Sunday, 29 October 2023

நீட் விலக்குக் கோரிக்கை: மு. க. ஸ்டாலினின் புதிய கூத்து!


-- ஆர். வி. ஆர்

 

அண்மையில் சென்னை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி திரும்புவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் இருந்தார். அவரை வழி அனுப்ப விமான நிலையம் வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜனாதிபதியிடம் ஒரு ஸ்டண்ட் அடித்துவிட்டுத் தான் வந்த பிரதான வேலை முடிந்ததில் திருப்தி அடைந்தார்.

 

அது என்ன ஸ்டண்ட்? தற்போதைய தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தான் எழுதிய புதிய கடிதத்தை ஸ்டாலின் நேரடியாக ஜனாதிபதியின் கையில் கொடுத்தார். அதுதான் அந்தக் கூத்து.

 

ஜனாதிபதி என்ன செய்வார்? நாம் பிளாட்பாரத்தில் நடக்கும்போது நம் கையில் திணிக்காத குறையாகக் கொடுக்கப்படும் விளம்பரத் தாள்களை நாம் பாவமே என்று வாங்குவது போல் அவரும் வாங்கி இருப்பார். மத்திய அரசு அநேகமாக அதைப் பைலில் தூங்க வைக்கும். வேறு நடவடிக்கை எடுக்க அந்தக் கடிதத்தில் துளியும் சாரமில்லை. 

 

மருத்துவச் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு சட்டம் விலக்குத் தரவேண்டும் என்பது திமுக-வின் நிலைப்பாடு. அந்தப் பைத்தியக்கார நிலையை, அந்தப் பித்தலாட்டத்தை, நமது மாநில மக்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் எண்ணுகிறார்.

 

ஒரு அப்பட்டமான சுயநலம் மிக்க மோசடிக் கோரிக்கையை இவ்வளவு வெளிப்படையாக வேறு எந்தத் தலைவர் அடிக்கடி மக்கள் முன் வைத்து மத்திய அரசிடமும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார்? இதைத் திமுக செய்கிறது, ஸ்டாலின் இதற்குக் குரல் கொடுக்கிறார், என்றால் என்ன அர்த்தம்?

 

தமிழர்கள் உட்பட, சாதாரண இந்தியர்கள் அப்பாவிகள்.  அரசின் ஒரு திட்டம் அல்லது செயல்பாடு நாட்டை முன்னெடுத்துச் செல்லுமா அதன் வழியாகத் தங்களின்  வாழ்வு முன்னேறுமா – என்பது பற்றித் தெளிவான புரிதல் இல்லாதவர்கள், அதனால் அதில் அக்கறை இல்லாதவர்கள். அவர்களின் ஏழ்மையும் வாழ்க்கை நிலையும் அப்படித்தான் அவர்களை வைத்திருக்கும்.  

 

நீட் தேர்வின் அவசியம், நீட் விலக்குக் கோரிக்கையின் ஓட்டைகள் ஆகியவை பற்றித் தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் அறிய முடியாது, அவர்கள் கவலைப்பட இடமில்லை. ஆகவே ஸ்டாலின் இப்படித்தான் நினைப்பார்: ‘நாம் நீட் விலக்கு கேட்பதால் சாதாரண மக்களிடம் நமக்குக் கெட்ட பெயர் வராது. ஒருவேளை நாம் இதில் வெற்றி பெற்றால் நமக்கு வரும் நன்மைகளும் அந்த மக்களுக்குப் புலப்படாது. இப்போதைக்கு இந்த நீட் விலக்கு விளையாட்டை நாம் தொடர்ந்து நடத்துவோம்!'  

.

நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் யாரை பாதிக்கிறது, எதனால் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்று ஸ்டாலின் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சொல்லி இருக்கிறார் – அது அவரின் வழக்கமான புளுகு தான்.

 

“நீட் தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதால் தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழியே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது” என்று தன் கடிதத்தில் ஆரம்பிக்கிறார் ஸ்டாலின். அதாவது, நீட் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கை நடைபெற்றால் “ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்” பயன் அடைவார்கள், இப்போது நீட் தேர்வு வந்ததால் அத்தகைய மாணவர்கள் பயன் அடையவில்லை என்பதுதான் ஸ்டாலினின் ஒரே பாயிண்ட்.  இது போலியான பேச்சு, பஞ்சரான வாதம்.

