- ஆர்.வி.ஆர்
ராஜீவ்
காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகள் மீதம் ஆறு பேர்
ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தார்கள். சுப்ரீம் கோர்ட்டின்
சமீபத்திய முடிவினால் அவர்களின் ஆயுள் தண்டனை பூர்த்தியானதாகக் கருதப்பட்டு அவர்கள் சிறையிலிருந்து வெளி வந்திருக்கிறார்கள்.
நம்
நாட்டின் ஒரு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் அமலாக்குவதற்காகப் போட்ட உத்திரவினால் இந்த
ஆறு கொலையாளிகளும் விடுதலை ஆகி இருக்கிறார்கள். அதுதான் நமது அரசியல் சட்டப் பிரிவு
161.
பிரிவு
161 இப்படிச் சொல்கிறது: “ஒரு மாநில அதிகாரத்தின் கீழ்
வரும் சட்டத்தை மீறுவதால் தண்டனை பெற்ற எந்தக் குற்றவாளிக்கும் மன்னிப்பு வழங்கவோ,
அவரது தண்டனைக் காலத்தைக் குறைக்கவோ அந்த மாநில கவர்னருக்கு அதிகாரம் உண்டு.” ராஜீவ் காந்தியின் கொலையாளிகளும்
அந்த வகைக் குற்றவாளிகள்.
இந்த
விஷயத்தில் கவர்னரின் அதிகாரத்தைப் பற்றி சுப்ரீம் கோர்ட் முன்பே சில தீர்ப்புகளில் விளக்கி இருக்கிறது. அதாவது: அப்படியான
குற்றவாளிக்குத் தண்டனைக் குறைப்பு செய்ய மாநில அரசு ஆலோசனை அளித்தால், கவர்னர் அதற்குக்
கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அந்த ஆலோசனைக்கு மாறாக கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க
முடியாது.
2018-ம்
ஆண்டு எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அமைச்சரவை, ராஜீவ் காந்தியின் ஏழு கொலையாளிகளின்
ஆயுள் தண்டனையைக் குறைத்து அவர்களை முன்கூட்டி விடுவிக்க வேண்டும் என்று கவர்னருக்கு
ஆலோசனை தந்தது. அந்த ஆலோசனையை ஏற்றுக் கையெழுத்திட தமிழக கவர்னருக்குக் கூச்சம் இருந்திருக்க
வேண்டும். அதனாலோ என்னவோ கவர்னர் தமிழக அமைச்சரவையின் ஆலோசனையைத் தன் பரிசீலனையில் வைத்தபடி
இருந்தார். அவர் ஒரு முடிவும் எடுக்கவில்லை.
இரண்டரை
வருடங்கள் சென்றன. பேரறிவாளன் என்ற ஒரு குற்றவாளி கவர்னரின் தாமதத்தை முதலில் சுப்ரீம்
கோர்ட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். 161-வது பிரிவுப்படி கவர்னர் செயல்படவில்லை
என்பதால் சுப்ரீம் கோர்ட் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன் படுத்தி பேரறிவாளனின் உடனடி
விடுதலைக்கு அப்போது வழி செய்தது. தொடர்ந்து மீதமுள்ள ஆறு கொலையாளிகளும் மனுப்போட,
சுப்ரீம் கோர்ட் அதே காரணங்கள் சொல்லி அந்த ஆறு பேரும் விடுதலை பெறுமாறு உத்திரவு பிறப்பித்து
விட்டது. சரி, இதற்கு மேல் விஷயம் இருக்கிறதா? இருக்கிறது. அந்த ஏழு கொலையாளிகளை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்திருக்க வேண்டாம் என்று நாம் கருதலாம்.
பொதுவாகவே
ஒரு கவர்னர், மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி தனது பணிகளில் செயல்படவேண்டும் என்று
நமது அரசியல் சட்டம் விதிக்கிறது – பிரிவு 163 அப்படிச் சொல்கிறது. அதன்படி, ஒரு குற்றவாளிக்கு
மன்னிப்போ தண்டனைக் குறைப்போ அளிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இன்னொரு பிரிவின் கீழ் வழங்கப் பட்டாலும், அந்த அதிகாரமும்
மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே செயலாக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெளிவாக்கி இருக்கிறது.
ஆனால் இந்த மாதிரியான விஷயத்தில், இரண்டு சமயங்களில்
ஒரு கவர்னர் மாநில அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்காமல் அதற்கு மாறாகத் தனது எண்ணப்படி
முடிவெடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு (5 நீதிபதிகள் கொண்டது)
ஏற்கனவே தீர்ப்பு அளித்திருக்கிறது [ஆர்வம் உள்ளவர்கள்
பார்க்க: M.P. Special Police Establishment v. State of M.P – 2 (2004) 8
SCC 788].
