Sunday, 31 December 2017

டி.டி.வி. தினகரன் - பத்தாயிரத்தில் ஒருவன்!


ஆயிரத்தில் ஒருவன் யார்'இது போல் ஒரு மனிதரை சாதாரணமாக பாக்க முடியாது' என்று ஒருவரை பாராட்ட வேண்டுமானால், அவரை ஆயிரத்தில் ஒருவன், அல்லது ஒருத்தி, என்று சொல்லலாம்ஆர்.கே.நகர் இடைத்  தேர்தலில் பெரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான டி.டி.வி.தினகரனை 'பத்தாயிரத்தில் ஒருவன்' என்று தாராளமாக விவரிக்கலாம் அல்லவா? இது பழியா பாராட்டா என்று அவருக்கு துல்லியமாகத் தெரியும். எதையும் எண்ணி எண்ணி பார்ப்பவர் ஆயிற்றே! (ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது ஓட்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது  என்ற செய்தி உங்களுக்கு தானாக ஞாபகம் வருகிறதா? அதை ஒதுக்கி விட்டு மேலே படிக்கவும்). ஆனால் அவர் வந்த வழியில் அவர்  ஒரு  சிறு பிள்ளைதான்.  ஜாம்பவான்களும் உண்டு. 

தினகரன் என்ற சிறு பிள்ளையின் சக்தியே அசாத்தியமானது. இதை அவரே தன் வாயால் சூசகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.  நீங்கள் யூ டியூபில் பார்க்க முடிகிற ஒரு பேட்டியில் சவால் விட்டுப் பேசுகிறார், “நான்30 வயசுலயே ஜெயில்ல இருந்தவன். என்னை என்ன பண்ண முடியும்? எனக்கு தூக்கு தண்டனை குடுக்க முடியாது.  எனக்கு 54 வயசாகுது. இருபது வருஷம் ஜெயில்ல பிடிச்சு போட்டாலும் 75 வயசுல வெளில வந்து அந்தக் கட்சிய விடவே மாட்டேன்!” 20 வருஷம் முடங்கி இருந்தாலும் தான் சேர்த்து வைத்த சக்தி தன்னைத் தாங்கும் என்று அவர் முழங்குகிறார் என்றால், அவரது சக்தியின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம். சில வகை குற்றங்களுக்கு அமெரிக்காவில் நூறு வருடங்கள் உள்ளே தள்ளுவதிலும் ஏதோ பயன் இருக்கிறது.

    சசிகலாவின் ஆதரவு இல்லாமல் தினகரன் தலை எடுத்திருக்க முடியாது. சசிகலா மாதிரி, கிடைத்த சந்தர்ப்பங்களை நன்றாக பயன்படுத்தி தன்னை அபிவிருத்தி செய்தவர்கள் மிகக் குறைவு. தினகரனை 'பத்தாயிரத்தில் ஒருவன்' என்று சொல்லிவிட்டால், அவரைத் தாங்கித் தூக்கிவிட்ட சசிகலாவை  சில படிகள் உயர்த்தி 'லட்சத்தில் ஒருவர்' என்று அழைக்க வேண்டாமா? 

சசிகலா என்ன தானாகவா பல வழிகளில் முன்னேறினார்? ஜெயலலிதா இல்லாமல் அவர் இப்படி அபாரமாக வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் கூட தெளிவான உண்மை இது. ஆகையால் சசிகலாவுக்கும் குருவாய் திகழ்ந்த ஜெயலலிதாவை 'மில்லியனி'ல் (அதாவது பத்து லட்சத்தில்) ஒருவர் என்னும் உன்னத  நிலைக்கு உயர்த்தலாம்.

தனது பெருவாரியான சாதக பாதகங்களை மற்றவர்கள் எளிதில் அறியமுடியாமல் அவற்றைத் தந்திரமாக மறைத்து பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தவர்கள் மிக மிகச் சிலர். அதிலும் தமிழ் நாட்டில் ஒருவர் பிரும்மாவைப் போன்றவர். 

அசல் பிரம்மாவை எடுத்துக் கொள்ளுங்கள். 'பிரும்மா' என்று ஒரு கடவுள் உண்டு என்ற அளவில் அந்தக் கடவுள் பிரம்மாவை அனைவரும் அறிந்தவர்கள். ஆனால் அவரது திறன்களையும் செய்கைகளையும்  முழுவீச்சில் அறிந்தவர்கள் மிகச் சிலர்தான். அந்தக் கடவுள் வித விதமாக என்ன என்னவெல்லாம் படைத்திருக்கிறார் என்பதும் அனேகம் பேருக்கு தெரியாது.  இது போல்தான்  தமிழ்நாட்டு அரசியலில் பவனி வந்த  பிரும்மா போன்ற ஒரு மனிதர் உண்டு. அவரின் தனிச் சிறப்புக்கள், தன்மைகள் அனைத்தையும் அறிந்தவர்களும் சரியாக ஊகித்தவர்களும் மிகச்  சொற்பமானவர்கள்அவரால்தான் அவரது பரந்து விரிந்த குடும்பம் தலைமுறை தலைமுறையாக மிகச் செழிப்புடன் இன்னும் வளர்கிறது. மனித வடிவிலான அந்த அரசியல் பிரும்மா படைத்த யுக்திகளும் வழிமுறைகளும்  நாம் வரிசைப் படுத்திய பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம் கோஷ்டிகளுக்கு எப்படி ஊக்க சக்தியாக இருந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் - இதில் தினகரன் விறு விறுவென்று ஊக்கம் பெற்று அபாரமாகத் தேறுகிறார். பல திறன்கள் உடைய அந்த அரசியல் பிரும்மா போன்ற கலைஞர்கள் இந்தியாவிலேயே மிகக் குறைவு. ஆனால் அவர்களின் ஆதிக்கம் மிக விஸ்தாரமானது. இது போன்றவர்களை கோடியில் ஒருவர் என்று தனித்துவமாக வகைப் படுத்தி சொல்லலாம். புரிகிறதல்லவா?

இந்திய தேசத்தின் அரசியல் அருமை பெருமைகள் இதோடு முடிவதில்லை. இதற்கு மேலும் உண்டு. அதையும் கவனிக்க வேண்டும்.

நாம் பார்த்த 'பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி' வகை தலைவர்கள் அனேகமாக எல்லா மாநில அரசியல் களத்திலும் இருக்கிறார்கள். அவர்களின் தனித் திறமைகளும் அதற்குக் கிடைக்கும் வெகுமதிகளும் கூடக் குறைய இருக்கலாம், அவ்வளவுதான். செழித்துக் கொழிக்கும் அந்தத் தலைவர்கள், தனிப்பட்ட முறையில் தெய்வமாக நினைத்து வணங்கும் வேறு மனிதர்கள் உண்டு. அந்தத் தலைவர்களால் ரகசியமாக துதிக்கப்படும் மாமனிதர்களை "நூறு கோடிப் பேர்" என்று கூட்டாக அழைக்கலாம் - அவர்கள்தான் இந்தியாவின் சாதாரண அப்பாவி பொது மக்கள். அவர்களின் எண்ணிக்கைதான் நூறு கோடியைத் தாண்டிவிட்டதே!

நாம் ஏன் கடவுளை தொழுகிறோம்? அவர் நமக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். நாம் அவருக்கு ஒன்றும் கொடுக்க வேண்டியதில்லை. தீபம் தூபம் காட்டினால் சரிஅது கூட வேண்டாம். "கடவுளே! கடவுளே!" என்று அவரை பாசம் காட்டி அழைத்தாலே போதும். வளமும் செழிப்பும் கொட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இந்தியாவின் வில்லன்-அரசியல்வாதிகள் இதை சுய லாபத்திற்காக தப்பாகப் புரிந்து கொண்டவர்கள். ஆகையால் அவர்கள் நூறு கோடிக்கும் மேலான சாதாரண அப்பாவி மக்களை கடவுளாக வைத்தே கழுத்தறுத்து கறக்கிறார்கள். அனைத்தும் அறிந்த ஒரு  நிஜக் கடவுள், இந்த ஒன்றும் அறியாத நூறு கோடி கடவுள்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நாம் வேண்டிக் கொள்ளலாம்.

வட இந்தியாவில் மக்களுக்கான விமோசனம் துளிர் விட ஆரம்பிக்கிறதோ என்கிற தோற்றம் தெரிகிறது. அந்த சூழ்நிலை பல வருடங்கள் நீடித்தால் தான் பலன் உண்டு. தென்னாட்டில், அதுவும் தமிழ் நாட்டில், சாதாரண அப்பாவி மக்களுக்காக மற்றவர்கள் மிகவும் ஆழ்ந்து வேண்டிக் கொள்வது அவசியம். பல பத்தாண்டுகளில் படிந்த கறையை அகற்ற வேண்டுமே?

நீங்கள் இவ்வாறு வேண்டிக் கொள்பவராக இருந்தால் நல்லது. இல்லை என்றால் வேறு யாராவது உங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளலாாம். பிறருக்காக வேண்டிய பலனோ அல்லது பிறர் உங்களுக்காக வேண்டி வந்த பலனோ, உங்களுக்கு கிடைக்கும் என்று நீங்கள் நம்பலாம்.  சொல்லுங்கள், நம்பிக் காத்திருப்பதை விட  அப்பாவி மக்களின் விமோசனத்துக்கு – அதுவும்  தமிழ் நாட்டு மக்களுக்கு –  வேறு வழி இருக்கிறதா என்ன?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017