 

தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகள் மற்றும் அவர்களுக்குத் துணை நிற்கும் அரசியல் தலைவர்கள் நீட் தேர்வு வந்ததால் எவ்வளவு பிரும்மாண்ட நஷ்டத்தை அடைந்தார்கள் என்று திமுக-வுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். மத்திய அரசுக்கும் தெரியும்.

 

ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் முக்கியமாக என்ன சொல்லவில்லை என்பதைப் பாருங்கள்.

 

‘நீட் தேர்வு வினாக்கள் மருத்துவச் சேர்க்கைக்கு சம்பந்தமே இல்லாதவை’ என்று ஸ்டாலின் சொல்லவில்லை.

 

‘நீட் தேர்வு சொத்தையாக, தரம் குறைந்ததாக இருக்கிறது, அதை விட தமிழகத்தின் பிளஸ் 2 தேர்வு மதிப்பானது, தரம் உயர்ந்தது’ என்றும் அவர் சொல்லவில்லை.

 

‘நீட் தேர்வு முறையை விட, தமிழகத்தில் முன்பிருந்த பிளஸ் 2 வழியிலான மருத்துவச் சேர்க்கை வெளிப்படையாக, பாரபட்சமின்றி அமைந்தது’ என்றும் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் பெருமைப் பட்டுக் கொள்ளவில்லை.    

 

நீட் தேர்வு முறையில் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடி மக்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்காகக் தமிழக மருத்துவச் சேர்க்கைகளில் இட ஒதுக்கீடு கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகையால் ஸ்டாலின் எப்போதும் பேசும் சமூக நீதிக்கு நீட்டால் நமது மாநிலத்தில் குறைவில்லை. 


வசதி குறைந்தவர்கள் மற்றும் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களும் நீட் எழுதித் தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கை பெற்ற விவரங்கள் வருடா வருடம் பத்திரிகைகளில் போட்டோவுடன் வருகின்றன. படிப்பில் நாட்டமுள்ள ஏழைகள் நலனும் நீட் முறையில் காக்கப்படுவது தெரிகிறது. 


இதுதான் நீட் தேர்வின் வெளிப்படையான நல்ல விளைவென்பதால், ஸ்டாலின் பொதுமக்களிடம் சொல்ல விரும்பாத, சொல்ல முடியாத, ஏதோ கசமுசா விஷயம் தானே திமுக-வின் நீட் எதிர்ப்புக்குக் காரணம்?

 

இன்னொரு விஷயம். நன்கு நிர்வகிக்கப் படும் நீட் தேர்வு முறை வந்த பின், பெரிய மனிதர்களின் சிபாரிசைப் பாக்கெட்டில் வைத்திருக்கும் தகுதிக் குறைவான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் படுவதில்லை. இந்த உண்மையைச் சில நாட்கள் முன்பு திமுக பிரமுகர் தயாநிதி மாறன் ஒரு பொது மேடையில் தன்னையும் அறியாமல் அம்பலப் படுத்தினார். அவர் பேசியது இது:

 

“என் மகளைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் சமயத்தில் நான் அவளை ஸ்டேட் போர்டு பள்ளியில் சேர்க்க நினைத்தேன். என் மனைவியோ சி.பி.எஸ்.சி. பாடத் திட்ட பள்ளியை விரும்பினார் – பின்னாளில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை எளிதாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில். அப்போது நான் சொன்னேன்: ‘நீ ஏம்மா கவலைப் படற? எங்க கலைஞர் எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! எங்கப்பா எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! எங்க மாமா ஸ்டாலின் எத்தனை பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்காரு! நானே மந்திரியா இருந்தபோது எவ்வளவு பேருக்கு சீட் வாங்கிக் குடுத்திருக்கேன்! என்  பொண்ணுக்கு நான் வாங்கித் தர மாட்டேனா? என்று  மார் தட்டி நின்றேன். அதன்படி என் மகளை ஸ்டேட் போர்டு பள்ளியில் சேர்த்தேன். 2017 வந்தது. அப்போது என் மகள் பிளஸ் 2 முடித்தார். வந்தது பார் நீட்! என்னாச்சு? என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை.......”

