Saturday, 5 April 2025

அண்ணாமலை நீடிப்பாரா, மாற்றப் படுவாரா?

 

-- ஆர். வி. ஆர்


 

திமுக, அதிமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.  

 

கருணாநிதியால்  திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம். ஜி. ஆர், திமுக-வுக்குப் போட்டியாக ஆரம்பித்த கட்சி, அதிமுக. அந்த இரு தலைவர்களும் இன்று இல்லை. ஆனால் அந்த இரண்டு கட்சிகளும் ஒரே இயல்பு கொண்டவை. ஒரு கட்சியில் ஹிந்து விரோதப் பேச்சு இருக்கும், அராஜகப் போக்கும் காணப்படும். இன்னொரு கட்சியில் அவை இருக்காது. மற்றபடி, தங்கள் நலன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் தலைவர்கள்தான் இரண்டு கட்சிகளிலும் இருக்கிறார்கள்.  

 

1967 தேர்தலில் திமுக-வால் மாநிலத்தில் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் சென்ற பல வருடங்களாகத் திமுக-வின் காலடியில் கிடக்கிறது, திமுக-வை எதிர்த்து மறுபடியும் ஆட்சியில் அமரக் காங்கிரஸ் முனையவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டும் மாறி மாறித் தமிழகத்தில் 1967-லிருந்து ஆட்சி செய்கின்றன.  

 

தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க, இப்போது நடக்கவேண்டிய முதல் காரியம் இது. அதாவது, ஆட்சியில் இருக்கும் திமுக கூட்டணியை 2026 சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அது முடியாவிட்டால், அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையில் மட்டும் ஜெயிக்கும் வகையில் எதிரணியின் உறுப்பினர் எண்ணிக்கை உயரவேண்டும். அதன் மூலம், திமுக-வுக்கு எதிரான மக்கள் சக்தி திரண்டு வருகிறது என்கிற செய்தியை திமுக-வுக்கு உரத்துச் சொல்லி, 2031 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப் பட்டு, பாஜக முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.

 

வருகின்ற 2026 சட்டசபைத் தேர்தலில், திமுக-வுக்கு வலுவான எதிர்ப்பை எந்தக் கட்சியின் தலைவர் மக்களிடையே காண்பிக்க முடியும்? சீமான் அவர் பாணியில் திமுக-வை எதிர்க்கிறார், விஜய்யும் அவர் பாணியில் எதிர்க்கிறார். ஆனால் இந்த இருவரும் தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கான போக்கும் தகுதியும் கொண்டவர்கள் அல்ல. இந்த இரு தலைவர்களும் பாஜக-வின் தேசிய சிந்தனை துளியும் இல்லாதவர்கள். இந்த இருவரும் பாஜக-வுடன் ஒரு கூட்டணியில் இணைந்து திமுக-வை எதிர்க்க முன் வருவது சந்தேகம்.  

 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுக-வை எதிர்க்கும் முக்கியக் கட்சியாக இருக்கிறது. ஆனால், சீமானுக்கோ விஜய்க்கோ உள்ள தனிப்பட்ட வாக்காளர் பின்புலம் பழனிசாமிக்கு இல்லை, அவர் கட்சியில் மற்ற தலைவர்களுக்கும் கிடையாது. இருந்தாலும் எம்.ஜி.ஆர் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னம் இன்றும் அதிமுக-வின் கணிசமான வாக்கு வங்கிக்குக் காரணமாக இருக்கிறது – அது குறைந்து வந்தாலும்.

 

இந்த சூழ்நிலையில், பாஜக-வின் திமுக எதிர்ப்புக்கும் மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அதற்குக் காரணம் பாஜக என்ற கட்சி ஸ்தாபனம் அல்ல. மோடி, அமித் ஷா போன்ற கட்சியின் தேசியத் தலைவர்களும் காரணம் அல்ல. அண்ணாமலை தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவர் ஆவதற்கு முன்பிருந்த மாநிலத் தலைவர்களோ, அல்லது கட்சியின் பிற மூத்த தலைவர்களோ காரணம் அல்ல.

 

யார் மீதும் குறை சொல்லாமல் ஒரு உண்மையை நாம் அறியலாம். அதாவது, அண்ணாமலை கட்சியின் மாநிலத் தலைவர் ஆன பின்பு அவருடைய பேச்சினால், செயலினால், துணிவினால், மன உறுதியினால், அர்ப்பணிப்பால், தலைமைப் பண்பினால்வார்த்தைகளால் எளிதில் விளக்க முடியாத அவரது  அம்சத்தால், அவர் இன்று தமிழகத்தில் திமுக-வின் முக்கிய எதிர்ப்பு முகமாக – அதாவது, பிரதானமாகத் திமுக-வை எதிர்க்கும் ஒரு குரலாக – பார்க்கப் படுகிறார். திமுக-வே அப்படி நினைக்கும். அதை வைத்து பாஜக தமிழகத்தில் ஒரு சக்தி மிக்க தேர்தல் கூட்டணியை உருவாக்க வேண்டும். அதை பாஜக முனைகிறது. 

 

இப்படி இருக்கையில், 2026 தேர்தல் சமயத்தில் அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போகலாம், ஒரு கட்சிக் கோட்பாட்டினால் – அல்லது ஒரு அரசியல் யுக்தியாக – அவர் இப்போது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் படலாம் என்ற பேச்சு பரவலாக எழுகிறது. அது நடந்தால் என்ன ஆகும்? பாஜக-வின் திமுக எதிர்ப்பானது முனை மழுங்கும்.

 

திமுக, மிக ஆக்ரோஷமாகப் பந்து வீசும் கிரிக்கெட் பவுலர்கள் மாதிரி. அவர்களைத் திறமையாக எதிர் கொண்டு, வரும் பந்துகளை ஃபோர், சிக்சர் என்று திறமையாக அடித்து விளையாடி பவுலர்களைச் சோர்வடையச் செய்யும் ஒரு பேட்ஸ்மேன் எதிரிலுள்ள பாஜக அணிக்குத் தேவை. அதை அண்ணாமலை செய்ய முடியும் என்றால் அவரை ஆடுகளத்தில் இருக்கச் செய்வது நல்லது. நமது அணியில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அல்லது வேறு காரணத்திற்காக, அண்ணாமலையை இந்த மேட்சில் ஆடுகளத்துக்கு அனுப்பாமல் இருப்பது  நமக்கு வெற்றி தருமா?

 

மற்ற பேட்ஸ்மேன்களால் மூர்க்கமான பவுலர்கள் வீசும் பந்துகளை ஆட்டமிழக்காமல் அடித்து ஆட முடியாது, அவ்வப்போது ஒன்று, இரண்டு ரன்கள் மட்டும் எடுக்க முடியும், மற்ற எல்லாப்  பந்துகளையும் டொக்கு டொக்கு என்று ஆடுவார்கள் என்றால் அவர்களால் பெரிய பயன் உண்டா?

 

தமிழகத்தில் பாஜக-வின் மூத்த தலைவர்கள் பலரையும் தாண்டி, கட்சிக்கே புதியவரான அண்ணாமலையை எதற்காகக் கட்சியின் தேசியத் தலைமை 2021-ம் ஆண்டு தமிழகத்தின் மாநிலத் தலைவர் ஆக்கியது? ஏனென்றால், தமிழகத்தின் திராவிட அரசியல் களம் வினோதமானது, கொடுமையானது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக-வை அண்ணாமலையால் மற்ற பாஜக தலைவர்களை விடப் பலமாக எதிர்க்க முடியும், அதற்கான குணாதிசயங்கள் அவரிடம் தெரிகின்றன, என்ற கணிப்பில், எதிர்பார்ப்பில். அந்தக் கணிப்பை, அந்த எதிர்பார்ப்பை, அவர் 2021 ஜூலை மாதத்திலிருந்து நிரூபித்து வருகிறார். அப்படியானால் 2026 சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் பட்டால், அது கட்சிக்கு நன்மை செய்யுமா?

 

பாஜக என்ற அதிசயக் கட்சியும், மோடி என்ற அற்புதத் தலைவரும், தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக மக்களைத் திருப்ப முடியவில்லை. அண்ணாமலையால் அது சிறிதளவாவது முடிந்திருக்கிறது. இப்போது அவரை மாநிலத் தலைவர் பதவியலிருந்து நீக்கினால், கட்சியின் மகிமையும் மோடியின் நற்பெயரும் தமிழக பாஜக-வைத் தூக்கி நிறுத்தாதே? அவர் மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், அவரால் பாஜக-வுக்கு ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள் 2026-ல் பாஜக-வுக்கு வாக்களிப்பார்களா என்பதும் ஒரு கேள்வி. 

 

‘அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் தனது மாநிலப் பணிகளைத் தொடர்ந்து செய்வார், அதில் பாதகம் ஏற்படாது’ என்று எண்ணினால் அதில் சாரமில்லை.

 

அண்ணாமலை மாநிலத் தலைவராகத் தொடராவிட்டால், முன் போல் அவரால் பத்திரிகையாளர் சந்திப்புகளை அடிக்கடி நடத்த முடியுமா? புதிய தலைவரைத் தவிர்த்து அவரே திமுக-வுக்குப் பதிலடிகள் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அது முடியும், முன் போல் அவர் அதே வெளிச்சத்தில் இருப்பார் என்றால், புதிய மாநிலத் தலைவர் எதற்கு?

 

இன்னொன்று. ‘2026 சட்டசபைத் தேர்தலின் போது அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்து அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்றால், அது அண்ணாமலைக்குப் பின்னடைவாகும். அதனால் இப்போது அண்ணாமலையை வேறு கட்சிப் பணியில் அல்லது மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, 2031 தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் அவரை மீண்டும் தமிழக மாநிலத் தலைவர் ஆக்கலாம்’ என்ற ஒரு யோசனையும் காற்றில்  வருகிறது.

 

அண்ணாமலை நல்ல பேட்ஸ்மேன் என்று தெரிந்தும், மூர்க்கமாகப் பந்து வீசும்  எதிர் அணி விளையாடும் இந்த மேட்சில் அவரை இறக்காமல், அடுத்த மேட்சுக்கு அவர் வரட்டும் என்பது ஒரு யுக்தியாகுமா?

 

நமக்குத் தெரிந்தது இது. கிரிக்கெட்டில் ஏதாவது திருப்பம் வருமா, அல்லது ஒன்றும் வராதா, என்று தெரியாது. நாம் என்ன செய்யலாம்? மேட்ச் பார்க்கலாம். செய்வோம்.

  

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Thursday, 3 April 2025

அமித் ஷாவின் அண்ணாமலைக் கணக்கு சரிதான்!

 

-- ஆர். வி. ஆர்

 

கடந்த சில நாட்களாகத் தமிழக பாஜக ஆதரவாளர்களுக்குச் சோர்வு தரும் ஒரு தகவல் ஊடகங்களில், வாட்ஸ் அப்பில், விறுவிறுவென்று உலா வருகிறது, விவாதிக்கப் படுகிறது. அதன் இரண்டு அம்சங்கள் இவை:

 

1) பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவியில் வேறொருவர் நியமிக்கப்பட  இருக்கிறார்.

 

2)    வரப்போகும் இந்த மாற்றத்துக்கான காரணம், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதாவது, அண்மையில் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தபோது, ‘2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்என்னோடு இணக்கம் கொள்ளும் வேறு ஒருவரை அந்த இடத்தில் அமர்த்த வேண்டும்’ என்று கேட்டாராம். அதிமுக-வுடன் கூட்டணி இல்லாமல் திமுக-வைத் தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று நினைத்த அமித் ஷாவும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம். 

  

பாஜக-வின் தேசியத் தலைமையிலிருந்து இந்த மாறுதல், அதன் காரண காரியம், பற்றி அதிகாரபூர்வமாக ஒரு செய்தியும் வரவில்லை.

 

நிதானமாக யோசித்தால் இந்தச் செய்தியை, ஊடகத்தில் இது விரிவாகப் பரவுவதை, நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

 

2024 லோக் சபா தேர்தலுக்காக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி வைக்க அதிமுக-வுக்கு அவசியமில்லை என்று கருதினார் பழனிசாமி. பாஜக-வுடன் முன்பிருந்த கூட்டணி தொடர்ந்தால் சிறுபான்மையினர் ஓட்டுகளை அதிமுக இழக்கும், அந்த இழப்பை பாஜக-வுடனான கூட்டணி ஈடு செய்யாது என்றும் அப்போது அவர் நினைத்தார். அது போக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி தொடர்ந்தால் மக்கள் செல்வாக்கு உயர்ந்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலையால், அரசியலில் தனக்குள்ள மதிப்பு இன்னும் குறையும், அதிமுக-வுக்குள் தன் செல்வாக்கு குறையும் என்று தனக்காகவும் கவலைப் பட்டார் பழனிசாமி. இதனால் 2024 லோக் சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக-வை விலக்கினார் பழனிசாமி. அதனால் இரண்டு கட்சிகளும் அந்தத் தேர்தலில் இழப்பைச் சந்தித்தன.

