Saturday, 29 June 2024

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: குப்பையான கோரிக்கை, சப்பையான வாதம்


         -- ஆர். வி. ஆர்

 

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவுக்கு அவசியமா? அது தேவை என்று பாஜக-வை எதிர்க்கும் 26 கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வருடம் முன்பு கோரிக்கை வைத்தன. அந்தக் கோரிக்கை குப்பையானது. அதற்கான வாதங்கள் சப்பையானவை.

 

அண்மையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்மொழிய, தமிழக சட்டசபையும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியம் என்று குறிப்பிட்டு, அந்தப் பணியை மத்திய அரசு செய்துதர வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்தத் தீர்மானம். அது அர்த்தமற்றது. தீர்மானத்தின் முக்கியப் பகுதி இங்கே:

 

இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில், திட்டங்கள் தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய, ஜாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.    

 

 

ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இப்போது திமுக ஆட்சி. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு மாநிலத்தில் இட்ட அடித்தளத்தின் தொடர் பயனையும், காலம் தானாகத் தரும் வளர்ச்சியை மட்டும் தமிழகம் கண்டிருக்கிறது. சாதாரண மக்கள் வேறு பெரிய முன்னேற்றத்தைப் பார்க்கவில்லை.  என்ன காரணம்?

 

மாநிலத்தில் என்ன ஜாதியில் எத்தனை மக்கள்  இருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை என்பதால்தான், ஸ்டாலின் ஆசைப்படுகிற முன்னேற்றத்தைத் தமிழக மக்கள் இதுவரை அடையவில்லையா? அவர் முன்மொழிந்த சட்டசபைத் தீர்மானம், அதைத்தானே சொல்ல வருகிறது?

 

சட்டசபைத் தீர்மானம் குறிப்பிடும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஆகிய மூன்று விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

 

“ஆறிலிருந்து பதினான்கு வயதுள்ள எல்லாக்  குழந்தைகளுக்கும் ராஜ்ஜியம் கட்டாய இலவசக் கல்வியை அளிக்கவேண்டும், அதற்கு வழிமுறையான சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று நமது அரசியல் சட்டம் விதிக்கிறது. இதற்கான சட்ட திருத்தம் 2010-ஆம் வருடம் அமலுக்கு வந்தது.

 

குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி என்பது எல்லா ஜாதி மத மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும், அது ராஜ்ஜியத்தின் பொறுப்பு, என்று அரசியல் சட்டம் சொல்கிறது. காலம் காலமாகப் பள்ளிக் கல்வியை மாநில அரசு நிர்வகிக்கிறது, மேற்பார்வை பார்க்கிறது. ஆகையால் தமிழகக் குழந்தைகளின் பதினான்கு வயது வரையிலான பள்ளிக் கல்வி,  தமிழக அரசின் கடமை.   

 

பதினான்கு வயது என்பதோடு நிறுத்தாமல், மாநிலத்திலுள்ள சிறுவர்களின் பத்தாம்  வகுப்பு முடியும்வரை – ஏன் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் வரை கூட - தமிழக அரசு எல்லா ஜாதி மதத்தவருக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வியை அளிக்கலாம். அரசியல் சட்டம் நிர்பந்திக்காமல் கூட ஒரு அரசு இப்படியான கட்டாய இலவசக் கல்வியை அளிக்க முடியும்.

 

தமிழகத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் பதினான்கு வயது வரையிலாவது தரமான கட்டாய இலவசக் கல்வி கிடைத்தால் என்னாகும்? சட்டசபைத் தீர்மானத்தில் சொல்லப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்ற மூன்று நோக்கங்களும் அடுத்தடுத்து மக்கள் வாழ்வில் தாமாகப் பெரிதளவு நிறைவேறுமே? இதைச் செய்து முடிக்க ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டாம்.  முதலமைச்சரிடம் முனைப்பு இருந்தால் போதும். 

 

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால், அரசு “திட்டங்கள் தீட்டி சட்டங்கள் இயற்றும்” என்கிறது சட்டசபைத் தீர்மானம். தனக்கு ஏற்கனவே அரசியல் சட்டம் அதிகாரங்கள் தரும் விஷயங்களில், தமிழக அரசு – அதுவும் திமுக அரசு – திட்டங்கள் தீட்டி மக்களுக்கான சேவைகளைக் குறை இல்லாமல் அளித்திருக்கிறதா?

 

அரசியல் சட்டத்தின் கீழ், ஆதியிலிருந்து ஒரு மாநில அரசின் தனியான கட்டுப்பாட்டிலும் பொறுப்பிலும் இருக்கும் சில துறைகள் இவை: சட்டம் ஒழுங்கு, பொது சுகாதாரம், ஆஸ்பத்திரிகள், சாலைகள், நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பாதாள சாக்கடைகள், நிலம், நில அளவை, பட்டா போன்ற நில ரிகார்டுகள். இவை மாநிலத்தின் அனைத்து மக்களின் வாழ்வோடு, பெரிதும் அன்றாட வாழ்வோடு, தொடர்புடையவை.  