 


முன்பு தமிழகம் கடைப்பிடித்த பிளஸ் 2 வழி மருத்துவச் சேர்க்கை முறையில் கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் எத்தனையோ நபர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்கச் செய்தார்கள் என்றால், அப்படி மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தாங்கிப் பிடித்த ஏழைகளா, பின் தங்கிய வகுப்பினரா? அனேகமாக இருக்க முடியாது.

 

முன்பு பிளஸ் 2 வழியில் சேர்க்கை நடந்த போது ஏழைகள் மற்றும் பின் தங்கிய வகுப்பினர் பாதிக்கப் படவில்லை என்று ஸ்டாலின் ஜனாதிபதியிடம் தெரிவித்தது உண்மை என்றால் – அதாவது அத்தகைய மாணவர்களுக்கு முன்பு சுலபமாக மருத்துவச் சேர்க்கை கிடைத்தது என்றால் – அப்போது திமுக பிரமுகர்கள் சீட் “வாங்கிக் கொடுத்த” எக்கச்சக்கமான மாணவர்கள் ஏழைகள் அல்ல என்றுதானே அர்த்தம் – அவர்களில்  பின்தங்கிய வகுப்பினர் இருந்தாலும்?

 

திமுக-வின் நீட் விலக்குக் கோரிக்கையில் ஒரு சத்தும் இல்லை, ஆனால் வண்டி வண்டியாக மர்மம் இருக்கிறது என்பதை தயாநிதி மாறனும் இப்போது உளறிக் கொட்டி விட்டார். ஆனாலும் ஸ்டாலின் கவலைப் பட மாட்டார். அதற்கெல்லாம் சிறிதாவது ஒருவரிடம் வெட்க உணர்வு இருக்க வேண்டுமே?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Monday, 16 October 2023

ஜாதியில் ஜோதியைக் காணும் அரசியல்


-- ஆர். வி. ஆர்

 

அநேக அரசியல் கட்சிகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள் இவை:

 

“காங்கிரஸ் தலைமை ஏற்கும் மத்திய ஆட்சியில் நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.”

 

“பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப் பட்டவர்கள் தங்களின் மக்கள் தொகை விகிதப்படி சலுகைகள் பெற ஏதுவாக, 50-சதவிகித இட ஒதுக்கீட்டு உச்சவரம்பானது சட்டத்தின் மூலம் நீக்கப்படும்”

 

 

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “நமது நாட்டின் ஏழை மக்களை உயர்த்திவிடும்  ஒரு முற்போக்கான பலம் வாய்ந்த நடவடிக்கை, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு” என்றார்.  

 

     ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்காக ஏன் நமது அரசியல்வாதிகள் குரல் கொடுக்கிறார்கள்? அவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களா? ஆம், அப்படித்தான்.  

 

நாம் பிறந்த ஜாதி இரண்டு வகைகளில் நம்முடன் தொடர்புடையது. ஒன்று இயல்பானது. அதாவது,  நம் ஒவ்வொருவருக்கும் சுய-ஜாதிப் பிரக்ஞை என்பது இயற்கையாக உண்டு. நமது ஜாதி மனிதர்களோடு – அதுவும் ஒரே பொருளாதார நிலையில் உள்ள மனிதர்களோடு – இருக்கும்போது நமக்குள் ஒரு நெருக்கத்தை நாம் ஒரே ஜாதியினராய் உணரலாம். ஜாதி நம் மக்களுக்கு இதமான, அவர்கள் விரும்புகிற, ஒரு அடையாளம்.

 

ஜாதியுடனான நமது இரண்டாவது வகைத் தொடர்பு சற்று சிக்கலானது. இந்தத் தொடர்பில் ஒவ்வொருவரும் ஜாதியைத் தாண்டி ஒரு தனி மனிதன் என்றிருப்பது நல்லது. நமது ஜாதியோடு நாம் ஒன்றி இருப்பதா, தள்ளி இருப்பதா அல்லது வேறுபட்டு நிற்பதா என்றும் நாம் பார்க்க வேண்டிய தருணங்கள் இருக்கும். ஒரு குடும்பத்தில் உள்ளது போல், ஒரு குழுவில் சரியும் இருக்கும், தப்பும் இருக்கும்.  அது போலத்தான் ஜாதிகளுக்குள்ளும்.  

 

நமது ஜாதியுடன் நமக்குள்ள இரண்டாவது  வகைத் தொடர்பில்தான் அரசியல்வாதிகள் எளிதாக நுழைகிறார்கள். குறிப்பாக, பின் தங்கிய அல்லது பிற்படுத்தப் பட்ட ஜாதி மக்களைப் பார்த்து, “உங்கள் ஜாதிக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள்.  உங்களைக் கைதூக்கி விட்டு, உங்களுக்கு அதிக விகிதத்தில் கல்விச் சேர்க்கைகள், அரசுப் பணியிடங்கள்  கிடைக்க நாங்கள் வழி செய்வோம்” என்று அந்த அப்பாவி மக்களிடம் தொடர்ந்து பேசி அவர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்து ஆட்சிக்கு வருவதுதான் அரசியல்வாதிகளின் குறி.

 

இத்தகைய அரசியல்வாதிகளைப் பற்றி, அவர்கள் குறி வைக்கும் அப்பாவி மக்கள் என்ன நினைப்பார்கள், என்ன நினைக்க முடியும்? சிலர் சந்தேகம் இல்லாமல் நம்புவார்கள். சிலருக்கு இந்த விஷயமே புரியாது. இன்னும் சிலர், ‘நமது ஜாதிக்குத் துணை நிற்போம், நம் ஜாதி மக்கள் அனைவரையும் முன்னேற்றுவோம் என்கிறார்களே அரசியல்வாதிகள்? அந்த அரசியல்வாதிகளில் நமது ஜாதித் தலைவர்களும் இருக்கிறார்களே? அவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள் என்று நாம் நினைக்கலாமா? அப்படி நினைத்தால் நமது ஜாதி மக்களுக்கு எதிராகவும் நமது ஜாதி நன்மைக்கு விரோதமாகவும் நாம் செயல்படுவதாக ஆகி விடுமோ? பேசாமல் இந்த அரசியல்வாதிகளை நாமும் வரவேற்போம்’ என்று எண்ணுவார்கள்.   

 

அறியாமையும் ஏழ்மையும் நிறைந்த நம் நாட்டில் அநேகமாக அனைத்து ஜாதி மக்களும் அப்பாவி மக்கள் தான். அவர்களைப் பெரிய பெரிய குழுக்களாக வைத்து ஏய்க்கும் ஒரு கருவியாகத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நமது அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. 

 

நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சட்டம் நான்கு வித ஜாதிகளில் வைத்துப் பார்க்கிறது.  ஒன்று, “எஸ்.சி” (SC) எனப்படும் பட்டியல் ஜாதிகள். இரண்டு, “எஸ்.டி” (ST) எனப்படும் பட்டியல் பழங்குடியினர் அதாவது,   அவர்களின் பல ஜாதிவகையினர். மூன்று, “ஓபிசி” (OBC) எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்கள் பல்வேறு குறிப்பிட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்கள். நான்கு, இந்த மூன்றிலும் வராத பிற ஜாதிகள் – பேச்சு வழக்கில் இவை ‘முன்னேறிய ஜாதிகள்’ என்று சொல்லப் படுகின்றன. இவற்றில் முதல் மூன்று மட்டும் (எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி)  இட ஒதுக்கீட்டுப் பயன் பெறும் ஜாதிகள். அரசியல் கட்சிகள் இந்த மூன்று வித ஜாதிகளில்தான் ஜோதியை ஓட்டு வடிவில் காண்கின்றன.

 

கல்விச் சேர்க்கைகளிலும் அரசுப் பணி இடங்களிலும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் ஜாதிகளாக மத்திய அரசு நாடு முழுவதற்கும் அறிவித்திருக்கும் ஜாதிகள் எத்தனை தெரியுமா? மாநிலங்கள் வாரியாகப் பிரித்துச் சொல்லப் பட்டிருக்கும் அவற்றைக் கூட்டிப் பார்த்தால் எஸ்.சி ஜாதிகள் 1,248, எஸ்.டி ஜாதிகள் 781, ஓபிசி ஜாதிகள் 2,479 என்பதாக அவை ஒட்டு மொத்தமாக 4,508 என்று இன்டர்நெட்டில் தெரிகிறது. இவற்றில் சில ஜாதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் உள்ளதாகும். இருந்தாலும் மத்திய அரசின் இட ஒதுக்கீடிட்டில் இடம் பெறும் ஜாதிகள் நிச்சயம் ஆயிரக் கணக்கில் உண்டு.