 

இப்போது காட்சி மாறுகிறது. வரப்போகும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக, மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி அமைப்பது பற்றிப் பேச பழனிசாமியை எது அமித் ஷாவிடம் கூட்டிச் சென்றது?  

 

கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அண்ணாமலை தனது அசாத்தியத் துணிவால், திறமையால், சாதுர்யத்தால், அர்ப்பணிப்பால், தமிழகத்தில் பாஜக வுக்குச் சேர்த்து வைத்திருக்கும் மக்கள் ஆதரவு தான் – அது தொடர்ந்து அதிகரிப்பதுதான் – பழனிசாமியைப் பாஜக பக்கம் இழுக்கிறது.

 

முன்பு பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிப் போவதற்கு முக்கிய காரணமாக எந்த அண்ணாமலை கருதப்பட்டாரோ, அதே அண்ணாமலையால் தமிழக பாஜக பெற்றிருக்கும் கூடுதலான மக்கள் சக்தி, அதிமுக-வை பாஜக பக்கம் இழுக்கிறது. அந்த இரு கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டால் அதிமுக-வுக்கும் நிச்சயப் பலன் உண்டு, முன்பு அதிமுக விலகிப் போனதால் தவறவிட்ட அந்தப் பலன் 2026-ல் அதிமுக-வுக்கும் கிடைக்கட்டும் என்று பழனிசாமி இப்போது நினைக்கிறார்.   

 

ஆனால் ஒன்று. 'போவேன், வருவேன்' என்று போக்குக் காட்டும் பழனிசாமி கேட்டதால், அரசியலில் கூர்மதியும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அமித் ஷா – மோடியின் வலது கரமாக விளங்கும் ஒரு பாஜக தலைவர் – மக்கள் அபிமானம் பெற்ற துடிப்பான இளம் தலைவன் ஒருவனைத் தன் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து ஒதுக்கி வைப்பாரா? அப்படி நடந்தால் அது கட்சியின் பல எதிர்காலத் தலைவர்களையும் பாதித்து பின்னாளில் அவர்களையும் கட்சிப் பணியில் சுணங்க வைக்கும் என்று அமித் ஷா நினைப்பாரே?

 

அண்ணாமலை பதவி விலகிய பிறகு பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்டு, மீண்டும் பழனிசாமி  அந்தக் கூட்டணிக்கு டாடா காட்டிவிட்டுப் போனால் பழனிசாமிக்காக தமிழக பாஜக இழந்த இளம் தலைவர்களை மீண்டும் பெற முடியாது என்ற பிரக்ஞை பாஜக-வின் தலைமைக்கு இருக்கத் தானே செய்யும்?

 

இதையெல்லாம் மற்றவர்கள் சொல்லி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரிய வேண்டியதில்லை. சாதாரண மக்கள் மனங்களை அறியும் அந்த இரு தலைவர்கள், கட்சியின் அடுத்த அடுத்த நிலைத் தலைவர்களின் எண்ணங்கள் பற்றியும் நன்கு அறிவார்கள்.

 

சரி, பிறகு யார் எதற்காக அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப் படுவார் என்ற தவறான தகவலைக் கசிய விட்டிருப்பார்கள்? ஊடகத்தில் பலமாகப் பரவச் செய்திருப்பார்கள்?

 

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கு அண்ணாமலை நாளொரு தொல்லையும் பொழுதொரு குடைச்சலும் அரசியல் ரீதியாகக் கொடுத்து வருகிறாரோ, அந்தக் கட்சியால் சொகுசாக வாழ்கிறவர்கள் செய்த காரியமாகத்தான் இது இருக்க வேண்டும். அவர்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்?

 

பாஜக ஆதரவாளர்கள் சோர்வடைந்து, அந்தக் கட்சியின் தேசியத் தலைமையின் மீது பிடிப்பிழந்து, “சீச்சீ! என்ன கட்சி இது!” என்று அவர்கள் நினைக்கட்டும் என்பது பாஜக-வைத் தீவிரமாக வெறுக்கும் ஒரு கட்சியின் கணக்காக இருக்கும்.  அதோடு, நடப்பதைப் பார்த்து அண்ணாமலையும் வெறுப்படைந்து பதவி விலகலாம் என்பதும் அந்தக் கட்சியின் நப்பாசையாக இருக்கும். ஆனால் அமித் ஷாவும் அண்ணாமலையும் பனங்காட்டு நரிகள்.

 

இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, தமிழகத்தில் திமுக-வை வீழ்த்த, திமுக பாணி அரசியலைக் கட்டுக்குள் வைக்க,  பாஜக  தீவிரமாகச் செயல்படுகிறது. அது நடந்தேற, போகிற போக்கில் பாஜக தன்னை அதிமுக-வுடன் அரசியலில் சமன் செய்துகொள்ள வேண்டும், காலப் போக்கில் அதிமுக-வை முந்தவும் வேண்டும். அப்படி இருக்கையில் அதிமுக சொல்கிற படி தமிழகத்தில் பாஜக தனது தலைவரையும் மாற்றும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.

 

இன்னொன்று.  தமிழகத்தில் அண்ணாமலை சேர்த்து வைத்திருக்கும் மக்கள் செல்வாக்கின் முக்கிய காரணம் இது. அதாவது, தீய சக்தியான திமுக-வை அண்ணாமலை நேர்மையாக, விடாப்பிடியாக எதிர்க்கிறார், அம்பலப் படுத்துகிறார். அண்ணாமலையை ஆதரிக்கும் மக்கள் அந்த எதிர்ப்பைப் பிரதானமாக வரவேற்கிறார்கள், என்பது அந்தக் காரணம்.  அனைவரையும் விட பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இது தெரியும். பிறகு ஏன் அந்த இருவரும் அண்ணாமலையை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து 2026 தேர்தலுக்கு முன் விடுவிக்க நினைக்க வேண்டும்?

 

‘எல்லாம் சரி. அண்ணாமலை தமிழகத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் படுவார் என்பது தவறான தகவலானால், அதை அமித் ஷா உடனே மறுத்து அறிக்கை வெளியிடலாமே, அவர் ஏன் அதைச் செய்யவில்லை?’ என்று சிலர் கேட்கலாம்.

 

பாஜக-வுக்கு எதிரான கட்சிகள், அதுவும் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியக் கட்சி, பாஜக-வின் தேசியத் தலைமை தனது உள் கட்சி விவகாரங்களில் ஏதோ முடிவு எடுத்திருக்கிறது, அதை செயல்படுத்தப் போகிறது, எடுக்கப் போகிறது என்று ஒரு தவறான தகவலை ஊடகத்தில் பரவ விட்டால், அதை பாஜக மறுத்து அறிக்கை விட அவசியம் இல்லை. பாஜக அப்படிச் செய்ய ஆரம்பித்தால், விஷமத் தனமான எதிர்க் கட்சிகள் பாஜக தேசியத் தலைமை பற்றிப் புதிய புதிய தவறான தகவல்களை அவ்வப்போது ஊடகத்தில் பரப்பும்.  ஒவ்வொரு முறையும் பாஜக அவற்றை மறுத்துக் கொண்டிருக்க முடியாது.  காலப் போக்கில் மக்கள் எது உண்மை என்று புரிந்து கொள்வார்கள்.

 

அமித் ஷா – பழனிசாமி – அண்ணாமலை பற்றிய இந்தப் பொய்ச் செய்தியை உருவாக்கியவர்கள், பாஜக-வுக்கு ஒரு நன்மை செய்திருக்கிறார்கள். இந்தப் பொய்ச் செய்தி பரவியதால், அண்ணாமலையின் எண்ணற்ற ஆதரவாளர்கள் அவர்மீது மாறாத அபிமானம்  உடையவர்கள் என்பது அவர்கள் பலவாறாக வெளிப்படுத்திய கவலையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.  அது பாஜக-வின் தேசியத் தலைமைக்கும் தெரிய வந்திருக்கும். ஒரு சிறந்த மாநிலத் தலைவரை உருவாக்கிய திருப்தியும் ஊர்ஜிதமும் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் மீண்டும் கிடைத்திருக்கும்.


சரிதானே?

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai