Wednesday, 7 December 2016

நரேந்திர மோடி: ஆயிரத்தில் ஒருவன் (ஐநூறிலும் ஒருவன்)


            பழைய ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை பணத் தன்மை நீக்கம் (demonetisation) செய்வதாக பிரதம மந்திரி அறிவித்தது நாட்டுக்குப் பலன் தருமா இல்லையா? இது தொடர்ந்து விவாதிக்கப் படுகிறது.  

      இந்த நடவடிக்கையின் ஆதரவாளர்களும் சரி, எதிர்ப்பாளர்களும் சரி, ஒரு வகையில் ஒன்றுபடுகிறார்கள்.  அதாவது, இதன் ஒரு முக்கிய நோக்கமான ‘கறுப்புப் பண ஒழிப்பு’ என்பது தேசத்திற்கு அவசியமான நல்ல நோக்கம் என்பதில் எவரும் வேறுபடவில்லை. ’குறுகிய கால வலிகள் இருந்தாலும் பணத் தன்மை நீக்கம் நீண்டகால நன்மைகள் பல ஏற்படுத்தி அந்த நோக்கம் நிறைவேறச் செய்யும்’ என்று சிலரும் ’மக்களுக்குப் பரவலாக சிரமங்கள் ஏற்படுவதுதான் மிஞ்சுமே தவிர அந்த நோக்கம் நிறைவேறாது’ என்று சிலரும் வாதம் செய்கிறார்கள்.  இதற்கு சரியான பதிலைக் காலம்தான் கடைசியில் காண்பிக்க முடியும். இப்போது நாம் இது தொடர்பான வேறு ஒரு விஷயத்தை மட்டும் பார்க்கலாம்.

     லஞ்ச ஊழல் மூலமாக கருப்புப்பணம் கணிசமாக உருவாகிறது என்பது எல்லோரும் அறிந்தது.  அந்தப் பணத்தில் பெரும் பங்கு அரசாங்கத்தில் சம்பத்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் லஞ்ச வருமானம் என்பதும் தெரிந்தது. அரசாங்கத்தில் முறைகேடுகள் வியாபித்திருக்கும்போது, தனியார் துறையில் இருப்பவர்கள் சிலரும் ‘பெரியண்ணன் தயக்கம் இல்லாமல் செய்வதை நாமும் பயமில்லாமல் செய்யலாமே’ என்று குளிர்விட்டு தங்களின் அளவிற்கு   லஞ்ச வருமானம் பெறுகிறார்கள், கருப்புப் பணம் சேர்க்கிறார்கள்.   

     ’முறைகேடுகள்   மூலமாகப்  பெற்றதை   நாம்  கருப்புப்  பணமாக வைத்திருந்தாலும் சரி, தங்கம், ரியல் எஸ்டேட் என்று மாற்றிக் கொண்டாலும் சரி, பிடிபடமாட்டோம்’ என்ற மகா தைரியம் லஞ்ச ஊழல்வாதிகளுக்கு இருக்கிறது.  அந்த தைரியத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார் அல்லது எது? நடவடிக்கை எடுக்கவேண்டிய நமது அரசாங்கங்களும் – அதாவது அரசாளும் அரசியல்வாதிகளும் - அவர்களின் மனமறிந்த பாராமுகமும்தான்.  ஆகையால் லஞ்ச ஊழல் தழைக்கிறது.  கருப்புப்பணம் கொழிக்கிறது.  வரிகளை ஏய்த்து கருப்புப் பண பொருளாதாரம் நாட்டுக்குக் கேடு செய்கிறது.

         பொது ஊழியராக இருந்துகொண்டு லஞ்சம் வாங்குவதும் வருமானத்திற்கு மேல் பணமோ சொத்தோ வைத்திருப்பதும் தண்டனைக்கு உரிய குற்றங்கள் என்று ஊழல் தடுப்பு சட்டம் சொல்கிறது.  ஆனால் இந்த சட்டத்தைப் போல் அனாயாசமாக அதிகமாக மீறப்படும் சட்டம் வேறு இருக்காது.

        ஏமாற்றுதல், திருட்டு, அடிதடி, மற்றும் கொலை போன்ற தண்டனைக்குரிய குற்றங்கள் பதிவாகின்றன, பின் நீதிமன்ற வழக்குகளாக விசாரிக்கப் படுகின்றன.  ஆனால் லஞ்சம் வாங்குவதும், வருமானத்திற்கு மேலான பணம் மற்றும் சொத்து வைத்திருப்பதும் – அதுவும் அரசு அல்லது பொதுத்துறையில் பதவி வகிப்பவர்கள் செய்வது - அதே அளவிற்குப் பதிவாகி நீதிமன்ற நடவடிக்கைகளை சந்திப்பதில்லை.  காரணத்தை விளக்க வேண்டுமா? சரி, அதையும் பார்க்கலாம்.

          அரசாங்கப் பொறுப்பில் உள்ள ஒரு அரசியல்வாதி லஞ்சத்தில் திளைக்கிறார் என்றால், அவருக்கு அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தைப் பற்றி வாய் திறக்க தைரியம் இருக்காது.  தினமும் இரண்டு மூன்று பாக்கெட் சிகரெட் பிடிக்கும் ஒரு தந்தை ஒன்றிரண்டு சிகரெட் ஊதும் தன் விடலைப் பையனிடம் என்ன சொல்லிக் கண்டிக்க முடியும்? அது மட்டுமல்ல. அமைச்சரே கைநீட்டி வாங்குவதைக் காட்டிலும் இணக்கமான அதிகாரிகளை லஞ்சம் பெற அனுமதித்து, அதில் கப்பம் வாங்கிக்கொள்வது சுலபமானது, பல்முனை வருமானம் தரக்கூடியது, சற்றுப் பாதுகாப்பானது என்பதால் அந்த வழியைப் பலரும் பின்பற்றுவதுண்டு.  பின் யார் யாரைக் காட்டிக் கொடுக்கமுடியும்? இதனால்தான் அரசாங்க லஞ்சம், அதில் தொடரும் பணச் சேர்ப்பு, சொத்துக் குவிப்பு ஆகியவை பெரும்பாலும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவதில்லை. 

           ஆட்சிக்குத் திரும்பிய ஒரு கட்சி, பழைய ஆட்சியின் தலைவர் மீது லஞ்ச உழல் வழக்குப் போட்டு, அது நிலுவையில் இருக்கும்போதே வழக்குப் போட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பிற லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கி, ‘எந்தப் புற்றில் எந்தப் பாம்போ - எத்தனை பாம்புகளோ - பாம்பாட்டியும் உண்டோ’ என்ற சந்தேகத்தைப் பலரிடமும் விதைத்தது வேறு கதை. ஆனால் அமைச்சர்களும் மற்ற பொது ஊழியர்களும் லஞ்சம் வாங்குவதோ கருப்புப் பணம் வைத்திருப்பதோ அனேகமாக வழக்கிற்குக் கூட வருவதில்லை என்பது உண்மை. அதற்கு ஒரு அடையாளமும் உண்டு.

      எந்த ஒரு அரசியல் தலைவரும் எதிர்க் கட்சியில் இருக்கும்போது ஆளும் கட்சியைக் குறிப்பிட்டு “இந்த ஆட்சியில் லஞ்ச லாவண்யம் அதிகரித்து விட்டது” என்று விமரிசனம் செய்வது வழக்கமானது. ஆனால் ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் நம் தேசத்திலோ தன் மாநிலத்திலோ ”லஞ்சம் மிகுந்துவிட்டது, கருப்புப் பணமும் பெருகிவிட்டது, அவற்றைக் கட்டுப்படுத்த நான் தீவிர நடவடிக்கை எடுப்பேன்” என்று பேசுவதுண்டா?  ஒரு பாசாங்குக்காக அப்படிப் பேசினால், ஆந்த ஆட்சியில் லஞ்சத்தினால் பாதிக்கப் படும் மக்கள் சிரிப்பை உதிர்ப்பார்கள். பிறகு அடுத்த தேர்தலின்போது கோபத்தைக் காட்டுவார்கள். ஆகவே, பொதுவாகச் சொன்னால், ஆட்சி செய்பவர்கள் அவர்களின் ஆட்சியின்போது லஞ்சம், கருப்புப் பணத்தைப் பற்றி எல்லாம் பேசாமல், ’ஏதோ அதிகாரிகள் மட்டத்தில்தான் லஞ்சம் இருக்கிறது. அதுவும் ஆளும் அரசியல் தலைவர்களுக்குத் தெரியாமல் நடக்கிறது’ என சாதாரண மக்களை நம்பவைப்பதுதான் புத்திசாலித்தனம் என்று திட்டமிட்டு மௌனமாகச் செயல்படுகிறார்கள். 

      இந்தச் சூழ்நிலையில் ஒரு பிரதம மந்திரியே “நாட்டில் லஞ்சமும் கருப்புப் பணமும் பரவிக் கிடக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தத்தான் நான் நடவடிக்கை எடுத்துவருகிறேன். இது தவறா?” என்று மக்களைப் பார்த்து தைரியமாகப் பேசுவார் என்பது கற்பனை செய்யமுடியாத விஷயம். நரேந்திர மோடி அதைச் செய்திருக்கிறார். தன் கையை சுத்தமாக வைத்திருந்து, தன் சக அமைச்சர்களும் அவ்வாறே இருப்பது வெளிப்படையாகத் தெரியவேண்டும் என்று அவர்களுக்கும் உணர்த்தி, தன் ஆட்சியில் கறுப்புப் பணம் வைத்திருப்போர்மீது உறுதியான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் ஒரு அரசியல் தலைவர்தான் இவ்வாறு பகிரங்கமாகப் பேசமுடியும்.  மத்தியிலும் மாநிலத்திலும் பல வருடங்கள் ஆட்சி செய்த வேறு பல அரசியல் தலைவர்கள் இவ்வாறு பகிரங்கமாகப் பேசியதில்லை, அதற்கேற்ற தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், அதை  மேலும் விளக்க வேண்டுமா?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2016

1 comment:

  1. I entirely agree with your view. I look at Modi's action from his inner party angle. In the pre-Nov.8 scenario Modi has successfully run a political party, run for elections and run govt as ruling party in States and in Center. His party-men must be well accustomed to that environment. No leader would like to antagonize his party-men. When Modi indulges in the cleansing job, I just imagine the pressure that Modi would have received from his own party-men. By successfully resisting it, Modi has demonstrated extra-ordinary courage.

    ReplyDelete