Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (16.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "துணை முதல்வர் உதயநிதியின் பணிகளைப் பார்த்து பெருமையாகவும் கர்வமாகவும் உள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே, என்ன அர்த்தம்?


பதில்:
"எனது மகன் உதயநிதிதான் திமுக-வின் அடுத்த தலைவராக வருவார். 25 ஆண்டுகளாவது அந்தப் பொறுப்பில் இருப்பார். திமுக-வில் வேறு யாரும் அந்தப் பதவிக்குக் கனவு காண வேண்டாம். கழகத்தின் சீனியர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழகத்தின் கவிஞர்கள், பாடலாசிரியர்கள் சினிமாத் துறையினர், பிற மீடியாக்காரர்கள் அனைவரும் ஜால்ரா வாத்தியத்தில் தேர்ச்சி அடைந்தால் வளம் காணலாம் என உறுதி அளிக்கிறேன்" என்று ஸ்டாலின் சொல்வதாக அர்த்தம்.

 

 

 

2. கேள்வி: சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தை எனப்படும் பாணினி பிறந்த கிராமம் இப்போதைய பாகிஸ்தானில் இருக்கிறது. அந்த நாட்டின் லாகூர் பல்கலைக் கழகம் சமஸ்கிருதத்தை இப்போது ஒரு பாடமாகச் சேர்க்கிறது, பகவத் கீதை, மஹாபாரதக் கதைகளும் அங்கு பயிற்றுவிக்கத் திட்டம் உண்டு என்று செய்திகள் வருகிறதே?


பதில்:
திமுக-வுக்கு இது பேரதிர்ச்சியாக இருக்கும். கொசு, டெங்கு, மலேரியா இல்லாத நாட்டில் மெனக்கெட்டு அவற்றை வளர்க்க முனைகிறார்களே!

 

திமுக இப்படியும் நினைக்கலாம்: தமிழ் இலக்கணம் பிறந்த தமிழ்நாட்டில் தமிழ் ஒழுங்காகப் பயிற்றுவிக்கப் படாமல் மக்கள் மத்தியில் பொலிவை இழக்கிறது. சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தை பிறந்த பகுதியில் எதற்கு அந்த மொழி கற்பிக்கப் படவேண்டும்? தமிழ்நாடு போலச் சிறக்க பாகிஸ்தான் நாட்டுக்கு விருப்பமில்லையா?

 

 

 

3. கேள்வி: திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளைப் பின்னுக்குத் தள்ளி பாஜக கூட்டணி முன்னிலை பெற்றிருக்கிறது. பிற நான்கு மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், ஒரு மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணியும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?


பதில்:
ராகுல் காந்தி யோசிக்க வேண்டும்.

 

45 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கூட்டணியின் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை, இந்த முறை பாஜக கூட்டணி பறித்ததற்குக் காரணம் மக்கள் ஆதரவா, 'ஓட்டுத் திருட்டா'?

 

அதே மார்க்சிஸ்ட் கூட்டணி 25 ஆண்டுகளாக வைத்திருந்த கொல்லம் மாநகராட்சியையும், 10 ஆண்டுகளாக வைத்திருந்த திருச்சூர் மாநகராட்சியையும், இப்போது காங்கிரஸ் தலைமையிலான இன்னொரு கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஜெயித்தால் மட்டும் அதற்குக் காரணம் மக்கள் ஆதரவு என்பாரா ராகுல்?

 

ராகுல் காந்தியிடம் வழக்கமான பதில் இருக்கும். அசட்டுச் சிரிப்பு.

 

 

 

4. கேள்வி: திருநெல்வேலியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வகுப்பறையில் மது அருந்திய ஒன்பதாம் வகுப்பு மாணவியர் ஆறு பேர் சஸ்பென்ட் செய்யப் பட்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலை?


பதில்:
இதற்கான முதல் பாதிக் காரணம், டாஸ்மாக் மதுவை மாநிலத்தில் பரவலாகக் கிடைக்கச் செய்கிற தமிழக அரசு. மீதிக் காரணம், சமூகம் அனுமதிக்காத ஒரு காரியத்தைச் செய்து பார்க்கத் தூண்டும் இளம் பிராயம்.

 

இருந்தாலும், பள்ளி மாணவர்களின் இந்தச் செயலை நமது திராவிட மாடல் அரசு இவ்வாறு விளக்கலாம்: "தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. அதோடு, பள்ளி மாணவர்கள் இன்னொரு இந்திய மொழி கற்க வேண்டிய புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு தமிழகம் மீது திணிக்கிறது. இதனால் நமது பள்ளி மாணவர்கள் மனதளவில் எவ்வாறு பாதிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழக முதல்வர் வேதனையுடன் கவனித்து, அதைப் பிரதமருக்கு எழுதப் போகும் அடுத்த கடிதத்தில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைப்பார்."

 

 

 

5. கேள்வி: மனிதனுக்குக் கை இரண்டு, கால் இரண்டு, கண் இரண்டு, காது இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு என்று வைத்த ஆண்டவன், ஏன் ஒரு வாய் மட்டும் வைத்தான்?


பதில்:
ஹாண்டில் பார் பிடித்து பெடல் மிதித்து சைக்கிள் ஓட்ட, இரண்டு கை கால்கள்; ஒத்தைக் கண்ணன் என்று பேர் வராமலிருக்க, இரண்டு கண்கள்; வேண்டாதவற்றை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட, இரண்டு காதுகள்; மூக்கில் ஒரு துவாரம் அடைத்தாலும், சுவாசிக்க இன்னொரு துவாரம்; மனிதனின் பேச்சைப் பாதியாகக் குறைக்க, ஒரே வாய்!

 

 

பகுதி 26 // 16.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment