அசட்டுத்தனம்,
பைத்தியக்காரத்தனம், பொல்லாத்தனம், இந்த மூணும் சேர்ந்தா எப்படி
இருக்கும்னு நினைக்கறேள்? பதில் சொல்றதுக்கு பெரிசா கற்பனைலாம் பண்ணிப் பாக்க
வேண்டாம். அதுகள் மூணும் ஒண்ணா கலந்து, ரத்தமும் சதையுமா உருவெடுத்து,
ஸ்டாலின், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், இப்படில்லாம் பேர் வச்சுண்டு
இருக்காளே? இந்த மாதிரி மனுஷாதான் ராஜிவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேருக்கும் தண்டனை
குறைப்பு செஞ்சு அவாளை ஜெயில்லேர்ந்து இப்பவே விடுவிக்கணும்னு உருகி உருகி கேக்கறா.
விவேகம்
இல்லாம ஒரு காரியம் பண்ணினா அது அசட்டுத்தனம். பாக்கறவா, கேக்கறவா சிரிக்கற
மாதிரி நடந்துண்டா அது பைத்தியக்காரத்தனம். மத்தவாளுக்கோ சமூகத்துக்கோ அநாவசியமா
தீங்கு பண்ணினா அது பொல்லாத்தனம். சொல்லுங்கோ, இது உண்மையா இல்லையா? இது சரின்னா,
இந்த குணாதிசயங்கள் உள்ளவாதான ராஜிவ் கொலையாளிகளுக்கு விடுதலை
கேக்கறவா?
ஒரு
தேசத்து முன்னாள் பிரதமரை அரசியல் காரணத்துக்காக திட்டம் போட்டு கொலை பண்றது,
அதுவும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டை அனுப்பி கொடூரமா படுகொலை
பண்றது, எவ்வளவு பெரிய அட்டூழியம், அராஜகம்? ராஜிவ் காந்தி கொலை நிகழ்ச்சியை
இப்ப நினைச்சுப் பார்த்தாலும் பக்குனு இருக்கே? அதுல நமக்கு இருக்கற ஒரு
ஆறுதல் - அந்தக் கொலை வழக்குல அபாரமா துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடிச்ச
சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு குழு. இந்தியர்கள் எல்லாரும் அந்த குழுவுக்கு மானசீகமா
நன்றி சொல்லணும்.
உலகத்தரமான
ஒரு புலன் விசாரணை பண்ணி, அதுவும் நம்ம நாட்டுல நடத்தி, அதுவும் தமிழ் நாட்டுல
உக்காந்துண்டு செயல்பட்டு, இந்தியாவுல இருந்த கொலைக் குற்றவாளிகளை
தப்பவிடாம கண்டுபிடிச்சு தண்டனையும் வாங்கி குடுத்த சி.பி.ஐ போலீசை எத்தனை
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மனமார பாராட்டிருப்பா? நினைச்சா வெக்கமா இருக்கு.
தேசத்தை உலுக்கின ஒரு சிக்கலான வழக்குல, அந்த சிறப்பு புலனாய்வு குழு ஜெயிச்சு நாட்டு
மானத்தையே காப்பாத்திருக்கு. அந்த சமயத்துல தமிழ் நாட்டுல யார் யாருக்கு என்ன
தொடர்பு உண்டு, எங்க எப்படியான ஆதரவு இருந்ததுன்னு தெளிவா இல்லாத சூழ்நிலைல,
சிறப்பு புலனாய்வு குழு இவ்வளவு நேர்த்தியா வழக்குல வெற்றி அடையும்னு யாரும்
நினைச்சிருக்க மாட்டா. என்னைக் கேட்டா அந்த சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு குழு
தலைவர் கார்திகேயனுக்கு பாரத ரத்னா பட்டம் குடுக்கணும்னு சொல்லுவேன். ஏன்னா அவர்
தலைமையும் மேற்பார்வையும் துல்லியமா முடிச்சது, லேசுப்பட்ட காரியமில்லை. பிரும்மாண்டமான சாதனை. அது நம்ம நாட்டு
பிரதமர் நமக்கு முக்கியம்னு எல்லார்க்கும் உணர்த்தி, நம்ம போலீஸ் துறையோட பெருமையை உலக அளவுல உயர்த்தி பிடிச்சது. சரி, இப்ப நீங்க எதுக்கு
சிரிக்கறேள்? ஓஹோ... புரியறது! அந்த ஏழு குற்றவாளிகளுக்கும் பாரத ரத்னா
குடுக்கணும்னு சில தலைவர்கள் கேக்காம இருந்தா அதுவே பெரிசுங்கறேளா?
ராஜிவ்
காந்தி கொலை வழக்கோட சிறப்பு புலனாய்வு குழுவை பத்தி நீட்டி முழக்கறதுக்கு காரணம் இருக்கு.
நம்ம நாட்டோட பெருமை நம்ம பிரதமர் ஸ்தானத்தோடயும் ஒட்டிண்டு வரும்.
நம்ம பிரதமர் ஸ்தானத்தை மதிக்காத ஒரு இந்தியன் நம்ம நாட்டையும்
மதிக்காதவன்னுதான் அர்த்தம். நம்ம நாட்டை லட்சியம் பண்ணாம, நம்ம பிரதமர்
ஸ்தானத்தையும் உதாசீனம் பண்றவாதான், அந்த சிறப்பு புலனாய்வு குழுவோட வெற்றியையும்
உணர முடியாதவா. அதுனாலதான் அந்த மாதிரி மனுஷா வெக்கமே இல்லாம ராஜிவ்
கொலையாளிகளை முன்கூட்டியே வெளில விடணும்னு கேக்கறா.
ராஜிவ் கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது கோர்ட் என்ன சொன்னது தெரியுமா?
ராஜிவோட பதினாலு பேரை மேலோகத்துக்கு அனுப்பின குண்டுவெடிப்பு, தடா சட்டப்படி ஒரு
பயங்கரவாத செயல் இல்லை, மத்த சதாரண கொலை வழக்குகள் ரகத்தை சேர்ந்ததுன்னு சொன்னது.
அப்பறம், ஏழு கொலையாளிகள்ள மூணு பேருக்கு ஆயுள் தண்டனை குடுத்து நாலு பேருக்கு மரண தண்டனை விதிச்சது. பின்னால, அந்த நாலு பேர்ல ஒருத்தரோட மரண தண்டனையை தமிழக கவர்னர் ஆயுள் தண்டனையா குறைச்சார். அதுக்கு அப்பறம், மீதி மூணு பேரோட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டே ஆயுள் தண்டனையா குறைச்சது - ஏன்னா அந்த குற்றவாளிகளோட கருணை மனுவை பைசல் பண்றதுக்கு மத்திய அரசு பல வருஷங்கள் எடுத்துண்டதாம்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்னாடி தண்டனைக் குறைப்புன்னு இத்தனை நடந்திருக்கே,
இது என்ன ஏதுன்னு புரியறதா உங்களுக்கு? எனக்கு தலைய சுத்தறது. உங்களுக்கு எது சரி சரியில்லைன்னு புரிஞ்சா பேசாம இருங்கோ. புரியாட்டாலும் பேசாம இருங்கோ. இப்படியே போனா, இந்த ஏழு குற்றவாளிகளும் சீக்கிரம் விடுதலை ஆனாலும் ஆகலாம். அதுக்கப்பறம் அவாளுக்கு
தியாகிகள் பென்ஷன் கிடைக்கலாம். மெரினால சிலையும் வைப்பாளோ என்னவோ! சரி, மெயின் விஷயத்துக்கு
வருவோம்.