சுப்ரீம்
கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வே சுட்டிக் காட்டிய அந்த இரண்டு விதிவிலக்குகள் என்ன?
முதலாவது:
மாநில அமைச்சரவையின் முடிவில் ‘உள் விருப்பு-வெறுப்பின்
தோற்றம்’ (apparent bias) இருந்தால், கவர்னர் அதற்குக் கட்டுப்பட வேண்டாம்.
இரண்டாவது:
அமைச்சரவையின் முடிவு ‘சிந்தனை அற்றதாக’ இருந்தால் கவர்னர் அதற்குக் கட்டுப் பட மாட்டார்
என்றும் சுப்ரீம் கோர்ட் சொல்கிறது. சுப்ரீம்
கோர்ட் பயன் படுத்திய ‘Irrational’ என்ற ஆங்கிலச் சொல்தான்
‘சிந்தனை அற்றதாக’ என்று இங்கு தமிழில் தரப் படுகிறது. அந்த ஆங்கில வார்த்தைக்கு சட்டத்தில் விசேஷ அர்த்தம்
உண்டு. அந்த வார்த்தைக்கு (‘Irrational’) தனது தீர்ப்பில் அர்த்தமும் விளக்கமும் கொடுத்தவர்
‘லார்ட் டிப்லாக்’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலேய நீதிபதி. அவர் எழுதியதைத் தமிழில் இப்படித் தரலாம்:
புத்திமிக்க
மனிதன் கவனத்துடன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கிற போது, அவர் எட்ட இயலாத ஒரு முடிவு
‘சிந்தனையற்றது’ என்றாகும். மேலும் அத்தகைய
முடிவானது, லாஜிக் அல்லது பொதுவில் வழங்கும்
தார்மீகப் பண்புகளை மூர்க்கமாக மீறி எடுக்கப்படும்
ஒரு முடிவாகவும் இருக்கும்.
(Irrational
decision: “So outrageous in its defiance of logic or of
accepted moral standards that no sensible person who had applied his mind to
the question to be decided could have arrived at it” – Council of Civil Service Unions v Minister for the Civil
Service [1985] AC 374)
‘Irrational’ என்ற சொல்லிற்கு (தமிழில்: ‘சிந்தனையற்ற’)
சட்ட உலகில் இது மிகவும் பிரசித்தியான விளக்கம்.
அந்த
ஆங்கிலேய நீதிபதியின் கூற்றுப் படி, ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்ட ஏழு குற்றவாளிகளின்
ஆயுள் தண்டனையைக் குறைத்து அவர்களை விடுதலை
செய்யுமாறு எடப்படி அரசு தமிழக கவர்னருக்கு அளித்த ஆலோசனை ‘சிந்தனையற்றது’ – Irrational
– என்று ஆகும். அப்படியான ஒரு முடிவுக்கு கவர்னர் வர முடியும். வர வேண்டும்
என்பதுதான் சரி. ஏன், கோர்ட்டே அந்த ஆலோசனை
சிந்தனையற்றது என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும். இது எப்படி என்று பார்க்கலாம்.
1991-ம் வருடம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி ஒரு மனித வெடிகுண்டால்
– தாணு என்ற அந்நிய நாட்டுப் பெண்ணால், ஒரு கூட்டு சதியின் விளைவால் – படுகொலை செய்யப்பட்டார். கொலையுண்டது இந்தியாவின் முன்னாள்
பிரதமர். ஒரு பிரதமராக அவரும் அவரது அரசும் எடுத்த சில முடிவுகளுக்காக, இலங்கைப் பிரச்சினையில்
அவர் கொண்டிருந்த நிலைக்காக, ஒரு கூட்டம் அவரைத் தீர்த்துக் கட்ட நினைத்தது.
“எங்கள் விருப்பத்திற்கு எதிராக உங்கள் நாடு முடிவெடுத்தால், அல்லது முயற்சித்தால், உங்கள் பிரதமரே காலி” என்று அந்தக் கூட்டம் இந்தியாவிற்கு விட்ட எச்சரிக்கைதான் ராஜீவ் காந்தியின் படுகொலை. அது நமது நாட்டின் இறையாண்மைக்கே விடப்பட்ட அச்சுறுத்தல். அப்படியானவர்களை இந்தியா ஒடுக்க வேண்டுமா இல்லையா? குறைந்த பட்சம், அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முதலில் அளித்த தண்டனையாவது நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?
