Thursday, 13 July 2017

பங்களாக்காரனும் பழங்குடி மக்களும்


நினைத்துக் கொள்ளுங்கள் - உங்களுக்கு மிக விஸ்தாரமான ஒரு பங்களா இருக்கிறது. பங்களாவில் ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி உண்டு.  தண்ணீர் வரவழைத்து அதில் நிரப்ப இருக்கும் சூப்பர்வைசரே, நிரப்பும் போது  கமுக்கமாக  அண்டா அண்டாவாகத் தன் பேரப்பிள்ளைகள்  குடும்பத் தேவை வரை அள்ளிக் கொள்கிறார். அவர் கீழ் வேலை செய்யும் பணியாாட்கள் பலரும் நைசாக வாளி வாளியாகத் தங்களுக்காக மொண்டு கொள்கிறார்கள். தண்ணீர் கொண்டு வர வேண்டிய சில லாரிக்காரர்களும் வராமல் டேக்கா கொடுக்கிறார்கள், அல்லது டெலிவரி செய்யவேண்டிய அளவை மறைத்துக் குறைவாகக் கொட்டுகிறார்கள் - இப்படியும் நீரை அபகரிக்கிறார்கள்.  இதுவும் போக, தொட்டியில் சிலர் திட்டமிட்டுத் துளைத்த  சிறிய பெரிய ஓட்டைகள் வழியே நீர் விரயமாகிறது.      

அப்படியானால் பங்களாக்காரன் தலையில் பலபேர் மிளகாாய்த் தோட்டம் வளர்த்து அரைக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?

பொதுமக்களாகிய நாம்தான் பங்களா சொந்தக்காரர். நாம் செலுத்துகிற வரிகள்தான் நம் தண்ணீர்த் தொட்டியில் சேர்ந்து நமக்குப் பயன் தரவேண்டிய நீர். "போதும்மற்றதெல்லாம் சட்டெனப் புரிகிறது" என்கிறீர்களா? சரிதான்.

சில சமயம் அண்டாக்காரனை விட வாளிக்காரன் அதிகமாக எடுக்கிறான்.  ஓட்டை வழிக் களவாணிகள் சிலர், அந்த இருவருக்கும் சலாம் போட்டுக்கொண்டே அவர்களையும் மிஞ்சுகிறார்கள். அவரவர் சாமர்த்தியம், பங்களாக்காரன் துர்பாக்கியம்.                

சூப்பர்வைசர்களை மாற்றிப் பார்த்தால் புதியவர்களும் அப்படியே இருக்கிறார்கள். சில சமயம் அவர்களுக்குள்ளே கூட்டணி வைத்தும்  பங்களாக்காரனையே மிரளவைக்கிறார்கள்.  கடைசியில் அசல் பங்களாக்காரனே 'சூப்பர்வைசர்தான் உண்மையான பங்களாக்காரன். ஏதோ நமக்கு இலவச சொட்டு நீராவது அவனிடமிருந்து கிடைத்தால் சரி' என்று அமைதியாகிறான்.  அதே போல்   இலவசங்களைக் தூக்கிக் குடுத்து சூப்பார்வைசரும் பேர் வாங்கிக் கொள்கிறார்.

இப்படியாக, சுதந்திரத்திற்குப் பின் காலம் காலமாகப் பொதுமக்களின் வரிப்பணம் பெரிதும் ஊழல்வாதிகளால் ஏப்பம் விடப்படுகிறது, அதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது, மக்களின் வாழ்க்கை வளம் பின்தங்குகிறது என்பதும் ஊரறிந்த உண்மை. ஆனால் நீதிமன்றங்களால் சட்ட ரீதியாக ஊழலை நிரூபித்ததாக எளிதில் கருத முடியவில்லை, ஆகையால் அதைக் கட்டுப் படுத்தவும் முடியவில்லை.  இதை ஊழல்வாதிகளும் நன்றாகப் புரிந்துகொண்டு ஜமாய்க்கிறார்கள்.   ஒரு உதாரணம் இதை உணர்த்தும். 

கொடிய குற்றமான கொலைகள் நடந்து கொலையாளிகள் பிடிபடும்போது அவர்களில் பெரும்பாலோர் போலீசாரிடம், தான் கொலை செய்தவர்கள் என்று ஒப்புக் கொண்டு, ஏன் குற்றம் செய்தோம் என்றும் தெரிவிக்கிறார்கள்.  ஆனால் இதுவரை எந்த ஊழல்வாதியாவது ரெய்டு நடந்தாலும், ரொக்கமோ தங்கமோ சொத்தோ ஆவணங்களோ கைப்பற்றப் பட்டாலும், “நான் ஊழல் செய்துவிட்டேன்” என்று ஒப்புக் கொள்கிறாரா? இல்லை. கைதாகி போலீஸ் வேனில் ஏறும்போதும் புன்முறுவல் காட்டி, கை அசைத்து கம்பீரமாகத்தான் காட்சி தருகிறார்.  ’நீங்கள் கண்டுபிடித்த ஊழல் சொத்து கையளவு, கண்டுபிடிக்க முடியாதது கடலளவு’ என்றுகூட நினைப்பாரோ என்னவோ! 

    ஆயிரத்தில் ஒரு ஊழல் விவகாரம் வழக்காக  வந்து, முடிவில் குற்றவாளி தண்டனையும் பெற்றுவிட்டால் அப்போதும் அவர் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை. பெரிய தலைவராக இருந்தால், கட்சிக்குள் அவர் இன்னும் புனிதத் தன்மை பெறலாம். ஜெயிலுக்குள்ளும் செல்வாக்காக இருக்கலாம். பார்க்கிறோமே!

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நசுக்குவதில் முக்கியமாக ஊழலும் அதைத் தொடரும் வரிப் பண இழப்பும் பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்தக் கேட்டை உருவாக்கும் லட்சக்கணக்கான ஊழல்வாதிகள் – கொசு அளவிலிருந்து யானை சைஸ் வரை - பிடிபட்டு தண்டிக்கப் படுவதில்லை. கொலையாளிகள், ஜேப்படி செய்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோர் பலர் பிடிபடுகிறார்கள், தண்டனையும் பெறுகிறார்கள். நல்லதுதான். ஆனால் எண்ணிக்கையில் இவர்களைவிடப் பல நூறு மடங்கு அதிகமாக வலம் வந்து, நாட்டு மக்களின் சந்தோஷத்தையும் வளர்ச்சியையும் மறைமுகமாகக் குலைக்கும் ஊழல்வாதிகள் அகப்படுவது இல்லை. அதாவது, ஓரமாக கள்ளு குடிப்பவர்களும் பீடி புகைப்பவர்களும் மாட்டுகிறார்கள். ஆனால் பொதுவெளியில் கூட்டம் கூட்டமாக கஞ்சா நுகர்பவர்கள் மஜாவாகத் திரிகிறார்கள்.
 
        ஊழலால் நமது வரிப் பணம் கோடி கோடியாக வீணாவது இதுவரை பெரிதாகத் தடுக்கப் படவில்லை.  இதற்கு நிவாரணமே இல்லையா என்று கேட்டால், இருக்கலாம் என்ற வகையில் ’சோளகர்’ எனும் பழங்குடி மக்கள் நமக்கு ஆசை காட்டுகிறார்கள். கடவுள் மீது பாரத்தைப் போட்டுத்தான் அதைப் பரீட்சை செய்து பார்க்கவேண்டும்.   

ஈரோடு மாவட்டம், தளவாடி ஒன்றியத்தில் உள்ள சோளகர் தொட்டியில் பெருவாரியாக வசிப்பவர் 'சோளகர்' எனும் பழங்குடி மக்கள்.  அவர்கள் ராகிப் பயிர் விதைக்கும் போது, பல வழிகளிலும் பயிர் இழப்பு ஏற்படாமல் இருக்க ஒரு பிரார்தனை செய்வதுண்டாம். அதாவது, "காத்தவர் தின்னது போக, கண்டவர் தின்னது போக, கள்வர் தின்னது போக விளைய வேணும் சாமி" என்று கும்பிட்டு விதைப்பார்களாம்.

மகசூல் குறையாமல் இருக்க சோளகர்கள் கடவுளைக் கும்பிடுவது போல், வரி வசூல் காக்கப் பட பொதுமக்களாகிய நாமும் பிரார்தனை செய்துகொள்ளலாம். எப்படி? "அமைச்சர் அள்ளியது போக, அதிகாரி அமுக்கியது போக, வணிகர் வஞ்சித்தது போக, கான்ட்ராக்டர் கரைத்தது போக, கஜானா நிறையணும் சாமி" எனக் கும்பிட்டு வரி செலுத்தலாம்! நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் – ஊழலைக் குறைத்து வரிப் பணத்தை தேச நலனுக்குத் திருப்ப இதை விடச் சிறந்த வழி இருக்கிறதா?   

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017