 

மாநில அரசுகளும் அவற்றுக்கான பணியிடங்கள், மாநிலங்களின் கீழ் வரும் கல்விச் சேர்க்கைகள், என்பதற்காகத் தனியாக ஓபிசி ஜாதிகளை அங்கீகரிக்கும் மத்திய அரசுப் பட்டியலைவிட கூடக் குறைய இதில் ஜாதிகள் இருக்கும்.  

 

சரி, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் போட்ட தீர்மானத்தின் அர்த்தம்தான் என்ன?

 

அந்தத் தீர்மானத்தின் படி, காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றால், இந்தியாவில் உள்ள மனிதர்கள் அனைவரும் என்ன ஜாதியில் எத்தனை பேர்கள் உள்ளார்கள் என்பதை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மத்திய அரசு குறிப்பெடுக்கும். அதைத் தொடர்ந்து,  மத்திய அரசின் கீழ் வரும் கல்விச் சேர்க்கை இடங்கள், மத்திய அரசுப் பணி இடங்கள் ஆகியவற்றை ஜாதி வாரியாகக் கூறு போட்டு, இட ஒதுக்கீட்டுப் பயன் பெறும் ஆயிரக் கணக்கான ஜாதிகளுக்கு அந்தப் புதிய மத்திய அரசு வழங்கும்.  

 

இட ஒதுக்கீட்டுக்கான ஜாதியினர் நமது மக்கள் தொகையில் கூட்டாக 75 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் என்று ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால், அதே சதவிகிதத்தில் கல்விச் சேர்க்கை இடங்களையும், அரசுப் பணி இடங்களையும் அந்த ஜாதி மக்களுக்கு அவர்களின் ஜாதி எண்ணிக்கை விகிதங்களின் படி இட ஒதுக்கீடாகத் தர வேண்டும் என்று சொல்கிறது காங்கிரஸ். இதைச் செய்து முடிக்க, தற்போது இட ஒதுக்கீட்டு இடங்களுக்காக சுப்ரீம் கோர்ட் விதித்திருக்கும் 50 சதவிகித உச்ச வரம்பானது புதுச் சட்டம் மூலமாக நீக்கப் படும், இதெல்லாம் சமூக நீதி என்பதும் காங்கிரஸின் நிலை. இப்படித்தான் மற்ற பல அரசியல் கட்சிகளும் சொல்ல வருகின்றன. இட ஒதுக்கீட்டை இப்படி உயர்த்தினால் சுப்ரீம் கோர்ட் ஏற்குமா என்பது வேறு விஷயம்.

 

இந்தியாவில் தொழில்துறை முன்னேற்றம் போதுமானதாக இல்லை. அதனால் நம் நாட்டினர் மேலே படிக்கவும் வேலை தேடியும் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் என்று பல அயல் நாடுகளுக்குப் போகிறார்கள். அந்த நாடுகளில் நம் நாட்டினருக்கு என்று இட ஒதுக்கீடு எதுவும் இல்லாமல்தான் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதே போல் நம் நாட்டிலும் நமது இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமலே அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் நமது பொருளாதாரத்தை நமக்கு வளர்க்கத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்?

 

காங்கிரஸ் கட்சியின் - அது போன்று குரல் கொடுக்கும் பிற கட்சிகளின் - குறுக்கு சிந்தனையைப் பாருங்கள். நாட்டிலுள்ள 75 அல்லது 80 சதவிகித இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் படியாக நாட்டின் தொழில்துறையை வளர்க்கவும் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மாட்டார்களாம். அதற்கான நேர்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு, திட்டங்கள், திறன், திராணி, தலைமை எதுவும் இவர்களிடம் இல்லையாம். பதவியில் சுகித்தபடி இவர்களால் முடிவது என்னவாம்? யானைப் பசிக்கு சோளப்  பொறியாக துளித் துளி எண்ணிக்கையில் உள்ள அரசுப் பணியிடங்களை நாட்டின் 75 அல்லது 80 சதவிகித ஜனங்களை அழைத்து "இந்தா உன் ஜாதிக்கும் உண்டு" என்று அங்கும் இங்கும் கொஞ்சம் தெளித்து விடுவார்களாம். இதற்கு சமூகநீதி என்று பெயராம். 

