ஏண்டாப்பா
ராகுல் காந்தி, உன்னை இப்பிடி சௌஜன்யமா கூப்பிட்டா தப்பில்லயே? உனக்கு என் பேரன் வயசுதான்
இருக்கும். நன்னா இரு!
பேப்பர்ல
பாத்தேன். செல்லாதுன்னு ஆன நாலாயிரம் ரூபாயோட திடுதிப்புனு ஒரு பாங்க் வாசலுக்குப்
போனயாம். அங்க நிறையப் பேர் நாலாயிரம் ரூபாய்க்கு
செல்லாத நோட்டை வச்சுண்டு அதைப் புது நோட்டா பாங்க்ல மாத்தணும்னு பெரிய கியூவில காத்திண்டிருக்க,
நீயும் கியூவில சேந்துட்டயாம். பேப்பர்காரா,
டெலிவிஷன்காரா விடுவாளா? அவாள்ளாம் கூடி நின்னு ஏன் வந்தேள், எதுக்கு வந்தேள்னு உங்கிட்ட
கேக்க, நீயும் ஒரு குட்டிப் பிரசங்கமே பண்ணிட்டயாம்.
“என்னோட
செல்லாத ரூபா நாலாயிரத்தை புது நோட்டா மாத்திக்க வந்திருக்கேன். இந்த கியூவில ஏழைப்பட்டவா மணிக்கணக்குல நிக்கறா. பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாயை மாத்தறதுக்கு மக்கள்ளாம்
காத்திண்டிருந்து அவதிப்படும்போது அவாளுக்கு பக்க பலமா ஆதரவா இருக்கேன். குடிமக்கள்
ஒரு பிரச்சனையை சந்திச்சா, நானும் சந்திக்கறேன்” அப்படின்னு பேசிருக்க. அதோட மீடியாக்காராளைப்
பாத்து “உங்களுக்கும் சரி உங்க கோடீஸ்வர முதலாளிகளுக்கும் சரி, மக்களோட பிரச்சனைலாம்
புரியாது. பிரதம மந்திரிக்கும் அப்படித்தான்”னு பொரிஞ்சிருக்க. கியூவில நின்னவா உங்கூட செல்ஃபி எடுக்கறச்சே சிரிச்ச
முகமா இருந்து, உள்ள போனதும் பாங்க்காரா எடுத்த போட்டோக்கும் புன்னகைச்சுண்டு பழைய
நோட்டு நாலாயிரத்தை மாத்திண்டு வந்துட்ட.
”ஒரு எதிர்க்கட்சித்
தலைவரா நான் பண்ணினதுல என்ன தப்பு”ன்னா கேக்கற? சொல்றேன்.
மக்களோட கஷ்டத்துல பங்கெடுத்துக்கற அரசியல்
தலைவரா இருக்கறது ரொம்பப் பெரிய விஷயம். அந்த
மாதிரி தலைவர்கள் பத்தாயிரத்துல பத்து பேர் தேறினா ஜாஸ்தி. எப்படின்னா, ஒரு எதிர்க் கட்சித் தலைவர் மக்கள்
பிரச்சனைன்னு சொல்லி ஆளும் கட்சியை எதுத்து பப்ளிக்கா பேசினா அவர் மக்கள் கஷ்டத்துல
பங்கெடுக்கறார்னு ஆகாது. மக்கள் கிட்டயே போய்
“உங்க கஷ்டம் எனக்குப் புரியறது. ஆனா நாட்டை
ஆள்றவாளுக்குப் புரியலயே"ன்னு ஒரு பாட்டம் அழுதாலும் அவர் மக்கள் கஷ்டம் புரிஞ்சு அதுல
பங்கெடுத்துட்டார்னு அர்த்தமில்லை. இந்த நடவடிக்கைக்கெல்லாம் வேற காரணமும் ஜாஸ்தியா இருக்கு. இல்லை, இதான் வழி
இதான் அடையாளம்னா கம்யூனிஸ்டுகள், காக்கா குருவி கட்சிகள்ளாம் அதுல பேர் வாங்கி எல்லா
தேர்தல்லயும் அமோகமா ஜெயிக்கணும். அது நடக்கலயே?
’நம்ம கஷ்டத்துலேர்ந்து இந்தத் தலைவர் நம்மளைக்
கொஞ்சம் கரையேத்துவார்’னு மக்கள் ஒருத்தரைப் பாத்து உள்ளூர எப்ப நினைக்கறாளோ அப்பத்தான்
அவர் மக்கள் கஷ்டத்துல பங்கெடுத்துண்டவர்னு சொல்லலாம். பாங்க் வாசல்ல சிரிச்சுண்டே உங்கூட செல்ஃபி எடுத்துண்டாளே,
அவாள்ளாம் என்ன நினைச்சிருப்பா? தான் அப்பறமா பாத்து ரசிக்கறதுக்கும், தெரிஞ்சவாட்ட
அந்த போட்டோவைக் காட்டி பெருமைப் படறதுக்கும் தோதா நீ வந்தையேன்னு நினைச்சுப்பா. நீ கியூவில நிக்கறப்ப, பேசறப்ப கேமராவோட நிறைய டிவி,
பத்திரிகைக்காரா வந்தாளேன்னு நீ சந்தோஷப் பட்டிருப்ப. அவ்வளவுதான்.
“கால் கடுக்க கியூவில நிக்கறது மக்களுக்குக் கஷ்டமில்லையா? அந்த நேரத்துல ஒரு தலைவனா நானும் கூட நின்னா அவாளுக்கு ஆறுதல் இல்லையா?”ன்னு
நீ கேட்டா, அது நியாயமான கேள்வியா முதல்ல தோணும்.
ஆனா யோசிச்சா வேற சில விஷயமும் உனக்கு எதிர்க் கேள்வியா வரும்.
ரேஷன் கடை வாசல்லயும் ஏழைப்பட்டவா நூறு
இரணூறு ரூபாயோட கியூவில நிக்கறா. உனக்கும் ரேஷன் கார்டு இருக்கும், அதுக்கு ஒரு கடையும்
இருக்கும். அந்தக் கடை கியூவில எப்பவாவது நின்னு ”என் கார்டுல சக்கரை வாங்கறதுக்கு நிக்கறேன். காத்து நிக்கற இந்த ஏழை ஜனங்களுக்கு
ஆதரவா, ஆறுதலா இருக்கேன்”னு பேசிருக்கையா? குழாயடில குடி தண்ணிக்காக குடத்தோட வரிசை
கட்டி நிக்கறவாளுக்கு பக்க பலமா ஒண்ணா நின்னு ஜலம் பிடிச்சிருக்கையா? அது இல்லைன்னா,
அமெரிக்க தூதரகம் வாசல்ல விசா வாங்கணும்னு பழியா கியூவில நிக்கறாளே, அந்தக் கியூவில
நீ எப்பவாவது சேந்திருக்கையா? அதுவும் வேண்டாம். நீ அடிக்கடி ஏர்போர்ட் போறயே, அப்பல்லாம்
கியூவில நின்னுதான் போர்டிங் பாஸ் வாங்கிக்கறயா?
இங்கல்லாம் நீ கண்டிப்பா வரிசைல நிக்கணும், காத்திண்டிருக்கணும்னு சொல்லலை.
ஒரு நவயுக தலைவனா நீ சிந்திக்கவேண்டிய விஷயமும் செய்யவேண்டிய காரியமும் ஆயிரம் இருக்கு.
கியூவில நிக்காமயே நீ மக்களுக்கு சேவை பண்ணலாம்.
ஆனா, ”நான் கியூவில நின்னா மக்களுக்கு ஆதரவா இருக்கேன்னு அர்த்தம். அவாளுக்கு கஷ்டம்னா
அது எனக்கும் வரட்டும்”னு நீ நாலாயிரக் கியூவில மட்டும் சேந்து கித்தாப்பா சொன்னா,
மத்த கியூவில அப்பாவியா மக்கள் நிக்கும்போது, அவா சிரமத்தை நீ ஏன் மதிக்கலைன்னு கேள்வி
வருமா இல்லையா? அதுவும் நீ பொறக்கறதுக்கு முன்னாலேருந்து
மத்த கியூவில எல்லாம் ஜனங்கள் அடிக்கடி எல்லா வருஷத்துலயும் நிக்கறாளே? ஊஹூம். உன்னோட
வியாக்கியானம் இடிக்கறது.
நீ அந்த பாங்க் கியூவில சேராம இருந்தா,
அதுல நின்னவா யாரும் நீயோ வேற தலைவர்களோ வந்து நிக்கணும்னு ஆசைப்பட மாட்டா. ரேஷன் கடை, அது இதுன்னு சொன்னேனே, அங்கயும் அப்பிடித்தான். அவாள்ளாம் ஆஸ்பத்திரி நோயாளி மாதிரி தன் கஷ்டத்தை
நொந்துப்பா – அது வேற விஷயம். ஆனா அங்கல்லாம்
நீ போய் நின்னா, போரடிச்சுண்டு கியூவில நிக்கறவாளுக்கு நீ ஒரு ஜாலி பொழுது போக்கா இருப்ப. மத்தவாளுக்கு நீ வெறும் பொழுது போக்குப் பொம்மையா
இருக்கறது நன்னா இல்லை.
ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ, ஒரு அரசியல் தலைவர்னா பேச்சு
செயல் ரண்டுத்துலயும் அடுத்த கட்சி மனுஷாளுக்கு ஈடு குடுத்துண்டு இருக்கணும். அது சரிதான். உன் காங்கிரஸ் கட்சிலயே இதுக்கு ஜாம்பவான்கள்
இருந்திருக்கா. ஆளும் கட்சில உன் கொள்ளுத்
தாத்தா நேரு, ஆளும் கட்சி-எதிர்க் கட்சி ரண்டுலயுமே காமராஜ்னு உதாரணம் சொல்லலாம். அவாளல்லாம் நினைவு படுத்தறா மாதிரி உங்கப்பா வயசுக்காராளே
காங்கிரஸ் கட்சில இருந்ததில்லை. அதுனால, அந்தப்
பெரிய தலைவர்கள் மாதிரி நீ இருக்கணும்னு சொல்லலை.
ஆனா கேஜ்ரிவாலை ஞாபகப் படுத்தற காங்கிரஸ் தலைவர்னு நீ பேர் வாங்கணுமா என்ன?
ஏதோ உன்னைக் குறை சொல்லணும்னு இவ்வளவு பேசறேன்னு
நினைக்காத. நீ நின்ன கியூவில உனக்குப் பதிலா பிரதம மந்திரி மோடியே பழைய நோட்டு நாலாயிரத்தோட
வந்து நின்னிருந்தாலும், அவருக்கேத்த பிரசங்கம் பண்ணிருந்தாலும், அவருக்கும் இதே விமரிசனம்தான் பொருந்தும். சரிதான?
* * * * *
Copyright © R. Veera Raghavan 2016