 

மேலே சொன்ன துறைகள் ஏதாவது ஒன்றின் செயல்பாட்டில், தமிழக அரசுக்கு – ஒரு திராவிடக் கட்சியின்  ஆட்சிக்கு – நாம் பாஸ் மார்க்காவது தர முடியுமா? சட்டம் ஒழுங்கு பல இடங்களில் பல்லைக் காட்டுகிறது. சாலைகள் வாய் பிளக்கின்றன.  அரசு ஆஸ்பத்திரிகள் அழுகின்றன. குடிநீர் நமக்குத் தண்ணி காட்டுகிறது.  பாதாள சாக்கடை நீர் சந்திக்கு வருகிறது. பட்டா கேட்டால் பர்ஸைப் பிடுங்குகிறார்கள்.

 

அரசு நடத்தும் திமுக-வுக்கு, அரசியல் சட்டம் ஏற்கனவே கொடுத்திருக்கும் அதிகாரங்களை மக்கள் நலனில் பிரயோகித்து அவர்களுக்கு நல்லது செய்ய வக்கில்லை. இந்த லட்சணத்தில், மத்திய அரசு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்துக் கொடுத்தால், அதன் பிறகு ஸ்டாலின் அரசு திட்டங்கள் தீட்டுமா? சட்டங்கள் இயற்றுமா? அதன் வழியே “மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பை” உறுதி செய்யுமா?  வெற்று வார்த்தைகள்.

 

இன்னொன்று. மாநிலத்தில் யார் என்ன ஜாதி என்று அரசு தெரிந்துக்கொண்ட பின், சட்டசபைத் தீர்மானத்தின் படி மக்களுக்கு “சம உரிமை, சம வாய்ப்பை” அரசு உறுதி செய்யுமா வேலைவாய்ப்பு உட்பட? அதாவது, தமிழகத்தில் தனியார் துறையில் தொழில்வளமும் வேலைவாய்ப்பும் விரைவாகப் பெருகாமல் பார்த்துக் கொண்டு, சொற்ப அரசுப் பணி இடங்களுக்காகப் பல லட்சம் மக்களை ஜாதி அடிப்படையில் ஏங்க வைத்துக் கொண்டே இருக்குமா மாநில அரசு? எல்லா ஜாதி மக்களுக்கும் இது எப்போதும் துரோகம் அல்லவா?

 

அரசியலை ஜாதி ரீதியாக, ஒரு ஜம்பத்துக்காக, வருமானம் பார்க்கும் ஒரு தொழிலாக, செய்யும் சில ஜாதித் தலைவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களின் சங்கதியை அந்தந்த ஜாதிகளில் சிலர் உணர்வார்கள், பலர் உணரமாட்டார்கள். அந்த மாதிரித் தலைவர்களைத் தங்கள் கையில் போட்டுக் கொண்டு, அவர்களோடு பேரம் செய்துகொண்டு, தங்களின் வளத்தை, தங்கள் குடும்பத்தின் செழிப்பை, தங்கள் கட்சியின் நலனை, பாதுகாக்கும் பெரிய கட்சித் தலைவர்கள் உண்டு.

 

அரசியல் விளையாட்டுக்கள் மூலம் கொழிக்கும் சில பெரிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அவர்களுடன் அணி சேர்ந்து பயன் பெறும் சில சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு லாபம் தரும். மற்றபடி, அரசுமுறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு  நடந்து அதன் விவரங்கள் வெளியானால், அதன் மூலம் தமிழக மக்கள் – அல்லது தேச அளவில் எல்லா மக்களும் – ஒன்றுபட மாட்டார்கள். மாறாக, அரசியல்வாதிகளின் குயுக்தியால் மக்கள் மேலும் பிளவுபடலாம்.

 

ஸ்டாலினிடம், அவருடன் உடன்படும் பிற அரசியல்வாதிகளிடம், நாம் கேட்டுக் கொள்ளலாம்: ஜாதிவாரி  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து, நீங்கள் “திட்டங்கள் தீட்ட” வேண்டாம். பாவம் மக்கள். முடிந்தவரை அவர்கள் நலமாக இருக்கட்டுமே!

* * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Sunday, 23 June 2024

பள்ளி மாணவர்கள் தொடர்பாக சந்துரு அறிக்கை: அவர் இந்த உலகில் இருக்கிறாரா?


-- ஆர். வி. ஆர்

 

    ஓய்வு  பெற்ற ஹைகோர்ட்  நீதிபதி சந்துரு, பள்ளி மாணவர்களிடையே ஜாதிய நல்லிணக்கம் நிலவ தமிழக அரசுக்குச் சில பரிந்துரைகள் செய்திருக்கிறார். அவைகள் சிலவற்றில் அவர் சிந்தனை தவறு.

 

        சந்துருவின் தவறான சில பரிந்துரைகள் இவை:

 

மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் அணியத் தடை விதிக்க வேண்டும்.

 

தனியார் பள்ளிகளுக்கு ஜாதிப் பெயர்கள் இருந்தால், அவற்றில் ஜாதியைக் குறிக்கும் சொற்களை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

பள்ளிகள் பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது. அதற்கான உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி துவங்க அனுமதி அளிக்க வேண்டும்.

 

 

சந்துரு பரிந்துரைகளின் பின்னணி இது: சென்ற ஆண்டு, நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஒரு வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. 17 வயதுள்ள அரசுப் பள்ளி மாணவன் ஒருவனை, வேறு ஜாதியைச் சார்ந்த சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். பலத்த காயங்களுடன் அந்த மாணவன் உயிர் பிழைத்தான்.

 

இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் ஜாதி மோதல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு-நபர் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்தது. அவர் தனது ஆய்வின் முடிவில் அரசுக்கு அளித்திருக்கும் பரிந்துரைகளில் சில, மேலே காண்பவவை. அவரது சில பரிந்துரைகள், ஜாதி என்பதைத் தாண்டி ஹிந்து மத சுதந்திரத்தில் அனாவசியமாகத் தலையிடுகின்றன. 

 

சந்துருவின் அணுகுமுறையில் உள்ள பொதுவான தவறை இந்தக் கேள்விகளும் அவற்றுக்கான சரியான பதில்களும் தெளிவாக்கும். 

 

மக்களிடையே ஜாதி ஒற்றுமையும் நல்லிணக்கமும் சட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா, அல்லது சாதாரண மக்களின் மனதிலிருந்து தொடங்க வேண்டுமா? இரண்டில் எது நிச்சயம் பயன் தரும், 

 

வீட்டிலும் வெளியிலும் உள்ள  சமூகப் பெரியவர்கள் தமது பேச்சாலும் செயலாலும், அறிந்தோ அறியாமலோ, ஜாதி  வேற்றுமைகளை வலியுறுத்தவும் ஜாதி உரசல்களை மேற்கொள்ளவும் தமது இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்களா? ஆம் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? தீர்வுக்கு வழி உண்டா?

 

எல்லா ஜாதிகளும் அந்தந்த ஜாதி மக்களிடையே ஒரு இயற்கையான நட்பை, பிணைப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ஜாதிகள் நல்லது செய்கின்றன.

 

தலைமுறை தலைமுறையாக ஒரு வம்சத்தினர் இன்ன ஜாதி என்று சொல்லி வளர்க்கப் படும்போது, அந்த மனிதர்களுக்குத் தங்கள் ஜாதியின் மீதான பிடிப்பு இயற்கையாக, ஒரு உள்ளுணர்வாகத் தங்குகிறது. அவர்கள் வேறு மாநிலத்துக்குப் போய் வசித்தாலும், வேறு நாட்டுக்கே குடி பெயர்ந்து வாழ்ந்தாலும், அவர்களின் ஜாதிச் சார்பும் உணர்வும் தொடர்கின்றன – சற்று வலுக் குறைந்தாலும்.

  

    ஜாதி என்பது அந்தந்த மக்களுக்குள்  ஒரு பிணைப்பை ஏற்படுத்துவது போல், வேறு வேறு ஜாதி மக்களிடையே சிறிது வேற்றுமை உணர்வை ஏற்படுத்தத்தான் செய்யும். இதுவும் இயற்கை. ஆனால் அந்த வேற்றுமை உணர்வை ஒரு பகை உணர்வாகப் பார்க்காமல், அந்த வேற்றுமையை நமது வாழ்க்கையின் அம்சமாகப் புரிந்துகொண்டு, மற்ற ஜாதி மக்களையும் சினேக பாவத்துடன் நம்மால் ஏற்க முடியும். அது எப்போது சாத்தியம்? மனிதப் பண்புள்ள கண்ணோட்டம் நம்மிடையே இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

 

      நம் ஒவ்வொருவரிலும்  ஒரு பகுதி, நாம் ஒரு தேசத்தவர் என்கிற உணர்வு. நம்மில் இன்னொரு பகுதி, நாம் ஒரு மதத்தவர் என்கிற உணர்வு. இன்னொரு பகுதியில், நாம் ஒரு மொழியினர் என்கிற உணர்வு. இன்னொரு முக்கிய பகுதியில், நாம் ஒரு ஜாதியினர் என்கிற பெருமை. இந்த அடையாளங்கள் நமக்குப் பிறப்பிலேயே கற்றுக் கொடுக்கப் படுகின்றன.

 

        இந்த அடையாளங்கள் மட்டும் நம்மை வழி நடத்தினால், நம்மைக் கட்டுப் படுத்தினால், நாம் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் நியாயமாக நடந்துகொள்ள முடியாது. அப்போது பகையும் உரசல்களும் வரும். இது நாங்குநேரியில் நடந்தது. இதைத் தவிர்க்க, நம் மனதுக்குள் இன்னொரு அடையாளம் ஏற்படுவதும் நமக்கு முக்கியம்.