 

முன்பு தேச விடுதலைக்கும் நாட்டு நலனுக்கும் பாடு பட்ட காங்கிரஸ் கட்சி, இப்படித் தீர்மானம் போட்டு மக்களை ஏய்த்துப் பிழைக்க நினைக்கும் தலைமையிடம் சிக்கியிருக்க வேண்டாமே?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Friday, 6 October 2023

பாஜக-அதிமுக உறவு ஏன் முறிந்தது?

 

-- ஆர். வி. ஆர்

 

பாஜக-வுடன் இருந்த தோழமை உறவை முறித்துக் கொண்டு, தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக, அதிமுக அறிவித்து விட்டது.  "இரண்டு கோடி தொண்டர்களின் முடிவுப்படி கூட்டணியில் இருந்து விலகினோம்" என்று பாப்பாக்களும் நம்பாத ஒரு காரணத்தைச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. எது உண்மைக் காரணம்?

 

திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம்.ஜி.ஆர், அந்தக் கட்சியை எதிர்ப்பதற்காகத் தொடங்கிய புதுக் கட்சி அதிமுக. அன்றிலிருந்து, இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று சட்டசபைத் தேர்தலில் வீழ்த்தி மாநிலத்தில் தாங்கள் ஆட்சியில் அமர முயற்சிப்பதுதான் அவைகளின் பிரதான அரசியல். 

 

மாறி மாறி திமுக-வும் அதிமுக-வும் மாநில ஆட்சியைப் பிடித்து, தமிழகத்தின் மக்களை ஏழைகளாக, இயலாதவர்களாக வைத்திருந்து, தாங்கள் பலவிதத்தில் செழிப்பதும் அரசு கஜானாவை அம்போ என்று விடுவதும் சொல்லி மாளாது, நமக்கு முழுவதும் புலப்படாது.

 

திமுக-வும் அதிமுக-வும் எத்தகைய கட்சிகளைத் தோழமைக் கட்சிகளாக, கூட்டணிக் கட்சிகளாக வைத்துக் கொள்ளும்? மாநிலத்தில் ஆட்சித் தலைமை ஏற்க ஆசைப்படாமல், அந்த அளவிற்கு அவற்றுக்கென்று மக்கள் சக்தி இல்லாமல் செயல்படும் சிறிய கட்சிகள்தான் அத்தகைய உறவுக்கு லாயக்கு. அந்த மாதிரி சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டால், பெரிய கட்சியான திமுக-வுக்கோ அதிமுக-வுக்கோ மாநிலத்தில் நிறைய எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும், அந்தச் சிறிய கட்சிகளும் கூட்டணி பலத்தில் சில தொகுதிகளில் ஜெயித்து எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகலாம் என்ற பரஸ்பர நன்மைகள்  உண்டு.

 

பாஜக-வோடு என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இருந்தால், பாஜக-வின் ஓட்டுக்களும் சேர்ந்து அதிமுக அதிக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி. தொகுதிகளில் வெல்லலாம். குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஜெயித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க அதிமுக-வுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். இதுதான் - இந்த மட்டும்தான் - நிலவரம் என்றிருந்தால், பாஜக-வுடனான தோழமை உறவை அதிமுக முறித்துக் கொள்ளாது.  ஆனால் இப்போதய நிலவரம் வேறு.  அதுதான் அதிமுக-வுக்கு வெளியில் சொல்ல முடியாத பிரச்சனை.

 

இப்போதைய நிலவரம் என்ன, முன்பிலிருந்து அது எப்படி வேறானது?

 

 அண்ணாமலை தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழக பாஜக, மாநிலத்தில் வெறும் சிறிய கட்சியாக இருக்க விரும்பவில்லை. ஒரு பெரிய கட்சியை அண்டி நின்று அந்தப் பெரிய கட்சியின் தயவில் சில எம்.எல்.ஏ  மற்றும் எம்.பி தொகுதிகளில் ஜெயிக்கும் வாய்ப்பையும் தாண்டி அரசியல் செய்ய விரும்புகிறது, மக்கள் பணி ஆற்ற நினைக்கிறது தமிழக பாஜக. அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்கான துடிப்பும் உத்வேகமும் அசாதாரண தலைமைப் பண்பும் அண்ணாமலையிடம் பளிச் என்று தென்படுகின்றன. மாநிலத்தில் இருக்கும் அர்ப்பணிப்புள்ள அடுத்த கட்டத் தலைவர்களும் அக் கட்சியின் பலம்.

