அரசியலில்
அறுபது ஆண்டுகள் நீடித்து, இடையில் ஐந்து முறை மாநில முதல்வராகவும் பொறுப்பேற்று,
தமிழ் நாட்டில் ஒரு தனி முத்திரை பதித்திருக்கிறார் மறைந்த திரு. மு. கருணாநிதி.
சலியாத
உழைப்பு, ஆழ்ந்த மதியூகம், மனோதிடம், பேச்சிலும் எழுத்திலும் திறமை, தன்னோடு
சேர்ந்தவர்களை அணைத்து தன் பலத்தைப் பெருக்குதல் என்ற அவரது தனிப்பட்ட
சிறப்புகளைப் பார்த்து அனைவரும் கற்கலாம். ஆனால் அவரது வேறு குணங்களும் கவனிக்க
வேண்டியவை, இன்னும் முக்கியமானவை.
கருணாநிதி தனக்கும் தன் பெயருக்கும் குவித்த அபார வெற்றிக்கு, குறைந்த பட்சம் தொண்ணூறு சதவிகித மார்க்குகள்
தரலாம். தமிழக முன்னேற்றத்துக்கும் பொதுவாழ்வின் தூய்மைக்கும் அவர்
அளித்த பங்கிற்கு அதிக பட்சம் பத்து சதவிகித மார்க்குகள் போடலாம். ஏன் இந்த வேறுபாடு?
விவரம்
அறிந்த மக்கள் மிகக் குறைவாகவும் பாமர மக்கள் – படித்த பாமர மக்களும் சேர்த்து
– மிக அதிகமாகவும் உள்ள ஜனநாயக நாடு இந்தியா. பாமர மக்களைக் கவராமல் எந்த
ஒரு அரசியல்வாதியும் இந்திய அரசியலில் தலை எடுக்க முடியாது, பெரிய தலைவனாக வளர முடியாது.
அவர்கள் மனதை வெல்ல, முதலில் அவர்களுக்கு
புரியும் மொழியில், தொனியில் அவர்களோடு பேச வேண்டும். பின்னர் இரண்டில் ஒன்றைச்
செய்யவேண்டும். அதாவது, நசுக்கும் வாழ்க்கைத் தரத்திலிருந்து தாங்கள் விடுபட்டு
முன்னேற ஒரு தலைவன் பாதை போடுகிறான் என்கிற நம்பிக்கை மக்களுக்குள்
எழச் செய்யவேண்டும். இது கடினமானது. பரிசுத்தமான உள்ளம், மக்களுக்காக
அர்ப்பணிப்பு, நெஞ்சுரம், தொலை நோக்கு சிந்தனை, பல்துறை அறிஞர்களையும் ஈர்க்கும்
சக்தி, அரசியல் கெட்டிக்காரத்தனம் ஆகிய குணங்கள் ஒரு அரசியல் தலைவனிடம் அமைந்தால்தான் இது சாத்தியம். எந்த
பாமர தேசத்திலும் இந்த குணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு தலைவனிடம் சாதாரணமாக
அமைவதில்லை. பாமர மக்களை கவர்வதற்காக இந்தக்
கடினமான காரியத்தை ஒரு அரசியல்வாதி செய்ய முடியவில்லையா? அவனுக்கு வேறு ஒரு வழி உண்டு. அது என்னவென்றால்:
தித்திக்க
தித்திக்க பேசு, மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடு, மொழி வெறியை ஊட்டு,
வேற்று மொழிக்காரர்களிடம் மக்கள் பலியாகாமல் அவர்களைக் காக்கும் காவல் தெய்வம் நமது
தலைவர்தான் என்று அவர்களை நம்ப வை, தன் காலில் நிற்கும் எண்ணத்தை வளர்க்காமல்
தலைவனின் அரவணைப்பில் உட்கார்ந்திருப்பதே உன்னதம் என்று மக்களை நினைக்கச்
செய். இவ்வாறு செய்தால், பாமர மக்கள் தங்களது முன்னேற்றத்தை எண்ணிப் பார்ப்பதைவிட
தலைவனுக்காக உருகுவதில் மயங்கிக் கிடப்பார்கள் அல்லவா? இந்த வழியின் பலன்களை நன்கு உணர்ந்து அதில்
வித்தகம் செய்து பாமர மக்களிடம் வாகை சூடியவர் கருணாநிதி. மேலோட்டமாகப்
பார்த்தால் இந்த வழி எளிதாகத் தோன்றலாம். ஆனால் அசாத்தியமான மதிநுட்பமும், மனோதத்துவ
அறிவும் சில விசேஷ தனிமனித குணங்களும் இயற்கையாகவே ஒரு தலைவனுக்கு அமைந்தால் தான்
இந்த தந்திரங்கள் அவனுக்குப் புலப்படும், கைகூடும். கருணாநிதி இதில் நிகரற்றவராக விளங்கினார்.
அடுக்குமொழித் தமிழ் பேசி சாதாரண மக்களைக் கவர்ந்த திராவிட அரசியல் தலைவர்கள், மக்கள் வேறு
மொழியைக் கற்றால் தங்கள் பிடியிலிருந்து நழுவிப் போவார்களோ என்ற அச்சத்தால் இந்தி
எதிர்ப்பைச் செய்து தமிழைக் காப்பது போல் தங்கள் மந்தைகளைக் காத்துக் கொண்டார்கள். இந்தியப் பிரதேசங்களில் சமஸ்கிருதம் வெகுவாகப் பரவி இருந்த முற்காலத்தில் யாரும்
சமஸ்கிருத எதிர்ப்பு செய்து தமிழைப் பாதுகாக்கவில்லை. பின்னர்
வெள்ளைக்காரர் ஆட்சியில் நுழைந்த ஆங்கிலம் இங்கு நிலைத்தாலும் தமிழை வதம் செய்யவில்லை. தற்காலத்தில் இந்தியை
ஒரு கூடுதல் மொழியாகப் பயில்வதால் மட்டும் தமிழ் தேய்ந்துவிடாது - தமிழர்களுக்குத்தான் வேலை வாய்ப்பும் வளர்ச்சியும் அதிகம் கிடைக்கும்.
இருந்தாலும் இந்தி திணிப்பு என்ற மாய பூதத்தால் மக்களை அச்சுறுத்தி வளம் கண்டார் கருணாநிதி.
முக்கிய
திராவிட கட்சிகளுக்கு இந்தி எதிர்ப்பினால் பின்னாளில் ஒரு குரூரமான அரசியல்
லாபமும் கிடைத்தது. இந்தக் கட்சிகள் தமிழ் நாட்டில் நிறைய எம்.பி-க்களை
பெற்றுக்கொண்டு, டெல்லித் தலைமை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து மத்திய
அரசில் கொழு கொழுவென்ற மந்திரி பதவிகள் பெற்றார்கள். அதன் மூலம் என்னென்னவோ பெற்றார்கள்.
ஆனால் டெல்லிக் கட்சிகளின் தலைவர்கள் வட நாட்டில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும்
தமிழ்நாட்டுக்கு வந்தால் மக்களிடம் பேசி பெயர் வாங்குவது எளிதல்ல என்று
ஆக்கிவிட்டார்கள். வடநாட்டுத் தலைவர்களுக்கு தமிழ் தெரியாது. தமிழ் நாட்டு
மக்களுக்கு இந்தி புரியாது. ஆகையால் வட நாட்டுத் தலைவர்கள் தமிழ் நாட்டில் வளர ஆசைப்படக் கூட முடியாது. திராவிட கட்சித் தலைவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆகி எப்படியெல்லாமோ
வளரலாம். பகுத் அச்சா! வாழ்க தமிழ்!
பாமர மக்களை மதி மயக்கி, அதில் கிடைத்த சக்தியால் கட்சியின் பிற தலைவர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் தொடர்பில் வந்த மனிதர்களை 'இவர் எப்போது எந்த விதத்தில் நம்மைப் பழி வாங்குவாரோ? ஒதுங்கி சமாளிப்போம் அல்லது ஒத்து ஊதி முன்னேறுவோம்' என்று நினைக்க வைத்து கட்சியையும் ஆட்சியையும் நடத்தியவர் கருணாநிதி. அதற்குப் போட்டியாக வந்து, பணியாதவர்களையும் படியாதவர்களையும் முகத்தில் அறைந்து கட்சியிலும் ஆட்சியிலும் அமர்ந்திருந்தவர் ஜெயலலிதா. நமது அசட்டு ஜனநாயகத்தில் இரண்டும் சாத்தியம் ஆனது.

ஜெயலலிதா,
அடிமைகள் பின்தொடர அரசியல் செய்தார். கருணாநிதி, துதிபாடிகள் சூழ அரசியல் செய்தார்.
ஒருவரை ஒருவர் காரசாரமாக எதிர்த்தார்கள். அரசாங்க செல்வத்தையும் மக்களின்
வளர்ச்சியையும் கரையானாக அரிக்கும் ஊழலை இருவரும் பெரிதாகக் கண்டு
கொள்ளவில்லை. ஏன் என்று நாம்தான் ஊகித்துக் கொள்ள வேண்டும்.
தன்
கட்சியினர் மீது கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது மட்டும்
ஆதாரங்களுடன் ஊழல் வழக்குப் போடுவதை நாம் எதிர்க்கக் கூடாது. ஜெயலலிதாவிற்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி துவங்கிய சொத்துக் குவிப்பு வழக்கை
கருணாநிதி அரசு கையிலெடுத்து நகர்த்தியது. அது சரிதான், நல்லதுதான்.
இருந்தாலும் அதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு. எதிரியை அரசாங்க செலவில் சட்ட
ரீதியாகவே தண்டிக்க எந்தத் தலைவருக்கு கசக்கும்? கருணாநிதி இதில் இமாலய
வெற்றி பெற்றார். இதன் மூலம் கருணாநிதி
என்ன சொல்ல வந்தார்? ’ஜெயலலிதாவின் ஆட்சியின்
போதுதான் தமிழ்நாட்டில் ஊழல் நடந்தது, வழக்கு போட்டு ஊழலை நிரூபிக்க வைத்தோம். ஆனால் 1969-ல் ஆரம்பித்து ஐந்து முறை, பத்தொன்பது வருடங்கள், நான் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்தேனே, அப்போதெல்லாம்
காமராஜர் ஆட்சியைப் போல துளியும் ஊழல் வாசனை இல்லாமல் என் அரசு இயங்கியது’
என்றுதானே மௌனக் காட்சி கொடுத்தார்? இந்தக் காட்சி உங்களுக்கு சிரிப்பைத் தந்தால் நீங்கள்
விவரம் தெரிந்தவர்தான்.
கருணாநிதியின் பெரும் வெற்றிகள் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் கோலோச்சியது, பதிமூன்று முறை எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து தேர்வானது மற்றும் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தது. அவரைக் கடைசியாக எடைபோட வேண்டும் என்றால் ஒரு நெடுநாள் அரசியல்வாதியாக, நீண்டநாள் முதல்வராக, பொதுவாழ்வின் தூய்மைக்கும் நன்னெறிகளுக்கும், மாநிலத்தின் நல்லாட்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் முட்டுக் கொடுத்தாரா, முன்னுதாரணமாக இருந்தாரா என்றுதான் பார்க்கவேண்டும். ஏழை நாடான இந்தியாவின் அரசியல் களத்திலும் ஆட்சிப் பொறுப்பிலும் பிரதானமாக இருந்த ஒருவரின் சிறப்புகளுக்கு அவைதான் அளவுகோல். காமராஜர் அப்படித்தான் மதிப்பிடப் பட்டார். அதை விட்டு, மறைந்தவரின் நாவன்மை, மொழிப் பற்று, கவிதைத் திறன், நகைச்சுவை உணர்வு, சினிமா வசனங்கள், ஞாபக சக்தி, கடின உழைப்பு, தனது கட்சிக்காரர்களிடம் காட்டிய தோழமை, அவர் வள்ளுவர் கோட்டம் எழுப்பியது, மணி மண்டபங்கள் கட்டியது போன்ற விஷயங்களை வைத்து அவரை உயர்வாக மதிப்பிட்டு, ஒப்புக்காக அவரின் ஒரு சில அரசியல் நடவடிக்கைகளையும் சேர்த்துச் சொல்வது, நமது நேர்மையற்ற மழுங்கிய சிந்தனைக்கு உதாரணமாக இருக்கும். அதைத்தான் இப்போது பலரும் செய்கிறார்கள். காங்கிரஸ்காரர்களும் இதற்கு விதி விலக்கல்ல.

காமராஜர்
திமுக-வையும் அதிமுக-வையும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று நறுக்கென்று
சொன்னார். இன்றைய காங்கிரஸ்காரர்கள் எப்போதும் காமராஜரையும்
போற்றுகிறார்கள், கருணாநிதியையும் புகழ்கிறார்கள். சோனியா காந்தியோ, ’‘கருணாநிதி
எனக்கு தந்தை போன்றவர்” என்று இப்போது காரண காரியமாக கசிகிறார். கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவரிடம் சோனியா
இதைச் சொல்லி இருந்தால், “அப்படி என்றால் நீங்கள் கனிமொழிக்கு அக்கா! டெல்லியில் உங்கள் தங்கையை நன்றாகக்
கவனித்துக் கொள்ளுங்கள்!” என்று கருணாநிதி அப்போதும் ஒரு படி மேல் எழும்புவார். எதுவானாலும்,
காமராஜர் தலைமை தாங்கிய தமிழக காங்கிரஸ்காரர்களை கருணாநிதி கட்சியிடமே எம்.எல்.ஏ சீட்டுகளுக்கு
ஏங்க வைத்தது, கருணாநிதியின் தனிப்பட்ட வெற்றிகளில் ஓன்று.
ஊழலின் தணலில் இந்தியர்கள் வெந்து தவிக்கிறார்கள் என்பது சட்டம் பார்க்க முடியாத ஊரறிந்த
உண்மை. அறுபது ஆண்டுகள் தொடர்ந்த கருணாநிதியின் அரசியல் வாழ்வில், ஐந்து முறை
தமிழக முதல்வராக பதவி வகித்த வருடங்களில், 'ஊழலை ஒழித்து மக்களை மீட்பேன்'
என்று அவர் இதய சுத்தியாக முழங்கியதில்லை, முனகியதும் இல்லை. ஊழலுக்கு
பெயர் போன தமிழகத்தில், இந்த வினோதத்தை நாம் மறக்கக் கூடாது. இதன் காரணத்தைப்
புரிந்து கொள்ளவேண்டும். புரிகிற விஷயம்தான்.
இறந்தவர்களைப்
பற்றி இடித்துப் பேசுவது நல்ல பண்பல்ல என்பது தனி மனிதர்களுக்குத்தான் பொருந்தும்.
பொது வாழ்வில் இருந்தவர்களுக்கு - அதுவும் ஒரு அரசாங்கத்தை பலமுறை நடத்தி மக்களின்
தலைவிதியை தீர்மானம் செய்தவர்களுக்கு - இது பொருந்தாது. அவர்கள் மறைந்த பின் பொதுவாழ்வில்
அவர்களின் பங்களிப்பை நேர்மையாக மதிப்பீடு
செய்வது ஒரு விமரிசகனின் கடமை அல்லவா?
தமிழக
அரசியல் களத்தில் கருணாநிதி பெற்ற வெற்றிகளை வைத்து, அவர்போல் ஒரு தலைவர்
இனி தோன்ற முடியாது என்று பலரும் சொல்கிறார்கள். அது உண்மை. இன்னொரு கருணாநிதி இனி உருவாகாத பெருமையை
அவரே வைத்துக் கொள்ளட்டும். இன்னொரு கருணாநிதி
வராத அதிர்ஷ்டத்தை
தமிழகம் அனுபவிக்கட்டும்.
* *
* * *
Copyright © R. Veera Raghavan 2018