Thursday, 22 September 2016

இவை பந்த் அல்ல, பந்தா!


    ‘பந்த்’ – அதாவது முழு அடைப்பு – ஒர் ஊரில் நடந்தால், கடையை மூடிய கடைக்காரர்களுக்கோ, வண்டியை ஓட்டாத ஆட்டோக்காரர்கள், லாரிக்காரர்கள், பஸ் கம்பெனிகளுக்கோ ஏதாவது பலன் உண்டா?  தங்கள் வேலைகளுக்காக பிற அலுவலகங்கள், கடைகளுக்குச் செல்லமுடியாதவர்கள் மற்றும் பந்த்-தினால் வேறு அவதிக்கு ஆளானவர்கள், பந்த் எதற்காக நடந்தாலும் எதோ ஒரு வகையில் திருப்தி கொள்வார்களா? இல்லை, அனைத்து மக்களுக்கும் இன்னல்தான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

     காவிரியில்  குறிப்பிட்ட  அளவு   தண்ணீர்   திறந்து  விடவேண்டும் என கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்திரவிட்டது. அது அமலாவதை எதிர்த்து கன்னட அமைப்புகள் கேட்டுக்கொண்டபடி கர்நாடகாவில் பல இடங்களில் அங்குள்ள அரசியல் கட்சிகள் ஆதரவோடு போராட்டங்கள் நடந்தன.  சென்ற 9-ம் தேதி அந்த மாநிலம் தழுவிய முழு அடைப்பும் நடந்தது. ரௌடிகளும் சமூக விரோதிகளும் தொடர்ந்து தீ வைப்பு மற்றும் இதர வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர்.  அதனால் ஏராளமான பொதுமக்கள் பல வகையிலும் சிரமத்தை சந்தித்தனர். அம்மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு கூடுதலாக அச்சமும் அவதியும் நேர்ந்தன.

         சென்ற 16-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை ஒரு பந்த் நடத்தப் பட்டது. ஹோட்டல்கள்கூட மூடப்பட்டன. கர்நாடகா வன்முறையில் தமிழர்கள் பாதிக்கப் பட்டதைக் கண்டித்தும் காவிரி நீர்ப் பங்கீட்டில் கர்நாடகாவின் போக்கைக் கண்டித்தும் நடந்த பந்த் அது. அதன் காரணமாக தமிழ் நாட்டிலுள்ள பொதுமக்களும் அல்லல் பட்டனர்.

        ஆந்திர     பிரதேச    மக்களும்    கஷ்டப்படும்படி  சென்ற  10-ம் தேதி அந்த மாநிலத்தில் ஒரு முழு அடைப்பு நடந்தது. மத்திய அரசு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்பதைக் கண்டித்து அந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் தலைமையில் நிகழ்த்தப்பட்ட பந்த் அது.

    இந்தியாவில்  பல  ஊர்களில்   பல  காரணங்களுக்காக அவ்வப்போது காணப்படும் பந்த் மாதிரித்தான் இப்போது மூன்று மாநிலங்களிலும் முழு அடைப்புகள் அரங்கேறின. எல்லா ‘பந்த்’களுமே அவற்றுக்கு அழைப்பு விடுக்கும் அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகள் தங்கள் இருப்பையும் சக்தியையும் பகிரங்கப் படுத்த நிகழ்த்தும் ’பந்தா’தான். அவற்றை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தால், சட்டச் சிக்கல் வராமல் பந்த்-ஐ மறைமுகமாக ஊக்குவித்து அதை வியாபார சங்கங்களும் கடைக்காரர்களும் உணருமாறு செய்து எதிர்க் கட்சிகளுக்கு நிகரான பந்தாவை அவர்களும் காட்டிக் கொள்கிறார்கள். பொதுமக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பந்த்-ஐ ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பொருட்டா என்ன?

        காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினையில் கர்நாடகா நடத்திய பந்த்-தினால் தமிழக அரசு தன் சட்ட நிலையை மாற்றிக் கொள்ளாது. தமிழ் நாடு நடத்திய பந்த் மூலமாக கர்நாடகாவும் தனது சட்ட நிலையை மாற்றாது. இரு மாநிலங்களிடையே கசப்புணர்வு ஏற்பட்டு மக்களையும் பாதித்தது என்பதுதான் இந்த பந்த்-களின் விளைவு. காலம் செல்லச் செல்ல நீர்த்தேவைகள் அதிகரித்து பருவ மழையின் அளவும் படிப் படியாக குறைந்து வரும்போது இரு மாநிலங்களுக்கும் தேவையான நீர் வளத்தைப் பெருக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை. அதை உணர்ந்து செயல்படும் முதிர்ச்சியும் பக்குவமும் மத்திய, மாநில அரசியல்வாதிகளிடம் இதுவரை காணப்படவில்லை என்பதால் சட்டம் என்ன சொல்கிறதோ, சுப்ரீம் கோர்ட் என்ன உத்திரவிடுகிறதோ அதன்படிதான் இந்த மாநிலங்கள் செயல்பட்டாக வேண்டும். ஆகையால் எங்கு பந்த் நடந்தாலும் அது தற்போதைய காவிரி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வாகாது. மற்றபடி சட்டத்திற்கு புறம்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவையே ஒரு மாநிலம் அமல்படுத்த மறுத்தால், அதற்குப் பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவும் விடாப்பிடியாக இருந்தால் அதன் விளைவுகளை வளரும் நம் ஜனநாயகத்தில் சுலபமாக கணிக்க முடியாது.

      பொதுவாகச் சொன்னால், ஒரு  பந்த்-தின்  நியாய அநியாயத்தை இப்படிப் பார்க்கலாம்.  ஒரு மாநில அரசையோ மத்திய அரசையோ நோக்கி பந்த் மூலமாக வைக்கப்படும் கோரிக்கை அல்லது கண்டனம் சரியானது என்றாலும், அது பந்த்-ஐ ஏற்கத் தகுந்த வழிமுறையாக்காது. அன்றைய தினம் பாதிக்கப்படும் பொதுமக்கள் எவரும் மனதளவில் முழு அடைப்பை விரும்ப மாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  அரசாங்கம் நடத்தும் எந்த ஓர் அரசியல் கட்சியும், பந்த்-தினால் ஒரு கோரிக்கை அல்லது கண்டனத்திற்கு தாங்கள் பணிகிறோம் என்ற தோற்றத்தைத் தர விரும்பாது.  அரசாங்கமே ஒரு பந்த்-ஐ எதிர்க் கட்சிகளோடு சேர்ந்து – அதாவது மறைமுகமாக சேர்ந்து – நடத்தினால், அந்த பந்த் அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதனால் அரசு செயல் படப் போவதில்லை. ஆகவே எப்படியும் பந்த் என்பது வெறும் பந்தாவாகத்தான் அமையும்.

     ஒரு பந்த்-திற்கு அழைப்பு விடுத்து நடத்திக் காட்டும் அமைப்போ அரசியல் கட்சியோ என்ன சொல்லும்? ”எங்கள் அச்சுறுத்தலுக்கும் கையை முறுக்கும் பின் நடவடிக்கைக்கும் பயந்துதான் கடைக்காரர்கள் எங்களை நொந்துகொண்டு கடைகளை மூடுகிறார்கள்” என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். “நாங்கள் பந்த்-திற்கான காரணத்தைச் சொல்லி வெறும் அழைப்புதான் விட்டோம். தங்களின் வியாபார சங்கங்கள் மூலமாக அதை அறிந்துகொண்ட கடைக்காரர்கள் உடனே ஒப்புக்கொண்டு தாமாகவே கடைகளை மூடுகிறார்கள். இதில் ஒரு வற்புறுத்தலும் இல்லை” என்றுதான் சட்டம் ஏற்கும்படி அந்த அமைப்போ அரசியல் கட்சியோ சொல்லும். ஆனால் சட்டத்தை ஏமாற்றப் பார்க்கும் எந்தப் பாசாங்கையும் சட்டம் விலக்கி வைக்க வேண்டும்.  அப்படியானால் பொது மக்கள் நலனில் சட்டம் என்ன செய்யலாம்?

    வியாபாரிகளைக் கட்டாயப் படுத்தி ஒரு பந்த்-ஐ நிகழ்த்துவது, அவர்களது அடிப்படை உரிமைகளை பாதிப்பதாகவும் அமையும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகளையும் அவமதிப்பதாகும். ஆகையால் பந்த் என்ற பெயரில் அது போன்ற கட்டாயப்படுத்தல் ஏதும் உண்மையில் நடக்காமல் சட்டம் தடுக்கலாம். எப்படி?

-  ’பந்த்  ஒழுங்குபடுத்தும்  கமிட்டி’  என்கிற  மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அதிகார மையம் வரவேண்டும். உதாரணமாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உறுப்பினர்கள் கொண்டதாக அந்த கமிட்டி இருக்கலாம்.

-      ஒரு   மாவட்டத்தில்     ஒரு    தேதியில்    பந்த்-திற்கு  அழைப்பு விட உத்தேசிக்கும் ஒரு அமைப்போ அரசியல் கட்சியோ பதினாலு நாட்கள் முன்னதாக அந்த உத்தேசத்தை கமிட்டியிடம் முன்-அறிவிப்பாகக் கொடுக்க வேண்டும். பந்த் தேதிக்கு நான்கு நாட்கள் முன்னர் அந்த மாவட்டத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பந்த்-திற்கு ’ஆதரவு உண்டு’ அல்லது ‘ஆதரவு இல்லை’ என்று ரகசிய மின்னணு வாக்குப் பதிவு செலுத்தும் வழிமுறையையும் ஏற்படுத்த வேண்டும். அந்த வாக்குப் பதிவைக் கமிட்டி நடத்த வேண்டும், வாக்குப் பதிவு செய்யாதவர்கள் ‘ஆதரவு இல்லை’ என்று வாக்கு செலுத்தியதாகவே கருத வேண்டும். 
  
- மாவட்டத்தில் உள்ள கடைக்காரர்களில் நூற்றுக்கு எழுபத்து ஐந்து பேராவது ஆதரவு தருகிறார்கள் என்று வந்தால்தான் அந்த மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட அந்த பந்த் நடக்கலாம்.  இல்லையென்றால் பந்த் நடக்கக் கூடாது.
  
-   எவரும் விளையாட்டுத்தனமாக கமிட்டியிடம் பந்த் அறிவிப்பு தருவதையும் தவிர்க்க வேண்டும். அதனால், ஒரு பந்த் அறிவிப்போடு சம்பத்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள கடைகளின் 5 சதவிகித உரிமையாளர்கள் கையொப்பமிட்ட ஆதரவுப் படிவங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். பந்த் தேதிக்கு ஏழு நாட்கள் முன்னர், கமிட்டி இந்த 5 சதவிகிதத்தினரிடம் ரகசிய மின்னணு வாக்குப் பதிவு எடுத்து, 4 சதவிகிதத்தினராவது பந்த்-திற்கு ஆதரவு உண்டு என்று வாக்களித்தால்தான் மீதமுள்ள கடைக்காரர்களிடம் வாக்கெடுப்பு நடத்தவேண்டும். அந்த 4 சதவிகித தகுதி-ஆதரவு கிட்டவில்லை என்றால், அடுத்த கட்ட வாக்கெடுப்பு இல்லாமலே அந்த பந்த் நடத்தமுடியாது என்று முடிவாக வேண்டும்.

-  இவ்வாறு நடக்கக்கூடிய எந்த முழு  அடைப்பும் ஒரு   நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே – அதாவது மதியம் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மட்டும் - அமலில் இருக்கவேண்டும். பந்த் என்பது ஒரு அடையாள ஆதரவு ஈர்ப்புதான், மக்களை இம்சிக்கும் ஆயுதம் அல்ல என்பதால், இந்த 4 மணி நேர அடையாள ஆதரவு போதுமானது. ஆஸ்பத்திரிகள், மருந்துக் கடைகள், ஹோட்டல்கள், விமானம், ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு பந்த்-திலிருந்து முழு விலக்கு உண்டு.  

-   வாக்குப் பதிவில் தகுந்த ஆதரவு கிடைத்து ஒரு பந்த்-திற்கான அழைப்பு அனுமதிக்கப் பட்டாலும், அன்றைய தினம் முழு அடைப்பில் பங்குபெறுவதா இல்லையா என்று ஒவ்வொரு வர்த்தகரும் தொழில் செய்பவரும் அவரவர் இஷ்டப்படி முடிவு செய்துகொள்ளலாம். ஏனென்றால் இது அவர்களது அடிப்படை உரிமைகள் சம்பத்தப் பட்டது - அவர்களின் ஒப்புதல் வாங்கியும் அவற்றை யாரும் பறிக்க முடியாது. 

        பந்த்-ஐ எதிர்த்துப் போடப்படும் ஒரு பொதுநல வழக்கில், மேலே சொன்னது போல் – அல்லது அதை இன்னும் செம்மைப் படுத்தி - சுப்ரீம் கோர்ட்டே பந்த்-ஐ ஒழுங்கு படுத்தும் வழிமுறையை ஏற்படுத்தலாம்.  கிரிக்கெட் ஆட்ட நிர்வாகத்தை கோர்ட் உத்திரவின் மூலம் ஒழுங்கு படுத்திய மாதிரி முழு அடைப்புகள் நடப்பதையும் ஒழுங்கு படுத்தலாம். பந்தாட்ட நிர்வாகத்தின் முறைகேடுகளை விட, பந்த்-ஆட்டத்தின் கேடுகள் பல நூறு மடங்கு மக்களை பெரிதும் பாதிக்கிறதல்லவா? 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016

Sunday, 11 September 2016

உ.பி-யில் காங்கிரஸ்: மானம் கட்டிலேறியது!


     அனைவருக்கும் நன்னெறிகள் சொல்லும் இதிகாசங்களும் புராணங்களும் இந்தியாவில் அறியப்பட்டது போல் வேறு எங்கும் இல்லை.  ஒழுக்கத் தவறுகளில் மிகச் சாதாரணமான பொய் பேசுதல் என்பதும் கூடாது என்று பாரத தேசத்தில் வலியுறுத்தப் பட்டது. “பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது” என்று சின்ன வயதில் பழமொழி கேட்டு வளர்ந்தவர்கள் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. இப்போது அதையே நாட்டு நிலைமைக்கு ஏற்ப ஒரு சிறு மாற்றத்துடன் – அதாவது “பொய் சொல்லாத வாய்க்கு” என்பதாக - பலர் நமட்டுச்சிரிப்புடன் புரிந்துகொள்ளலாம்.  தமிழ் தெரிந்தால், அதில் ராகுல் காந்தியும் ஒருவராக இருக்கலாம். ஏனென்றால் பொய்பேசுதலையும் தாண்டி, பொதுமக்கள் களவாடினால் கூடத் தவறில்லை என்று தெளிவாக தொனிக்கும்படி அண்மையில் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. ஏன் அப்படிப் பேசினார்?

    உத்திரப் பிரதேசம் ருத்ராபுரில் நடந்த ஒரு காங்கிரஸ் கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட காட்சி தேசிய செய்தியானது. ’கட்டில் சபைகள்’ என்ற பெயருடன் பல கிராமங்களில் ராகுல் காந்தி உரை நிகழ்த்தும் விவசாயிகள் கூட்டங்களின் முதல் நிகழ்ச்சி அந்த கிராமத்தில் செப்டம்பர் 6-ல் நடந்தது. அங்கு அவர்கள் அமர்ந்து தலைவரின் பேச்சைக் கேட்பதற்காக மரத்தால் ஆன கயிற்றுக் கட்டில்கள் வாடகைக்கு எடுத்துப் போடப் பட்டன. கூட்டம் முடிந்தது. கட்டில்களில் உட்கார்ந்து பேச்சைக் கேட்டவர்கள் ஆயிரக் கணக்கான கட்டில்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.  பல வட மாநில கிராமங்களில் அது போன்ற கயிற்றுக் கட்டில்கள் பரவலாகப் பயன்படுத்தப் படும். அதனால்தான் ஊருக்கு ஊர் ஆயிரக் கணக்கில் கட்டில்களைக் கிடத்தி கூட்டங்கள் நடக்குமாறு திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி.

    ருத்ராபுர் கூட்டதிலிருந்து கட்டில்களைத் தூக்கிச் சென்றவர்களைப் பல செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தார்கள், விடியோவும் எடுத்தார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் வெட்கம் எதையும் காட்டாமல் நகர்ந்தார்கள் கட்டில் சுமந்தவர்கள்.  ‘இது சரிதான், இது நியாயம்தான்’ என்கிற மனோபாவத்தில்தான் அவர்கள் தென்பட்டார்கள்.  சட்டத்தின் பார்வையில் அவர்கள் செய்தது திருட்டாகும்.  ஆனால் அவர்கள் திருட்டுத் தொழில் செய்பவர்களோ, வழக்கமாக யாருடைய பொருள் எங்கு கிடைத்தாலும் திருட நினைப்பவர்களோ அல்ல. அவ்வாறு செய்பவர்கள் திருட்டை ரகசியமாக செய்வார்களே தவிர, கட்டில் எடுத்தவர்கள் மாதிரி ‘ஹாயாக’ பகிரங்கமாக செய்யமாட்டார்கள்.  இரண்டு நாட்கள் முன்பு – செப்டம்பர் 9-ம் தேதி – உத்திரப் பிரதேசம் அம்பேத்கர் நகர் மாவட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்ற கட்டில் சபைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கும் வெறுங்கையோடு வந்தவர்கள் பலர் கட்டில்களோடு வீடு திரும்பிய செய்தியும் உண்டு.

    சட்டம் செய்யமுடியாத ஒரு காரியத்தை நாமும் காங்கிரஸ் கட்சியும் செய்யலாம். அதாவது கட்டிலை எடுத்துப் போனவர்களின் ஏழ்மையையும் மனதில் கொண்டு அவர்களை மன்னிக்கலாம். உண்மையில் அவர்களின் செய்கைக்கு ஏழ்மையைத் தவிர இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது “எங்களைத் தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்துக் கொழுக்கும் அரசியல் கட்சிகளிடமிருந்து இந்த சிறு ஆதாயமாவது எங்களுக்குச் சேருவது நியாயம்தான்” என்கிற உள்ளார்ந்த நம்பிக்கையும் ஒரு காரணம். ஆகையால்தான் அந்தத் தவறையும் அவர்கள் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் செயலை ராகுல் காந்தியே பின்னர் நியாயப் படுத்தும் தொனியில் பேசியதுதான் மன்னிக்க முடியாதது.

     ருத்ராபுர் செய்தி ஊடகங்கள் வாயிலாக நாடெங்கும் பரவியது. இதனால் காங்கிரசுக்குக் கெட்ட பெயர் என்று எண்ணிய ராகுல் காந்தி, தன் கூட்டத்திற்கு வந்தவர்கள் கட்டில்களை எடுத்துச் சென்றது தவறல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். ஆகையால் மறுநாள் கோரக்பூரில் பேசும்போது “விவசாயிகள் கட்டில்களை எடுத்துச் சென்றால் அவர்களைத் திருடர்கள் என்கிறார்கள். ஆனால் விஜய் மல்யா மாதிரி ஒரு தொழிலதிபர் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பித் தராமல் கம்பி நீட்டினால் அவரைக் கடன் தவறியவர் என்கிறார்கள்” என்று சொல்லி வைத்தார். இங்குதான் ராகுல் காந்தி தவறு செய்கிறார்.

     விஜய் மல்யா வங்கிக்கடன் வாங்கியதே குற்றமல்ல.  அதைப் பின்னர் முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என்பதால் அவர் கடன் தவறியவர் ஆனார். அதற்கான சட்ட நடவடிக்கை அவர்மீது இப்போது எடுக்கப் பட்டிருக்கிறது.  ஆனால் ருத்ராபுரில் கூட்டத்துக்கு வந்தவர்கள் கட்டிலைத் தூக்கி நகர்ந்தபோதே சட்டப்படி குற்றம் செய்தவர்கள். இது தெரியாமல் அல்லது தெரியாத மாதிரி இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த பிரதம மந்திரி வேட்பாளர்!


      ருத்ராபுர்  நிகழ்ச்சியைப் பற்றிப் பேசவேண்டும்  என்றால் ராகுல் காந்தி என்ன சொல்லி இருக்கவேண்டும்? “ருத்ராபுர் விவசாயிகளே, எனது கூட்டத்திற்கு வந்திருந்த உங்களில் சிலர் கூட்டத் திடலில் இருந்த கட்டில்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றீர்கள். உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுமாறு உங்களை எழ்மை நிலையிலேயே இதுநாள் வரை வைத்து ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ் கட்சியும்தான் என்பதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது. உங்கள் தவற்றின் பெரும் பகுதிக்கான காரணமும் பொறுப்பும் உங்களைச் சேராது, காங்கிரஸ் கட்சியையே சேரும். சுதந்திரத்தில் இருந்து ஐம்பது வருஷத்துக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சி காங்கிரஸ் என்ற முறையில் இதை வருத்தத்தோடு ஒப்புக் கொள்கிறேன். ஒரு சாதாரணக் கட்டில் வாங்கும் அளவிற்குக் கூட சக்தியற்றவர்களாக உங்களை வைத்திருந்ததற்காக எங்கள் கட்சியின் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன். வரும் காலங்களில் உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக எனது கட்சி தீவிரமாகச் செயல் படும்” என்று அவர் பேசியிருக்கலாம்.

      ராகுல்   காந்தி    இப்படிப்   பேசி   இருந்தால்   அதில் பொய் இருக்காது. பொதுமக்கள் செய்த தப்பை நியாயப் படுத்துவதாகவும் ஆகாது. மாறாக, அவர் பலரின் மனதைத் தொட்டிருக்கக் கூடும். அவரின் நம்பகத்தன்மையும் மேலும் வலுப்படும்.  ஏன், அது போன்ற பேச்சின் விளைவாக ஒருவராவது கட்டிலைத் திருப்பிக் கொடுக்க நினைத்தாலும் ஆச்சரியம் இல்லை.  ஆனால் அப்படியான வார்த்தைகளை உணர்ந்து பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியில் எந்தத் தலைவருக்கும் நேர்மை இருக்காது, பணிவும் துணிவும் கிடையாது. ஒரு காலத்தில் நேர்மையும் பணிவும் துணிவும் தழைத்து ஓங்கிய அக் கட்சியில் அந்தப் பண்புகள் மீண்டும் வளர்ந்து கட்சித் தலைமையை எட்டுவது நம் ஜனநாயகத்திற்கு அவசியம். அது நடக்கும் வரை கட்சியின் மானத்தைக் காப்பாற்ற ஏதோ ரீதியில் மல்யாவைத்தான் நம்ப வேண்டும்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016