக வேண்டும். ஆதாரம் இல்லை என்றால் குற்றம் சொல்பவர் கோர்ட்டில் வெல்ல முடியாது. அதன் விளைவுகளையும் அவர் ஏற்கவேண்டும். எந்த ஆணும் ஒரு பெண்ணை குறிப்பிட்டு அவரின் நடத்தையை டுவிட்டரில் பழித்தால், அந்த ஆணுக்கும் இதே சட்டம் பொருந்தும். இதற்கெல்லாம் அர்த்தம் இதுதான். வீட்டிலோ வெளியிலோ, சில குறைகளுக்கு நாம் விரும்பும் சந்தோஷத் தீர்வுகள் பூமியில் இல்லை. அதோடு, பிறரை குயுக்தியாக அவமானம் செய்து எவரும் எளிதில் கள்ளத்தனமாக ஜெயிக்கக் கூடாது.

சரி, போகிற போக்கில் வேறு சில பெண்கள் பற்றி ஒரு வார்த்தை. வேலை செய்யும் இடத்தில் நேரும் பாலியல் தொல்லையை எதிர்த்து சட்டென்று செயல்படக் கூடிய பெண்களும் உண்டு. அவர்கள் பாவனையிலேயே அது தென்படும். அதனால் கூட அவர்களை மரியாதையாக அணுகும் ஆண்களும் உண்டு. நீங்களே அந்தப் பெண்களை பார்த்திருப்பீர்கள். அவர்கள், சிறிய வருமானம் பெற்று வீட்டு வேலை செய்யும் எண்ணற்ற பெண்கள்.  மாதம்  ரண்டாயிரம், மூவாயிரம் என்று சம்பாதிப்பார்கள். அவர்கள் வேலை செய்யும் வீட்டின் ஆண்கள், "தனியாக உனக்கு பணம் தருகிறேன்" என்று சொல்லி அந்த வேலைக்காரிகளைக் தப்பாக அணைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஏழைப் பெண்கள் எவரும் உடனே துப்பிவிட்டு வேலையை விட்டொழிக்க மாட்டார்கள், பத்து வருடம் கழித்து நீட்டி முழக்கி புகார் சொல்வார்கள் என்று நினைப்பீர்களா? அவர்களின் வாழ்வில் டுவிட்டர், செய்தியாளர் சந்திப்பு, டெலிவிஷன் பேட்டி, என்றெல்லாம் கிடையாது. அவர்கள் புத்திசாலிகள் இல்லையோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

7 comments:

  1. The new media code seems to be nobody everybody is guilty unless proved innocent.

    Again,no apologist for Vairamuthu as I am i cannot but get amused at a crude attempt to attribute to him an amateurish poem. simply dilutes the movement.

    ReplyDelete
  2. Delete that superfluous nobody in my comment.

    ReplyDelete
  3. It takes real character to go public with the misdeed perpetuated as soon as it happened. Longer it takes to do it, lesser credible out looks. But that could be for an isolated case. When one such report triggers a plethora then it is not. All these accusations are not actionable unless they move from the domain of social media and enter the framework criminal proceedings. Our justice system has become so pathetic that fails by routine. Even when it delivers justice there is no impact on the convicted if he is a politician. The whole stigma goes away in no time. For the cases that remain only in social media the stigma fades away even quicker.

    ReplyDelete
  4. ஆண்களிடம் அனுதாபமும், புகாரிடும் பெண்களிடமா சந்தேகமும் காட்டப்படுகிறது. பெண்களிடம் முறையற்று நடந்துகொள்வது பரவலாக இருக்கிறது. கோர்ட்டுகளில் நிரூபிக்க போதுமான சாடசியம் இல்லாமல் இருக்கலாம்.திரைமறைவில் நடக்கும் தவறுகளை இருட்டடிப்பு செய்யலாம். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மனசாட்சி சொன்னால் சரி. வேலை இடத்தில் power equation ஆண்களுக்கு சாதகமாயும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது என்று நான் நினைக்கிறேன். அதெல்லாம் கிடையாது, ஆண்கள் உத்தமர்கள், பெண்களிடம் யாரும் தவறாக நடப்பதில்லை, குற்றம் கூறும் பெண்கள் தாம் அபாண்டமாகப்பழி போடுகிறார்கள் என்று நினைப்பவர்கள் அவ்வாறு நினைப்பதற்கு உரிமை பெற்றவர்கள். அவர்கள் நினைப்பது போல் நிஐ உலகம் இருந்தால் மிக மகிழ்ச்சி. மஹாத்மா காந்தி அத்தகைய ideal world ஐப் பற்றி தான் கனவு கன
    ண்டார்.

    ReplyDelete
  5. It is not proper to tell 'Me too" after a lapse of years. The person telling "me too" is under necessity to earn at that point of time and compromised on certain things. Such being a case, it is better not to open mouth at present.

    ReplyDelete
  6. I think that me too complaints filing and regulation and limitation Act will be enacted soon
    ..
    Rvr
    Even iron lady amma too declared a me too complaint against governor
    So she is the pioneer in this also!!!

    ReplyDelete
  7. Yes, you are right Sir - this movement has given an opportunity to ‘manufacture’ paid victims (as paid media) to defame those opponents. With the result, it would be difficult to identify genuine complaints - and the fake ones appear real ! The fake complainants, backed by heavy weights, are successful in the sense the persons against whom the complaints made are hitting the headlines and the accused are instantly defamed even if no conviction is made and punishment given. Now this disease has spread to even Carnatic music world which is supposed to be above all such petty things.

    ReplyDelete