 

அண்ணாமலை தற்போது மாநிலத்தில் நடத்தும் “என் மண், என் மக்கள்” நடைப்  பயணத்தில் தாமாகக் கூடும் மக்கள் கூட்டத்தையும் அவருக்காக மக்கள் ஆர்ப்பரிப்பதையும் பாருங்கள். பாஜக-வைத் தமிழகத்தில் பெரிதாக்க நினைக்கும் அண்ணாமலையின் முனைப்பையும் அதன் ஆரம்ப வெற்றியையும் அவரது நடைப் பயணக் காட்சிகள்  பறை சாற்றும்.  இதனால் அதிமுக-விற்கு நேர்வது ஒன்றுதான். கிலி.

 

பாஜக வட இந்தியக் கட்சி, அது தமிழ் நாட்டில் பெரிதாக வளர முடியாது, நம் நிழலில் பணிவான ஒரு சிறிய கட்சியாக மட்டும் பாஜக  இருக்கும் என்று நினைத்த அதிமுக-விற்கு, பாஜக-வின் புதிய மாநிலத் தலைமையும் அதன் வீரியமும் அது ஈர்க்கும் மக்கள் சக்தியும் பேரிடி. காலப் போக்கில் திமுக-விற்கு மாற்றாக மக்கள் பாஜக-வைத் தான் முதலில் நினைக்கலாம், அப்போது என்ன ஆகும்? அதிமுக தமிழக பாஜக-வைப் பெரிய கட்சியாகப் பார்க்க வேண்டிவரும். அது நடந்தால், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவும் நாற்காலிப் பயன்களும் கலையும், அவரைச் சுற்றி இருக்கும் அடுத்த கட்டத் தலைவர்களும் பெரு நஷ்டத்தை ஏற்க வேண்டும். இதற்கெல்லாமா அதிமுக கட்சியை நடத்துகிறார்கள் எடப்பாடியும் அவரது சகாக்களும்?

 

வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக-வோடு கூட்டணி வைத்தால், பாஜக-விற்கு சில தொகுதிகள் அதிகம் கொடுத்து அவற்றில் அநேக தொகுதிகளில் பாஜக-வும் ஜெயித்துவிட்டால், என்ன ஆகும் என்று அதிமுக இப்படி நினைக்கும். அந்த வெற்றியே பாஜக-வை அரசியல் களத்தில் இன்னும் பெரிதாக அடையாளம் காட்டும், தமிழகத்தில் பாஜக-வின் மக்கள் செல்வாக்கு இன்னும் சில படிகள் உயரும், பிறகு இன்னும் எளிதாக அது பெரிய கட்சியாக வளர முற்படும், பிறகு 2026-ல் வரப் போகும் தமிழக சட்டசபைத் தேர்தலின் போது வளர்ச்சி பெற்ற பாஜக, அதிமுக-விடம் சீட் கேட்குமா, அல்லது அதிமுக பாஜக-விடம் சீட் கேட்க வேண்டி இருக்குமா? இதெல்லாம் நடக்காமல் தடுக்க, அதிமுக தலைமையால் இப்போது சிந்திக்க முடிவது இதுதான்: பாஜக-வுடனான கூட்டணி உறவை உதறி விட்டால், தனித்து விடப்பட்ட பாஜக-வால் தமிழகத்தின் லோக் சபா சீட்டுக்களை அதிக அளவில் ஜெயிக்க முடியாது. அந்த அளவிலாவது  பாஜக-வின் வளர்ச்சி தமிழகத்தில் தடைப் படட்டும்.  

 

பாஜக-வுடன் கூட்டணி வைக்கா விட்டால், திமுக-வை எதிர்த்து அதிக லோக் சபா மற்றும் சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க முடியுமா, தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சியாவது அமைக்க முடியுமா? அது மிகக் கடினம் என்று எடப்பாடியே உணர்ந்திருக்கிறார். “இந்தக் கூட்டணி முறிந்ததால் திமுக-வுக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறுமா என்றால், அது வாக்காளர்களின் கையில்தான் உள்ளது” என்று அவரே சொல்லிவிட்டார். பாஜக-வின் அருகே இருந்து தங்கள் கட்சி தேய்வதை விட, நேராகத் திமுக-விடம் தோற்பதை அதிமுக ஏற்றுக் கொள்ளுமோ என்னவோ!