 

     அந்த இன்னொரு அடையாளம், “நான் கட்டுகளுக்குள்  சிக்காத மனிதன்” என்ற உணர்வு. அந்த உணர்வால், “நான் ஒரு தேசத்தவன், ஒரு மதத்தவன், ஒரு ஜாதிக்காரன், இன்ன தாய்மொழியைக் கொண்டவன், என்ற எனது அடையாளங்களை ஒரு லகானில் பிடித்து வைத்திருக்க முடியும். அதன் விளைவாக, மாறான அடையாளங்கள் கொண்ட மற்ற மக்களிடமும் வெறுப்பில்லாமல் சினேகமாக நான் பழக முடியும். இந்தப் பண்பான உணர்வு இரண்டு புறத்திலும் அவசியம்தான். ஆனால் “நான் மனிதன்” என்ற நல்ல உணர்விலிருந்து நானே முதலில் விலகி இருக்க வேண்டாமே?

 

       “நான் மனிதன்” என்ற நல்ல உணர்வுக்குப் பெரிதும் வித்திடுவது நல்ல கல்வி. சிறுவர்களுக்கு நல்ல கல்வியைப் புகட்ட நல்ல பாடத் திட்டங்கள், தரமான கல்விக் கூடங்கள், சிறப்பான ஆசிரியர்கள் எல்லாம் அவசியம். அப்படியான நல்ல கல்வி, நமக்கு வாழ்க்கையின் மீது ஆச்சரியத்தையும் நமக்குள்ளே பணிவையும் ஏற்படுத்தி, “நான் மனிதன்” என்ற பிரதான உணர்வையும் நமக்குத் தரும்.

 

  தமிழக மக்கள் அனைவருக்கும் நல்ல கல்வியை அளிக்க முனைபவர்களா மாநிலத்தின் திராவிடக் கட்சிகள்?  இல்லை. இதற்கும் காரணம் உண்டு.

 

    நல்ல கல்வி, மக்களின் அறிவுக் கண்களையும் திறக்க உதவும். தமிழகத்தில் சாதாரண மக்கள் அறிவுக் கண்கள் திறந்திருந்தால், எப்படி அந்த மக்களின் முதுகில் அரசியல்வாதிகள் சவாரி செய்வது, எப்படி அரசியல்வாதிகள் அனைத்து மக்களின் ஓட்டுக்களை அரசாங்க இலவசங்கள் வழியாக வாங்குவது, எப்படிக் கொழிப்பது? 

 

         ஜாதி உணர்வுகள் மக்களுக்கு  மேலோங்கி இருந்தால், அந்தந்த ஜாதி மக்களின் சில பிரமுகர்களைத் தம்மோடு சேர்த்துக் கொண்டு, அந்தப் பிரமுகர்களுக்குப் பதவிகளும் சில வாய்ப்புகளும் கொடுத்து, அவர்கள் மூலமாக அவர்கள் சார்ந்த ஜாதி மக்களின் ஓட்டுக்களை எளிதில் தொடர்ந்து அறுவடை செய்வது, ஒரு அரசியல் கட்சிக்கு சுலபம்.  என்ன – ஜாதி மோதல்கள்  மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவை ஏற்பட்டால், ஏதாவது கமிட்டி போட்டு விஷயத்தை ஆறப் போட வேண்டும். பிறகு அடுத்த அறுவடையைக் கவனிக்கலாம்.

 

     தனக்கு ஏதோ  தோன்றியதைச் சந்துரு சில பரிந்துரைகளாகச் சொல்லி வைத்திருக்கிறார். தாங்கள் திட்டமிடுவதை ஆளும் அரசியல்வாதிகள் செய்து கொள்கிறார்கள். இதைத் தவிர்த்து,  சாதாரண மக்கள் நிஜமாகவே நலமும் வளமும் பெற நீங்களும் நானும் பிரார்த்திக்கலாம். வேறென்ன சொல்லுங்கள்?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

Thursday, 13 June 2024

லோக் சபா தேர்தல்: தமிழகத்தில் பாஜக-வுக்கு பூஜ்யம். அண்ணாமலை காரணமா?

 

-- ஆர். வி. ஆர்    

 

2024 லோக் சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிமுக-வுடனான கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளாமல் போனது பற்றிப் பலரும் விவாதிக்கிறார்கள். அந்த விவாதத்தின் மையம், பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.


தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் முன்னதாகத் தங்கள் கூட்டணியை முறித்துக்  கொண்டதால், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியுமாக இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்கொண்டன, அதோடு தங்களுக்குள் ஒன்றை ஒன்றும் எதிர்த்தன. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் 39, பாண்டிச்சேரியில் ஒன்று, ஆக 40 லோக் சபா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. இங்கு அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்குக் கிடைத்த இடங்கள் பூஜ்யம்.

 

இந்தத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், அக் கட்சிகளின் இப்போதைய கூட்டணிக் கட்சிகள் மற்றதும் அதிமுக-பாஜகவோடு சேர்ந்திருந்தால், அவர்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கும்?  குறைந்த பட்சம், தமிழகத்தின் 13 தொகுதிகளில் அவர்களின் கூட்டணி நிச்சயம் வென்றிருக்கும், திமுக கூட்டணி தோற்றிருக்கும். ஏனென்றால், அந்த 13  தொகுதிகளில் இப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் தனித்தனியாகப் பெற்ற ஓட்டுகளின் கூட்டு எண்ணிக்கை, திமுக கூட்டணி வேட்பாளர்கள் அங்கு ஜெயித்து வாங்கிய ஓட்டுகளை விட அதிகம்.

 

சென்ற இரண்டு தேர்தல்கள் போல இல்லாமல், லோக் சபாவில் பெரும்பான்மையைக் குறிக்கும் 272 தொகுதிகளை இந்த முறை பாஜக தனியாக எட்டவில்லை. இப்போது அது வென்றிருப்பது 240 தொகுதிகள் தான். பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கூட்டாகப் பெரும்பான்மை இலக்கைச் சற்றுத் தாண்டின.  அவைகள் 293 இடங்களில் வென்று, பாஜக-வின் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகி இருக்கிறார். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்து அதற்கு 13 இடங்கள் கிடைத்திருந்தால், பாஜக-வுக்கு அது இன்னும் பலமாகும்.

 

மக்களவையில் பாஜக-வுக்குக் கூட்டணிக் கட்சிகளினால் கூடுதல் பலம் கிடைக்காமல் போனதற்கு, தமிழகத்தில் அண்ணாமலையின் அரசியல் அணுகுமுறைதான் காரணமா? மொத்தத்தில் இது பாஜக-வுக்கு நஷ்டமா? இதுதான் கேள்வி.

 

ஒரு கருத்து இது. அதிமுக பலமுறை திமுக-வைத் தோற்கடித்துத் தமிழகத்தில் ஆட்சி அமைத்த கட்சி. அது பாஜக-வை விட மாநிலத்தில் பெரிய கட்சி. அதிமுக-வின் தலைமையில் பாஜக ஒரு கூட்டணியில் இருக்கும்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்தால் பாஜக-தான் அதிமுக-வுக்கு விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகவேண்டும்.

 

இந்தக் கருத்தை விரிவாக்கி இன்னும் தெளிவாக ஒரு உதாரணத்தோடு சொல்லலாம். அதாவது, தமிழக காங்கிரஸ் கட்சி திமுக-விடம் எப்படிப் பணிவாக, பவ்யமாக நடந்துகொண்டு, அவ்வப்போது திமுக தலைவர் மனம் குளிரப் பேசி, தேர்தல் சமயத்தில் திமுக-விடம் அழுது கெஞ்சிக்  கூடியவரை அதிகத் தொகுதிகள் பெற்று சமாதானப் படுகிறதோ, அது போல் பாஜக-வும் அதிமுக-விடம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்திருந்தால்,  இந்த லோக் சபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்குத் தமிழகத்தில் 13 இடங்களாவது கிடைத்து, அதில் பாஜக-வுக்கும் இரண்டோ மூன்றோ கிடைத்திருக்குமே?

 

திமுக-வின் விரலை சமர்த்தாகப் பிடித்துக் கொண்ட  காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி, ஆனால் அதிமுக-வின் கையை விட்ட அசட்டு பாஜக-வுக்கு மாநிலத்தில பூஜ்யம் என்றாகி விட்டதே? இந்த ரீதியில் ஒரு கருத்து நிலவுகிறது.  

 

இந்தக் கருத்தின் இன்னொரு பக்கம் இது. அதிமுக-விடம் தமிழக பாஜக இணக்கமாக, பதவிசாக, பணிவாக நடக்கவில்லை என்றால் அதற்கு அர்த்தம்: தமிழக பாஜக-வின் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் அப்படி நடக்கவில்லை என்று அர்த்தம்.  பிரச்சனை இங்குதான் இருக்கிறது.

 

எடப்பாடி பழனிசாமி எம். ஜி. ஆர் இல்லை, ஜெயலலிதாவுமில்லை. மக்கள் செல்வாக்கு மிகுந்த எம். ஜி. ஆர் மறைந்த பின்னர், ஜெயலலிதா தனக்கென ஒரு மக்கள் செல்வாக்கை ஏற்படுத்தி வைத்திருந்தார். அந்த இரு தலைவர்களும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தைக் கட்சித் தொண்டர்கள் மனதில் பதிய வைத்திருந்தார்கள்.

 

பழனிசாமிக்கு, சொல்லும்படியாக மக்கள் செல்வாக்கு இல்லை. எம். ஜி. ஆர், ஜெயலலிதா இருவரும் தலைமை ஏற்ற அதிமுக-வின் இன்றைய தலைவராகப் பழனிசாமி இருப்பதால், கட்சியின் சின்னம் இரட்டை இலைக்காக, அந்தக் கட்சியின் தொண்டர்கள் அவர்மீது பேருக்கு ஒரு மரியாதை வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.  

 

பாஜக-வைப் பொறுத்தவரை, தமிழகத்தில் முன்பிருந்த அதன் தலைவர்களை விட மிக அதிக மக்கள் செல்வாக்கைக் குறுகிய காலத்தில் பெற்றவர் அதன் இப்போதைய தலைவர் அண்ணாமலை. பாஜக-வின் ஏறுமுகம் அண்ணாமலை. அதிமுக-வின் இறங்குமுகம் எடப்பாடி பழனிசாமி.