நாலு
பேருக்கு மரண தண்டனை, மூணு பேருக்கு ஆயுள் தண்டனை என்று முதலில் சுப்ரீம் கோர்ட் விதித்தது.
பிறகு ஏதோ காரணங்கள் சொல்லப்பட்டு ஏழு கொலைக் குற்றவாளிகளுக்கும் தண்டனைகள் குறைக்கப்
பட்டு அவர்கள் ஒவ்வொருவராக வெளி வருவது, என்பதெல்லாம் ‘புத்திமிக்க’ ஒருவர் நினைத்துப்
பார்க்கும் செயலா? அப்படி நினைக்கிறவர் மாநிலத்தின் முதல்வராகவோ மந்திரியாகவோ இருந்தால், அதற்கான முடிவை
அவர்கள் எடுப்பது – அந்த ஆங்கிலேய நீதிபதி தெளிவுபடுத்திய படி – “லாஜிக் அல்லது பொதுவில் வழங்கும் தார்மீகப் பண்புகளை மூர்க்கமாக
மீறுவதாகும்”. அத்தகைய ஆலோசனைகளை நளினி விஷயத்தில் (தூக்கு தண்டனையிலிருந்து ஆயுள்
தண்டனையாகக் குறைக்க) கவர்னருக்கு முதலில் அளித்த கருணாநிதி அரசும், பின்னர் எல்லாக்
குற்றவாளிகள் விஷயத்திலும் (ஆயுள் தண்டனையைக் குறைத்து உடனடி விடுதலை அளிக்க) கவர்னருக்கு ஆலோசனை தந்த எடப்பாடி அரசும் எடுத்த முடிவுகள் ‘சிந்தனையற்றது’
(Irrational) என்பது தெளிவாகிறது.
இப்போது,
சுப்ரீம் கோர்ட்டின் 5-நீதிபதி பெஞ்ச் அளித்த தீரப்பை நினைத்துப் பாருங்கள். ஒரு மாநில
அமைச்சரவை கவர்னருக்கு அளிக்கும் ஆலோசனை சிந்தனையற்றதாக இருந்தால், அது கவர்னரைக் கட்டுப்
படுத்தாது என்று அந்த அரசியல் சாசன பெஞ்ச் விளக்கம் கொடுத்து விட்டது. ஆகையால் எடப்பாடி அமைச்சரவை அளித்த ஆலோசனையைத் தமிழக
கவர்னர் ஏற்காமல் தொடர்ந்து பரிசீலனையில் வைத்திருந்தாலும், அல்லது ஜனாதிபதிக்கு அதை
அனுப்பி இருந்தாலும், அந்த ஆலோசனை ‘சிந்தனையற்றது’ என்பதால் அது கவர்னரைக் கட்டுப்
படுத்தாது. ஆகையால் ஏழு குற்றவாளிகளையும் சுப்ரீம் கோர்ட் விடுவிக்காமல் இருந்திருக்கலாம்.
சுப்ரீம் கோர்ட் அப்படியான சட்ட நிலையை எடுத்திருந்தால்,
நமது நீதி பரிபாலனத்திற்கு இன்னும் பெருமை சேர்ந்திருக்கும்.
இந்தியாவில்
மனித வெடிகுண்டு மூலம் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்
படுவது ராஜீவ் காந்தி படுகொலையில்தான் முதலில் நிகழ்ந்தது. அந்த பயங்கரவாதத்தில் அவரோடு
பதினான்கு அப்பாவி மனிதர்களும் பலியானார்கள். அவர்களில் ஒன்பது பேர் போலீஸ்காரர்கள். உயிர் இழந்தவர்களில்
தமிழ் நாட்டுக்காரர்கள் அதிகம். நமது மண்ணில்
நமது முன்னாள் பிரதமரை பயங்கரவாதத்தினால் கொன்றவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு செய்து
அவர்களை முன் கூட்டியே விடுதலை செய்ய கவர்னருக்கு ஒரு அமைச்சரவை ஆலோசனை சொல்வது, ‘சிந்தனையற்றது’,
ஆகையால் கவர்னர் அந்த ஆலோசனைகக்குக் கட்டுப்பட்டு அதன்படி செயல்பட வேண்டாம் என்பதில்
சந்தேகம் இல்லை. ஆனால் துரதிர்ஷ்டமாக சுப்ரீம் கோர்ட்டின் பார்வை இப்படி அமையவில்லை.
சதி
செய்து நமது பிரதமரை – முன்னாளோ இன்னாளோ – கொடூரமாகத் தீர்த்துக் கட்டிய பாதகர்களுக்கு சுப்ரீம்
கோர்ட் விடுதலை அளிக்காமல் இருந்தால் நிஜத்தில் என்ன ஆகும்? ஸ்ரீபெரும்புதூரில் படுகொலையான
அப்பாவி இந்தியர்களின் உயிர்களை நாம் மதிப்பதாக இருக்கும். இன்னும் முக்கியமாக, உலகளவில்
நம் நாட்டின் மரியாதையையும், நாட்டு மக்களின் மனதில் ஆறுதலான பெருமிதத்தையும் கோர்ட்
உறுதி செய்திருக்கும். இந்த விளைவுக்காக மட்டும்
சுப்ரீம் கோர்ட் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை
செய்திருக்கக் கூடாது. தன் நெஞ்சைத் தொட்டுக் கேட்டால் இந்த விடைகள்தான் ஒவ்வொரு இந்தியனுக்கும்
கிடைக்கும்.
சரி,
இப்படியும் நினைத்துப் பார்ப்போம். ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை
கவர்னருக்கு அளித்த ஆலோசனையில் நியாயம் இருக்கும், அது சிந்தனை மிக்கதாக இருக்கலாம்
என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஒரு முன்னாள் பிரதமரின் கொலைகாரர்களுக்கே
இந்தச் சலுகை உண்டென்றால், வரைமுறை இல்லாமல் எந்தக் கொலைகாரனையும் ஒரு அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யக் கேட்க முடியுமே?
அதற்கு எந்த கவர்னரும் மறுப்பு சொல்லாமல் கையெழுத்துப் போடவேண்டுமே? அதுதான் நமது சட்டமா?
உதாரணத்திற்கு, 2008-ல் மும்பைக்கு வந்து 166
பேரை சுட்டுக் கொன்ற அஜ்மல் கசாப்-புக்கும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்
பட்டு, பின்னர் அதுவும் இல்லாமல் அவன் வெளியே வர மஹாராஷ்டிர அமைச்சரவை கவர்னருக்கு
ஆலோசனை சொல்லலாமா? சொன்னால் அதையும் கவர்னர் ஏற்றுக் கையெழுத்துப் போட வேண்டுமா? அந்த
ஆலோசனையைக் கூட ‘சிந்தனையற்ற’ ஆலோசனை, ஆகையால்
அதைக் கவர்னர் ஏற்க வேண்டியதில்லை என்று சட்டம்
பார்க்காதா?
இல்லை,
இதுதான் நாட்டின் உண்மை நிலவரமா? மும்பையில் படுகொலைகள் செய்த கசாப்-பிற்கு தண்டனைக்
குறைப்பு அளித்து விடுதலையும் கொடுத்தால், அதற்குத் துணை போகும் கட்சி மஹாராஷ்டிராவில்
மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. ஆனால் நாட்டின் முன்னாள் பிரதமரே தமிழக மண்ணில் கொடூரமாகக்
கொல்லப்பட்டாலும், அவரோடு பதினான்கு அப்பாவிகள் பலியானாலும், குற்றவாளிகள் அனைவருக்கும்
முதலில் தண்டனைக் குறைப்பு, பின்னர் விடுதலை என்று வெட்கம் இல்லாமல் ஏற்பாடு செய்த
திராவிடக் கட்சிகள் மீண்டும் மீண்டும் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு
வரலாம்.
எல்லாவற்றையும்
விடுங்கள். கடைசியாக, ஒரு கற்பனை செய்து பார்க்கலாம். ஒரு பயங்கரவாதி ஏதாவது ஹை கோர்ட்
கட்டிடத்தின் மீது குண்டு போட்டுப் பத்து நீதிபதிகளை அநியாயமாகக் கொலை செய்துவிடுகிறான் என்று
வைத்துக் கொள்ளுங்கள். அது நடக்க வேண்டாம், வெறும் கற்பனையாகவே இருக்கட்டும். ஆனால் அப்படி நடந்தால், அந்தக் குற்றத்திற்காகப்
பிடிபட்டு தண்டிக்கப் படும் கொலையாளி எவனும் ஒரு மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்
கவர்னரின் கட்டாய ஒப்புதலுடன் வெளிவரமாட்டான்
என்று நாம் நம்புவோம். இந்தக் கற்பனை நிகழ்விலாவது
மாநில அமைச்சரவையின் பாசமிகு ஆதரவைப் பெறும் ஒரு பயங்கரவாதி தண்டனைக் குறைப்பு பெற்று
தப்பிக்காமல் இருக்கட்டும். ஒரு வகையில் இது தேசாபிமான நல்ல நினைப்புதானே?
* * * * *
Copyright © R. Veera
Raghavan 2022