Monday 26 December 2016

ராகுல் காந்தியின் எச்சரிக்கைப் பாடல்: பம்-பம்-பம்! பூகம்பம்!


        ”பாராளுமன்றத்தில் என்னைப் பேசவிடுவதில்லை.  பிரதம மந்திரி மோடியைப் பற்றிய விவரங்களை நான் அங்கு அவிழ்த்துவிட்டால் பூகம்பமே வெடிக்கும்! கபர்தார்!”  என்று சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார் ராகுல் காந்தி.  எப்படியோ அவரும் தன் வாயைக் கட்டி பாராளுமன்ற வளாகத்தைக் காத்ததற்காக ஜனநாயம் அவரை வாழ்த்தட்டும்.

        ராகுல் காந்தியின் இந்தப் பேச்சில் பல விஷயங்கள் தோன்றுகின்றன.  முதலில், எதை யாரிடம் எப்படிப் பேசுவது என்பதற்கு ஒரு வரைமுறை உண்டு. 6 மாதக் குழந்தையிடம் பேசும் பெற்றோர்கள் தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்தி வித விதமான சப்தங்கள் எழுப்புவார்கள்.  மற்ற பெரியவர்கள், ஐந்து வயதுக் குழந்தையிடம் அன்பை அதிகம் காட்டிப் பேசுவது, பதிநான்கு-பதினைந்து வயதுக்கு மேற்பட்ட இளம் பருவத்தினரிடம் ஆதரவு காட்டி அக்கறையோடு அவர்கள் நிலைக்கு வந்து பேசுவது, தங்களைவிட வயதில் இன்னும் பெரியவர்களிடம் மரியாதை காட்டிப் பேசுவது என்பது பொருத்தமாக இருக்கும். 

   ஒரு அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதி மீது ஒரு குறிப்பிட்ட ஊழல் குற்றச்சாட்டை மக்களின் முன் வைத்துப் பேச முனைந்தால், அதை உறுதியாகவும் தெளிவாகவும் மட்டும் சொல்லி விட்டுவிடுவது நல்லது. அதனால் குற்றம் சொல்பவர்மீது மானநஷ்ட வழக்கு ஏதும் வந்தால் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு அவர் தகுந்த ஆதாரங்களுடன் தன்னை முன்கூட்டியே தயார் செய்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.  இது தவிர, தான் வெளியிடும் குற்றச்சாட்டை ஒருவர் எப்படி டாம்பீகமாகச் சொன்னாலும், இடி, மின்னல், சூராவளி, பூகம்பத்தை வரவழைத்துப் பேசினாலும் அதிகப் பலன் ஏதும் இருக்காது.  இது ஏதோ மோடிக்கு ஆதரவாகச் சொல்லப் படுவதில்லை. 

     இந்தியாவில் ஒரு அரசியல்வாதி மற்ற அரசியல்வாதி மீது எப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை வைத்தாலும் அது மக்களிடம் எடுபடுவதில்லை.  ஏனென்றால் மக்களின் நினைப்பு பொதுவாக இப்படித்தான் இருக்கும்; ‘அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள். அனைவரும் அவர்களின் சகல சௌபாக்கியத்தை மட்டும் வளர்த்துக் கொள்பவர்கள் – ஏதோ போகிற போக்கில் நமது ஓட்டிற்காக நமக்கும் ஒன்றிரண்டு செய்வார்கள். இதில் என்ன இவர் அவரைப் பற்றிப் பழி பேசுவது, அவர் இவரைப் பற்றிக் குற்றம் சொல்வது?’  

      ஒரு பிரபல  அரசியல்வாதியின் மீது  கோர்ட்டில் லஞ்ச  ஊழல் வழக்கு நடந்து அவர் தண்டனை பெற்றாலும் மக்கள் உடனே அடுத்த தேர்தலில் எதிர்க் கட்சிக்குத் தங்கள் ஓட்டைத் திருப்பிவிடுவதில்லை.  ‘ஏதோ, எதிர்க் கட்சியின் பிரபல அரசியல்வாதி மீது வழக்கு வரவில்லை – அவர் முந்திக்கொண்டு இவர்மீது வழக்கைப் போட்டுவிட்டார் - அல்லது தனக்கு எதிரான ஆதாரம் எளிதாகச் சிக்கிவிடாமல் ஊழல் செய்திருக்கிறார் – எது என்னவோ, கோர்ட் தண்டனை பெறவில்லை என்பதால் எதிர்க் கட்சி அரசியல்வாதி சுத்தமானவர் என்று ஆகாது’ என்றெல்லாம் மக்களின் மனதில் நிழலாடும்.   பல மணி நேரம் நீட்டி முழக்கிச் சிந்தித்து மக்கள் இந்த நினைப்பை அடைவதில்லை. மின்னல் ஒளி நேரத்தில் அவர்களுக்கு இந்த எண்ணம் விலாவாரியாக இல்லாவிட்டாலும் மங்கலாகத் தோன்றிவிடும் என்று சொல்லலாம். இது பழக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி பலருக்கும் அடிமனதில் அபிப்பிராயங்கள் ஏற்படுவது மாதிரித்தான்.

      அதே  ரீதியில்  இன்னொரு  விஷயம்.   ஒரு  அரசியல்  தலைவர் எதிர்க்கட்சி அரசியல் தலைவர் மீது லஞ்ச ஊழல் வழக்குகள் போட்டு அவை தள்ளுபடி ஆனாலும், ‘இவர் பொய் வழக்குகள் போட்டவர், இனிமேல் இவருக்கும் இவர் கட்சிக்கும் ஓட்டுப் போடக் கூடாது’ என்றும் மக்கள் முடிவு செய்வதில்லை. இதற்கெல்லாம் அப்படியும் இப்படியுமாக நிரூபணம் வேண்டுமா?  அகில இந்தியாவிலும் ஊழல் வழக்குகள் போட்ட பிரபல அரசியல்வாதிகளையும் அவற்றை எதிர்கொண்ட பிரபல அரசியல்வாதிகளையும்   நினைத்துப் பாருங்கள், அது போதும்.

     ஒரு  ஒப்பீட்டையும்   நீங்கள் கவனிக்கலாம்.  அமெரிக்காவில் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் ஆளானவர் என்ற ஒரு தலைவரின் அரசியல் வாழ்க்கை அதோடு முடிவுக்கு வரும். ஏனென்றால் அந்த நடத்தை அங்கு அபூர்வமானது, விதிவிலக்கானது. உதாரணம், வாடர்கேட் ஊழல் ஆதாரபூர்வமாக வெளிப்பட்டு அதில் சிக்கிய பின் ஜனாதிபதி பதவியிலிருந்து நிக்சன் ராஜினமா செய்தது.  அது அவர் இரண்டாம் முறை ஜனாதிபதியாக இருந்தபோது நிகழ்ந்த ராஜினமா. அமெரிக்காவில் மூன்றாவது முறையாக ஒருவரே ஜனாதிபதி பதிவிக்குப் போட்டியிட முடியாது என்றாலும், ஊழலால் சரிந்த மக்கள் செல்வாக்கை அவர் மீட்கமுடியாது. இந்தியாவில் அப்படி இல்லை.  இதற்கும் முன் உதாரணம் உண்டு.

   ஜனநாயகத்தில்  வாடர்கேட்  ஊழலைவிட  மக்களையும்  பிற கட்சித் தலைவர்களையும் கடுமையாகப் பாதித்தது, நமது நாட்டில் இந்திரா காந்தி பிரகடனம் செய்த அவசர நிலை.  அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி இதுபோன்ற காரியத்தைச் செய்து பின்னர் தேர்தலிலும் ஜெயிப்பார் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் இந்தியாவில் அவசர நிலைக் கொடுமைகளுக்காக இந்திரா காந்தி தோற்கடிக்கப் பட்டாலும் மீண்டும் அவரது கட்சி தேர்தலில் ஜெயிக்குமாறு மக்கள் அவர் தலைமைக்கு வாக்களித்து அவர் பிரதம மந்திரி ஆனார்.  ஆகவே வெறும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒரு இந்திய அரசியல் பிரபலத்தைப் பெரிதாக ஒன்றும் அசைப்பதில்லை.

    சரி, இதனால் பூகம்பப்  பயம்  காட்டிய ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? இந்திய அரசியல் நிலையில் வெறும் ஊழல் குற்றச் சாட்டுகளை எதிர் அணியினர் மீது சுமத்துவது ஒரு அரசியல்வாதிக்கு ஏற்றத்தையும் மக்கள் செல்வாக்கையும் தராது. இது அனைவருக்கும் பொருந்தும் – ராகுல் காந்திக்கும் மோடிக்கும் சேர்த்து.  ஈர்ப்பு சக்தி (charisma) கொண்டு மக்கள் செல்வாக்குப் பெறுவது என்பது ஒன்று.  அது ராகுல் காந்திக்கு இல்லை.  அது இல்லாமல், இப்போதைய அரசியல் வெளியிலும் ஆட்சியிலும் பெருவாரியான மக்களின் ஆதரவை சிறுகச் சிறுக சேகரித்து வெற்றிகள் காண்பிக்க ஒரே வழிதான் உண்டு.  அதை அவர் பின்பற்ற யோசிக்கலாம். 

      ஒரு தலைவர் ஆட்சியில் இருந்தால், பல்துறை வல்லுனர்களுடன் கைகோர்த்து, மக்கள் சேவையில் முழுமூச்சுடன் இறங்கி, அதற்கான திட்டங்களை செயல்படுத்தி, ’பொருளாதார முன்னேற்றம் எற்படுகிறது, அது நம்மையும் வந்து அடைகிறது’ என்பதை மக்கள் உணருமாறு செய்ய வேண்டும்.  அதுதான் மக்களின் நிலைத்த நம்பிக்கையையும் ஆதரவையும் கொண்டுவரும். அது இல்லாமல் வெறும் இலவசங்கள் மட்டும் கொடுத்தால் மக்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அரசுப் பணத்திலிருந்து இலவசங்கள் அளிப்பதை எளிதாக எந்தக் கட்சி அரசியல்வாதியும் செய்யலாம்.   ’வேறு வழியில்லை.  இது நம் விதி. இது எப்போதும் வரலாம், எப்போதும் போகலாம். இது நாமே சம்பாதிப்பது, நம் காலிலேயே நிற்பது, அதோடு சேர்ந்த கௌரவமான வாழ்க்கை போல ஆகாது’ என்று பல தரப்பு இளைஞர்களும் உணர ஆரம்பித்துவிட்டனர்.

     ஆட்சி   செய்யும்   அரசியல்   தலைவர்,   நீடித்து   நிற்கும் நிலையான முன்னேற்றத்தை மக்களின் வாழ்வில் காட்ட முனையவில்லை என்றால், எதிர்கட்சியில் இருக்கும் தலைவர் தன்னால் அவ்வாறு செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்து அவர்களின் ஆதரவை மெள்ள மெள்ள சேகரித்து அந்த அடிப்படையில் ஆட்சிக்கு வந்து அந்த நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதுதான் ஒரு அரசியல்வாதிக்கு நீண்டகால வெற்றியையும் செல்வாக்கையும் கொடுக்கும் என்கிற நிலை வந்துவிட்டது. இதை ராகுல் காந்தி உணரவேண்டும். பிறகு, இந்த வழியில் செல்வதற்கான தகுதி தனக்கு இருக்கிறதா என்பதையும் உணர்ந்து அதை மேம்படுத்திக் கொள்வது பற்றியும் அவர் யோசிப்பது அவசியம்.

     மேலே சொன்ன வழியைப் பின்பற்றி  சில மாநிலங்களிலாவது காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைப்பது அல்லது கொண்டுவருவது பற்றி ராகுல் காந்தி முயற்சிக்கலாம்.  இவ்வாறு காங்கிரஸ் எழும்புவது அந்தக் கட்சிக்கும் நாட்டுக்கும் அவசியம். அதற்கு ராகுல் காந்தி அடித்தளம் அமைக்க முடிந்தால், பின்னர் அவரே  “தம்-தம்-தம்! வசந்தம்!” என்று குதூகலமாகப் பாடலாம்.

* * * * *


Copyright © R. Veera Raghavan 2016

4 comments:

  1. ராகுலரின் கட்சி குச்சியானதால், அவர் பேச்சுக்கொடுத்துப்பார்க்கிறார். அது உளரலாக மாறிஅயது இயல்பே. அவங்க கட்சிக்காரங்க்க்களே அவித்துப்போட்டுட்டு சிரிக்கிறாங்க.

    ReplyDelete
  2. அவரது பேச்சுக்கு ஷீலா தீக்ஷித் இப்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டாஅர்! செல்ஃப் கோல் போட்டுவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியே நினைத்தாலும், ராகுலைக் காப்பாற்ற அக்கட்சி எடுக்கும்முயற்சிகள் வீணானவையே!

    ReplyDelete
  3. உங்களது கருத்துக்கள் அருமை, வரவேற்கத்தக்கது. சோளக்காட்டு பொம்மை கூட தான் இருப்பதை உணத்தவேண்டும் என்பதர்காக தொள தொள சட்டை பேண்ட் அணிவிப்பது போல், இவர் ஏதாவது பேத்திக்கொண்டிருக்கிரார், பொழுது போகவேண்டும் என்பதற்காக.

    ReplyDelete
  4. Your piece of advice is valuable for a long term benefit of any political party. No doubt. However I feel, it is equally important for any leader to expose the wrong doings of the opponent party. Merit in that allegation has to be evaluated by the public.

    ReplyDelete