 

திமுக என்கிற தீய அரசியல் சக்தியிடம் சாதாரண மக்கள் பொதுவாக அஞ்சிப் பணிந்து, கிடைப்பதை வாங்கி,  அக்கட்சியை ஆதரிக்கிறார்கள். அந்தத் தீய சக்தியை நேருக்கு நேர் பார்த்துப் போராடி அடக்கி வைக்கும் ஆற்றல்  அண்ணாமலைக்கு உண்டு என்ற நம்பிக்கை சாதாரண மக்களிடம் பெருகி வருகிறது. இதனால் அண்ணாமலைக்கான மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.  

 

இதுவரை ஆளும் கட்சியாக இல்லாத பாஜக-வுக்குத் தமிழகத்தில் ஆதரவு கூடி வருகிறது என்றால், பாஜக யாரை எதிர்க்கிறது, எந்தக் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கவல்லது, என்று மக்கள் பார்த்து ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

 

பாஜக-வுடன் கூட்டணியில் தொடர்ந்தால், அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கால் சொற்பமான தனது மக்கள் செல்வாக்கு இன்னும் சரியும்,  தனது கட்சிக்குள் தன்னுடைய மதிப்பும் குறையும் என்று  கணக்கிட்டார் எடப்பாடி. அதனால் தனது சுயநலத்துக்காக, தனது அரசியல் கெத்து சிறிது காலம் நீடிக்க, அதிமுக-பாஜக உறவு முறிவதற்கு வழி வகுத்தார் எடப்பாடி. அது நடந்தது.

 

அதிமுக-விடம் பணிவும் பயமும் காட்டி, பேருக்குக் கட்சித் தலைவராக இருப்பதை அண்ணாமலை விரும்பவில்லை. தமிழகத்தில் அதிமுக-வைச் சாராமல் பாஜக-வை வளர்க்கும் தெம்பும் திராணியும் தலைமைப் பண்புகளும் அவரிடம் இருக்கின்றன. கட்சியின் அகில இந்தியத் தலைமையும் இந்த நிதர்சனத்தை அங்கீகரித்திருக்கிறது. அது இன்னும் முக்கியம்.

 

2019-ல், தமிழகத்தில் பாஜக-வின் ஓட்டு சதவிகிதம் 3.6 சதவிகிதம் இருந்தது. இந்த லோக் சபா தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல், திமுக-வையும் எதிர்த்து நின்று, அது தனது ஓட்டு சதவிகிதத்தை 11.2 என்று உயர்த்திக் காண்பித்தது. இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு ஓட்டு சதவிகிதம் சுமார் 6 குறைந்து, இப்போது 27 சதவிகிதம் என்று ஆகி இருக்கிறது.  

 

பாஜக-வின் ஓட்டு சதவிகிதம் மூன்று மடங்குக்கு மேல் வளர்ந்திருக்கிறது. இதை இப்போது ஊர்ஜிதப் படுத்திக் கொண்டதால் அந்தக் கட்சியின் மதிப்பு-மரியாதை மற்ற கட்சியினரிடமும் மக்களிடமும் உடனே கூடி இருக்கிறது. அண்ணாமலைக்கு, பாஜக தொண்டர்களுக்கு,  இது இன்னும் உத்வேகம் அளித்துக் கட்சி மேலும் தனியாக வலுப்பெற உதவும். இந்த நிலையைத் தள்ளிப்போடாமல் இப்போதே – அண்ணாமலையின் 40 வயதிலேயே – அடைந்திருப்பது நல்லது. நீண்ட வளர்ச்சிப் பயணத்திற்கும் காலம் வேண்டுமே?

 

தமிழகத்தில் தொகுதிகள் குறைந்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களவைத் தேவைகளை நாம் வேறுவகையில் பார்த்துக் கொள்ளலாம், என்று எண்ணி, அண்ணாமலையின் வீரியத் தலைமையை உணர்ந்து அவருக்குத் துணை நின்றார் பிரதமர் மோடி. எல்லாவற்றையும் கணக்கிட்டு, சில தருணங்களில் தைரிய முடிவு அவசியம் என்று மோடிக்கும் தோன்றியது.

 

தமிழக பாஜக சீராக விரைவாக வளர்ச்சி பெறுவதற்கு அண்ணாமலையின் அணுகுமுறை சரி என்று கட்சியின் தலைமை நம்புகிறது, அது அண்ணாமலைக்கும் தெரியும்.

 

கட்சித் தலைமையின் ஒப்புதலோடு, ஆதரவோடு,  தமிழக பாஜக-வை வழி நடத்தும் அண்ணாமலையைத் தனியாக யார் எதில் பெரிதாகக் குறை சொல்ல முடியும்? பொழுது போகாதவர்கள் கணினி விளையாட்டுக்கள் விளையாடலாமே?  

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

                                                       

Friday, 7 June 2024

தேர்தல் முடிவுகள்: வெற்றிக் கூட்டணி எது? வெட்கமில்லாத கூட்டணி எது?

 

          -- ஆர். வி. ஆர்

 

          2024 லோக் சபா தேர்தலில் பாஜக கூட்டணி வென்றதா? இல்லை, காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வெற்றியா? இதில் சிலருக்கு சந்தேகம் தோன்றுகிறது. ஏன் என்ன என்று பார்க்கலாம்.    

 

பாஜக-வை, முக்கியமாக நரேந்திர மோடியை, தீவிரமாக எதிர்க்கும் எதிர்க் கட்சிகளில் பிரதானமானவை, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் (ஷரத் பவார்), மற்றும் சில.  இவைகள் இன்னும் சில கட்சிகளுடன் சேர்ந்து, 2024 லோக் சபா தேர்தலில்  மோடியை எதிர்ப்பதற்காக ஒரு கூட்டணியை உருவாக்கின. அதுதான் ‘இண்டி’ கூட்டணி (I.N.D.I. Alliance) என்பது.

 

இன்னொரு புறத்தில், பாஜக-வும் அதன் ஆதரவுக் கட்சிகளும் பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படுகிறது.

 

நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மை எண் 272-ல் கிட்டிவிடும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் ஜெயித்தது – அதில் பாஜக-வின் கணக்கு 240. ‘இண்டி’ கூட்டணி கைப்பற்றியது 232 இடங்கள் – அதில் காங்கிரஸுக்கு வந்தது 99. மற்றவர்கள் 18.

 

வெறும் கூட்டல் கழித்தல் தெரிந்தால் போதும், வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி, அந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் முறை, அவர்கள் தேர்ந்தெடுத்த நரேந்திர மோடி பிரதமர் ஆவதுதான் இயற்கை என்று அனைவருக்கும் புரிய. ஆனால் இண்டி கூட்டணித் தலைவர்கள் இந்த நிதர்சனத்தை ஏற்காமல், துளியும் வெட்கமில்லாமல் வில்லத்தனமாக, பித்துக்குளித்தனமாகப் பேசுகிறார்கள்.

 

நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

 

இந்த லோக் சபா தேர்தலில் தே. ஜ. கூட்டணி 400 இடங்களில் ஜெயிக்கக் குறி வைத்தது.  ஆனால் அது எட்டியது 293. அதுவும் 21 இடங்கள் கூடுதலான பெரும்பான்மைதான். ஆனால் இண்டி கூட்டணிக் கட்சிகளுக்குத் தங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. அகில இந்தியத் தேர்தல் கள நிலவரம் அப்படி இருந்தது.

 

இண்டி கூட்டணித் தலைவர்கள் வெளிப்பேச்சுக்கு “நாங்கள் குறைந்தது 295 இடங்களில் ஜெயிப்போம்” என்று சொன்னார்கள். ராகுல் காந்தி அப்படிப் பேசினார். மற்ற இண்டி கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசித்துவிட்டு,  காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயும் அதைச் சொன்னார்.

 

‘295 சீட்டுகளில் ஜெயிப்போம்’ என்று ராகுல் காந்தி கூறியது, அவர் மனமறிந்த பொய். இதை அமேதி தொகுதியின் கதை தெளிவாகக் காண்பிக்கிறது.  

 

தொடர்ச்சியாக மூன்று லோக் சபா தேர்தல்களில் அமேதி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்வானவர் ராகுல் காந்தி.  அதில் கடைசி முறையான 2014-ம் வருடத்தில், அவர் பாஜக-வின் ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்தார். ஆனால் அடுத்த தேர்தலில், 2019-ம் ஆண்டில், ராகுல் காந்தி அதே ஸ்மிருதி இரானியிடம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார்.

 

இப்போது நடந்த 2024 தேர்தலில், தான் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்டால் ஸ்மிருதி இரானியிடம் மீண்டும் தோற்போம், அது மானக் கேடு, என்று நினைத்த ராகுல் காந்தி, இந்த முறை அமேதியில் போட்டியிடவில்லை. ஆகையால் ராகுலுக்கு மாற்றாக வேறு யாரோ ஒரு சாதா காங்கிரஸ் வேட்பாளர் அந்தத் தொகுதியில் இப்போது பலி ஆடாக வைத்து இறக்கப் பட்டார். ஆனால் இந்த முறை அந்த சதா வேட்பாளர் அமேதியில் பாஜக-வின் ஸ்மிருதி இரானியை ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வென்று விட்டார்.  

 

தனது சொந்தத் தொகுதியில், தான் மூன்று முறை  வென்ற அமேதி தொகுதியில், இந்த முறை ஜெயிப்போம் என்ற நம்பிக்கை ராகுல் காந்திக்கு இருந்ததில்லை என்பது தெளிவு.

 

இன்னொரு விஷயத்தையும் பார்க்கவேண்டும்.

 

“இண்டி கூட்டணி குறைந்த பட்சம் 295 தொகுதிகளில் வெல்லும்” என்று ராகுல் காந்தி சொன்னபோது, அதில் அமேதி தொகுதி சேர்த்தியா இல்லையா? ஆம் என்றால் ராகுல் காந்தியே அங்கு நின்று ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்து வஞ்சம் தீரத்திருப்பாரே? இல்லை, அந்த 295-ல் அமேதி சேர்த்தி இல்லை என்றால், தனது சொந்தத் தொகுதி மக்களின் மனநிலையைக் கூட சரியாக அறியாத ராகுல் காந்தி, எப்படி 295-ஐ நம்பி இருப்பார்?   

