-- ஆர். வி. ஆர்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்,
சமீபத்தில் கரூரில் பிரசாரம் செய்யும்போது பெரும் சோகம் நிகழ்ந்தது. அவரைப் பார்க்கவும்
கேட்கவும் வந்த ரசிகர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி
உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை இதுவரை 41.
கரூர்
நெரிசலில் இறந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், மாநில அரசின் சார்பாக பத்து
லட்ச ரூபாய் நிதி உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது போக, அந்தக் குடும்பங்களுக்கு
விஜய் இருபது லட்சம், மத்திய அரசு இரண்டு லட்சம்,
தமிழக பாஜக ஒரு லட்சம் என்று நிதி உதவி அளிக்கிறார்கள்.
ஒரு
அரசியல் கட்சித் தலைவரின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர்கள், அந்தக் கூட்டத்தில் சிக்கி
அதில் 40 பேருக்கு மேல் மரணம் அடைகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? எங்கெல்லாம் கோளாறு இருக்கிறது?
தான் கரூரில் பிரசாரம் செய்கையில் எவ்வளவு கூட்டம் வரலாம், தான் ஒரு மாஸ் நடிகர் என்பதால் தனது சினிமா முகத்தைப் பார்க்கவே பெரும் கூட்டம் கூடுமே, எத்தனை பேர் அதிக பட்சம் கூடுவார்கள், கூட்டம் நடக்கும் பகுதியில் நெரிசல் ஏற்படாத அளவு மக்கள் நகர இடம் இருக்கிறதா, காலை எட்டு மணியில் இருந்தே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் சேருகிறதே, பல மணிநேரம் அங்கு காத்திருக்க வேண்டிய மக்களுக்குப் போதிய குடிநீர் வசதி இருக்கிறதா, நீண்ட நேரம் அந்த மனிதர்கள் காத்திருந்தால் அவர்களுக்குப் பசி எடுக்குமே, அடைபட்டிருக்கும் அவர்களின் இயற்கை உபாதைகளுக்கும் என்ன ஏற்பாடு, என்று விஜய் முன்னதாகவே நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் ஆசை பெரிதாகவும், முதிர்ச்சி சிறிதாகவும் உள்ள விஜய் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதாகத் தெரியவில்லை.
சரி,
கூட்டம் நடக்கும் பகுதியில் காலையில் இருந்தே மக்கள் சேரச் சேர, அங்கு கூடுகிற கூட்டத்தைக்
கட்டுப்படுத்த முடியாமல் போகலாம், அதுவும் விஜய் மாதிரி ஒரு சினிமா நடிகரைப் பார்க்க
வரும் கூட்டத்தை எளிதில் கட்டுப்படுத்த இயலாது, அப்போது எந்த விபத்தும் நடக்கலாம் என்று
அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனதா? அந்த அபாயம் நிகழாமல் இருக்க, அதைப் பெரிதும் மட்டுப்படுத்த, அவர்கள் முன்னேற்பாடாகக் கூடுதல் போலீஸ்காரர்களை
அருகிலேயே வைத்திருக்க முடியாதா? அல்லது, போலீஸ்காரர்களையும் குறைவாக அனுப்பி அவர்களை
ஒருவாறு முடக்கி வைத்தால் நமக்கு நல்லது, ஏதாவது நடந்தால் விஜய் மேல் பழி வரட்டும்
என்று விஜய்யின் சக்திமிக்க அரசியல் எதிரிகள் நினைத்தார்களா?
விஜய்
கூட்டத்திற்குப் பெரும் திரளாகக் கூடிய அவரது ரசிகர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள்,
அறிவிக்கப் பட்ட பகல் 12 மணிக்கு விஜய் அநேகமாக வரமாட்டார் என்று யோசிக்கவில்லை. மூன்று மணி நேரம் கடந்த பின்னும் – அதாவது மாலை மூன்று மணிவரை
– கரூரில் பிரசாரக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு விஜய் வரவில்லை. இருந்தாலும் அங்கு கூடிய
மக்களில் எத்தனை பேர் விஜய்யைப் பார்க்காமல் வீடு திரும்ப எண்ணி இருப்பார்கள், அதைச்
செய்ய முயன்றிருப்பார்கள்?
தனக்கு,
வாழ்வில் தன் முன்னேற்றத்திற்கு, தன் குடும்பத்தினருக்கு, எது அதிக முக்கியம் என்று
அறியாத மனிதர்கள் அன்று கரூரில் விஜய்க்காக நீண்ட நேரம் காத்திருந்தார்கள் – மாலை
ஏழு மணிக்கு விஜய் வரும் வரை. இது ஒரு பக்கம். தன்னைப் பார்த்துத் தன் ரசிகர்களும்
கட்சியினரும் உணர்ச்சி பொங்குவது, தன்னை நோக்கிக் கூச்சலிடுவது, அதைச் செய்வதற்கு அவர்கள் பழியாகக் காத்திருப்பது, தன்னைப் பெருமைப் படுத்தும், தனக்கு அரசியல் வலிமை தரும், என்று நினைத்துத்
திருப்தி கொள்கிறவர் விஜய். இது இன்னொரு பக்கம்.
