Tuesday, 31 January 2017

Tamil Nadu’s Jallikattu Protest: Can We Take Pride?


      This was prime national news this month.  A continuous six-day protest was staged on Chennai’s Marina beach by several thousand students and educated young men and women demanding that Tamil Nadu allow jallikattu, a sort of bull-taming sport.  That sport was played in parts of the State’s rural areas but remained banned by the Supreme Court on legal grounds.   Parallel agitations by youngsters at other towns in Tamil Nadu strengthened the clamour for the sport. The State and Central governments yielded, and Tamil Nadu brought in a new law at express speed which removed the court-imposed ban on jallikattu. 

      Here I am not on the merits of permitting or banning jallikattu.  Hooligans mingling with the protesters and spreading violence, post success, at Chennai should be tackled separately by the police. As to the legal worth of the new Tamil Nadu law, the Supreme Court will decide.   Let us look at other things.  First, the backdrop.

      Protesters at the Marina kept swelling from day one, reaching 30,000 or even more at its peak by different estimates. Despite their number, they were not unruly.  They helped regulate traffic on the beach road and themselves cleaned their surroundings all those days.  The unpolitical stance of the Marina activists drew more protesters at Chennai and elsewhere, made many people sympathise with them and forced politicians to shy away from them.  Also, with an emotional tang among lots of Tamils, the jallikattu issue put a glow to their fight. 

   There is a general euphoria that the victorious uprising for jallikattu is a well-deserved snub on India’s corrupt and self-indulgent political class, marking a special moment for democracy.  That is true, but not all the way.  Equally true are a few allied things.

      Tamil Nadu’s massive agitation was possible because the State government allowed protesters to gather in big numbers without legal permission at the Marina and elsewhere and grow to unmanageable sizes. The AIADMK which rules the State feared that if the government moved to stop and scatter the crowds the Opposition would term it a police excess and steal the support of all asking for jallikattu. So the government kept quiet and let the problem become bigger, until it woke up late, worked hectically and changed a statute through executive orders to permit jallikattu, with Central government support. 

      Outwardly, every political party including the AIADMK has given credit to the Marina fighters. That was because no part of the glory goes to a rival political party. But no party in power and no government should be overawed and subdued publicly, with protesters breaking the law and breathing down its neck to get their demands met.  

      If the youth congregating at the Marina had been evacuated when they were in a few hundreds, Tamil Nadu would not have faced an overly giant and dominating protest later.  If a growing gigantic agitation like this – in breach of the law regulating protests at a public place – is justified as democracy in action, Karnataka activists could do it in Bengaluru demanding changes in the inter-State river water law, so Karnataka may control the Cauvery river and deny Tamil Nadu its due share of the river water. It is good to remember: Democracy does not mean getting every freedom for the people.  It means people surrendering a few of their freedoms to the State in exchange for more valuable freedoms. 

      True, the  Marina experience may help the young participants stay determined for anything worthy in their future lives, and many of them may discover their leadership qualities.  A majority of them would not have seen a jallikattu before, and a good number of them might not have sighted a bull earlier – but still they will have these personal gains.  At the other side, their large assembly and victory are a side-effect of the phoney and combative democracy played by political parties in Tamil Nadu, and elsewhere too.  If major opposition parties in the State will not enjoy and exploit every bad moment, and illegal challenge of authority, faced by a ruling party – here imagine any party in power and any party in the Opposition – the government could have stalled the agitation, began without legal permission, at its early stage.  If an issue is so overwhelmingly important, touching the hearts and minds of the people of the entire State – that was the impression created by the jallikattu agitators – the way forward is protesting at legally permitted venues without violating regulatory laws or electing a government that helps make the desired law. The Marina spectacle is a right group of people setting a wrong precedent. 

      How did the Occupy Wall Street  protest of 2011 go off in the US?  It lasted from 17th September to 15th November of that year, much longer than the Marina agitation, though with lesser crowds.  Organisers of Occupy Wall Street were considering three locations in New York City to stage it.  The police learnt about their plans and fenced off two of them which were public spaces, and so the protesters assembled at the third alternative venue, Zuccotti Park which was private property.  New York City does not allow use of amplified sound unless a permission is issued.  The protesters had no such permission and so could not use loudspeakers at Zuccotti Park.  Speakers had to rely on their vocal chords to make speeches which were repeated word for word by voice helpers standing a little away from the speakers, which were again repeated by more voice helpers stationed further down, to let the widespread listeners hear.  Finally, when the owners of Zuccotti Park issued notice to the protesters to leave, policemen in riot gear started removing the protesters, arresting 200 persons in that process. In democratic India, can you imagine protesters following the law this much while doing a public protest against a government?

       No bandhs or forced train stoppages happened in New York City during the eight-week protest it witnessed, while they happened like normal events in Tamil Nadu during Chennai’s one-week agitation at a grabbed public space.   As Occupy Wall Street ended, the Mayor’s office in NYC released a statement which included this: No right is absolute and with every right comes responsibilities. The First Amendment gives every New Yorker the right to speak out – but it does not give anyone the right to sleep in a park or otherwise take it over to the exclusion of others – nor does it permit anyone in our society to live outside the law.”   

      During the Marina protest, did we hear comparable words from Tamil Nadu chief minister or from leaders of any political party in India?  No, but our laws and the US laws will be the same for the Marina scene.   Then, is our democracy staying fit or trembling?  The young, earnest, unpolitical Marina protesters have something to introspect.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017


Saturday, 14 January 2017

ஜல்லிக்கட்டில் ஓட்டில்லாத காளை மாடு


      என்ன நடக்கிறது ஜல்லிக்கட்டு விளையாட்டில்?  இதைத் தெரிந்து கொள்ள நீங்கள் அந்த விளையாட்டுத் திடலுக்குச் செல்ல அவசியம் இல்லை. அதன் விடியோ காட்சிகளை இணையத்தில் பார்க்கலாம்.  பார்த்து பரிதாபப் படலாம் – மாட்டுக்கும் மனிதனுக்கும் சேர்த்து.

         சிலர் ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டு என்கிறார்கள். சிலர் வீர விளையாட்டு என்று பெருமையோடு சொல்கிறார்கள். இன்னும் சிலர் தமிழ் நாட்டின் வீர விளையாட்டு என்று பிரகடனம் செய்கிறார்கள்.   எது விளையாட்டு?

         ஒருவர்    மற்றவரோடு    அல்லது     இன்னொரு    பிராணியோடு விளையாட வேண்டும் என்றால் இரண்டு பேருக்கும் அந்த விளையாட்டில் ஆர்வம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது விளையாட்டு என்று ஆகும்.  இரண்டு பேர் கூடி பாண்டி ஆடலாம், சீட்டாடலாம், டென்னிஸ் ஆடலாம் – ஏன் சட்டசபைக்குள்ளேயே தலைவர் சொல்படி தர்ணா செய்யலாம்.  இதெல்லாம் விளையாட்டு.  வளர்ப்பு நாயோடு ஓடிப் பார்ப்பதும்,  எறிந்த பந்தை அது விரட்டிக் கவ்வித் திரும்புவதும் விளையாட்டுதான். புலி தனது முன்னங்கால்களைத் தூக்கி, பழக்கியவரின் தோள்கள் மீது வைப்பதும் அவர் புலியைத் தழுவி நிற்பதும் இருவருக்கும் விளையாட்டு. மனிதர்களோடு நீரில் நீந்தி பல வித்தைகள் செய்கிறது டால்ஃபின். அது இர தரப்பினருக்கும் விளையாட்டு. ஆனால் காளை மாட்டை மிரள வைத்து, அதைத் தப்பிக்கவிடாமல் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சூழ்ந்து சீண்டி இழுப்பதும் அதன் திமிலைப் பிடித்து  அமுக்குவதும் மாட்டுக்கு விளையாட்டல்ல, வினை.  சிறுத்தைப் புலி கூட நூற்றுக் கணக்கான மனிதர்களைக் கூட்டமாகப் பார்த்தால் அவர்கள் கண்ணில் படாமல் ஓடி ஒளியப் பார்க்கும்.  ஜல்லிக்கட்டில் காளை மாட்டுக்கும் அதே கதிதான். ஆனால் என்ன, மனிதர்கள் இல்லாத காடு சிறுத்தைக்கு உண்டு.  மனிதர்களிடையே வாழும் காளை மாட்டுக்கு ஓட்டு இல்லை.  பிறகு அரசியல்வாதிகள் ஓட்டைப் பார்ப்பார்களா, காளையை கவனிப்பார்களா?


        நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரு காளை மாட்டைச் சூழ்ந்து ஆரவாரமாக அதை அடக்க முனைந்தால் அது அச்சுறுத்தப் படுகிறது.  அந்த நிலையே அதற்குத் துன்பமானது. ஆதன் கண்களிலும் உடல் மொழியிலுமே மிரட்சி தெரியும். முன்பாக, மைதானத்துக்கு அருகில் கொட்டிலில் உள்ளபோதே, தனக்கு நேரப்போகும் சித்திரவதையை அது உணர்கிறது.  அவிழ்த்து விட்டாலும் கொட்டிலில் இருந்து வெளிவரவே மறுத்து நிற்கிறது. அது வெளிவருவதற்கான வாசலும் குறுகலான அகலம் கொண்டதுதான். பின்புறத்திலிருந்து சிலர் மாட்டை உந்தி வெளியில் தள்ள, அது பயத்தில் வெளிப்புறம் பாய்கிறது. அப்போது அதைச் சுற்றி விரட்டுபவர்களிடம் இருந்து மாடு தப்பிக்கவே வழி பார்க்கிறது – அவர்களோடு விளையாட அல்ல. அதைத் தப்பிக்க விடாமல் தடுப்பவர்களைத் தான் முட்டித் தள்ளியும் தூக்கி எறிந்தும் அது வழி செய்து கொள்கிறது -  அவர்களைத் துன்புறுத்த அல்ல. 

        ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் சிலர், அது ஆயிரக் கணக்கான வருடங்கள் நடந்து வந்த பாரம்பரியம் என்கிறார்கள். இருக்கலாம். மிகப் பழமையானது என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் எந்தப் பழக்கத்தையும் இந்த நாளில் நாம் பின்பற்றுவதில்லை.  ஆயிரக் கணக்கான வருடங்கள் பால்ய விவாகம் நம்மிடையே இருந்தது, பலதார மணம் இந்துக்களிடையே நடந்தது, ஆண்கள் குடுமி வைத்திருந்தோம், மன்னர்கள் ஆட்சி செய்தார்கள், போர்கள் புரிந்துக்கொண்டே இருந்தோம்.   பழமை தழைக்கட்டும் என்று இவைகளை நாம் இப்போது போற்றவில்லை, விட்டுவிட்டோம்.

          ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் சிலவகைக் காளைகளே அழிந்துபோகும் என்கிறது இன்னொரு வாதம்.  இது பிராணிகள் இனம் பாதுகாக்கும் அக்கறையினால் வரும் பேச்சல்ல. அந்தவகைக் காளைகள் அழியாமல் காப்பதற்கு அவைகளுக்குத் துன்புறுத்தல் தரவேண்டியதில்லை.  புல்லும் கழனியும் கொடுத்தால் போதும். 

         ’ஜல்லிக்கட்டினால் காளைகளுக்குத்  தீங்கு ஒன்றும் நேர்வதில்லை, ஆகையால் அது தொடரட்டும்’ என்று பேசுகிற ஒரு பிரபலஸ்தர் சொல்கிறார்: ”ஜல்லிக்கட்டில் காளைகள் செத்ததில்லை, மனிதர்கள்தான் செத்திருக்கிறார்கள்”.  சரி, அப்படியானால் ஜல்லிக்கட்டு மனிதர்களின் நலனுக்காகவும் நடக்கக் கூடாதே? தாறுமாறாக வாகனம் ஓட்டுவது மனிதர்களுக்கு ஆபத்து என்பதால் அதைத் தடை செய்கிற மாதிரி, ஜல்லிக்கட்டும் அதே காரணத்துக்காக நடக்காமல் இருப்பது நல்லது. 

          இன்னொரு    பிரபலஸ்தர்   ”ஜல்லிக்கட்டு   நடக்கட்டும்.   அதை ’ஏறு தழுவுதல்’ என்று அழைக்க வேண்டும்” என்று யோசனை தருகிறார்.  ஜல்லிக்கட்டில் காளைகள் படும் பாடு மாறாத போது, அந்த ஆட்டத்திற்கு என்ன பெயர் வைத்தால் என்ன?  கொலை செய்வதை ‘இறைவனடி சேர்த்தல்’ என்று உயர்த்திச் சொன்னால், உயிர் எடுப்பது மாறாதே?

       ஜல்லிக்கட்டு  நடப்பதும்  நடக்காமல்  இருப்பதும்  சட்டம் சம்பத்தப் பட்டது மட்டும் அல்ல.  மனிதர்கள் வைப்பதுதான் சட்டம். அது எப்படியும் இருக்கட்டும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு நம்மைப் பண்படுத்தும் வேறு விஷயங்களும் இதில் அடக்கம்.   காட்சி ஒன்று அதை நினைவுபடுத்துகிறது என்பதால் அதை மட்டும் இப்போது சொல்கிறேன்.  அதை இணைய விடியோக்களில் நீங்களும் பார்க்கலாம்.

      ஜல்லிக்கட்டின் போது தன்னைச் சுற்றி நிற்கும் மனிதர்களிடமிருந்து தப்பிக்க எண்ணி ஒரு காளை மாடு, மூன்று புறம் பத்தடி உயர சுவர்கள் கொண்ட ஒரு இடுக்கில் மாட்டி நிற்கிறது.  அங்கு பின்பக்கச் சுவற்றை ஒட்டி பத்துப் பதினைந்து மாடுபிடி வீரர்கள், அவர்கள் தப்பிக்க வழி இல்லாமல், பம்மிப் பதுங்கி இருக்கிறார்கள்.  அவர்களை நோக்கி வெறியோடு ஒரு பாய்ச்சல், ஆக்ரோஷமான ஒரு முட்டு – இதை அந்தக் காளை செய்திருந்தால் தன்னைத் தொல்லை செய்தவர்களில்  இரண்டு பேரையாவது  ஆஸ்பத்திருக்கோ மயானத்துக்கோ அனுப்பியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல், தான் விலகித் தப்பிக்கவே இடம் தேடி பரிதாமாக நிற்கிறது அந்தப் பிராணி.  காளை மாடு நம்மிடம் காட்டும் கருணையை நாமும் அதனிடம் காட்டலாம்.

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017

Thursday, 12 January 2017

அதிமுக-வில் சசிகலாவின் உயர்வு: யார் தருவார் இந்த, ஜனநாயகம்!


     தலைப்பைப் பார்த்துவிட்டு, சசிகலா அதிமுக-வில் பொதுச் செயலாளராக உயர்ந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப் படுகிறது என்று தப்பாக நினைக்காதீர்கள். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் குரலுமல்ல இது. குறிப்பான அவரது பின்னணியில், இந்திய அரசியல் கட்சிகளின் தலைமை மாற்றம் பற்றிய பொதுவான ஓரு பார்வை இக் கட்டுரை.

     ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளராக நியமனம் ஆனதை எதிர்ப்பவர்கள் கூறும் முதல் காரணம்: அவர் ஜெயலலிதாவின் தனி உதவியாளரகத்தான் முப்பது வருடங்களுக்கு மேலாக இருந்தார், மற்றபடி அவர் தீவிர அரசியலில் இருந்ததே இல்லை.  மேலும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அதிமுக-வில் சேரவைத்து, பதவிகள் கொடுத்து அடையாளம் காட்டியமாதிரி, ஜெயலலிதா எப்போதும் சசிகலாவை அவ்விதம் கட்சிக்குள் பிரதானமாக முன் நிறுத்தவில்லை என்பதும் ஒரு வாதமாக இருக்கிறது. அதிமுக-வின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் தங்களின் பதவியைக் காக்க சசிகலாவை ஆதரிக்கிறார்கள், ஆனால் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவு அவருக்குக் கிடையாது, என்பதும் சசிகலா எதிர்ப்பாளர்களின் பேச்சு.

          ஜனநாயக ரீதியில் இயங்க வேண்டிய ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தனது மறைவுக்குப் பின்னால் இன்னார்தான் அவர் இருந்த இடத்தில் வரவேண்டும் என்று கட்டளை இடுவது பொருந்தாது. ஆகையால் ஜெயலலிதா இருந்தபோதே அவர் சசிகலாவைக் கட்சியில் அதிகாரபூர்வமாக பிரபலப் படுத்தவில்லை, தனக்குப் பின் சசிகலாதான் கட்சியை வழிநடத்துவார் என்று சுட்டிக் காட்டியதில்லை என்றெல்லாம் பேச முடியாது. ’எதுவானாலும் சரி, அரசியலில் பெரிதாக ஈடுபடாமல், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் திடீரென்று சசிகலா மாதிரி ஒருவர் கட்சியின் மிக உயர்ந்த பொதுச் செயலாளர் பொறுப்பைப் பெறுவது எப்படிச் சரியாகும்?’ என்பதும் ஒரு கேள்வி. இது சரியான கேள்விதான். ஆனால் இதற்கான பதில் ஜெயலலிதாவிடமிருந்தே வருகிறது.

    ஜெயலலிதா இருந்தவரை, சசிகலா  ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி, ஜெயலலிதா வீட்டிலேயே வசிப்பவர் என்று மட்டும் பொதுவில் அறியப் பட்டவர். கட்சித் தலைவர்களும் பிற மனிதர்களும் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்திக்கச் சென்ற போது அவர்கள் ஜெயலலிதாவின் விருப்பப்படி சசிகலாவை மட்டும் சந்தித்தார்களா, இருவரையும் சந்தித்தார்களா, எந்த அளவுக்கு அவர்களின் விவகாரங்களில் சசிகலா ஈடுபாடும் ஆதிக்கமும் செலுத்தினார் என்பது மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவை ஜெயலலிதாவும், சம்பத்தப் பட்ட அந்த மனிதர்களும், சசிகலாவும் மட்டும் அறிந்தவை. அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இது பற்றி ஊகிக்கலாம், புரிந்து கொள்ளலாம்.

        நீண்ட காலமாக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்து, பல மனிதர்களிடம் முக்கிய விஷயங்கள் பேசி, சசிகலா பெற்ற அனுபவம் அதிமுக-வில் வேறு எவருக்கும் கிட்டியிருக்காது. அதோடு, அதிமுக-வின் உள் கட்சி விஷயங்கள், ரகசியங்கள், மற்றும் அதிகார விளையாட்டுக்களில் சசிகலா பெற்ற தேர்ச்சி, பிறகு அவரது புத்திசாலித்தனம் மற்றும் சாதுரியம் பற்றி பல மட்டத்திலும் உள்ள அந்தக் கட்சித் தலைவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.  அவரோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களைவிட சசிகலா சில படிகள் மேலானவர், சக தலைவர்களின் நிறை குறைகளை அதிகம் தெரிந்தவர், அவர் தலைமையை ஏற்றால் தங்கள் பதவிகளுக்கும் இப்போதைக்கு ஆபத்தில்லை என்று அந்தத் தலைவர்கள் முடிவு செய்துதான் இப்போது சசிகலாவின் பின் நிற்கிறார்கள்.  பல முன்னணிக் கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகள் பதவிக்காகத்தான் அங்கிருக்கிறார்கள் என்பது சாதாரண உண்மை.  இதில் அதிமுக தலைவர்களை மட்டும் தனியாகக் குறை சொல்வது பாரபட்சமானது.

        சசிகலா இன்றைய சூழ்நிலையில் அதிமுக-வின் பொதுச் செயலாளர் ஆவதற்கு, தான் அறியாமலேயே வித்திட்டவர் ஜெயலலிதாதான். சசிகலாவை, அனைத்தும் அறிகிற சக்தி வாய்ந்த உதவியாளராக ஜெயலலிதா திரைமறைவில் வைத்திருந்தார். மற்றவர்களுக்கு, கட்சிக்குள் உண்மையான ஜனநாயக ரீதியில் பதவி நியமனங்களும் தேர்வுகளும் நடக்கவில்லை, மரியாதையான அங்கீகாரமும் கிடையாது. வா என்றால் வருவது, நில் என்றால் நிற்பது, போ என்றால் போய் விடுவது என்பதை ஏற்றவர்கள்தான் கட்சிக்குள் தவழ்ந்து மேலே வந்தார்கள். ஜெயலலிதா ஏற்படுத்தி விட்டுச் சென்ற இந்த நிலையில் சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளரானது அதிர்ச்சி தருவதல்ல.  

       அடுத்ததாக, பன்னீர் செல்வத்தை விலகச் சொல்லி சசிகலா தமிழக முதல்வர் ஆனாலும் வியப்பல்ல. பணிவுடன் பன்னீர் செல்வம் அதற்காக வழிவிட்டு நின்றாலும் ஆச்சரியமல்ல.  சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் சொல்லப் போகும் தீர்ப்பு சசிகலாவின் எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் வாய்ப்பைத் தடுக்குமா என்று பார்த்த பிறகு இதை முடிவு செய்துகொள்ளலாம் என்றுகூட அவரும் பிற கட்சித் தலைவர்களும் காத்திருக்கலாம்.  நாமும் காத்திருந்துதான் நடக்கப் போவதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், நமது நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெறுவதுகூட ஒரு அரசியல் தலைவருக்கு நிரந்தர வீழ்ச்சியல்ல. அவர் மிகப் பெரிய தலைவராக இருந்தால், கண்டிப்பாக அவர் செல்வாக்கு சரியாது. தண்டனையிலிருந்து மீண்டு வர அவருக்கு வயதும் தெம்பும் இருக்கவேண்டும்.  அதுதான் நமது இப்போதைய ஜனநாயகம்.

        கட்சிக்குள் முறையான சுதந்திரமான வளர்ச்சிக்கும் தலைமை மாற்றத்திற்கும் வழி இல்லை என்கிற நிலையில், சசிகலாவுக்குப் பதில் வேறு யார் அதிமுக-வின் பொதுச் செயலாளராக வந்திருந்தாலும், எதிர்ப்புகளும் சலசலப்புகளும் பரவலாக எழுந்திருக்கும்.  இப்போது சசிகலாவுக்கு வரும் உள் கட்சி எதிர்ப்புகளை விட அவை அதிமாகக் கூட இருக்கலாம் – நமக்குத் தெரியாது.  போகப் போகத்தான் கட்சித் தொண்டர்கள் சசிகலாவை எதிர்ப்பது வலுவானதா, பரவலானதா என்பதும் தெரிய வரும்.    

       காங்கிரஸ்  கட்சியில் சேர்ந்து  நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் ராஜீவ் காந்தி அவரது அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு திடீரென்றுதான் பிரதம மந்திரி ஆனார்.  அவர் கொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகவும், காங்கிரஸ் கட்சியில் சேராதிருந்த அவர் மனைவி சோனியா காந்தி, பின்னர் அக் கட்சியில் உறுப்பினாராகி சில மாதங்களிலேயே அதன் தலைவரானார். இதே மாதிரித்தான் சசிகலா அவர் கட்சியில் முக்கியத்துவம் பெறுவதும் இப்போது நடக்கிறது.  

       ஒரு கட்சியின் பெரிய தலைவர் மறைந்த பிறகு ரத்த பந்தம், நெருங்கிய நட்பு, அவரே சுட்டிக் காட்டியவர் போன்ற காரணங்களினால் கட்சியிலோ ஆட்சியிலோ அவர் இடத்திற்கு வரும் மற்றவர் திறமை உள்ளவராக அமையலாம், சாதாரணமானவராகவும் இருக்கலாம்.  அவரால் கட்சி நடக்கும், ஆட்சியும் நகரும். ஆனால் அப்படிப் பட்டவர் முறையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏனென்றால் முறையாகவும் நேர்மையாகவும் செயல்பட விரும்புகிறவர்கள் இந்த வழிகளில் கட்சித் தலைமைக்கு வரத் தயங்குவார்கள். இதில் விதிவிலக்குகள் மிகவும் அரிது.  ஆக இது போன்ற தலைமை மாற்றம் வருவது கட்சிக்கும் ஆட்சிக்கும் நாட்டுக்கும் பெரிய தீங்கு செய்யும்.   

     அடுத்தபடியாக,  பல  கட்சிகளிலும்  பாசக்கார  அப்பாவோ அம்மாவோ தலைவராக இருப்பதால், பின்னர் ஒரு நாள் அவர் இடத்தில் வருவதற்கு அவரின் மகனையோ மகளையோ, அல்லது எல்லாக் குழந்தைகளையும், கட்சிக்குள் முன்கூட்டியே தயார் செய்து முன்னிலைப் படுத்துகிறார். இதற்கு உதாரணமே வேண்டாம் - இது தவறாமல் அனேகமாக எல்லா பெரிய கட்சிகளிலும் நடக்கிறது. இது தூய்மையான ஜனநாயக முறை அல்ல. ஆட்சி செய்பவர்களை மன்னர்களாகவே பார்க்கும் நமது மக்களும் அறியாமையினால் வாரிசு அரசியலை ஆமோதித்து வரவேற்கிறார்கள். இந்த வழியிலான தலைமை மாற்றமும் தலைவர்களின் குடும்பத்தில் வேலை வாய்ப்பு உண்டாக்குமே தவிர ஆட்சிக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யாது.

        குறுக்கு வழியில் கட்சித் தலைமைக்கும் ஆட்சித் தலைமைக்கும் வருபவர்களை சர்வ சாதாரணமாக ஏற்கும் மக்களைக் கொண்ட இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி அடையக் காத்திருக்கிறது. அது நடக்கும் வரை நமது ஜனநாயகத்தை மக்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளே அதிகம் கொண்டாடுவார்கள். பிறகென்ன, “யார் தருவார் இந்த, ஜனநாயகம்!” என்றுதானே அவர்கள் ஆனந்தமாகப் பாடுவார்கள்?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017