Tuesday, 7 June 2016

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : முகமது அலி, மிஸ் பண்ணிட்டேள்!


    முகமது அலி, நீங்க உலகத்தை விட்டுப் போய் நாலு நாளாச்சு. அப்படின்னா உங்ககிட்ட இப்ப எப்படிப் பேசமுடியும்னு எங்க ஊர்க்காரா கேக்க மாட்டா. மேலோகம் போய்ட்டு ஆவியா வரவாளே பூலோகத்து மனுஷாட்ட பேசலாம்னு நம்பறவா நாங்க நிறையப் பேர்.

   சந்தேகமே வேண்டாம், நீங்க ஒரு அசாதாரண மனுஷர். குத்துச் சண்டை விளையாட்டுல இருந்த உங்களை உலகம் பூரா சின்னவா பெரியவான்னு ஆ-ன்னு பார்த்தா. அதைவிடப் பெரிய விஷயம், உங்களைப் பாத்தவா பாக்காதவான்னு பல பேரும் உங்களை நேசிச்சா. குத்துச் சண்டைல நீங்க எதிரிகளை துவம்சம் பண்ணினதப் பாத்து பரவசமடைஞ்ச ரசிகர்களைவிட உங்க போட்டோவைப் பாத்தோ உங்களைப் பத்தி கேள்விப் பட்டோ உங்களைப் பிடிச்சுப் போனவா அதிகம் பேர். அந்த மாதிரி மனுஷாளுக்கு குத்துச் சண்டை பிடிக்காட்டாலும் அதுலயே கொடி கட்டிப் பறந்த உங்களைப் பிடிச்சது. கோதாவுல ராட்சசனா இருந்த நீங்க வெளில நடமாடறபோது உலக சமாதான தூதர் மாதிரி தெரிஞ்சேளே, அதுக்குல்லாம் காரணம் சொல்ல முடியாது.  உங்க முகராசின்னு சொல்லலாம், அவ்வளவுதான்.

  பன்னண்டு வயசுல குத்துச் சண்டை போட ஆரமிச்சு நாப்பதை நெருங்கறவரைக்கும் முஷ்டியைச் சொழட்டினேள். அதாவது இருவத்தெட்டு வருஷம் ஆக்ரோஷமா குத்தைக் குடுத்து குத்தை வாங்கினேள். எந்த மனுஷ தேகம் இதெல்லாம் தாங்கும்? கடைசி முப்பத்திரண்டு வருஷமா பார்கின்சன் வியாதியால கஷ்டப்பட்டேள். ஒரு மனுஷன் முப்பது வருஷத்துக்கு மேல உசுரு போறவரைக்கும் உடம்பு நடுங்கிண்டு இந்த வியாதி உபாதைல அவதிப் படறது எப்பேர்ப்பட்ட துன்பம்? இதையும் அவர் தானே வரவழச்சுக்கறது எவ்வளவு அறிவிலித்தனம், எவ்வளவு கொடுமை சொல்லுங்கோ?

நினைச்சுப் பாக்கறேன். பதினெட்டு வயசுல குத்துச் சண்டைல ஒலிம்பிக் தங்கம் வாங்கினேளே, அப்பவே நல்ல ஆத்மா ஒர்த்தர் உங்களுக்கு இப்படி ஏற்படுத்திக் காட்டமுடியும்னு வச்சுக்குங்கோ. என்னன்னா, நாப்பதுக்கப்பறம் குத்தோட வந்த வியாதியெல்லாம் உங்களுக்கு பதினெட்டு வயசுலயே வரப் பண்ணி ஆட்டியெடுத்து, ஒரு வருஷம் கழிச்சு திடீர்னு உங்களை நன்னா குணமாக்கிட்டு ”குத்துச் சண்டை போடறவாளுக்கு பின்னாடி இந்த வியாதி வேதனைலாம் வரும், சாகற வரைக்கும் இப்பிடித்தான் பிடுங்கி எடுக்கும்”னு டாக்டர் மூலமாவே சொல்லிருந்தா, நீங்க குத்துச் சண்டைக்கே கும்பிடு போட்டிருப்பேள். “இல்லை, அப்பவும் நான் தொடர்ந்து குத்துச் சண்டை போட்டிருப்பேன்“னு நீங்க சொல்லமாட்டேள்.  அடுப்புல விரல் நுனியை லேசா சுட்டுண்டாலே, பின்னாடி அடுப்புப் பக்கம் மனுஷா எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கா?

நீங்க அனுபவிச்ச வியாதி வேதனைல நூத்துல ஒரு பங்கு கூட உங்களைக் கொண்டாடறவா பங்கெடுதுக்க முடியாது, அதைப் பத்தின கவலையும் அவாளுக்கு இருக்காது. அவா கொண்டாட்டத்துக்கு நீங்க ஒரு பொம்மை, அவ்வளவுதான்.

குத்துச் சண்டை போட்டவா எல்லார்க்கும் உங்களுக்கு வந்த வியாதியே வராம இருக்கலாம்.  இருந்தாலும் ரிடையர் ஆகும்போது வருஷக்கணக்கா அடி வாங்கின தேகம் அவாளுக்கும் எதேதோ அவஸ்தையைக் குடுக்கும்.  அப்பறம் இது என்ன விளையாட்டு? சரி, குத்துச் சண்டை போடறவாளையும் விட்டுடலாம். அவா தேகம், அவா பாடுன்னு வச்சுக்கலாம். ரண்டு பேர் ஒர்த்தரை ஒர்த்தர் முஷ்டில தாக்கறது, மூஞ்சி வீங்கி ரணகளப் படறது, ஒர்த்தர் எம அடி வாங்கி எழ முடியாம விழறது, இதெல்லாம் மத்தவா பாத்து ரசிக்கற விளையாட்டா? குரூரம்னா அது?

கிரிக்கெட்டோ புட்பாலோ விளையாடும்போதும் ஆடறவாளுக்கு அடிபடலாம். அது ஒரு விபத்து. ஆனா அடி குடுக்கறதுக்கும் அடி வாங்கறதுக்கும் மட்டுமே ஒரு ஆட்டம்னா அது விளையாட்டுல சேத்தி இல்லை. விளையாட்டு வினையாகப்டாதுன்னு நாங்க சொல்லுவோம். வினையே விளையாட்டுமாகாது. இன்னொண்ணு பாருங்கோ. ரண்டு குழந்தைகள் புட்பாலோ கிரிக்கெட்டோ தத்து பித்துன்னு விளையாடினா எல்லாரும் ரசிப்பா. ஆனா குழந்தைகள் குஸ்தி போட்டா பாக்கறவா அவாள விலக்கிவிட்டு ”சண்டை போடாதீங்கோ”ன்னுதான் சொல்லுவா. ஏன்னா வெறுமனே இன்னொருத்தரை காயப் படுத்தணும்னு கையை ஓங்கினா தப்புங்கறது சிம்பிளான விஷயம்.

உங்க பேருக்கும் புகழுக்கும் இன்னொரு முக்கிய காரணம் இருக்கு. வியட்னாம் போர் இருபது வருஷமா நடந்தப்போ, ஒரு நேரத்துல நீங்க குத்துச்சண்டைல பிரபலமா இருந்தேள்.  அப்ப கட்டாய ராணுவ சேவைக்கு அமெரிக்க அரசாங்கம் உங்களைக் கூப்டு வியட்னாம் போகணும்னு சொன்னபோது நீங்க மாட்டேன்னேள். ”வியட் காங் படைகளோட எனக்கு ஒண்ணும் சச்சரவில்லை’’ன்னு நீங்க 1966-ல சொன்னதும் பிரசித்தியாச்சு. அரசாங்கம் உங்க மேல கேஸ் போட்டு அது சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் போய் உங்களுக்கு தண்டனை கிடையாதுன்னு ஆனது.  அப்ப மூணரை வருஷமா நீங்க குத்துச் சண்டை போடமுடியாம இருந்தேள்.  அதோட போர்க்களம் போகாமயும் பொழச்சேள் – அந்தப் போரோட நியாய அநியாயம் வேற விஷயம். அந்தப் போரை எதிர்த்தவாளுக்கு நீங்க வியட்னாம் போகமாட்டேன்னு சொன்னது பெரிய உந்துசக்தியா இருந்தது. இதுனாலயும் உங்களுக்குப் புகழ் சேர்ந்தது.  ஒரு குத்துச் சண்டை வீரர் போரை எதிர்க்கறேன்னு ஆத்மார்த்தமா சொல்ல முடிஞ்சா வினோதம்தான்.  போர்ங்கறதே ஒரு தேசம் துப்பாக்கி வெடிகுண்டு சகிதமா போடற குத்துச் சண்டைதான அலி?

குரூரத்தைப் பாக்கறது பல பேருக்குள்ள ஆர்வம். தெருவுல ஒரு ஆக்சிடெண்ட் நடந்தாலே வரவா-போறவா அவா வாகனத்தைக்கூட நிறுத்தி இறங்கி பாத்துட்டு போறது உண்டு. கோளாறான இந்த ஆர்வத்துலதான் பல மனுஷா காசு குடுத்து குத்துச் சண்டையும் பாக்க வரா.  மத்தபடி அவாளுக்கு குத்துச் சண்டை போடறவா மேல பெரிய அபிமானம்லாம் கிடையாது. கிரிக்கெட், புட்பால், பாஸ்கெட்பால் மாதிரி ஆடினவா ரிடையர் ஆகி பல வருஷம் ஆனாலும் ரசிகர்கள் அந்த விளையாட்டுக்காரா மேல மதிப்பு வச்சிருப்பா. குத்துச் சண்டைல ரிடையர் ஆகி வயசானா யாரும் சீந்தரதில்லை பாத்தேளா? ஆனா உங்களுக்கு இருந்த வசீகரத்துனால நீங்க விதிவிலக்கா இருந்தேள். மூச்சு போறவரை உங்க பிராபல்யம் குறையல. அந்த சக்தில, நீங்க ஜீவிச்சிருக்கும்போதே ஒரு காரியம் பண்ணிருக்கலாம்னு நினைச்சுக்கறேன்.

உங்க கடைசி காலத்துலயாவது நீங்க குத்துச் சண்டையோட குரூரத்தை புரிஞ்சுண்டு, ”நான் இப்ப உணர்ரேன். குத்துச் சண்டை மனுஷத் தன்மை இல்லாத விளையாட்டு.  இதை விட்டொழிக்கறது சரி”ன்னு நிஜமான கண்ணீரோட ஒரு வார்த்தை சொல்லிருந்தேள்னா அதுக்கு உண்டான பவர் அலாதி.  அந்த வாக்கு ஒரு பொதுச்சேவைக்கு வழி பண்ணி உங்க மதிப்பு இன்னும் பிரகாசமா ஆயிருக்கும்.  வேற எந்த குத்துச் சண்டை வீரர் அதைச் சொன்னாலும் அதுக்கு செல்வாக்கு கிடைக்காது. நீங்க அதுலயும் விதிவிலக்காத்தான் இருந்திருப்பேள்.  மிஸ் பண்ணிட்டேளே முகமது அலி!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016