ராஜிவ்
கொலைக் கைதிகள் ஏழு பேருக்கு இப்ப விடுதலை கேக்கற அரசியல் தலைவர்கள் அதை நியாயப்படுத்தி என்ன சொல்றா, என்ன சொல்ல முடியும்? 'சுப்ரீம் கோர்ட் ரொம்ப ஜாஸ்தியா தண்டனை குடுத்திருக்கு. யாருக்கும் தூக்கு
தண்டனையே குடுத்திருக்கக் கூடாது. ராஜிவ் காந்தி கொலை சம்பவத்துல, போலீஸ்காரா மத்த
மனுஷான்னு சேர்த்து மொத்தம் பதினைஞ்சு பேர் உடல் சிதறி இறந்தாலும், எல்லாக்
கொலைக்கும் மொத்தமா பன்னண்டோ பதினாலோ வருஷம் ஜெயில் தண்டனைதான் அந்த ஏழு
குற்றவாளிகளுக்கும் குடுத்திருக்கணும். ஆனா பாவம், அவாளுக்கு ஆயுள் தண்டனை
கிடைச்சது மட்டுமில்லை. ஆயுள் தண்டனைன்னா, ஆயுள் பூரா சிறை தண்டனைன்னு கிறுக்குத்தனமா தப்பர்த்தம் பண்ணிண்டு இந்த ஏழு பேரையும் இருபத்தி
ஏழு வருஷமா ஜெயில்லயே வச்சிருக்கறது அநியாயம். அவா படற பாட்டை நினைச்சா அழுகை
அழுகையா வரது. அதுனால, அவாள்ளாம் இப்பவாவது விடுதலை ஆகணும்.’ இதைத்தான விடுதலை
கேக்கறவா ஒரு நியாயமா சொல்ல வரா? ஆனா மத்தவா நம்பறா மாதிரியும், நியாயத்தை
உணர்ரா மாதிரியும் விடுதலை கேக்கறவாளுக்கு பேசத் தெரியலை.
விடுதலை
கேக்கறவா ஒரு காரியம் பண்ணினா, அவா பக்கத்து நியாயம் இன்னும் பளிச்சுன்னு
நேர்மையானதா தெரியும். என்னன்னா, அவா கூட்டா இப்படி ஒரு அறிக்கை விடணும்:
"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை நாங்கள் நேசிக்கிறோம். ஆனால் அவரது
கொலையில் சம்பத்தப்பட்ட குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருப்பது
நீதிக்கும் மனித நாகரிகத்துக்கும் முரண் ஆனது. ஒரு சராசரி குடிமகனோ பிரதமரோ, பதவியில் இருக்கிறாரோ இல்லையோ, எந்த ஒரு மனிதர் கொலையுண்டாலும், எத்தனை பேர் ஒரே
சம்பவத்தில் கொலையானாலும், இந்த மனித நேய தத்துவம் பொருந்தும். எங்கள்
சிந்தனையின் நேர்மையை வலியுறுத்த இன்னொன்றையும் சொல்கிறோம். எங்களில் யாராவது பயங்கரவாதத்தாலோ சாதாரண குற்ற செயல் மூலமாகவோ உயிர் இழந்தால், அதை ஏற்படுத்தும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது. அந்த குற்றவாளிகளுக்கு அதிக பட்சம் பதினாலு வருடங்கள் சிறை தண்டனை வழங்கினால் போதுமானது. இது
போக, தந்தை ராஜிவ் காந்தியின் கொலையாளிகளை மன்னித்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா
காந்தியை நாங்கள் குறிப்பிடுவது வீண் பேச்சல்ல என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறோம்.
ராஜிவ் காந்தி போல் எங்களுக்கும் ஒரு அகால முடிவு நேர்ந்தால், எங்களின் எதிர்கால கொலைக் குற்றவாளிகள்
எவரையும் அன்புடன் மன்னிக்குமாறு எங்கள் குழந்தைகளை இப்போதே கேட்டுக்
கொண்டுள்ளோம். வாழ்க மனித நேயம்."
விடுதலை கேக்கறவா இப்படி ஒரு அறிக்கை குடுத்து எதிர்ப்பாளர்கள் வாயை அடைக்கலாம். ஏன் மாட்டேங்கறா? விளங்க வைப்பா விக்னேஸ்வரா!
விடுதலை கேக்கறவா இப்படி ஒரு அறிக்கை குடுத்து எதிர்ப்பாளர்கள் வாயை அடைக்கலாம். ஏன் மாட்டேங்கறா? விளங்க வைப்பா விக்னேஸ்வரா!
* * * * *
Copyright © R.
Veera Raghavan 2018