 

தமிழகத்தில் பாஜக வளர வளர, அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளில் யார் மற்றவரிடம் இருந்து விலகுவதாக முதலில் அறிவிப்பது என்பது இரு கட்சிகளுக்கும் பிரச்சனையாக இருந்தது. அதிமுக-வுடன் கூட்டணியில் தொடர்ந்தால் பாஜக-வின் வளர்ச்சி தடைப்படும். மக்கள் சக்தியைப் பெரிதாக ஈர்க்கும் அண்ணாமலை தலைவராக இருக்கும்போது, மத்தியில் மோடி ஆட்சி செய்யும் போது, பாஜக அதிமுக-வுடனான உறவை முறித்துக் கொள்வதாக இப்போது அறிவிக்காவிட்டால் பின்னர் இதற்கு ஒரு தோதான தருணம் வருமா என்பது சந்தேகம். பாஜக-வே இப்படி யோசிக்கையில், அதிமுக முந்திக் கொண்டு கூட்டணி உறவைத் தூண்டித்து விட்டது. 


இந்தப் பிரிவினால் பாஜக-விற்கு பெரிய நஷ்டம் வராது, தமிழக மக்களைத் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்பதுதான் அந்தக் கட்சியின் எண்ணமாகவும் இருக்கும். பல முக்கிய சந்தர்ப்பங்களில் வெற்றி நமக்கு நூறு சதவிகிதம் நிச்சயம் என்றிருக்காது. நமது திறமை, தன்னம்பிக்கை, துணிவு ஆகியவைதான் நமக்குக் கடைசி வழிகாட்டியாக இருக்கும்.

  

திமுக-வும் காங்கிரசும் இப்போது ஒரே கூட்டணியில் இருக்கின்றன. ஏதோ ஒன்றிரண்டு தொகுதிகளைக் கூடுதலாக அழுது அடம் பிடித்து திமுக-விடமிருந்து வாங்கிவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. “சரி, இந்தா. சாமர்த்தாக இரு” என்று திமுக-வும் ஒன்றிரண்டு தொகுதிகளை அதிகமாகக் காங்கிரசுக்கு கிள்ளிக் கொடுக்கலாம்.  ஆனால், “ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த நாங்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் பெரிதாக வளர்ப்போம். மாநிலத்தில் ஆட்சியையும் பிடிப்போம்” என்று பொதுவெளியில் பேசும் தெம்பான, மக்களை ஈர்க்கும் ஒரு தலைவர் தமிழக காங்கிரசுக்குக் கிடைத்தால், அப்போது காங்கிரசும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப் படும்.  

 

சரி, பாஜக-விடம் உறவைத் துண்டித்த அதிமுக, ஏதோ ஒரு கட்டத்தில் திமுக-விடமிருந்து சற்று கவுரமான எம்.எல்.ஏ, எம்.பி தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சேராதா? திமுக அதை நிச்சயம் வரவேற்காதா? இப்போதுதான் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் இல்லையே?

 

வளர்ந்து வரும் பாஜக-வை எதிர்த்துத்  தமிழகத்தில்  ஆட்சியைக் கூட்டாகத் தக்கவைக்க, தங்களுக்குள்ளான புதிய கூட்டணியை ஒரு யுக்தியாக திமுக-வும் அதிமுக-வும் பார்க்கலாம் – அது நடப்பது, தமிழகத்தில் பாஜக அடையும் வளர்ச்சியின் அளவைப் பொறுத்தது. அப்படியான ஒரு கூட்டணி ஏற்பட்டால் அதற்கு அவர்கள் நியாயம் சொல்வதும் எளிது.

 

 வாஜ்பாய் காலத்தை விட இந்தியாவில் இப்போது சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. மதத்தால் நாட்டைப் பிளவு செய்கிறது பாஜக. இதை எதிர்ப்பதற்காகத் திமுக-வும் அதிமுக-வும் ஒரே அணியில் சேர்க்கிறோம்” என்று அப்போது ஒரே போடாக இரண்டு கட்சிகளும் ஒரு கூட்டறிக்கை கொடுத்தால் போயிற்று. ஆட்சிக்காக, அதன் பலன்களுக்காக, திராவிடம் எதையும் பேசும், என்னவும் செய்யுமே?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai