சென்னை
உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு கிரிமினல் மேல் முறையீட்டு வழக்கில் உத்திரவு பிறப்பித்திருக்கிறது.
’கற்பழிப்பு’ குற்றத்திற்காக கீழ் கோர்டில் 7 வருட சிறைத் தண்டனை பெற்றவர் ஹை கோர்ட்டில்
அப்பீல் செய்து பெயிலும் கேட்டு மனுப் போடுகிறார். சிறை வாசம் அனுபவிக்கும் அவருக்கு
பெயில் அளிக்கும் போது உயர் நீதி மன்றம் அவரை பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து சமரசம்
சாத்தியமா என்று பார்க்கச் சொல்லி இருக்கிறது.
இது போன்ற
குற்றம் இழைக்கப்பட்ட பெண்களைப் பற்றி பொதுவாக ஒரு வார்த்தை. ’கற்பழிக்கப்பட்ட’ அல்லது
‘கெடுக்கப்பட்ட’ என்ற சொற்கள் மனிதாபிமானம் குறைந்தவையாகத் தெரிகின்றன. ‘மானபங்கம்
செய்யப்பட்டவள்’ என்பதும் சரியல்ல – தப்பு செய்தவனுக்கு மானம் போகாது, தப்பு செய்யப்பட்டவளுக்குப்
போகுமா?. இந்த வகையில் ஒருவனின் பலாத்காரத்துக்கு இரையான பெண்ணை
அவமரியாதை இல்லாமல் குறிப்பிட ஒரு புதிய சொல்லைப் பயன் படுத்திப் பார்க்கிறேன். அவரை ‘பலாத்காயம்’ செய்யப் பட்டவர் என்று சொல்லலாம்
என்று நினைக்கிறேன்.
மேலே சொன்ன
வழக்கில், குற்றச் செய்கையால் அந்தப் பெண் கர்ப்பமடைந்து ஒரு குழைந்தைக்குத் தாயானார்.
அப்போதும் (வயது 16) இப்போதும் (வயது 22) அவர் திருமணம் ஆகாதவர். குற்றவாளியும் இதுவரை
திருமணம் ஆகாத இளைஞர். அந்தப் பெண் திருமணம் ஆகாத தாயாக இருக்கிறார், அந்தக் குழந்தை
முறையான தந்தை இல்லாமல் இருக்கிறது என்கிற சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டு, கோர்ட்
அந்தக் குற்றவாளிக்கும் அவரால் பலாத்காயம் செய்யப்பட்ட பெண்ணுக்கும் சமரசம் உண்டாகுமா
என்று பார்க்க ஏதுவாக குற்றவாளிக்கு பெயில் கொடுத்திருக்கிறது.
என்ன சமரசம்
என்று ஹை கோர்ட்டின் பெயில் உத்திரவில் நேரடியாகக் கூறப்படவில்லை, இருப்பினும் ஒரு
முந்தைய பலாத்காய வழக்கில் சம்பத்தப்பட்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு விஷயம்
சமரசம் ஆகிவிட்டதை இந்த உத்திரவு சுட்டிக்காட்டி உள்ளது. ஆகையால் இந்த வழக்கிலும் அதே
மாதிரி சமரசம் கிட்டுமா என்று பார்க்கவும், கிட்டினால் நல்லது என்ற அர்த்தத்திலும்
குற்றவாளி ஜெயிலில் இருந்து பெயிலில் வெளிவர உத்திரவிடப் பட்டிருக்கிறது என்று ஆகிறது.
இந்த உத்திரவின்
சட்டத் தன்மை பற்றி நான் பேச முயலவில்லை. ஹை
கோர்ட்டில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு வழக்கின் விவரங்களையும் நான் இங்கு கவனிக்கவில்லை.
இருந்தாலும் பொதுவாகவே பலாத்காய வழக்குகளில் சட்டம் இது போன்ற சமரசத்தை எதிர் நோக்கி
ஆதரித்தால் அது பெண் இனத்தின் கண்ணியத்தைக் காக்குமா, வேறு பாதிப்புகள் ஏற்படலாமா என்று
எவரும் யோசித்துப் பார்க்கலாம்.
இது போன்ற
சமரசம், பாதிக்கப்பட்ட பெண்ணை விட குற்றவாளிக்குத் தான் அதிக பயன் கொடுக்கும். இதன் மூலமாக கேஸ் முடிவடைந்து அவன் ஜெயிலில் இருந்தும்
வெளி வந்து விடலாம் எனும் போது அதற்காகவே (அந்தப் பெண்ணுக்காகவோ, அவளுக்குக் குழந்தை
இருந்தால் குழந்தைக்காகவோ அல்ல) அவன் மாப்பிளையாக சம்மதிக்கக் கூடும். ஆக, குற்றவாளி தப்பிவிட முடிகிறது.
கேஸ் முடிந்து
விடுதலையும் கிடைத்த பின் புது மனைவியை அவன் உதாசீனம் செய்தால் அல்லது கொடுமைப் படுத்தினால்
– கேஸிலிருந்து தப்புவதற்காகவே சமரசம் செய்பவன் இதையும் செய்யக் கூடும் - அந்தப் பெண்ணுக்குக்
கணவனின் பாதுகாப்பு என்பதும் இல்லாமல் போகும். தன்னை பலாத்காயம் செய்தவன்தான் இனிமேல்
தனக்குப் பாதுகாப்பு, அவனையே திருமணம் செய்துகொள்வதுதான் வழி என்று நினைக்கும் பெண்,
அவன் கணவனாகிய பின் கொடுமைப் படுத்தினால் அதை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்க
மாட்டாள். ஆக சமரசத்தின் நோக்கமும் நிறைவேறாமல் போகிறது.
பாதிக்கப்
பட்ட பெண்ணிற்குத் திருமணத்தின் மூலம் பாதுகாப்பு கிடைக்கிறது என்பதற்காக – அது கிடைக்கிறது
என்று வைத்துக் கொண்டாலும் – பெரும் குற்றம் புரிந்த ஒரு குற்றவாளியை சட்டமே தப்ப விடுவது
அழகல்ல. இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். ஒரு பெண்ணின் கணவரைக் கொன்றவனும் அந்தப் பெண்ணும்
பின்னர் ஒருவரை ஒருவர் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அவளுக்குப் புதுப் பாதுகாப்பு கிடைக்கிறது என்று குற்றம் செய்தவனை விட்டுவிட சட்டம்
முன் வந்தால் அதை ஏற்கும் மனது எத்தனை பேருக்கு இருக்கும்?.
பலாத்காயம்
பல சூழ்நிலைகளில் நடக்க வாய்ப்பிருக்கிறது. 22 வயதுப் பையனால் 32 வயதுப் பெண்ணுக்கு
இது நேரலாம். திருமணமாகிக் கணவனுடன் குடும்பம் நடத்தும் ஒரு பெண்ணுக்கு இது நடக்கலாம். திருமணமாகி மனைவி இருக்கும் ஒரு ஆண் திருமணமாகாத
ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்ளலாம். பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு இவ்வாறு
தீங்கு செய்யலாம். வயதில் மூத்த ஒரு ஆண் தனது நெருங்கிய சொந்தக்காரரும் இளம் வயதுமான
பெண்ணிடம் வரம்பு மீறலாம். இந்த நிகழ்ச்சிகளில் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்
இப்படிப் பட்ட கல்யாண சமரசம் நடக்க முடியாது. கல்யாண வயதில் உள்ள, ஆனால் கல்யாணம் ஆகாத,
ஒரு ஆண்-பெண்ணிற்கு இடையே பலாத்காயக் குற்றம் நடந்தால் மட்டும் இது மாதிரி சமரசம் சாத்தியம்
ஆகிறது. ஒரே குற்றம் புரிந்த பல ஆண்களில் சிலர் தண்டிக்கப் படுவதும் சிலர் தாலி கட்டித்
தப்பிபதும் நியாயமா என்று சட்டம் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரு பலாத்காய
நிகழ்வில் சம்பத்தப் பட்ட ஆணும் பெண்ணும் சட்டப்படி ஒருவரை ஒருவர் திருமணம் செய்யத்
தக்கவர்களாக இருந்து அவர்களாக விரும்பினால் – இது பெரிய ’ஆனால்’ - கணவன் மனைவி ஆகிக்
கொள்ளலாம். அதன் விளைவுகளை அவர்கள் சுயமாக எற்றுக் கொண்டவர்கள். ஆகையால் அது வேறு விஷயம். ஆனால் ஒரு பெண்ணுக்குப்
பெரிய அபாண்டம் செய்தவனை சட்டமே டும் டும் மேளம் கொட்டி அப் பெண்ணுடன் மணக்கோலத்தில்
அனுப்பி வைத்தால் – கூடவே பெண்ணின் சம்மதம் தென்பட்டாலும் - பல குற்றவாளிகள் "கல்யாணந்தான்
கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா" என்ற சினிமாப் பாட்டு வரியை ரகசிய அர்த்தத்துடன் முணுமுணுப்பார்கள்.
* * * *
*
Copyright
© R. Veera Raghavan 2015
No comments:
Post a Comment