Monday, 10 April 2017

கர்ணன் கவலை தருகிறார்


        பொது  நலனை நினைத்துப் பார்க்கிறவரா நீங்கள்? அப்படியானால் ஹை கோர்ட் நீதிபதி கர்ணன் உங்களுக்குக் கவலையும் வேதனையும் அளித்திருப்பார்.  கோபத்தையும் கொடுத்திருக்கலாம்.

      என்ன செய்தார்  நீதிபதி கர்ணன்?  சர்ச்சைக்குரிய ஒன்றைச் செய்தார். அதாவது, சில சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பல ஹை கோர்ட் நீதிபதிகள் உட்பட இருபது நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தங்கள் பணியில் ஊழல் செய்வர்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதிக் குற்றம் சுமத்தினார். அவருடைய நீதிமன்றப் பணியாக செய்த காரியம் அல்ல இது. ஒரு சாதாரண மனிதனாக அவர் புரிந்த செய்கை இது.  ஆகையால் இது பற்றி மேலும் பேசும்போது, அவரை 'கர்ணன்' என்று மட்டும் குறிப்பிடுவது சரி என்று தோன்றுகிறது.  இதில் வேறு அர்த்தம் இல்லை.

       கர்ணனின் குற்றச்சாட்டுகள் தவறானாவை, ஆதாரம் இல்லாதவை என்ற அடிப்படையில் ஏழு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் பென்ச் தாமாக முன் வந்து அவர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுத்தது. அவர் எழுதிய வேறு சில கடிதங்களும் அந்த நடவடிக்கையின் காரணம். பிற நீதிபதிகளைப் பற்றிய அவரது குற்றச்சாட்டுகளில் வலு இருந்தால், "நான் சொன்னது உண்மை. இதோ அதற்கான ஆதாரங்கள்" என்று சுப்ரீம் கோர்ட்டில் அவர் நிரூபணம் காட்டியிருக்க முடியும். அது நடந்தால் சுப்ரீம் கோர்ட்டே அவர்மீது எடுத்த நடவடிக்கையில் இருந்து அவரை விடுவிக்கும். அதன் தொடர்ச்சியாக, பொது நலன் காத்தவர் என்ற பாராட்டுக்களும் கர்ணனுக்குக் குவியும் - அதாவது அவர் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்து அதை அவர் நிரூபித்தால். கர்ணன் மீதே வேறு ஒரு நீதிபதியோ மற்றவரோ ஊழல் குற்றச்சாட்டு சொல்லி, அந்த வேறு நபரும் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொண்டால் அவருக்கும் இதே நிலைதான்.  ஆனால் இது எதையுமே கர்ணன் புரிந்துகொள்ளவில்லை. குற்றச்சாட்டுகள் சொன்னதோடு சரி.

           சென்ற மார்ச் 31ம் தேதி நடந்த விசாரணையின் போது கர்ணனின் சவடால் பதில்களைக் கேட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, "நாங்கள் கேட்பதைப் புரிந்து கொள்ளும் சக்தி இவருக்கு இருக்கிறதா?" என்று அனுதாபமான ஒரு சந்தேகத்தை அடார்னி ஜெனரலிடம் கேட்டார்.  இந்த அளவு கரிசனம், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்கும் ஒரு சாதாரண மனிதருக்கு நீதிபதிகளிடமிருந்தே கிடைப்பது அவரது அதிர்ஷ்டம்.  ஆனாலும் சில நடைமுறை காரணங்களுக்காக கர்ணனிடம் சுப்ரீம் கோர்ட் காண்பித்த மென்மையான அணுகுமுறை சரியானதுதான்.

         கோர்ட்  அவமதிப்பு  செய்ததற்காக  கர்ணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்பினால், அதை ஏற்று அவர் மீதான நடவடிக்கையை அதோடு முடித்துக் கொள்ளும் தாராள மன நிலையைத்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்ச் 31ம் தேதி வெளிப்படுத்தினார்கள்.  ஆனால் கர்ணன் அதற்கு இசையவில்லை. தனது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களும் தராமல், ஒரு தெளிவான நிலையும் எடுக்காமல், தடம் மாறியவாறே அவர் பதில் அளித்தார்.  ஒரு கட்டத்தில் தனக்கு மன நலம் கலங்கி இருக்கிறது என்றும் ஏதோ அர்த்தத்தில் சொன்னார். கடைசியில், கர்ணன் தனது பதிலை எழுத்து மூலமாகத் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.  பிறகு ஏழு நீதிபதிகளும் எழுந்தபோது, "அடுத்த வாய்தாவுக்கு நான் வரமாட்டேன்" என்று கர்ணன் அவர்களிடம் விறைப்பாகச் சொன்னார். அப்போதும் அந்த நீதிபதிகள் அமைதி காத்தனர். பொது நலனில் அக்கறை உள்ள எவரும் வருத்தப்படும் காட்சியைத்தான் கர்ணன் கோர்ட்டில் உருவாக்கினார்.

         இருபது   நீதிபதிகள்    மீது   கர்ணன்   ஊழல்    குற்றச்சாட்டு வீசிவிட்டு, 'தவறென்றால் அவர்கள் தனித்தனியாக என்மீது வழக்கு போடட்டும். அவர்களும் நானும் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறோம். அதை விடுத்து என்மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு ஏற்பட்டு நான் மட்டும் கோர்ட்டில் ஆஜராகி ஏன் பதில் சொல்லவேண்டும்?' என்று கேட்க முடியாது. ஒரு நீதிபதியைப் பற்றி பொதுப்படையாக 'அவர் ஊழல் செய்கிறார்' என்று எவரும் ஆதாரம் தராமல் பேசிவிட்டு,  அந்த நீதிபதியை கோர்ட் படியேற வைப்பது முறையல்ல. அந்த வழிமுறை மற்றவர்களுக்குத் தான் பொருந்தும். அதனால்தான் மத்திய மந்திரி அருண் ஜெயிட்லி, டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கோர்ட்டில் இப்போது மான நஷ்ட வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார். 

     தான் ஒரு தலித் என்பதால்தான் தனக்கு  எதிரான கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை வந்தது என்று கர்ணன் பகிரங்கமாகச் சொல்கிறார்.  இந்தக் குற்றச்சாட்டு நிச்சயம் தவறு - கோர்ட் அவமதிப்பை விடவும் அதிக வருத்தத்திற்குரியது.

           மண்ணும் மொழியும் மதமும் ஜாதியும் நமக்கு அதுவாக வந்து சேரும் பிறவி அடையாளங்கள்.  இவற்றை நமக்குள் ஒற்றுமையை வளர்க்க நல்ல விதமாகப் பயன்படுத்தலாம், அல்லது நம் தவறுகளை மறைக்கும் திரையாக குயுக்தியாகவும் வெளிப்படுத்தலாம். இந்த அடையாளங்களை இப்படியோ அப்படியோ கையாள்பவர்கள் எல்லா இடத்திலும் உண்டு. அது அவர்களின் தனி மனிதப் பண்புகளைப் பொறுத்தது. ஆனால் ஒன்று.  ஒருவரின் தனிமனித குணங்களைக் கவனிக்காமல் அவரின் பிறவி அடையாளங்களை மட்டும் வைத்து, அவர் மதிக்கத்தகுந்தவர் அல்லது வெறுக்கப்பட வேண்டியவர் என்று எவர் நினைத்தாலும் அது அறியாமையும் அநாகரிகமும் ஆகும்.
     
           ’ஒரு தலித் என்பதற்காகவே நான் குறி வைக்கப் படுகிறேன்’ என்று கர்ணன் சொல்வது, தலித் அல்லாதவர்கள் மீது அவர் பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டாகிறது. இதனால் அவர் தலித்துகளின் பாதுகாவலன் என்கிற தோற்றம் யாருக்கேனும் ஏற்பட்டால் அது சரியல்ல.  'பிற நீதிபதிகள் ஊழல்வாதிகள் எனக் குற்றம் சொல்லி அதற்கான ஆதாரங்களையும் கர்ணன் காண்பிக்கவில்லை என்றால் அது பெரும் தவறு, அதற்கான சட்ட விளைவை அவர் ஏற்கவேண்டும்' என்று பலர் நினைப்பார்கள். இதனால் அவர்கள் தலித்துகளின் விரோதி என்கிற எண்ணம் யாருக்கேனும் தோன்றினால் அதுவும் சரியல்ல. இதை இன்னொரு வழியில் புரிந்துகொள்ள மற்றொரு இந்தியரை நினைத்துப் பார்க்கலாம். அவர் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம்.
  
          கலாம்  ஒரு  முஸ்லிம்.   தனிப்பட்ட   வாழ்க்கையிலும்  பொது வாழ்விலும் உயர்ந்த குணங்கள் உடையவராக இருந்தார். தவறுகள் ஏதும் செய்து அவற்றை மறைக்கத் தனது மத அடையாளத்தை அவர் முன் நிறுத்தவில்லை. ஆகையால் வேறு மதத்தைச் சார்ந்த லட்சக் கணக்கானவர்களின் நேசத்தையும் பாராட்டையும் பெற்றார்.

       தனி  மனிதச்  சிறப்புகளால்தான்   ஒருவர்  தானும்  உயர்ந்து தனது தேசத்துக்கும், மொழிக்கும், மதத்திற்கும் ஜாதிக்கும் பெருமை சேர்க்க முடியும். தானாக வரும் பிறவி அடையாளங்கள் மட்டும் எவருக்கும் உயர்வு தராது. மஹாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா, மியன்மாரின் ஆங் சான் சு சி, தமிழ்நாட்டின் காமராஜ் ஆகியோர் தமது தனிமனிதச் சிறப்புகளால் அவர்களது பிறவி அடையாளங்களுக்கும் ஒளி சேர்த்த இன்னும் சிலர்.

       இந்தியாவில்  அநீதியைச்  சந்திக்கும் தலித்துகள் ஏழைகள். அதிலிருந்து அவர்கள் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். வசதி படைத்த கர்ணன் தவறு செய்கிறவர், அதன் விளைவுகளை சட்டப்படி சந்திக்க வேண்டியவர்.  இது போன்ற நுண்ணிய வித்தியாசங்களை மக்கள் எல்லா சம்பவங்களிலும், எல்லா வகை மனிதர்களிடத்தும், புரிந்துகொள்ள வேண்டும் – அது இன்னும் முக்கியம்.  படிப் படியாக அந்த நாள் இந்தியாவில் வரக் காத்திருப்போம்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017