-- ஆர். வி. ஆர்
நமது நாட்டின் வெள்ளைப் பணம்,
கருப்புப் பணம், லஞ்சம், ஊழல், ஆகியவற்றின்
விஸ்தீரணத்தை ஒன்று, இரண்டு, மூன்று
என்று வரிசைப் படுத்தும் பாடல் இது.
'பணவிளையாடல்' என்ற திரைப்படத்தில் அவ்வையார் இதைப் பாடியதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்! ‘திருவிளையாடலி’ல்
கே. பி. சுந்தராம்பாள் பாடிய ‘ஒன்றானவன்’ பாட்டின் அதே மெட்டுதான்.
|
ஒன்றானவன், கணக்கில் இரண்டானவன் -
உருவான ஊழலில் மூன்றானவன்!
|
அஞ்சாத லஞ்சத்தில் நான்கானவன் -
ஏதேதோ-நிதி என ஐந்தானவன்!
|
'கான்ட்ராக்ட்' பெர்சன்டேஜில் ஆறானவன்
-
'கட்சித்தாவல்' கலைகளில் ஏழானவன்!
|
'சுவிட்சர்லேண்ட்' ஓடிப்போய் எட்டானவன்
-
நவக்கிரக நிலத்திலும் பட்டா பெறுவானவன்!
|
பத்தானவன் பத்தும் செய்வானவன் -
பெங்களூரு சிறையிலும் காண்பானவன்!
|
முடிவானவன் எதையும் முடிப்பானவன் -
முன்னைக்கும் பின்னைக்கும் எஜமான் அவன்!
|
கட்சிகள் அனைத்திலும் நின்றானவன்-
அவை ஒன்றுதான் என்று சொன்னான் அவன்!
|
சாராய ஆலைகள் கொண்டானவன் -
பெண் தலைவர்களையும் தந்தானவன்!
|
ஸ்பெக்ட்ரமானவன் நிலக் கரியானவன்!
காமன்வெல்த் போட்டிகளில் பங்கு கண்டவன்!
|
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்!
தலைவர் மூச்சாக நின்றானவன்!
|
* * * * *
Copyright © R. Veera Raghavan 2020