அன்றையக் கூட்டத்தில் விபத்தும் உயிரிழப்பும் நிகழ யாராவது திட்டமிட்டு ஏற்பாடு செய்தார்களா, நடந்த துயரத்திற்கு ஒரு திட்டமிட்ட ஏற்பாடு மட்டும்தான் காரணமா என்று கேட்டால், “அதற்கு வாய்ப்பில்லை” என்று நாம் உடனே நினைக்கும்படி தமிழக அரசியலின் லட்சணம் இருக்கிறதா? இல்லை. எது உண்மை என்று நாம் அறிவதும் எளிதல்ல.
தமிழகத்தின் சில சுயநல அரசியல் தலைவர்கள் தாங்கள் கற்ற, தங்களால் முடிந்த, அரசியலைக் கரூரில் நிகழ்த்தி இருக்கிறார்கள். அது போக, அரசு கஜானாவிலிருந்து பத்து லட்சம், சொந்தப் பணம் அல்லது கட்சிப் பணத்திலிருந்து இருபது லட்சம் என்று கரூரில் மரணம் நிகழ்ந்த குடும்பங்களுக்கு நிதி உதவி செல்வது உண்மையில் எதற்காக? பாதிக்கப் பட்ட குடும்பங்களும் அந்த ஊரும் – பொதுவாகத் தமிழகத்தின் அனைத்து சாதாரண மக்களும் – தன் மேல், தன் தலைமையின் மீது, குற்றம் காணாமல் இருக்கட்டும், தனது கருணை உள்ளத்தில் மயங்கித் தன்மீது கனிவு கொள்ளட்டும் (“தலைவருக்கு எவ்ளோ பெரிய மனசு!”) என்று சில தலைவர்கள் நினைத்தார்களா? முழு உண்மையை அவர்களின் மனசாட்சி அறியும். நாம் ஊகிக்கலாம்.
விஜய்யின் சினிமா பிரபல்யமும் அவரது முதல்வர் ஆசையும் அவருக்கு அதி முக்கியம். மற்ற அனைத்தும் அவருக்கு இரண்டாம் பட்சம். இன்னொரு பக்கத்தில், பழம் தின்று கொட்டை போட்ட அவரது அரசியல் எதிரிகள் அவரை அடக்கி வைக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ‘இது புரியாத விஜய்யின் ரசிகர்களும் பொதுமக்களும் தமிழகத்தில் இருந்தால், கரூர் கூட்டத்திற்குப் போனால், அங்கு கெடுதலைச் சந்தித்தால், நாம் என்ன செய்வது?’ என்ற அளவில் மட்டும் ஒருவர் நினைத்தால் அது சரியில்லை. நம்மில் பலர் அப்படி நினைத்தால் நமது ஜனநாயகம் முதிர்ச்சியை நோக்கித் திரும்பாது.
இந்தியாவில், தமிழகத்தில், எப்படியான சாதாரண மக்கள் இருக்கிறார்களோ, அவர்களை வைத்துத்தான் நமது ஜனநாயகத்தின் சக்கரங்கள் முக்கியமாகச் சுழல முடியும். “மக்கள் பெரிதும் மக்குகள். எந்த அரசியல் தலைவரைப் போற்றவேண்டும், பின்பற்ற வேண்டும் என்று தெரியாதவர்கள்” என்று நாம் பரவலாக சாதாரண மக்களை இகழ்வது பயன் தராது. இந்த மக்களின் பெருவாரியான ஓட்டுகளைப் பெற்றுதான் ஒரு நல்ல, திறமையான, தொலைநோக்குச் சிந்தனை உள்ள, எந்த அரசியல் தலைவரும் அவர் கட்சியும் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய முடியும் - முக்கியமாக தேசத்தைக் காப்பாற்ற முடியும்.
மக்களைப்
பல வகையில் மேம்படுத்துவதும் ஒரு நல்ல தலைவனின் எண்ணமும் செயலுமாக இருக்க வேண்டும்.
இது இந்தியாவில், அதுவும் தமிழகத்தில், மிக அவசியம். இதுவும் நமது முன்னேற்றத்திற்காகக் கரூர்
நமக்கு நினைவு படுத்தும் ஒரு அரசியல் பாடம் அல்லவா?
* * * * *
Author: R. Veera Raghavan,
Advocate, Chennai