 

இண்டி கூட்டணி எதிர்பார்த்த தோல்விக்கு, அவர்களே பின்னால் சொல்லிக் கொள்ள நொண்டிச் சாக்குகள் தேவை என்பதற்காக, அந்தக் கூட்டணித் தலைவர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது சந்தேகம் எழுப்பி வந்தார்கள்.

 

அடுத்ததாக, வாக்கு எண்ணிக்கை தினத்துக்கு மூன்று நாட்கள் முன்னர், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தடாலடிப் புளுகாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ”அமித் ஷா மாவட்ட கலெக்டர்களை தொலைபேசியில் அழைத்து வருகிறார். இதுவரை  150 கலெக்டர்களிடம் பேசிவிட்டார். அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் இணங்காமல், அரசியல் சட்டப்படிதான் நடக்கவேண்டும். அவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள்” என்றது அவர் அறிக்கை.

 

தாங்கள் எதிர்பார்த்த பெரிய தோல்விக்கு, ‘அரசு மிரட்டியது. வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் முறைகேட்டுக்கு உடன்பட்டு இண்டி கூட்டணியைத் தோற்கச் செய்துவிட்டார்கள்’ என்று பின்னால் விளக்கம் சொல்ல இப்படி ஒரு மலிவான செய்கையில் ஈடுபட்டது காங்கிரஸ்.

 

வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்பாக, காங்கிரஸ் தலைவர் கார்கே அரசுப் பணியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: “யாரிடமும் அச்சப் படாதீர்கள். அரசியல் சட்டத்திற்குப் புறம்பான வழிகளுக்கு அடிபணியாதீர்கள்.  வாக்கு எண்ணும் தினத்தில் முறையாகப் பணி செய்யுங்கள்” என்று சொன்னார் அவர். அதே குயுக்தி, அதே மலிவான தந்திரம், அதே கெட்ட நோக்கம்.

 

தேர்தல் முடிவுகள் வந்தவுடன், பெரும்பான்மை இடங்களைப் பெறாத இண்டி கூட்டணியின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி – 99 தொகுதிகளை மட்டும் வென்ற ஒரு கட்சியின் தலைவர் – “இந்தத் தேர்தலின் முக்கியச் செய்தி என்னவென்றால், ‘நாட்டை ஆள்வதற்கு நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வேண்டாம்’ என்று மக்கள் தெளிவாக ஏகோபித்துச் சொல்லிவிட்டனர்” என்று கூசாமல் பிதற்றினார்.   “மக்கள் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றி விட்டனர்” என்றும் அவர் உளறினார்.

 

ராகுல் காந்திக்குச் சளைக்காத மு. க. ஸ்டாலின், “அரசியல் சாசனத்தை மாற்றிவிடலாம் என்று நினைத்த பாஜக-வுக்கு எதிரான மக்களுடைய தீர்ப்பு இது” என்று பேசினார்.

 

இண்டி கூட்டணியிடம் ஆட்சிப் பொறுப்பைத் தர விரும்பாத மக்களை ராகுல் காந்தியும் மு. க. ஸ்டாலினும் பெரிய மனதுடன் மன்னித்து விட்டார்கள் போலும்!

 

          ஒரு சீரியஸான விஷயம்: அரசியல் என்பது ஒரு கோர விளையாட்டு, அதன் முக்கிய ஆடுகளம் தேர்தல். இன்னொரு விஷயம்: கல்வியின்மையால், ஏழ்மையால், இந்திய மக்கள் சில அரசியல் விஷயங்களில் வெகுளியானவர்கள். இந்த இரண்டும் கலக்கும்போது, தேர்தல்களில் வெற்றி தோல்விகள் யாருக்குக் கிடைக்கும், எந்த அளவு கிடைக்கும் என்று பல சமயங்களில் நாம் சரியாகக் கணிக்க முடியாது. இதைப் புரிந்துகொண்டு, வந்திருக்கும் தேர்தல் முடிவுகளை ஏற்று, மக்களுக்காக, நாட்டு நலனுக்காக, அயராது உழைப்பவர் நரேந்திர மோடி என்னும் மாமனிதர்.

 

பாஜக என்ற கட்டுக் கோப்பான கட்சி, நரேந்திர மோடியின் மதிநுட்பமான தலைமை, இரண்டும் இந்தியாவுக்கு வரப் பிரசாதம்.

 

தனது உயர்ந்த இலக்கிலிருந்து பார்வை விலகாமல், இண்டி கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் கையாளக் கூடியவர் மோடி. இதில் அவருக்கு உறுதுணையாக இருப்பது பாஜக-வின் அடுத்த கட்டத் தலைவர்கள். பாஜக-வின் கூட்டணிக் கட்சிகளை அணைத்து, தேவையானால் அவர்களை சமாளிக்கவும் வல்லவர் மோடியும் அவரது சகாக்களும். சீனாவையும் பாகிஸ்தானையும் சாதுரியமாகச் சமாளித்தவர் அல்லவா மோடி!

 

இப்போது நாம் செய்யக் கூடியது: தேச நலனைப் போற்றுவோம். மீண்டும் பிரதமர் ஆகும் மோடியை வாழ்த்துவோம்.

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai